தமிழ்த்திரையுலகில் முளைத்த செந்தாமரை

(பொங்குதமிழ் இணையத்தில் வெளியான எனது கட்டுரை)

பெரும்பாலும் இன்று தமிழகத் திரைத்துறையில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் பெருமளவிலான வியாபார நோக்கிலேயே எடுக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த துறைதான் என்றாலும் அனைத்து மக்களையும் சென்றடையும் ஊடகம் என்ற ரீதியிலாவது சமூகத்திற்கு தேவையான அல்லது சமூகத்தை சீரளிக்காத வகையிலாவது திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களது எதிர்ப்பார்ப்பு. இன்றைய நவீன உலகில் மக்கள் ரசனைக்கு ஏற்றப்படங்கள், பெரும் பொருளீட்டும் திரைப்படங்களுக்கென சில சூத்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். அச்சூத்திரங்களுக்கு அமைய தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கட்டாயம் விஜய், அஜீத், விக்ரம், விசால் போன்ற நடிகர்கள் நடிப்பார்கள்.

இவ்வகையான அனைத்து படங்களுக்கு பொதுவான ஒரே ஒரு சூத்திரம் உண்டு. இவ்வகையான படங்களில் சமூக விரோதிகளுக்கும் நாயகர்களுக்கும் இடையே பேசப்படும் போட்டி வசனங்களும் அவர்களுக்கு இடையே நடக்கும் சாகச சண்டைகளும் மட்டுமே கதையாக மையப்படுத்தப்படும். நாயகர்கள் வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். சமூகத்திற்கான போதனை செய்துக்கொண்டே இருப்பார்கள். கற்பனைகளில் நடக்காத சாகசங்களை புரிந்துகொன்டே இருப்பார்கள். நாயகிகளுக்கு என முக்கியத்துவம் எதுவும் இராது. நாயகி தோன்றும் காட்சிகள் எல்லாம் நாயகனுடன் சிரிப்பது, காதல் புரிவது, கோபம் கொள்வது எனபது வரையில் மட்டும் இருக்கும். கட்டாயம் அதனை தொடர்ந்து பாடல் வந்துவடும். அதோடு அடுத்த பாடலுக்கு முந்தைய காட்சியில் மட்டுமே நாயகி திரையில் வருவார்.

இதில் கொடுமை என்னவென்றால் இவ்வகையான திரைப்படங்களை உலகெங்கும் உள்ள தமிழர்கள் வரவேற்று மகிழ்வார்கள்.

தமிழ்த்திரைத்துறையின் இன்னொரு பரிமாணமும் உண்டு. இவ்வகையான திரைப்படங்கள் சில வேளை இந்திய நாட்டின் விருது மேடைகளிலும் சர்வதேச அரங்க மேடைகளிலும் முத்திரைப்பதித்துவிடும். இவ்வகையான திரைப்படங்கள், நிகழ்கால நடைமுறையை தோலுரித்து காட்டுவதிலும், திரைக்கதை சுவைக்காக யதார்த்த நிலையில் இருந்து தடம்பிரலாத தன்மையிலும் நிகழ்கால வியாபார உலகிற்காக எவ்வித சமரசமும் செய்யாத தன்மையிலும் படைக்கப்படும். சில வேளை பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் பல வேளைகளில் மக்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் வராது. இவ்வகையிலான திரைப்படங்களை படைத்து பொருளாதார வெற்றியையும் ஈட்டி தமிழ் மக்களை தன் பக்கம் கவர்ந்தவர்கள் என சமீப கால இயக்குநர்களில் பாலா, அமீர், சேரன், வசந்தபாலன், ராம் உள்ளிட்டவர்களை சொல்லலாம். தமிழ்த்திரையுலகின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். வியாபரம் மட்டுமே நோக்கமாக கொண்டு போதைகளாலும் ஆபசங்களாலும் சிதைந்துவரும் தமிழ்த்திரைப்படங்களை அவ்வப்பொழுது தங்கள் படைப்பின் மூலம் மாற்றி திசைக்கு வழிகாட்டுபவர்களாக நிற்கிறார்கள்.

“உலகத்திரைப்படங்களை யார் வேண்டுமானாலும் படைக்கட்டும், உலகத்திற்கான தமிழ்த்திரைப்படத்தை நான் படைத்துக்காட்டுகிறேன்” என சொன்ன அமீரின் வரிசையில் உலகத்திற்கான தமிழ்த்திரைப்படங்களை படைக்க இப்பொழுது வந்து சேர்ந்திருப்பவர் பாலாஜி சக்திவேல்.

ஆனால், தமிழ் திரைப்படத்தின் தரத்தை உயர்த்தப் போகிறேன், உலகம் திரும்பி பார்க்கும் திரைப்படத்தை வழங்குகிறேன் என்றெல்லாம் கூறாமல் சத்தமில்லாமல் அவ்வகையான திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். தனது முதலாவது படத்தில் தனது ஆசான் சங்கர் அவர்களை போன்றே ஊழல், லஞ்சதை அழிக்கிறேன் என்ற பேரில் விக்ரமை வைத்து ‘சமுராய்’ சாகசம் செய்ய முற்பட்டவர், நல்லவேளையாக அதில் இருந்து விலகி சமூகத்திற்கான உண்மையான திரைப்படங்களை எடுக்கத்தொடங்கினார்.

‘காதல்’, ‘கல்லூரி’ களில் தன்னை சிறந்த இயக்குநராக மிளிர வைத்தவர், வழக்கு எண் 18/9 படத்தில் தமிழ்த்திரையுலகின் பிதாமகன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். கல்லூரிகளில் இருக்கும் திரைப்பட பாடத்துறையில் இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படமும் கற்கும் பாடத்திட்டத்தில் இருப்பது போல பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ ம் வைக்கப்படலாம்.

சாதாரண கதை, முகம் தெரியா நடிகர், நடிகைகள். ஆர்பாட்டமில்லா வசனங்கள், ஆபாசமில்லா பாடல்கள், திரைக்கதையை நகர்த்தி சென்ற பாங்கு, கூர்மையான வசன்ங்கள் ஏதும் இல்லாமலேயே சொல்லவேண்டிய செய்தியை கதாபாத்திரங்களின் பார்வையிலும் செய்கையிலுமே சொல்லிய நெறிமுறை என சொல்லிக்கொண்டே போகலாம்.

“சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9” என்று ஒரு இணையதளம் திரைவிமர்சனம் எழுதும் அளவிற்கு இத்திரைப்படம் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தெறிந்துவிட்டிருக்கிறது என கூறலாம்.

திரைப்படம் கூறும் செய்தி இரண்டுதான். காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இன்னொன்று சட்டம் பணக்காரர்களுக்கு மட்டும் எப்படி வேண்டுமானாலும் வளைந்துகொடுக்கும். சட்டத்தால் பலியாவது ஏழைகள் மட்டுமே.

திராவகம் வீசப்பட்டு முகம் வெந்த நிலையில் துடிதுடிக்கும் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே காவல்துறையின் விசாரணை தொடங்கும் காட்சியில் இருந்து தொடங்குகிறது திரைக்கதை. பாதிக்கப்படும் அப்பெண்ணின் தாய்தான் ஏழை இளைஞன் மீதான தனது சந்தேகத்தை காவல் அதிகாரியிடம் தெரிவிக்கிறாள் என்றாலும், சதாரண தெருவோரக் கடையில் வேலை பார்க்கும் இளைஞன் எப்படி திராவகம் வீசுவான்? ஏன் அவ் ஏழைப்பெண் வேலை பார்க்கும் பணக்கார வீட்டில் சம்பவம் நடைபெறும்? அடுக்குமாடி குடியிறுப்பு பகுதியினுள் ஏழை ஒருவன் திராவக பாத்திரத்தோடு நுழைய முடியுமா? என்றெல்லாம் யோசிக்காமல் விசாரிக்க கிளம்புகிறது காவல்துறை.

எல்லா குற்றங்களுக்கும் முதலில் சந்தேகத்திற்கு உள்ளாவதும் விசாரிக்கப்படுவது ஒரு ஏழைதான் என்பதுதான் இந்த சமூகத்தின் அவலநிலை என்ற உண்மையை சத்தமில்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

விசாரணையில், ஏழை நாயகனின் பின் கதை தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் அம்மனிதர்களின் துயர்மிகு வாழ்க்கையைப் பற்றி கண்ணீர் அத்தியாயத்தோடு தொடங்குகிறது. ஆனால், விசாரணை முடிவில்  இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அடுத்ததாக, தாமாக முன்வந்து தனது முன்னாள் நண்பன் ஒருவன் மீது சந்தேகம் இருப்பதாக சாட்சியம் கூறுகிறாள் சம்பவம் நடைபெற்ற வீட்டு உரிமையாளரின் மகள்.

முன் பாதியில் கடந்து சென்ற பல காட்சிகள் மீண்டும் திரையில் வருகிறது. முன்பாதியில் ஏழைகளின் திரைக்கதையாக வரும் அனைத்து காட்சிகளும் பணக்கார பெண், ஆண் கதாபாத்திரத்தின் கதையின் கோணத்தில் திரைக்கதையாக உருண்டோடுகிறது. பார்க்கும் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே பார்த்த காட்சிகள் என்பது நன்கு தெரியும்படி எடுக்கப்பட்டிருந்தாலும் திரைக்கதையின் ஓட்டம் புது காட்சியாக கண்முன் நிறுத்துகிறது. இப்படி, இரண்டு கோணங்களில் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு மையப் புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

மேலும், பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்கு தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி கொடூர மனம், நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்லம்பொழுது, அவன் பசியைத் தீர்க்க உதவி புரிவதோடு அவனுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் இரக்க குணம், மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமியின் வேடிக்கையான பேச்சும் அழிந்து வரும் கூத்து தொடர்பாக அவர் பேசும் கூர்மையான மிகச்சிறிய வசனம், நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரியின் பாதுகாப்பு உணர்வு, இவர்கள் அனைவரையும் நம் கண் முன்னால் நம் சமூகத்தில் நம் உறவினர்களில், நம் நண்பர்களில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். அதோடு, வெள்ளித்திரையில் ‘கர்ஜிக்கும்’ கதாநாயகர்களின் உண்மை ‘குரலை’ பற்றி படப்பிடிப்பு காட்சியில் அப்பட்டமாக காட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அத்தனை பேரது நடிப்பையும் யதார்தத்தையும் ஓரிரு காட்சிகளில் முறியடித்து வாகை சூடுகிறார் காவல் அதிகாரியாக வரும் முத்துராமன். தமிழ் சினிமாவில் இதுவரை இவ்வளவு இயல்பாக காவல் அதிகாரி வேடத்தை யாரும் செய்ததில்லை என்றே சொல்லலாம்.

புதிதாக பழகும் ஆண்களுடன் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம். செல்லிடப்பேசியின் தவறாக பயன்படுத்தி பெண்களை இழிவுப்படுத்தும் ஆண்களில் பள்ளி மாணவர்களும் அடங்குகிறார்கள் என்பதனை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக அடித்து சொல்லியிருக்கிறார்கள்.

திரைக்கதையில் முகம்காட்டாதா ஏழை கதாநாயகியின் தந்தை பொதுவுடமை சிந்தாந்தக்காரர் என்பதனை கதாநாயகியின் வீட்டில் இருக்கும் புத்தகங்கள், தாய் மற்றும் படத்தின்  இறுதியில் நாயகி பேசும் வசனங்களிலேயே காட்டி விடுகிறார் இயக்குநர்.

‘உலகில் நடக்கும் அநியாயங்களை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே’ என்றார் சேகுவாரா. உலகில் நடக்கும் அநியாயங்களுக்கெல்லாம் கூட குரல் கொடுக்க வேண்டாம், முதலில் உங்களுக்கு எதிராக நடக்கும் அந்நியாயங்களுக்காகவாது குரல் கொடுங்கள் என்பதே திரைப்படம் முடியும் பொழுது நமது மனதினில் தோன்றும் சிந்தனையாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: