பேரறிவாளா…..! ஒரு தாயின் குரல் கேட்கிறதா தமிழினமே?

அற்புதம்மாள்… இந்த தாயின் பெயருக்கு பின்னால்கூட தெரிகிறது எமது இனப்பெண்களின் போர்க்குணம். தமிழாசிரியரின் மனைவியாய் அன்பான குடும்பத்தில் அற்புதமாய் வாழ்ந்து வந்த இத்தாய், கடந்த இருப்பதியொரு ஆண்டுகாலமாக தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறாள். இந்த தாய் ஈன்றெடுத்த அந்த திருமகனிற்காய் எண்ணற்ற குரல்கள், எண்ணற்ற போராட்டங்கள், வியக்க வைக்கும் முழக்கங்கள் என அனைத்தையும் தமிழகம் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் இத்தாயின் கதறலுக்கும் அவளது பிள்ளையின் சிறைவாசத்திற்கும் ஒரு முடிவைத்தான் தமிழினத்தால் எழுத முடியவில்லை. கடல் கடந்த தீவுகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியதாய் பெருமைபடும் தமிழினம் கண்முன்னே தனது பிள்ளையின் வாழ்க்கையை சிறைக்கொட்டடியில் கழிக்கவைத்துவிட்டது.

தமிழின எழுச்சியின் அடுத்த நகர்வே இவரின் விடுதலையை நோக்கித்தான் இருக்கவேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் கருத்து. இந்த கட்டுரையின் நோக்கமே என் அண்ணன் பேரறிவாளனைப் பற்றி அவனை மறந்துவிட்ட எம் தமிழ் சமூதாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். எல்லோருமா மறந்துவிட்டார்கள்? எல்லோருமா கைவிட்டுவிட்டார்கள்? எத்தனையோ உள்ளங்கள் அறிவின் விடுதலைக்காக தியாகப் போராட்டம் நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்………… ஆம்! சரி இதெல்லாமே தமிழகத்தில்….. ஈழத்தமிழர்கள்? பேரறிவாளனைப் பற்றி தெரிந்துவைத்துள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எத்தனைப் பேர்?

தமிழீழத்தில் எண்ணற்ற அவலக்குரல்களையும் தாயின் கதறல்களையும் பார்த்திருக்கும் ஈழத்தமிழினத்திற்கு என் அண்ணன் பேரறிவாளனின் சோகமும் எங்கள் தாயின் ஓயாப் போராட்டமும் தெரியாமலேயே இன விடுதலைக்கு போராடும் தமிழர்கள் எத்தனை பேர்? தமிழகத்திலேயே போலியான தேசியம் பேசிக்கொண்டு திரியும் எத்தனை பேருக்கு தெரியும் என் அண்ணனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி?

யார் இந்த பேரறிவாளன்? எதற்காக சிறையில் வாடுகிறான். ஏன் அவருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.

இந்திய ‘முன்னாள்பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் சந்தேகத்தினால் கைது செய்யப்பட்டவர்தான் எங்கள் பேரறிவாளன். அவர் மீது ‘சுமத்தப்பட்ட’ குற்றச்சாட்டே, ராஜீவ் படுகொலையின்பொழுது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை இயக்க மின்கலன் வாங்கிக்கொடுத்ததுதான். அதற்கு என்ன தெரியுமா ஆதாரமாக சொன்னார்கள்? அந்த மின்கலனை வாங்கியதற்கான ரசீதை அவர் சட்டைப்பையில் இருந்து எடுத்தார்களாம்.

ராஜீவ் படுகொலையின் பின்னர் பேரறிவாளனின் வீட்டிற்கு சென்று சோதனையிடுகிறார்கள். பிறகு அவர் சென்னை பெரியார் திடலில் இருப்பது தெரிந்து, அங்கு சென்று, விசாரணை செய்துவிட்டு நாளையே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லி அழைத்துச்சென்றார்கள். இதோ இருப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டது. அந்த ஒரு நாள் மட்டும் காவல்த்துறையினருக்கு வரவேயில்லை. தமிழகத்தில், ஏன் இந்தியாவெங்குமே சாதாரண மின்கலன் வாங்கினால் ரசீது தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். படுகொலை நடந்து பலநாட்கள் கடந்துவிட்ட சூழலில் அவர் பெரியார் திடலில் இருக்கும்பொழுது கைது செய்யப்பட்டபொழுது அவர் ரசீது வைத்து இருந்ததை கண்டுபிடித்து சொல்வது எவ்வளவு பொய்யான வாதம் என்பது நன்றாகவே தெரிகிறது. இதனை அவரது வழக்கை விசாரித்த நீதிபதியே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவும் சட்டத்தை மதித்ததில்லை, இந்தியாவின் காவல்த்துறையும் சட்டத்தின்படி எதனையும் செய்ததில்லை. இந்தியாவில் பிறந்த எவனுக்குமே சட்டம் என்பது என்னவென்றே தெரியாது. இப்படியான நாட்டில் பேரறிவாளன் போன்ற அப்பாவிகளே தண்டிக்கப்படுகிறார்கள்.

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு எட்டு நாட்கள் கழித்து, காவல்த்துறை அவரை வலைவீசி தேடிக்கண்டுபிடித்து கைது செய்ததாக செய்தி வெளியிட்டது. அங்கிருந்தே அவரது வாழ்க்கையும் வழக்கும் திசை மாறத்தொடங்கிவிட்டது.

19 வயது விடலைப் பையனாக சென்ற என் அண்ணன் பேரறிவாளனிற்கு 40 ஆகப்போகிறது. வயதின் எவ்வித சுகங்களையும் பாராது, சிறையிலேயே கழிகிறது அவரது வாழ்க்கை. விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விசாரணையின் முடிவை ஏற்கனவே எழுதிவைத்திருந்தார்கள். பேரறிவாளன் மின்னணுவியல் படித்தவர் என்பதனால் அவர்தான் வெடிகுண்டு செய்ய உதவினார் என்றும் அவரது சட்டப்பையில் இருந்த சிறு துளை குண்டுவெடிப்பின்பொழுது ஏற்பட்டது என்றும் கேட்டு அதற்கான பதிலையும் கேட்காமலேயே உறுதியும் செய்துகொண்டனர். ஏதும் அறியா இளைஞனாய் சென்ற அறிவண்ணன் இவர்கள் சொல்வதறியாது திகைத்திருக்கிறார். இன்றுவரை அவரது திகைப்பு அடங்கவேயில்லை.

எவ்வளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள் என்பதனை என் அண்ணனின் புத்தகத்தில் படித்தபொழுது, மனித நாகரீக உலகிலேயா வாழ்ந்துவருகிறோம் என்றே எண்ணத் தோன்றியது. அவரது வரிகளில் இருந்து,

“முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியபடி நீற்கச்சொல்வார்கள் (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்றுகொண்டே இருக்கவேண்டும். எனது பின்னங்காலில் பெரிய தடியால் அடிப்பார்கள். அதன்பொழுது வேறு காவல்துறையினர் பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்துவைத்து, எனது கையை நீட்டச்சொல்லி முட்டியில் அடிப்பார்கள். அதன்பொழுது சில காவல்துறையினர் என்னை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுவார்கள். அதனை வெளியில் சொல்லக்கூட முடியாது”.

இவரை அடித்து சித்திரவதை செய்த சில அதிகாரிகளுக்கு இவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. இவரை நாடுவிட்டு நாடுவந்து எங்க தலைவரையே கொன்னுட்டீங்களே என்றெல்லாம் திட்டியிருக்கிறார்கள். இவரின் பின்புலம் பிறப்பு என எதனையும் தெரியாமலேயே விசாரணை அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள் என்றால், ராஜீவ் படுகொலையின் விசாரணை எப்படி நடந்திருக்கும்?

குடிக்க தண்ணிர் மறுத்திருக்கிறார்கள். இரவில் தூங்கவிடாமல் சித்திரவதை செய்திருக்கிறார்கள். பல் தேய்க்கவும் குளிக்கவும் கூட அனுமதி மறுத்திருக்கிறார்கள். இவ்வளவும் எதற்கு தெரியுமா? காவல்துறையினர் கூறும் பொய்யான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் வரை சித்திரவதை தொடரும் என எச்சரித்து அனைத்து கீழ்த்தரமான செயல்களிலும் காவல்துறை ஈடுப்பட்டிருக்கிறது.

இவ்வளவு மனித உரிமை மீறல்களை செய்துள்ளவர்களை நீதிமுன் நிறுத்த நம் முன்னோர்கள் ஏன் உழைக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை.

பேரறிவாளன் என்ற ஒருவருக்கு மட்டுமல்ல இந்த அநீதி. ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன் என இன்று சிறையில்வாடும் அனைவருக்குமே அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலையின் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கே இவர்கள் எல்லாம் பலியாக்கப்பட்டுள்ளார்கள். நளினியின் வழக்கிலும் அவருக்கு கொலை நடக்கப்போவது முன்கூட்டியே தெரியாது என்று நீதிமன்றமே ஏற்றுக்கொண்டது. ஆனாலும் விடுதலை மறுக்கப்படுகிறது. பேரறிவாளன் உட்பட சாந்தன், முருகன் உள்ளிட்டோர் இன்னும் தூக்குத்தண்டனை கைதியாகவே வாழ்கிறார்கள்.

சரி வழக்காவது முடிந்ததா? முறையான தீர்ப்புதான் இதுவரை வந்ததா? எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ராஜீவ் படுகொலையின் பின்னர் அமைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை முதல் நீண்டகால் ஆய்வின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஜெயின் ஆணையத்தின் கோப்புகள் அனைத்தும் தொலைந்துபோய்விட்டது. அதுவும் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் நரசிம்மராவ் எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை. அதற்கு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த உலகத்தில் யாரைவிடவும் ராஜீவ் கொலையின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், அவ்வழக்கு உண்மையாக விசாரிக்கப்படவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குத்தான் அக்கறை அதிகம். ஏன் தெரியுமா? அந்த ஒரு காரணத்தை காட்டித்தான் என் இனவிடுதலை நசுக்கப்படும்பொழுது இந்தியாவே வேடிக்கைப்பார்த்தது. அந்த ஒரு உயிரின் விலையாகத்தான் என் இனத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் வேட்டையாடப்பட்ட பொழுது இந்தியாவே மௌனம் காத்தது. அந்த ஒரு காரணம்தான் இன்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கு தடையாக உள்ளது. அந்த இரு காரணம்தான் அவர்களை தீவிரவாதியாக இந்தியா சித்தரிக்கிறது. அந்த ஒரு காரணம்தான் தமிழகத்தின் நீண்டகால மௌனத்திற்கு (17 வருட) துணைபோனது.

ஆகதான் சொல்கிறேன். இந்திய போலி தேசியவாதிகளைவிட, இந்திய காங்கிரஸைவிட, ராஜீவை உத்தமன் போல சித்தரித்து வேசி பிழைப்பு நடத்தும் வேடதாரிகளைவிட எங்களுக்குத்தான் பொறுப்பு உண்டு. ராஜீவின் கொலையின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கச்சொல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: