தூக்குக்கயிற்றில் நிஜம் – திருச்சி வேலுச்சாமியின் நூலை முன்வைத்து…

(பொங்குதமிழி இணையத்தில் வெளியான கட்டுரை)

தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரானஇன்றும் எளிமையின் சிகரமாக விளங்கும் திருச்சி வேலுசாமி ஐயா அவர்கள், ‘ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்‘ என்ற புத்தகத்தின் வாயிலாகராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை அவிழ்க்கப்படாதிருக்கும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்க முயன்றிருக்கிறார்.Thiruchi Velusamy

வேலுசாமி ஐயாவின் நேரடி அனுபவமே இந்நூல் என்பதால்அவர் தனது வாதங்களை பல்வேறு பத்திரிக்கை செய்திகள்,வாழ்ந்த மனிதர்கள் மற்றும் வாழும் மனிதர்களுடன் பேசியவை பழகியவை என பல்வேறு சாட்சியங்களோடு முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வுகளின் கோர்வையோடு வெளிவந்திருக்கும் இப்புத்தகம்தமிழக இந்திய அரசியல் வரலாறு சொல்லும் ஆவணமாகவும் என் கண்ணிற்கு படுகிறது.

இப்புத்தகத்தை பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. அதுனுள் புதைந்திருக்கும் செய்திகளை பார்க்கும் முன்ஒரு சராசரி வாசகனின் கண்ணோட்டத்தில் சில தகவல்களை சொல்லியாக வேண்டும்.

புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கி 12 வருடங்கள் ஆகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் எந்தவொரு புத்தகத்தையும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் படித்த நினைவுகள் இல்லை. பல்லாண்டுகளுக்கு பிறகு ஒரு புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து முடிந்தேன் என்றால் அது வேலுச்சாமி ஐயாவின் நூல்தான். அப்பொழுது நான் ஒரு பயணத்திலிருந்தேன். சுமார் 3 மணிநேரப் பயணமது. வீட்டை விட்டுக் கிளம்பும்போது கையில் எடுத்த நூலைவீதியில் நடக்கும்போதும்பேருந்து தொடர் வண்டி என மாறி மாறி பயணம் செய்தபோதும்விமான நிலையத்தின் சோதனைகளுக்காக வரிசையில் நின்றபோதும்விமானத்தினுள்ளும் இடைவிடாது வாசித்துபயணம் முடிந்து விமானம் தரையிறங்கிய வேளையில் நூலின் கடைசிப் பக்கத்திலிருந்தேன்.

புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் பொழுதே வேலுசாமி ஐயா அவர்களை தொலைபேசியில் அழைத்தேன். அதற்கு காரணம் உண்டு. தனிப்பட்ட காரணம்தான். புத்தகத்தின் முதல் பாதியில் அவரது கடந்தகால அரசியல் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருக்கும். அது அரசியல் நிகழ்வுகள் என்று சொல்வதைவிடஅவரது அரசியல் சாதனைகள் என்றே சொல்லலாம். 80 களிலும் 90 களிலும் தமிழக அரசியலின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்கெல்லாம் அவர் காரணமாக இருந்திருக்கிறார்.

ஐயாவை தொலைபேசியில் அழைத்த பொழுது அவர் சொன்னார், ‘புத்தகத்தின் முதல் பாகங்களில் சொல்லப்பட்டது எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு இல்லை. என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காக எழுதப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கு பற்றியும் அதில் இருக்கும் சதிப் பின்னணியைப் பற்றியும் சொல்லும் தகுதி இவருக்கு என்ன இருக்கிறது என பிறர் நினைத்துவிடக் கூடாது அல்லவாஅதற்காகத்தான் நான் யார்எத்தகைய அரசியல்வாதிநான் என்ன சாட்சியம் அளிக்கிறேன்எவ்வாறு செய்திகள் அறிந்து வைத்திருக்கிறேன் என பிறர் சிந்திக்ககூடும். அவர்களுக்காகத்தான் அதனை எழுத வேண்டி இருந்தது‘ என்றார். அவருக்கு ஓர் உண்மையை தொலைபேசியில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

