கூடங்குளம் – அணுவியலும் அரசியலும்

சமீப காலமாக தமிழகத்தில் பல உரிமை போராட்டங்கள் கட்சிகளை கடந்து அரசியல் தலைவர்களின் தலைமையைக் கடந்து மக்களின் கூட்டுத் தலைமைகளின் கீழ் அல்லது பெருவாரியான மக்களின் ஆதரவுடன் நடந்து வருகிறது. அத்தகைய போராட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் போராட்டம் தோல்வி பெருமாயின் மிக கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம். இதுவரை காலம் அமைதி காத்துவந்த தமிழக அரசு அசுர வேகத்துடன் மத்திய அரசின் செயலை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் முடிவிற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்துகொள்வதற்கு முன் கூடங்குள போராட்டத்தின் அவசியத்தையும் அணு உலை எதிர்ப்பையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

அணுசக்திஅறிமுகவும்அதன்ஆபத்துகளும்:

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ரேடியம்’ என்கிற கதிரியக்க தனிமம் (radioactive element) கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் அணுசக்தி உற்பத்தி தொடர்பான ஆய்வுகள் சிந்திக்கப்பட்டது. ஆனாலும், 1930 களில் நிறுவப்பட்ட அணுக்கரு பிளவு (nuclear fission) என்கிற தத்துவம்தான் அணுவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிமுறைக்கு வித்திட்டது எனலாம். காரணம், அணுக்கரு பிளவு நிகழும்பொழுது அதிகளவிலான வெப்பமும் மின்சாரமும் உருவாகிறது. ‘உரானியம்’ என்னும் கதிரியக்க தனிமத்தைத்தான் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துகின்றனர். இத்தனிமம் பிளவுபடும்பொழுது, வெப்பம், மின்சாரம் மற்றும் புளுட்டோனியம் என்கிற கதிரியக்க தனிமமும் கிடைக்கப்பெறும். பெரும்பாலும் இத்தனிமத்தை அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். அணுக்கரு பிளவு தத்துவமும் மின்சார உற்பத்திக்கான வழிமுறைகளும் நிறுவப்பட்ட பின்பு 1939 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐக்கிய அரசாட்சி (UK), பிரான்சு, செர்மனி, ரசியா உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகள் தத்தமது நாடுகளின் அரசாங்கங்களிடம் அணுக்கரு பிளவு ஆராய்ச்சிக்களுக்கான தேவையை (அதன் மின்சார உற்பத்தி மற்றும் அணுகுன்டு உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விளக்கத்துடன்) வழியுறுத்தி ஆய்வுக்கான தொடக்கத்திற்கு சம்மதம் பெறுகின்றனர். இக்காலக்கட்டத்தில்தான் இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது என்பதனை நினைவில் கொள்ளலாம்.

1942 ஆம் ஆண்டு, மன்ஹாட்டன் (Manhaattan) திட்டத்தின் அங்கமாக ஃபெர்மி மற்றும் லியோ சிலார்டு (Fermi and Szilárd) அமெரிக்காவில் சிக்காகோ பைல் (Chicago Pile-1) என்கிற அணுஉலையை நிறுவுகின்றனர். மன்ஹாட்டன் திட்டத்தில் உருவாக்கப்பட்ட அணு உலையில் இருந்து தயாரிக்கப்பட்ட புளுட்டோனியத்தில்தான் முதல் அணுகுண்டு தயாரிக்கப்பட்டு ஜப்பானில் ஹிரோசிமா மற்றும் நாகாசகி நகரங்களில் வீசப்பட்டன என்பதும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த அவலங்களுக்கு இன்றைய நவீன உலகில் சாட்சிகள் உண்டென்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

31 நாடுகளில் இன்று செயற்படும் 439 அணு உலைகளில் இருந்து இன்றைய உலகத்தேவைகளில் 13 சதவீத மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் அதனில் பெரும்பாலும் அணுகுண்டுக்கான தேவைக்காகவே செயற்படுத்தப்படுகிறது என்பது எந்நாடும் மறுக்கமுடியாத அறிவியல் உண்மை. அணுகுண்டு உற்பத்தி ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமான ஆபத்து. ஐம்பது ஆண்டுகளுக்கு அணுகுண்டுகள் எந்நாட்டாலும் எந்தவொரு நாட்டின் மீது வீசப்படாமல் இருந்தாலும் எக்காலத்திலும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அசுர சக்தியை உற்பத்தி செய்வது எவ்வகையில் நியாயம் என்ற கேள்வியும் உடனே எழுகிறது அல்லவா? அதுமட்டுமில்லாமல் அணு உலைகளில் ஏற்படும் கழிவுகளில் இருந்தும் ஆபத்துகள் உருவாகிறது. அதனால் பாதிக்கப்படுவது அணு உலைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள்தான். தன் சொந்த மக்களுக்கே கேடு விளைவிக்கும் அசுரனை ஏன் உருவாக்க இந்நாடுகள் துடிக்கின்றன? விடை கிடைக்காத கேள்விதான்.

அணுவுலைகளில் இருந்து வெளியாகும் கதிரியக்கத்தால்தான் முதல் பாதிப்பு உருவாகிறது. கதிரியக்கத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய அணுத்துகள்கள் ஒளியின் வேகத்தில் பயனிக்கவல்லது. அதாவது ஒரு நொடிக்கு 186000 மைல் வேகத்தில். அவ்வேகத்தில் பயனிக்கும் துகள்கள் மனித உடம்பிற்குள் எளிதாக நுழைந்து உடலியல் செல்களை மாற்றியமைக்கும் அதனால் புற்றுநோய் மற்றும் உடலின் மரபியல் (Genetics) மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அணு உலைகளில் இருந்து அன்றாடம் சிறிய அளவிலான கசிவுகளும் உலை இயக்கத்தின் போதான விபத்துகளின்பொழுதும் கதிரியக்க தனிமங்களை எடுத்துச்செல்லும்பொழுது ஏற்படும் விபத்துகளின்பொழுதும் முறைப்படி சேமிக்கப்படாத கழிவுகளில் இருந்தும் பெருமளவிலான கதிரியக்க கசிவுகளும் உருவாகிறது. இவ்வகையில் கழிவுகளில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த முறையான வழிமுறைகள் இன்னும் உருவாக்கவில்லை. மிக பாதுக்காப்பான வழிமுறைகள் என்று வரையறுக்கப்பட்ட வழிமுறைகளும் முற்றிலும் சரியானவைதான் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது என்பது அனைத்து அறிவியலாளர்களுக்கும் தெரிந்த ‘பரம’ ரகசியம்.

அணுக்கரு பிளவின் பொழுது ஏற்படும் சங்கிலித் தொடர் வினை (chain reaction), மிக முக்கியத்துவம் வாய்ந்த வினைகளில் ஒன்று. வேதியியல் சங்கிலித்தொடர் வினைக்கும் (chemical chain reaction), அணுவியல் சங்கிலித்தொடர் வினைக்கும் (nuclear chain reaction) நிறைய வேற்றுமைகள் உண்டு. முன்னதை கணித்துவிடலாம் அல்லது எவ்வளவு கட்டுப்பாடற்று சென்றாலும் ஏதேனும் வேதியியல் முறைகளில் வினையை அல்லது ஆபத்தையாவது கட்டுப்படுத்திவிடலாம். அணுவியல் சங்கிலித்தொடர் வினை மின்சார உற்பத்திக்கும் ஆற்றல் உற்பத்திக்கும் முக்கியம் வாய்ந்தவைதான் என்றாலும் அது ஒருவேளை கட்டுப்பாடற்று செல்லும்பொழுது (uncontrolled nuclear chain reactio), அது விளைவிக்கக்கூடிய ஆபத்து பெரிது. பெரும்பாலும் விபத்து நிகழும்பொழுதே இவ்வகையான கட்டுபாடற்ற சங்கிலித்தொடர் வினைக்கும் நிகழும் அதிலிருந்து உருவாகும் வெப்பமும், புதிய கதிரியக்க தனிமங்களும் மாபெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியவைகளாக இருக்கும்.

செர்னோபைல் அணு உலை விபத்தையும் அது ஏற்படுத்திய கொடிய விளைவுகளையும் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. அது நிகழ்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றைய நவீன அறிவியல் அனைத்து பாதுகாப்புகளையும் செய்யும் என்று வாதிடுபவர்களே, ஜப்பானின் புகுசிமாவை மறந்துவிட வேண்டாம். அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் ஜப்பான் நாட்டில் செயல்பாட்டில் இருந்தாலும், மிகவும் பாதுகாப்பனது என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிநவீன தொழிற்நுட்பத்தோடு இயங்கிய அணுவுலைகள் ஆழிப்பேரலையின் போது என்ன ஆனது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அதனை தொடர்ந்து தனது நாட்டின் 31% மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்த அணு உலைகளை அந்நாடு மூடி வருவதையும் இன்னும் இரண்டு சதவீத உற்பத்தியே நடைபெற்று வருவதையும் அதுவும் இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்று ஜப்பான் அறிவித்து இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், செர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன. இத்தாலி போன்ற நாடுகள் அணு உலைகள் வேண்டாம் என்று பொதுமக்கள் வாக்கெடுப்பில் தீர்மானித்துள்ளன.

இந்த முன்னோட்டத்துடன் நாம் கூடங்குளம் அணு உலை போராட்டம் தொடர்பான செய்திகளுக்கு செல்வோம்.

கூடங்குளம்அணுஉலைக்குஎதிராகமுன்வைக்கப்படும்வாதங்கள்:

முதலாவது வாதம், மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும். இந்தியாவின் அணு சக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன், அணு உலை திட்டம் தொடங்கிய தருவாயில் (அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு) கூடங்குளம் அணு உலை பகுதி மக்கள் இல்லா பகுதியாகவும் பாலைவனம் போன்று இருந்ததாகவும் கூறுகிறார். அப்படியாயின் பல மாதங்களாக லட்சக்கணக்காக போராடிவரும் மக்கள் எங்கிருந்து முளைத்தார்கள்?. மேலும், கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திற்கும் கதிரியக்க பாதிப்பு ஏற்படுமே, அதனை கருத்தில் கொண்டு, இந்திய அரசும் அணுசக்தி துறையும் என்ன முன்திட்டங்களை வைத்துள்ளார்கள்? இன்றளவும் கல்பாக்கத்தை அண்டியுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை செய்யாமல் வைத்திருக்கிறது அரசும் அணுசக்தி துறையும். அவர்களுக்கு எதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதுகூட அவர்களுக்கு தெரியாது என்பதுதான் இதில் உள்ள கவலையான செய்தி. வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் அதிகமான கதிர்வீச்சு ஏற்படும்.

கூடங்குள அணு உலையால் கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் கேரளத்து மக்களே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்துப் போராடுகிறார்கள். சமீபத்தில் திருச்சூர் மக்கள் அணு உலையை எதிர்த்து போராடியது இதற்கு சாட்சி.

இரண்டாவது வாதம், அணு ஆலை விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள். முழுத் தமிழகமும், வட இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. உயர் தொழில்நுட்பம் வாய்த்த சப்பான், யேர்மனி போன்ற நாடுகளே அணு ஆலைகளை கைவிடும் பொழுது, இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல. கட்டுமான பணிகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவியல் கூறுகள், எதனையும் கணக்கில் கொள்ளாது கட்டுமானத்தை தொடங்கிவிட்டனர். அதுமட்டுமில்லாமல், கட்டுமான பணியில் ஈடுபடும் ரசிய நிறுவனம் அந்நாட்டில் ஏற்கனவே செயற்படுத்திய திட்டங்களில் தரமில்லை என்றும் ஊழல் நிறுவனம் என்றும் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது ஏன் இந்திய அரசு கவனிக்கவில்லை?. அதுமட்டுமில்லாமல், அந்நிறுவனம் கட்டும் கூடங்குள அணு உலை ஏதேனும் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் எவ்வித காப்பீட்டு தொகையும் யாருக்கும் அந்நிறுவனம் வழங்கத்தேவையில்லை என்று மத்திய அரசு விலக்கு அளித்திருப்பது ஏன்? செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்து இட்டது ரசியா என்பதும் 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணு வுலைகள் எதுவும் அமைக்க வில்லை என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை.

அடுத்த முக்கியமான வாதம், கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம். 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியா அருகில் தோன்றிய சுனாமி தமிழகக் கரைகளில் கோரத்தாண்டவம் ஆடுவதற்கு 4 மணி நேர கால அவகாசம் இருந்தும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ கல்பாக்க மக்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதனையும் செய்யாமல் விஞ்ஞானிகளை மட்டும் காப்பற்ற நடவடிக்கை எடுத்த இந்திய அணுசக்தி துறையையும் இந்திய அரசையும் நம்பத்தான் முடியுமா? போபால் விபத்து நேர்ந்த பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்களுக்கான நிவாரணத்தையோ அவர்களுக்கான உரிய நியாயத்தையோ பெற்றுத்தராத இந்திய அரசை எப்படி நம்புவது.?

விபத்து ஏற்படும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? ஒரு செயலை தொடங்கும் முன்பே அதனைப் பற்றின எதிர்மறையான சிந்தனை புகுத்தி ஏன் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறீர்கள் என்று கேட்கும் அறிவாளிகளே, விபத்து எதுவும் ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும் எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டுமே? ஏற்கனவே அணு மின்சாரம் தயாரிக்க பெரும் பொருட்செலவு தேவைப்படும்பொழுது மின்சாரம் உற்பத்தியான பிறகும் கழிவுகளை சுத்தப்படுத்தவும் அதனை சேமிக்கவும் பாதுக்காப்பாகவும் பெரும்பொருட்செலவு செய்தாக வேண்டிய நிலை இருக்கும் பொழுது ஏன் இவ்வகையான மின்சார உற்பத்தியை நாடவேண்டும் என்பதே கேள்வி?

இந்த நிலையிலேயே, கூடங்குள அணுமின் உற்பத்தி கூடத்தை செயற்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தென்மாவட்ட மக்கள் அணி திரண்டு போராடிவருகின்றனர்.  1988 இல் இத்திட்டத்தை ராஜீவ் காந்தி முன்மொழிந்தபொழுதே அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்கள் எதிர்த்து வாதிட்டார் என்பது இப்போராட்டமும் எதிர்ப்பும் திடீரென்று தோன்றியவை இல்லை என்பதற்கான ஆதாரம். மேலும், இன்று தலைமை தாங்கி நிற்கும் உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் போன்றோர்கள் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மாபெரும் மக்கள் போராட்டத்தை அறவழியில் நடாத்தி எதிரிப்பை காட்டினர் என்பது இப்போராட்டத்தின் ஆழத்தை உணர்த்துகிறது.

இந்திய அரசும் இன்று அவர்களுக்கு வால் பிடிக்கும் தமிழக அரசும் அணு உலையை செயற்படுத்தி காட்ட துடிக்கிறார்கள். அதற்கு எத்தனை மக்களின் உயிரையும் எடுக்க கவலைப்படாது களம் இறங்க நினைக்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்ந்து ஆதரிக்கும் ஒரே திட்டம் இதுதான். இதில் இருந்து ஒன்று புலப்படுகிறது, இவர்கள் இருவரும் மக்களின் தேவைகளுக்கும் பாதுகாப்பிற்கும் எதிரானவர்கள் என்று. ஏற்கனவே திட்டமிட்ட அளவுகோலில் 50% மின்சாரத்தைக்கூட இந்தியாவில் இருக்கும் அனைத்து அணு உலைகளும் இன்னும் தயாரிக்கவில்லை. அதிலிருந்து தயாரிக்கும் மின்சாரத்தைவிட அதன் செயற்பாடுகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஆன செலவு அதிகம். அப்படியிருக்கும்பொழுது புதிய அணு உலையால் என்ன பயனை அடைய துடிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை?

மேலும், இன்றைய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவே கூடங்குள அணு உலை தேவைப்படுகிறது அரசோடு சேர்ந்து கூத்தாடிகளுக்கு சொல்லவேண்டியது என்னவென்றால், இன்றே கூடங்குள அணுமின் நிலையத்தை திறந்தாலும் அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு மின்சாரத்தை பெறமுடியாது. அதன்பிறகு தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட 1000மெகாவாட் மின்சாரத்தில் 40% மின்சாரமே தயாரிக்கமுடியும் (அதாவது 400மெகாவாட்). அதிலும் மின் கடத்தல், உற்பத்திக்கு தேவையான சக்தி உள்ளிட்டவைகள் போக மீதம் 250 மெகாவாட் அல்லது அதற்கும் குறைவான மின்சாரமே கிடைக்கப்பெறும். அதில் தமிழகத்தில் பங்கு 50% சதவீதம்தான். அதாவது 125 மெகாவாட். இன்று தொடங்கப்பட்டு முறையாக இயங்கினால், ஐந்து மாதங்களுக்கு பிறகுதான் அந்த மின்சாரமும் கிடைக்கபெறும். புதிதாக கட்டப்படும் இவ்வணுவுலை சரியாக இயங்குமா? அல்லது முறையாக இயங்குவதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என்பதும் கேள்வியாக இருக்கிறது? ஆக, இன்றைய தேவையும் உடனே பூர்த்தி அடைந்துவிடாது என்பது மிகவும் உறுதி.

இன்றைய மின்சார தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின், உதாரணமாக, உதயக்குமார் அவர்கள் தன் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் குண்டு விளக்குகள் (filament bulbs) அகற்றிவிட்டு CFL விளக்குகளை நிறுவச்செய்தாரே, அப்படி தமிழகம் எங்கும் செய்தால் கூட 1000 மெகாவாட் மின்சாரத்திற்கு மேல் மிச்சமாகும். இதனை நம்மைவிட மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட கேரளாவில் நிறுவி 300 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழக அரசு, பெரும் வணிக நிறுவனங்களுக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் இலவச மற்றும் குறைந்த விலையிலான மின்சாரத்தை முறையான வரி மற்றும் கட்டணத்தோடு வசூலித்தாலே பணப்பற்றக்குறையும் தீரும் மக்களுக்கு வரவேண்டிய முறையான மின்சாரமும் வந்துசேரும்.

சமீபத்தில், திருவண்ணாமலை அருகில் இருக்கும் பள்ளிகூடம் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே வடிவமைத்த சூரிய மின்கலம் மூலம் எடுத்துவந்தனர். இதனை முறைப்படி மின்சார வாரியத்திற்கு அறிவித்தே செய்தனர். ஆனால், மின்சார வாரியம் பெரும்தொகையை கட்டச்சொல்லியும் மின்சார வாரியத்தை ஏமாற்றியதாக சொல்லியும் எச்சரிக்கை கடிதத்தை அணுப்பியுள்ளனர். இது அரசின் சர்வாதிகார போக்கிற்கு ஒரு உதாரணம். அரசு பாராட்டவேண்டிய ஒரு செயலை அரசே கண்டிப்பதும் அவர்களை தண்டிப்பதும் நாம் பார்த்துதானே வருகிறோம்.

கூடங்குள அணு உலை எதிர்ப்பின் ஆழமான அறிவியல் பின்னணியையும் மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகள் தொடர்பாகவும் அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: