திராவிடம் என்பது எங்களுக்கான அரசியல் பெயர்தான்

உலகம் முழுவதும் பொதுவுடமை சித்தாந்தம் சிதைந்து நவீன ஏகாதிப்பத்தியமும் பொருளாதார சுரண்டல்களும் பெருகிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், எந்த நாடுகளெல்லாம் பொதுவுடமை அறிஞர்களை வளர்த்தெடுத்தனவோ எந்த நாடுகளிலெல்லாம் அவ்வறிஞர்களின் கொள்கையில் முளைத்த கட்சிகளின் அரசு இருக்கிறதோ அங்கெல்லாம் கூட இன்று பொதுவுடமை தன் முழுவீச்சில் இல்லை. உலக நவீனமையமாக்கலுக்கும் பொருளாதார தேடல்களுக்கும் புவியியல் அரசியல் (Geo-politics) புவியியல் பொருளாதார (Geo-economics) கொள்கைக்கு முன்னால் லெனினியம் மார்க்சியம் அனைத்தும் ஈடுக்கொடுக்கத் தவறுகிறது என்பதனை ஐரோப்பிய நாடுகளின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மூலம் அறியலாம். இன்றைய நிலையில் இருந்து சிந்திக்கும் ஒருவன் லெனினியத்தாலும் மார்க்சியத்தாலும்தான் அழிந்தோம் என்று சொல்வது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம், தமிழகத்தில் திராவிடத்தால்தான் அழிந்தோம் என சொல்வது.

‘திராவிட’ என்ற சொல் வரலாற்று அறிஞர்களால் தென்னிந்திய மொழிக்குடும்பத்தை குறிக்கும் சொல்லாகவே உருவாக்கியிருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘அரசியல்’ சொல்லாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. அதனை தென்னிந்திய மொழியோடோ அம்மொழிபேசும் ‘சகோதரர்’களோடும் உறவிட்டு பேசுவது தமிழக அரசியல் வரலாற்றையும் அதனை உருவாக்கிய பெரியாரையும் சிதைப்பதற்கு சமமானதாகும்

திராவிடக் கட்சிகள் எங்களுக்கு உயிரூட்டின, திராவிடக் கட்சிகள் எங்களுக்கு இனவுணர்வூட்டின, திராவிடக் கட்சிகள் எங்களை தலைநிமிர வைத்தன, திராவிடக் கட்சிகள் எம் தாய் தமிழை உலக அரங்கில் ஒளிர வைத்தன, திராவிடக் கட்சிகள் எமக்கு நேர்மையான அரசியலையும் நாகரீக வாழ்க்கையையும் ஏற்படுத்தி தந்தன, திராவிடக் கட்சிகள் சேற்றில் இருந்த எங்களை செந்தாமரையாய் வளர்த்தெடுத்தென, திராவிடக் கட்சிகள் இல்லையேல் இந்தி எனும் கொடிய அரக்கன் எங்கள் இல்லங்களிலும் எங்கள் குழந்தைகளின் மழலையிலும் ஒய்யாரமாய் குடியேறி இருப்பான், திராவிடக் கட்சிகள் இல்லையேல் பார்ப்பனியத்தின் அடிமையாய் அவன் காலை கழுவிக்கொண்டு இருந்திருப்போம் என சொல்லவேண்டிய என் தலைமுறை இளைஞர்கள் திராவிடக் கட்சிகளாலேயே இன்று தமிழகத்தில் தமிழ் இல்லை, திராவிடக் கட்சிகளாலேயே இன்று சாதியம் தலைவிரித்து ஆடுகிறது, திராவிடக் கட்சிகளே எம் இனத்தை அழித்தது, திராவிடக் கட்சிகளே எம்மை வடவனுக்கு அடிமைப்படுத்திக் கொடுத்துவிட்டது என்று முழங்குவதை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு எம்மை கொண்டுவந்தது யார்?

தமிழகத்தில் நாம் (திராவிடக் கட்சிகளின் பிள்ளைகள்) இன்று சுமக்கும் இழிநிலையின் காரணத்தை அறிய குறைந்தது பெரியாரின் காலத்து அரசியலில் இருந்தாவது நாம் பார்கக் வேண்டும். நிகழ்கால அரசியலைப் புரிந்துகொள்ளகூட பெரியாரிடம் இருந்து தொடங்குவதுதான் பெரியாரின் வெற்றி. அவரைத்தவிர்த்துவிட்டு தமிழக அரசியலை எழுதுவதே அறிவிற்குபுறம்பான செயலே. வெறுமனே இன்றைய திமுக அதிமுகவின் அரசியலை வைத்துக்கொண்டு நிகழகாலத் தமிழகத்தின் அரசியல் நிலையை உணர்தலோ வருங்கால தமிழ்த்தேசிய அரசியல் நிலையை கணிப்பதோ அரசியலையே கேலிக்கூத்தாக்கிவிடும். இன்றைய திமுக அதிமுகவின் அரசியலை மட்டும்வைத்து ‘திராவிடக் கட்சி’களின் கொள்கை என யாரேனும் வரையறுப்பது நாம் முன்னெடுக்க வேண்டிய தமிழ்த்தேசிய அரசியலையே அழித்துவிடக்கூடும் என்பது ‘அரசியல் குழந்தைகள்’ அறிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பாலர் பாடம்.

இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் கடவுளின் அவதாரக் கதைகள் என எதனை எடுத்துக்கொண்டாலும் கடவுள் பிறந்ததாக சொல்லப்படும் இடம் வட இந்தியாவாகவும் அரக்கர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தென்னிந்தியர்களாகவும் இருப்பதை காணலாம். வட இந்தியர்கள் ஆரிய இனத்தை சேர்ந்தவர்களென்பதாலும் தென்னிந்தியர்கள் திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் பெரியார் அந்த போர்களை ஆரிய-திராவிடப் போராக வரையறுக்கிறார்.  (திராவிட மொழிக்குடும்பம் என்று பொதுப்பெயரை வெளிநாட்டு வரலாற்று அறிஞர்கள்தான் சூட்டினார்கள் என்றாலும்).

அன்றையச் சூழலில் சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்ததாலும் அவர்கள் அனைவரும் தமிழினத்தில் இருந்து உருவாகிய கிளை மொழியினம் என்பதாலும் அனைவருமே ஆரியத்தின் சூழ்ச்சி வலையில் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் வட இந்தியத்தின் அடிமையாய் கிடந்ததாலும் அனைவருக்குமான பொதுப்போராகாவும் பொதுப்பேராகவும் ‘திராவிட’ யுத்ததை ஆரியத்திற்கு எதிராக தொடங்குகிறார்.

இந்நிலைப்பாடு முழுக்க வடஇந்திய ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமே எடுக்கப்பட்டது. அதுவும், வட இந்திய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக மொழிப்போராட்டம் மட்டுமே நம்மை மீட்டு விடாது. மொழிப்போராட்டம் மொழியினை அழியாது காக்கத் தேவைப்படுவது போல ஆரியத்திற்கெதிரான திராவிடப் போர் வட இந்திய பார்ப்பன ஆதிக்கதின் கலாச்சார திணிப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என்ற காரணத்தினாலே ‘திராவிட’ என்ற பேரோடு போராட்டத்தை தொடர்கிறார்.

அதன் ஒரு அங்கமாகவே, சென்னை மாகாணத்திற்குத் திராவிட நாடு எனப்பெயர் சூட்டி அதைப் பிரித்துத் தரவேண்டும் என்றும் பிரித்தானிய அரசிடம் பெரியார் கோரிக்கை வைக்கிறார். அன்றைய பொழுதுகளில் மொழிச்சிக்கல் எழக்கூடும் என்பது பெரியாரின் முன்கணிப்பில் எழவில்லை. ஏனென்றால், மூன்று இன மக்களும் சரித்திரம் சார்ந்த சகோதர உறவுள்ளவர்கள் என்பதாலும் இந்திய நிலப்பரப்பின் பூர்வீக குடி மக்கள் என்பதாலும் அன்றைய சென்னை மாகாண மக்கள் ஒரே சட்டமன்றத்தையும் ஒரே ஆட்சி மையத்தையும் கொண்டிருந்தனர் என்பதாலேயும் அதனை அப்படியே திராவிட நாடாக தக்கவைத்துக்கொள்ளவதில் மற்ற மொழியினருக்கு மறுப்பிருக்காது என்றும் 1930 களில் பெரியார் விரும்பியிருக்கலாம்.

ஆனால், 1945 தொடக்கம் ஐக்கிய கேரளம் என கேரளத்திலும், விசாலாந்திரா என்ற கோரிக்கை ஆந்திராவிலும் வலுப்பெறத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனைவரும் வடவனுக்கு அடிமையாய் கிடப்பதில் கவலையில்லாமல் இருந்தனர். இவ்வரலாற்றுப் படிப்பினைகளில் இருந்து பெரியார், “தமிழ்நாடு தமிழருக்கே” என முழங்குகிறார். தனித்திராவிட நாடென்ற கொள்கையை தனித்தமிழ் நாடு கொள்கையாக அறிவிக்கிறார். பிற்காலத்தில், இந்திய ஆட்சி முறையின் கீழ் தட்சணப் பிரதேசம் நிர்வாக கட்டமைப்பு உருவாக இருந்த வேளையிலும் அதனை எதிர்க்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

“தட்சணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் என அனைவரும் ஒன்று சேர்ந்தால் நம்மவருக்கு கிடைத்துவரும் வேலைகள் எல்லாம் பறிபோய் பார்ப்பனர்களுக்கும் மலையாளிகளுக்கும்தான் கிடைக்கும். நம்மவர்களுக்கு கூலி வேலை, கழிப்பிட சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் மட்டும் செய்ய வேண்டிய நிலை வரும். முழு அதிகாரமும் வட நாட்டவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் மலையாளிகளுக்கும்தான் இருக்கும்” என்றார் பெரியார்.

அதன்பிறகுமொழிவாழி மாநிலப் பிரிவினை 1956ல் நடந்தபொழுது, “ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பிறகு, மலையாளிகளும் கன்னடர்களும் சீக்கிரம் பிரிந்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது” முதல் காரணம், அவர்கள் யாருக்குமே பகுத்தறிவு உணர்ச்சியோ, இனப்பற்றோ, இனசுயமரியாதையோ அறவேயில்லை. அவர்களுக்கு சூத்திரன் என்று சொல்வதில் மனக்குறையோ வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கமோ எதுவுமே இல்லை. இரண்டாவது காரணம், அவர்களுக்கு மத்திய வடவராட்சியில் தங்களது நாடு அடிமைப்பட்டு கிடப்பதில் கவலையில்லை” என்று சுட்டிக்காட்டி திராவிடக் கட்சியின் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக வரையறுத்து விளக்கினார்.

“தனித்தமிழ்நாடு” முழக்கமென தனது கொள்கையை மாற்ற முடிந்த அவரால் ஏன் அவரது இயக்கத்திற்கு “தமிழர் கழகம்” என பெயர் மாற்றம் செய்திருக்க முடியாது என இன்றைய ‘குழந்தைகளின்’ கேள்வியாக இருக்கிறது. ‘திராவிட’ என்று சொல்லும்பொழுது பிற திராவிட மொழியினர் நம்மோடு இணைந்து நிற்கிறார்களோ இல்லையோ பார்ப்பனன் நம்மில் இருந்து விலகி நிற்பான் என்பதே அதற்கான காரணம்.

‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தின் கீழ் வரும் ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சோ, ‘இந்து’ ராம், புதுவை நாராயணசாமி என அனைவரும் வருவார்களே, அவர்களை நாம் எப்படித்தான் பிரிப்பது.

மறைமலை அடிகளால் பேசிய தமிழ்த்தேசியம் சமய தேசியமாய் சுருங்கி கிடந்தவை, அதுவும் குறிபிட்ட சாதியற்குள் சிக்குண்டு நின்றது. ம.பொ.சி பேசிய தமிழ்த்தேசியம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை புறந்தள்ளிவிட்டு பார்ப்பனர்களை உள்ளடக்கியது. பெரியார் பேசிய திராவிடக் கோட்பாடு (தமிழ்த்தேசிய) தெலுங்கன், மலையாளி, கன்னடர்களையும் முழுவதும் வெளியேற்றி பார்ப்பனியத்தை முற்றிலும் ஒதுக்கி கட்டமைக்கப்பட்டது.

இந்திய அரசு கொண்டுவந்த இந்தி திணிப்பை திறமுடன் களமாடி எதிர்த்து விரட்டியது திராவிடக் கட்சிதானே. 1965-ல் இந்தி எதிர்ப்பு போரின் பின்னர் நடந்த 1967 தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக வெற்றி பெற்றபொழுது, அவ்வெற்றியின் மூலம் தமிழக மக்களின் இந்தி எதிரான உணர்வும் மேலோங்கி நிற்கும் தமிழுணர்வுக்கும் கிடைத்த வெற்றியாகவே பெரியாராலும் அண்ணாவாலும் பார்க்கப்பட்டது.

டெல்லியோடு மோத டெல்லியோடு யுத்தம் செய்ய தமிழனுக்காக வாதாட திராவிட இயக்கம் ஒரு போர்வாளை நாடாளுமன்றத்திற்கு அணுப்புகிறது அந்த போர்வாளின் பெயர் நாஞ்சிலார் என்று வட இந்திய பார்ப்பன அரசிற்கு எதிராக போரை அறிவித்துவிட்டு தனது தளபதியை டெல்லிக்கு எங்கள் அறிஞர் அண்ணா அனுப்பினார். ஆனால், 2004 ஆம் ஆண்டு தயாநிதி மாறனை அமைச்சர் ஆக்கியதற்கு எதிர்ப்பு வந்த வேளையில், “அவருக்கு இந்தி தெரியும் அதனால் வட இந்திய தலைவர்களோடு பேச செளகரியமாக இருக்கும்” என்று நியாயம் கற்பித்தார் ஐயா கருணாநிதி. டெல்லியோடு சமரசம் செய்து அவர்கள் கொடுக்கும் பிச்சைக்கு அடிமையானது கருணாநிதியா? அண்ணாவின் திமுகவா? இங்கு தோற்றது எங்கள் திராவிட இயக்கமா? கருணாநிதியின் தலைமையா?

1987-ல் இரண்டாம் இந்தி போர் அரசியல்வானில் வெடித்தபொழுது இந்திய அரசியல் சாசனத்தை எரிக்கும் போராட்டத்தை திமுகவினர் மேற்கொள்கின்றனர். ஆனால், பதவிக்காகவும் சிறைவாசத்திற்கு அஞ்சியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் திமுகவின் தலைமைகளும், “நாங்கள் அரசியல் சாசனத்தை எரிக்கவே இல்லை” என பொய் கூறியபொழுது, “ஆம், நான் எரித்தேன். இன்ன காரணத்திற்காகவே எரித்தேன்” என தைரியமாக நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல் ஒலித்ததே. அந்த குரல் கருணாநிதியின் திமுகவிற்கு சொந்தமா? அந்த குரல் எங்கள் பெரியாரின் பாசறையில் வந்ததால்தானே ஒலித்தது.

இன்று தெருக்களிலும் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் தமிழில்லாமல் போனதற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா காரணமா? தமிழன்னையை அரியணையேற்றவே களமாடிய அண்ணா, நாஞ்சிலார், நாவலர், மதியழகன், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, இந்திப்போரில் உயிரிழந்த தமிழினப்போராளிகள் ஆகிய திராவிடக் கட்சியினர் காரணமா?

தனது தொலைக்காட்சியில் நாள்தோறும் காலையில் பக்திப்பாடல்களை திரையிட்டும் தீபாவளி நாளன்று விளம்பரங்களையும் நிகழ்ச்சிகளையும் தீப ஒளித்திருநாள் என்று மாற்றி அறிவித்து வியாபாரத்திற்காக ஒன்றையும் மேடையில் ஒன்றையும் பேசும் கருணாநிதியை திராவிட இயக்கத் தலைவன் என அறிவற்ற மனிதன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டானே! அவரை ஒப்பிட்டா திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை கேள்வி கேட்பது?

இன்று தமிழகத்தில் பலர் சொல்லும் புதிய அரசியல் ‘சித்தாந்தத்தில்’, ‘திராவிட’ எனப் பெயரை யார் சுமந்தாலும் அவர்களை தமிழின எதிரியாகவே பார்ப்போம் என்கின்றனர். ‘ராஜீவ்காந்தி’ எனப்பெயர் வைத்திருப்பதாலேயே ஒருவரை இன எதிரி என வரையறுக்க முடியுமா? திராவிடக் கட்சிகளின் பாரம்பரியமும் தோற்றமும் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோராலா எழுதப்பட்டது?

எந்த காங்கிரஸின் அரசியலை எதிர்த்து களமாடி உருவானதோ அந்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து 2004-ல் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அளித்து தமிழினப்படுகொலைக்கு திராவிட இயக்கம்தானே துணை நின்றது என சீமான் வாதிடுகிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சு.ப.வீ ஐயாவோடு இணைந்து திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததையும் அன்றும் காங்கிரசு திமுகவோடு கூட்டணியில் இருந்ததையும் மறந்துவிட்டார் போலும் எங்கள் அண்ணன் சீமான். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்தபொழுதுகூட, “நாங்கள் எல்லாம் உங்களால் வளர்க்கப்பட்டவர்கள் கலைஞர் அவர்களே. திமுகவின் பிள்ளைகள். இப்பொழுது கூட நீங்கள் காங்கிரசை விட்டுவிட்டு வாருங்கள் உங்களுக்காக பிரச்சாரம் செய்கிறேன்” என்று அறிவித்த சீமானுக்கு அன்று, ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை அழித்தது திராவிட இயக்கங்கள்தான் என்ற உண்மையை யாரும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலும்.

சீமான் மட்டுமல்ல, இன்று தமிழ்த்தேசியம் பேசும் அனைவருமே கருணாநிதியிடம் ஏமாந்தவர்கள்தானே.. அதுவும் 2008 ஆம் ஆண்டுவரை அவருடனே நின்ற எத்தனையோ தமிழர்கள் அவரின் பெயர் சொல்லக்கூட கூச்சப்படுகிறார்களே. அவரின் ஏமாற்று வரலாற்றில் நாங்களும்தானே ஏமாற்றம் அடைந்தோம். இங்கே தோற்றதும் ஏமாற்றம் அடைந்ததும் பெரியாரின் பிள்ளைகள்தானே தவிர கருணாந்தியும் அவரது கட்சியும் அல்ல. இங்கே தமிழனை அழிக்கத்துணை நின்றதும் அரசியல் அதிகார வெற்றி பெற்று லாபம் அடைந்ததும் கருணாநிதியின் திமுகதானே தவிர சீமான் சொல்வதுபோல திராவிடக் கொள்கையல்ல.

“எங்களை திராவிடன் என சொல்ல நீங்கள் யார்? நான் தமிழன், நாம் தமிழர்கள்” என முழக்கமிடும் சீமான் அண்ணனிடம் பணிவோடு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இங்கே இருக்கும் பெரியாரின் பிள்ளைகள் யாரும் தங்களை திராவிடன் என்றுதான் கூப்பிடவேண்டும் என ஒருபொழுதும் சொல்லவில்லை. உங்களைவிட நாங்கள் நல்லத் தமிழர்கள்தான். எங்களது அரசியல் தாயின் பெயர்தான் திராவிடமே தவிர எங்களின் அடையாளப் பெயர் திராவிடம் இல்லை. உங்களைவிட தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கையும் சாதியத்தில் எதிர்ப்பும் தமிழீழத்தில் விருப்பும் வைத்திருக்கிறோம். உங்களைவிட எங்கள் திராவிட இயக்கங்கள் தமிழனுக்கும் தமிழுக்கும் அதிக தொண்டாற்றி இருக்கிறது.

வீரமணி மற்றும் கருணாநிதி ஐயாக்களிடம் என்னால் ஒன்றுதான் கேட்க முடியும், “பெரியார், அண்ணா வளர்த்த திராவிட இயக்கத்தை இப்படி பிறர் குறை கூற வைத்துவிட்டீர்களே! நாங்கள் யார் யாருக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியுள்ளது பார்த்தீர்களா?”

 

Advertisements

9 comments

 1. திராவிடம் என்ற சொல்லை எதிர்ப்பது எதோ ஒரு சாதாரண செயலாக பார்க்ககூடாது. இத்தனை கோடி தமிழர்கள் இருந்தும் ஏன் தமிழர்கள் அந்த கட்சிகளின் தலைவராக முடியவில்லை. வேற்று மொழி மக்களே எல்லா பதவிகளிலும்
  உட்காருகிரார்களே அது எப்படி. எதோ அண்ணாவையோ, கருணாவையோ, வைகோ வையோ எதிர்ப்பதற்காக இங்கு யாரும் போராடவில்லை. இந்த தமிழ் மண்ணை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதற்காக தான். மிக குறைந்த விழுக்காடை வைத்துகொண்டு இத்தனை அமைச்சர்களாக அவர்கள் எப்படி ஆனார்கள். பக்கமாக எழுதி
  குப்பைகள் தான் இந்த உங்கள் கட்டுரை

 2. தோழரே ஒரு சில நன்றி கெட்டக் கூட்டம் இன்றைய இளைஞர்களின்

  அறியாமையை பயன்படுத்தி திராவிடத்தின் உண்மையான

  அர்த்தத்தை உணராமல் தமிழ் என்னும் வார்த்தையை பயன்படுத்தி

  இளைஞர்களை திசை திருப்பி மீண்டும் தமிழகத்தை ஆரியத்துக்கு

  கீழே வைத்து தன தலையில் தானே மண்ணை வாரி போடுகின்ற

  ஒரு நிலையை உருவாக்குகின்றார்கள் இதை சீமான் போன்று

  வரலாற்றை திராவிடத்தின் அடிப்படையை உன்ர்ந்தவர்கள்

  கூட இத்தகைய காரியங்களை செயிவது மனவருத்தத்தை

  தருகின்றது தந்தை பெரியார் தன வாழ்நாள் முழுவதும்

  பாடுப்பட்டு மீட்டெடுத்த உரிமைகளை இவர்கள் எளிதாக

  திருப்பி கொடுத்து விடுவார்கள் போலே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s