குமுதம் இணையதள தொலைக்காட்சிதான் எனக்கு வேலுசாமி ஐயாவையும் ராஜீவ் காந்தி கொலைவழக்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தும் அவரது போராட்டத்தையும் முதலில் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்புஎனது அப்பாவின் நண்பர் என்பதால் எனக்கு அவரது அரசியல் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது. ஆனாலும்கடந்த மூன்று வருடமாக நேரடியாக பழகி இருந்தும்அதற்கும் மேலாக எனது தந்தையின் இருபது ஆண்டுகளுக்கு மேலான நண்பராக இருந்தும்பல்வேறு அரசியல் வரலாற்று உண்மைகள் இப்புத்தகத்தின் வாயிலாகவே நான் அறிந்துகொண்டேன். அதனைதான் தொலைபேசியில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

என்னைப் போன்ற அரசியல் மாணவர்களுக்கு தேவையான பல்வேறு அரசியல் செய்திகள் இதில் நிறைந்திருக்கின்றன. மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் இதில் விளக்கப்பட்டிருக்கிறது. அரசியல் மாணவனின் தேடுதல் கண்ணோடு பார்த்ததனால்கூட இப்புத்தகம் எனக்கு பிடித்திருந்திருக்கலாம் என்றெண்ணி இருந்தேன். ஆனால் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரையும்அரசியல் வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர்களையும் புத்தக வாசிப்பு அனுபவம் இல்லாமல் இருப்பவர்களையும் இப்புத்தக்கம் ஈர்த்தது என கேள்விப்பட்டேன். அதில் துளி கூட பொய் இருக்க வாய்ப்பே இல்லை. அத்தகுதிக்கு சற்றும் குறையாத வகையிலேயே இப்புத்தகம் எழுதப்படிருக்கிறது.

ஐயா திருச்சி வேலுசாமி அவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக ஒற்றை மனிதராக போராடி வந்திருக்கிறார் என்பது எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. திருச்சி வேலுச்சாமி ஐயாவின் ஆழ்மனதில் பதிந்த வடுக்களோடுஎம் தமிழின வரலாற்றை நிகழ்கால போக்கில் இருந்து நம்பிக்கையானதொரு பாதைக்கு மாற்ற,தான் சார்ந்த துறையில் கடுமையாக போராடிவரும் ஏகலைவன் என்ற மனிதரின் உழைப்பும் ஒன்று சேர்ந்த புள்ளிதான் இப்புத்தகத்தின் வெற்றி என நினைக்கிறேன். என் இனத்தின் அழிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்களில் ஒன்றாக இவ்வுலகமே சொல்லப்படும் சம்பவத்தின் பின்னால் இருக்கும் சதி முடிச்சுகள் அவிழ்க்கப்படுகிறது என்ற மகிழ்ச்சி நூலை வாசித்தபோது ஏற்படுகிறது.

புத்தகத்தை வாசித்து முடிக்கும்பொழுதுதமிழகத்தில் இருந்து இக்கொலை வழக்கு தொடர்பான உண்மைகளை சொல்வதற்கு முழு தகுதி பெற்ற ஒரே நபர் இவர்தான் என்பதும் இவ்வினம் இத்தகைய மனிதரை பல்லாண்டுகளாக கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளதே என்று வேதனையுமே மிஞ்சுகிறது. தனக்கு தெரிந்த உண்மைகளை வேலுச்சாமி ஐயா விலை பேசி விற்று இருக்க முடியும். அத்தகைய வாய்ப்பும் வந்திருக்கிறது. ஆனால் யாருக்கும் விலை போகாமல் இருந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சி எழுவதையும் இவரைப் போன்ற நெஞ்சுரம் கொண்ட மனிதனாய் நாமும் வாழ வேண்டும் என்ற உத்வேகம் பிறப்பதையும் தடுக்க முடியவில்லை.

திருச்சி வேலுசாமி ஐயாவின் புத்தக்கத்தின் வெற்றி என்பதுஇதுவரையில் அம்பலப்படுத்தப்படாமல் இருந்த இந்தியாவின்தேசப்புதல்வர்களை‘ அச்சமின்றி ஆதாரத்துடன் கோடுகாட்டி இருப்பதில் இருக்கிறது என நினைக்கிறேன். தமிழகமே பேச அஞ்சிய செய்தியினை கடந்த இருபது வருடங்களாகமேடைகளில் மட்டும் இவர் பேசவில்லைஉரிய நீதி விசாரணை வேண்டி ஜெயின் ஆணையத்தின் வாசலிலும் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார். அதுவும் எவ்வித பலம்பொருந்தியவர்களின் துணையுமின்றிஎவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றிஅதனினும் மேலாக எவ்வித சோர்வுமின்றி செயல்பட்டு இருக்கிறார் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது.

தமிழினத்திற்கு சிறு நன்மை பயக்கும் அரசியல் அல்லது வரலாற்று நிகழ்வுகள் நடந்தாலும் சரிதமிழர்களுக்கு ஆதரவான நிகழ்வுகள் நடந்தாலும் சரிஅதனை எதிர்த்துப் பேசவும் அதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தவும் அமெரிக்காவில் இருந்தாலும் பறந்தோடி வருவார் ஒருவர். கொச்சைத் தமிழிலும் நல்ல ஆங்கிலத்திலும் இந்தியா முழுவதும் பேசுவார். தமிழினத்தின் மீதும் தமிழர்கள் மீதும் அவ்வளவு பாசம்‘ கொண்ட சுப்பிரமணியன் சாமியின் பின்னணியை பற்றி பலருக்கு தெரியாது. அவரது வஞ்சகம்சூழ்ச்சிகள் பற்றியெல்லாம் தெரியாத பலரும் அறிந்திராத செய்திகள் இப்புத்தகத்தில் நிறைந்து கிடக்கின்றன.

இன்றைய திமுக வேறு, 90களில் இருந்த திமுக வேறு என்பது எனது கருத்து. 1991 இல் திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டதை நான் அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். பிடிக்காதவர்கள் ஆட்சியை பொய்யான காரணங்கள் கொண்டும் கலைக்கலாம் என்ற முன் உதாரணத்தை அன்றைய சந்திரசேகர் அரசு செய்திருந்தது. சுப்பிரமணியன் சாமி,வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களது கூட்டு அரசியல் சூழ்ச்சிக்கு முழு செயல்வடிவம் கொடுத்தது திருச்சி வேலுசாமி ஐயா தான் என்றாலும் அவ்வரசியலில் எனக்கு உடன்பாடில்லை என்பதனையும் இக் கட்டுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனாலும்அதே கூட்டணிதான் (சுப்பிரமணி சாமிவாழப்பாடி ராமமூர்த்தி) ராஜீவ் கொலை வழக்கை திசை திருப்புவதிலும் பின்னால் இருந்து செயற்பட்டிருக்கிறது என்ற நிலையில்அவர்கள் அரசியற் பொருளாதார பலத்துடன் இருந்த நிலையில்வேலுச்சாமி ஐயா நினைத்திருந்தால் பணம்பதவி என எதனையும் பேரம் பேசி இருக்கலாம். ஆனாலும் உண்மைக்காக இனத்தின் மேன்மைக்காக தனது அரசியல் வாய்ப்புகளையே இழந்து தனி மனிதப் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியவேண்டிய செய்தி.

இனம் என்று வந்துவிட்டால் எதையும் இழப்போம் என மேடைகளில் முழங்க கேட்டிருக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்திய ஒருசிலரில் திருச்சி வேலுசாமி ஐயாவையும் பார்க்கிறேன்.

இப்புத்தகத்தை இவர் பக்க சார்பாக எழுதியிருக்கிறார் என யாருமே சொல்லிவிட முடியாது. வழக்கு விசாரணையில் தவறு நடந்து இருப்பதாகவும் எம்.கே. நாராயணன் போன்றவர்கள் திட்டமிட்டு சில சாட்சிகளை மறைத்துவிட்டார்கள் எனவும்விசாரணையே திசை திருப்பப்பட்டு உண்மையானவர்கள் யாரும் அகப்படாமல் பார்த்துக்கொண்டார்கள் எனவும் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவரான ரகோத்தமன் என்பவர் தனது நூலில் சொல்லியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. பல்வேறு வெளிநாட்டு சதிகள் பற்றின செய்திகள்ஜெயின் ஆணையத்தின் தீர்ப்புகளில் மறைக்கப்பட்டவை என பல்வேறு செய்திகள் 95-97 காலகட்ட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருக்கும் ஒரு தலைமுறையே மறந்துவிட்ட இதுபோன்ற செய்திகளையெல்லாம் ஆதாரத்துடன் புத்தகத்தில் பதிந்துள்ளார்.

புத்தகத்தை பற்றி சொல்லும் அதே தறுவாயில்புத்தக வெளியீட்டு நிகழ்வைப் பற்றி சொல்லியாக வேண்டும். புத்தக வெளியீட்டில் தனது பேச்சைத் தொடங்கும் திருச்சி வேலுசாமி ஐயா, ‘வெளியீட்டு நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் ஒவ்வொரு பெயராக சொல்லி நன்றி கூறிவிட்டுராஜீவ் படுகொலை நடந்த அன்றிலிருந்துதனக்கு அது தொடர்பான மர்மங்கள் ஒவ்வொன்றாக தெரியத் தொடங்கிய நாள் உட்படசோனியா காந்தியை சந்தித்த தருணங்கள்ஜெயின் ஆணையம் சென்ற நாட்கள்இவரது அன்றைய நாட்களில் இச்சம்பவங்களோடு தொடர்புடைய பத்திரிக்கையாளர்கள்,அரசியல் பிரமுகர்கள்நண்பர்கள் என ஒவ்வொரையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.

அதாவதுஓர் எழுத்தாளன் எவ்வளவு கற்பனையாகவும் எழுத முடியும். உண்மை நிகழ்வுகளையும் வரலாற்றையும் சொல்லும்பொழுதுகூட சில மிகைப்படுத்தல் நிகழ்ந்துவிடலாம். ஆனால்அப்புத்தகத்தில் சொல்லப்பட்டவைகள் அனைத்தும் உண்மை என்பதற்கு ஆதாரமாக யாரும் வாழும் சாட்சிகளை சாட்சியமாக அழைத்து வரமாட்டார்கள். அதிலிருந்தே அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிமீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதும் அதனை நிறுவ அவர் எவ்வளவு பாடுபட்டுள்ளார் என்பதும் நிரூபணமாகிறது. இது எல்லாம் சிறு சிறு உதாரணங்கள்.

அதுமட்டுமல்லஅனைத்து தமிழ்த் தேசியத் தலைவர்களையும் புத்தகத்தில் குற்றம் சொல்கிறார். இப்பிரச்சனையை அவர்கள் அக்காலத்தில் சரிவர கையாளவில்லை என சொல்லியிருக்கிறார். ஆனால்அவர் குற்றம்சாட்டிய அனைவரும் இப்புத்தக வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டனர். இப்புத்தக மதிப்புரையிலும் எழுதியுள்ளனர். இது அவரது நேர்மைக்கு இருக்கும் மதிப்பையும் அவரது சொல்லில் இருக்கும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இருக்கிறது.

ஜெயின் ஆணையத்தின் வழக்கு விசாரணை காலங்களில் சோனியாவை சந்திருக்கிறார். அவரிடம் வழக்கு தொடர்பான உண்மைகளை எல்லாம் கூறியிருக்கிறார். பிரியங்கா காந்தியும் இவரது வழக்கு விசாரணை நாட்களில் ஆணையத்திற்கு வந்தமர்ந்து பார்த்திருக்கிறார். இவரை சோனியா நம்பியதாலேயே பிரியங்காவை வழக்கு காலங்களில்அதுவும் இவரது விசாரணை காலங்களில் மட்டும் அனுப்பி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது சோனியாவை இந்த இருபது வருடங்களில் இவர் சந்திக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பொழுதும் அவர் தமிழகத்தின் நிரந்தர முதல்வராய் மக்கள் மனதில் மகுடம் சூட்டப்பட்டு நின்ற வேளையிலும் எம்ஜியாரே நேரடியாக வந்து விரும்பி அழைத்தும் போகாதவர்சோனியாவிடமோ காங்கிரசிடமோ எதுவும் பெற்று இருக்கப்போவதில்லை. தனி மனித பயனோ அரசியல் பயனோ ஒருகாலமும் அடைந்திருக்கவும் போவதில்லை. ஆனாலும் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு மூலம் சோனியா மீண்டும் சந்திக்க விரும்புவதாக செய்தி வந்தபொழுது சந்திக்காமல் விட்டது ஏன் எனத் தெரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் மறைந்திருக்கும் மனிதர்களையும் உண்மைகளையும்இவர் ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மேடைகளில் இவ்வுண்மைகளை முழங்கிய பொழுதும் சிலருக்கே எட்டிய செய்திகள் புத்தகமாக வெளிவந்தவுடன் பல்வேறு தலைமுறைகளையும் ஒரு சேர எட்டி இருக்கிறது. அதற்கான முயற்சியை இவர்கள் காலம் கடந்து எடுத்திருந்தாலும் இவ்வினத்தின் நன்றிக்குரியவர்கள் என திருச்சி வேலுசாமி ஐயாவையும் அண்ணன் ஏகலைவனையும் பதிப்பக உரிமையாளர் ஆபிரகாம் அவர்களையும் சொன்னால் மிகையாகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: