மீத்தேன் திட்டமும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியமும்

இன்றைய தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் காரணமே ஒன்று முதலாளி வர்க்கத்தின் தொழில் விரிவாக்கம் அல்லது முதலாளி வர்க்கத்திற்கெனவே சேவை செய்யும் இந்திய/தமிழக அரசுகள். மக்களுக்கான அரசு என்ற நிலை அறவே அற்ற நிலையில் நமக்கான எல்லா வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் நாமே போராடி அரசுக்கு எதிரான மக்கள் ஆயுதத்தை திரட்டினால் மட்டுமே குறைந்ததேனும் நமது அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.

தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டுவின் அருமையான மேற்கோள் ஒன்று இங்கே பொருத்திப் பார்க்கலாம். “கிருத்துவ மிசனரிகள் இங்கே வரும் பொழுது எங்கள் கையில் நிலம் இருந்தது அவர்கள் கையில் பைபிள் இருந்தது. அவர்கள் எங்களை கண்ணை மூடி பிரார்த்திக்க சொன்னார்கள். கண்னை திறந்து பார்த்தால், எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் இருந்தது”.  இப்படித்தான், உங்கள் பகுதியில் புதிய நிறுவன உருவாக்கத்தால் உங்கள் பகுதியில் வேலை வாய்ப்பு பெருகும், பணம் புரண்டோடும் என்ற வாசகத்தோடு தமிழகத்தை தாக்கி வரும் சுனாமியாய் முதலாளிகளின் படையெடுப்பு தொடர்ந்து வருகிறது.

அதுவும், மிகப்பெரிய ஆபத்தாக உருவாகவுள்ள மீத்தேன் திட்டத்தையும் அதனை கொண்டு வரவிருக்கும் நிறுவனம் தொடர்பாக விளக்கப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசும் Great Eastern Energy Corporation Ltd (GEECL) என்ற நிறுவனமும்.  தென் ஆப்பிரிக்கவினர் கையிலாவது பைபிள் மிஞ்சியது, மீத்தேன் திட்டம் வருமானால், கட்ட ஒட்டுத்துணிக்கூட இல்லாத நிலையிலேயே காவிரி டெல்டா மாவட்டத்தினர் இருப்பார்கள். ஒருவேளை, துணி கட்ட மனிதர்களே இல்லாத பாலை வனமாகக் கூட காவிரி டெல்டா பகுதிகள் இருக்கலாம்.

கடந்த ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங், ‘விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து வரும் நிலையில், நமக்கான உணவை நாம் உற்பத்தி செய்யும் திறனை இழந்து வரும் நிலையில், பொருளாதார மேதையின் இவ்வாக்கை தொடக்கத்தில் சொன்ன வாக்கியத்தோடு பொருத்தி பார்க்கலாம். ஆனால், காவிரி டெல்டா பகுதியினரை பொருத்தவரையில் இதனை மீத்தேன் திட்டத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்பது நல்லது.

எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்கு உலகெங்கும் இயற்கை வாயுக்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் இத்தேவைக்கு மீத்தேன் வாயுதான் அதிக அளவில் பயன்பட்டுவருகிறது. எளிதாக கிடைக்கக்கூடியது மற்றும் மலிவானது. அதனை எடுக்க பல்வேறு நிறுவனங்கள் உலகச் சந்தை போட்டியில் இறங்கியிருக்கிறது. வருங்காலத்தின் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான தேவைக்கு மீத்தேன் வாயுவும் பெரிய அளவில் பங்காற்றும் என்பது கணிப்பு. மீத்தேன் வாயு பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பிலும் மீத்தேன் கிடைக்கலாம்.

மீத்தேன் நமது நிலத்தில் இருந்து எடுப்பது என்பது, சாதாரணமாக நமது வயல்களிலும் வீடுகளிலும் நிலத்தடி நீர் எடுக்க ஆழ்த்துழை கிணறுகள் தோண்டுவது போல் அன்று. முதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

இம்முறையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தில், பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்கு மேலுமான ஆழத்தில் துளையிடுவார்கள். பிறகு, அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்கு மேலும் எல்லா திசைகளிலும் துளையிடப்படும் (bore). இப்படி எல்லா திசைகளிலும் துளையிடப்பட்ட பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை கலந்த நீரை செலுத்துவார்கள்.  இதன் மூலம் துளை நீண்டிருக்கும் எல்லா பகுதிகளிலும் விரிசல்கள் உண்டாகும். நிலத்தடியில் அடைபட்டுக்கிடந்த மீத்தேன் எரிவாயு ஒன்றோடு ஒன்று கலந்து துளையூடாக செல்லும் நீரில் கலந்துவிடும். அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் “நீராவி மூலம் ஆவியாகப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.

ஏனைய தகவல்களை பார்ப்பதற்கு முன்பு, மீத்தேன் தொடர்பாக முதலில் பார்ப்போம்.

மீத்தேன் என்பது அடிப்படையான வளிமம் (வாயு – gas) ஆகும். இது ஹைட்ரோ-கார்பன் (கரிம-நீரதை, hydrocarbon) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூற்றுப் பொருள் (molecule). மீத்தேனில், ஒரு கார்பன் (கரிமம்) மற்றும் நான்கு ஹைட்ரஜன் (நீரகம்) தனிமங்களால் (CH4) ஆன வேதியியல் கலவைகள் நிறைந்திருக்கும். முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட மீத்தேனை நுகர்ந்தால் எவ்வித மணமும் இருக்காது, மீத்தேனிற்கு தனியான நிறமும் இல்லை. காற்றில் 5 முதல் 15 சதவிகதம் மீத்தேன் கலந்தால், அது வெடிப்பொருளாக மாறும் தன்மை உடையது. எளிதில் எரியக்கூடிய தன்மையுடையது மீத்தேன் என்பதால், கவனக்குறைவால் எற்படும் சிறு கசிவும் ஆபத்தைத் தரக்கூடியது. ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக, இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) சார்ந்த கலவையை சேர்த்து நெடி வீசக்கூடியத் தன்மையுடையதாக மாற்றுவார்கள்.

நமது ஊரில் பொதுவாக கிராமப்புறங்களில் அக்காலத்தில் அடிக்கடி கொள்ளிவாய்ப்பிசாசு கதைகளை கேள்விப்பட்டிருப்போம். இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு ‘தீ’ பற்றி எரியத்தொடங்கும். இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு, அக்காலத்தில் பெரிதாக விளக்கம் இல்லாத காரணத்தால் இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அழைத்திருக்கிறார்கள். அதேபோல, இப்படி தீயை உருவாக்குவதால் மீத்தேன் வளிமத்திற்கு கொள்ளிவளி என்றும் பெயர் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி). இவ்வகையில், கொள்ளிவாய்ப்பிசாசுவிற்கும் மீத்தேன் வளிமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவ்வகையில் நம் அனைவருக்கும் மீத்தேன் ஒன்றும் புதிதல்ல. ஆனால், அது கொண்டுவரும் ஆபத்துகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிது. மீத்தேன் வளிமத்தால், ஏற்கனவே பல்கி பெருகி வரும் புவி வெப்பமாதல் இன்னும் பன்மடங்காகும். இது நமது நிலப்பரப்பிற்கும் நீர்வளத்திற்கும் மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.

கடந்த மார்ச் 2014 இல் வெளியான இணையதள செய்தியொன்று மீத்தேன் கசிவு மற்றும் ஆபத்தை துல்லியமாக படம் படித்து காட்டுகிறது. பார்க்க, http://news.nationalgeographic.com/news/energy/2014/03/140312-east-harlem-explosion-natural-gas-leaks-risk/. அமெரிக்காவில், கிழக்கு ஆர்லெம் என்ற இடத்தில், மீத்தேன் கசிவால் நடந்த வெடி விபத்தால் இரண்டு கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கின்றன. இரண்டு பேர் கொல்லப்பட்டும் 16 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், விபத்து நடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள், மீத்தேன் எடுத்துச்செல்லப்படும் குழாய்களை ஆராய்ந்து 5893 கசிவுகளை கண்டறிந்துள்ளனர் இதன் ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க http://pubs.acs.org/doi/abs/10.1021/es404474x என்ற பக்கத்தை பார்க்கவும். இந்த ஆய்வை வெளியிட்ட பிறகு, இக்குழுத்தலைவர் ராபர்ட் ஜாக்சன், தவறுதலாக கீழே போடப்படும் சிகரெட் கூட மிகப்பெரிய வெடிவிபத்தை இப்பகுதியில் உருவாக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீத்தேன் எடுத்து செல்லும் குழாய்கள் பல நூறு மைல்கள் நீள்வதால் எல்லா நேரமும் எல்லா கசிவையும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அதனால், மக்கள் நிறைந்த பகுதிகளில் இவ்வாபத்தான திட்டம் செயல்படுத்துவது தவறென அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மீத்தேன் தொடர்பான கசிவுகளும் அதனால் விளைய நேரும் வெடி விபத்துகள் தொடர்பாக அறிந்துகொள்ள, http://www.climatecentral.org/news/d.c.-methane-leaks-threaten-explosions-climate-16964 என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

ஒவ்வொரு வருடமும் மீத்தேன் கசிவால், விபத்துகள் அதிகமாகிக்கொண்டேதான் வருகின்றன என http://www.explosionvictimresourcecenter.org/articles/natural-gas-explosions/ இணையதளம் அறிக்கை கொடுத்திருக்கிறது. மேலும் அவ்விணையதளம், மீத்தேன் கசிவால் ஏற்படும் விபத்து, நமது வீடுகளையும் நம்மையும் சேர்த்து அழிக்கும் அளவிற்கு வீரியம் கொண்டது என எச்சரிக்கிறது. தொடர்ச்சியான நீண்டகால கசிவுகளால், மீத்தேன் வளிமத்தின் கூட்டிணைவால், மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டென சுட்டிக்காட்டுகிறது. இந்த இணையதளத்தை Habush Habush & Rottier S.C. என்ற அமெரிக்க நிறுவனம் நடத்துகிறது. கடந்த 75 ஆண்டுகளாக, இயற்கை எரிவாயு உள்ளிட்ட மீத்தேன் கசிவால் ஏற்படும் வெடி விபத்துகளாலும் பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவியை பெற்றுதரும் வேலையை செய்து வருவதால், பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து மீத்தேனால் ஏற்பட்ட/ஏற்படக்கூடிய கொடிய வெடி விபத்துகள் தொடர்பான செய்திகளை இணையதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் சட்டத்திற்குட்பட்டு நடக்கும்பொழுது, முறையாக எல்லாவற்றையும் அரசே பார்த்துக்கொள்ளும் விபத்துகளுக்கு உரிய முறையில் நஷ்டஈடு கிடைக்கும் என நம்புவீர்களானால், யூனியன் கார்பைட் பிரச்சனையையும் முதலாளியும் அதிகாரிகளும் தப்பித்த வரலாறையும் மறந்துவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

வெடிப்பொருளாக மாறும் தன்மையுடையது என்பதால் மட்டும், மீத்தேனை ஆபத்தானதாக நாம் பார்க்கவில்லை. அதனில், இன்னும் கூடிய ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. நாம் மீத்தேனை சுவாசிப்பதாலும், மிகப்பெரிய ஆபத்து காத்து நிற்கிறது. மீத்தேனை நாம் நுகர்வதால் உடனடியாக பிரச்சனை இல்லை, ஆனால், நாம் நுகரும் ஆக்சிஜன் செறிவை (concentration) மெல்ல மெல்ல அது குறைத்துவிடும். ஆக்சிஜன் செறிவு நமது உடலில் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வரும்பொழுது, அது Asphyxia வை உருவாக்கும். Asphyxia இறுதியில் கோமா அல்லது மரணத்தை கொண்டுவரும் (http://en.wikipedia.org/wiki/Asphyxia). நமது உடலில் ஆக்சிஜன் குறைகிறது என்ற தகவலை நமது மூளை உடலுக்கு அனுப்பி அது அடுத்த செயற்பாட்டிற்கு செல்லும் முன் நமக்கு மயக்கம் வந்துவிடும், ஆதலால், நாம் கவனத்தில் எடுக்கும் முன்பே நமக்கு ஆபத்து ஏற்படும் என அறிவியல் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டு ஆய்வின்படி, மீத்தேனால், 22 மடங்கு கிரீன்ஹவுஸ் விளைவுகள் அதிகமாகின்றன என்றும் ஓசோன் அடுக்கில் 7 மடங்கு கூடுதல் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்து இருக்கிறார்கள் (http://www.srdit.si/gzo07/papers/31DChunZhi_FinalPaperGzO07.pdf).

இதெல்லாம் மீத்தேனால் விளையும் தீமைகள். மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால் சுற்றுச்சூழலிற்கும் நமது வாழ்வாதாரத்திற்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகிறது என்பதனையும் பார்ப்போம்.

உலகளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நிலத்தடியில் மீத்தேன் நிறைந்திருக்கும் நாட்டின் வரிசையில் சீன நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதில், இன்னொரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் சீன நாட்டில் நடக்கும் 70 முதல் 80% விபத்துகள் மீத்தேன் வாயு வெடிப்பில் நிகழ்கிறது. தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும். http://www.ivt.ntnu.no/ept/fag/tep4215/innhold/LNG%20Conferences/2007/fscommand/PO_37_Lin_s.pdf).  சீனாவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்திட்ட செயல்பாட்டில் நடந்த விபத்தில் மடிந்து இருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மட்டுமே, மீத்தேன் வாயு எடுக்கும் திட்ட செயல்பாட்டில் நடந்த விபத்தில் 778 மக்கள் இறந்திருக்கிறார்கள் (கொல்லப்பட்டிருக்கிறார்கள்).

காவிரி படுகையில், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது. ஆனால், கவனமாக, அங்கு நிகழும் விபத்துக்களையும் பாதிப்புகளையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டனர். அங்கு, மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

பல்வேறு நிலையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால், நிலத்தடி நீர் முழுமையாக உரிஞ்சப்பட்டதால், இப்பகுதியில் கிட்டதட்ட 5000 கிணறுகளில் 200 அடிக்கும் கீழே நீர் அளவு குறைந்து, மக்களுக்கான நீர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, அதனை சரி செய்ய, ஒவ்வொரு கிணறுக்கும் 10000 டாலர் செலவு செய்து (மொத்தமாக, 5 கோடி டாலர்) செய்திருக்கின்றனர். சிந்தித்து பாருங்கள், காவிரி நீரின் வரத்து இல்லாமல், ஏற்கனவே நிலத்தடி நீர் பாதளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், காவிரி டெல்டா பகுதியில், விவசாயத்திற்கு மட்டுமல்ல, நாம் குடிக்கவே நீர் இல்லாத நிலையில் நாம் வாழத்தான் முடியுமா? இல்லை, மக்களுக்கு நீர் கிடைக்க அரசாங்கங்களும் மீத்தேன் எடுக்கும் நிறுவனமும் ஏதாவது செயற்திட்டங்களை வகுத்திடத்தான் போகிறதா?

மாண்டேனோ பல்கலைக்கழகம் இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மீத்தேன் எடுக்கும் திட்டத்தில், சோடியம் கரைசல்களை அதிகளவில் பயன்படுத்துவதால், நிலம் முழுமைக்கும் சோடியம் கலந்த வேதிப்பொருட்கள் நிறைந்திருப்பதாலும், அது நிலத்தின் ஆழ வேரூடி நிலைத்து நிற்பதால், மரம், செடிகளின் வளர்ச்சி முழுமையாக பாதிப்படைகிறது. இதனை அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்கின்றனர். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும் (http://waterquality.montana.edu/docs/methane.shtml). கவனத்தில் எடுக்க வேண்டிய செய்தி என்னவெனில், மீத்தேன் எடுக்கும் செயற்முறையினால், பல்லாயிரக்கணக்கான உபரி நீர் வெளியேற்றப்படும், இவை முற்றிலுமாக நச்சுத்தன்மையுடையதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலத்தடி நீரை உருவாக்கும். செடி, கொடி, மரங்களற்ற, குடிக்க நீரற்ற நிலமாக காவிரி படுகை இருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா?

மேலும், கலோரடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2005 ஆம் ஆண்டு, பவுடர் ரிவர் பேசினின் ஒரு பகுதியான சுனிப்பர் நிலத்தில் நீரின் தன்மை, விவசாயம் உள்ளிட்ட கூறுகளை ஆய்வு செய்தனர். மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால் அகற்றபடும் கழிவு நீரால், 10-15 ஆண்டுகளில் முழுமையாக பயிரடமுடியாத நிலமாகவும் நச்சுத்தன்மை கலந்த நீராகவும் மாறிவிடும் என அறிக்கையில் கூறியுள்ளனர். (பார்க்க: ftp://ftpmusette.cr.usgs.gov/tmp/PRB_USGS/cbm%20water%20vegitation_2005.pdf )

இப்படியான ஆபத்தான திட்டம்தான் காவிரி டெல்டா பகுதியை நோக்கி வரப்போகிறது. ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் செயல்பட தொடங்கிவிட்ட இந்நிறுவனம், தமிழகத்தை அடுத்து குறிவைத்து வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல அடுத்த 100ஆண்டுகளுக்கு! இத்திட்டம், காவிரி டெல்டா பகுதியில் 50 கிராமங்களை உள்ளடக்கிய, 164819 ஏக்கர் நிலப்பரப்பில் 667 சதுர கி.மீ பரந்து விரிய இருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்போகிறார்களே, இத்தனை ஆண்டுகளாகவா மீத்தேனை எடுக்க முடியும் என யோசிக்கலாம். இல்லை, முதல் 35 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் (இதற்குள் நிலத்தடி நீர் முழுமையாக இல்லாமல் போய்விடும் மீத்தேனும் எடுக்கப்பட்டுவிடும்), பிறகு நிலக்கரி சுரங்கள் அமைப்பதே இவர்களின் திட்டம். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு ஒரு திட்டத்தை யோசிக்கும் அதிகார வர்க்கமும் தனியார் நிறுவனங்களும், இத்திட்டத்தை வரைமுறை செய்ய குறைந்தது 10 அல்லது 20 ஆண்டுகளாக உழைத்திருப்பார்களா இல்லையா? அப்படியாயின், காவிரி நீர் வராமல் இருந்தால்தானே இப்பகுதி மக்கள் விவசாயத்தை கைவிடுவார்கள். பிறகு பொருளாதார பற்றாகுறையினால், நிலங்களை விற்பார்கள். ஒன்றோடு ஒன்றை சேர்த்து பார்த்தால், நாம் எப்படி முட்டாளாக்கப்படிருக்கிறோம் என புரியும்.

எதனாலேயோ காவிரி நீர் வராமல் போனதற்கும் அரசின் தவறான விவசாய கொள்கையினால், உழவுத்தொழிலை இழந்து நிலங்களை விவசாயிகள் விற்றதற்கும் எப்படி தொடர்புபடுத்த முடியும் என குழப்பமாக இருக்கிறதா? வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விற்கப்பட்ட அன்றைய இன்றைய விவசாய நிலங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடர்பாக குழாய்கள் இன்று பதிக்கப்பட்டு வருகிறதே, அதனை ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் புரியலாம். காவிரி டெல்டா பகுதிகளில், 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதித்து வருகிறார்கள் என்றும் குறிப்பாக வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாம் முழிக்கும் முன்னே நம் கண்ணை பிடிங்கும் வேலைகள் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனபதனை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே காவிரி நீருக்காக மக்கள் திரள் போராட்டங்கள், நீதி போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் என பல்முனை யுத்த களத்தில் நிற்கும் நமக்கு முன் மீத்தேன் திட்டம் வரவிருக்கும் நிலையில் இரண்டே வாய்ப்புதான் இருக்கிறது. ஒன்று விவசாயங்களை விட்டுவிட்டு எதனை பற்றியும் யோசிக்காமல் வாழும் வரை வாழ்ந்துவிட்டு, நமது நிலத்தில் கடைசி வரை அடிமையாய் வாழ்ந்து மடிவது. இரண்டு, நாம் சென்ற பிறகு நமது பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் இருக்குமானால், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இன்றிலிருந்தாவது தீர்க்கமாகப் போராடுவது. ஏற்கனவே விவசாய நிலங்களை நிலத்தரகர்களிடம் விற்றுவிட்டவர்களுக்கும் இதில் உயிர்ச் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்பதனை மறந்துவிட வேண்டாம்.

இன்னொரு கூடுதல் செய்தியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 35 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், 6.25 லட்சம் கோடி மதிப்பிலான மீத்தேனை எடுக்க முடியும் என சொல்கிறார்கள். ஆனால், இது முழுமைக்கும் தனியார் நிறுவங்களுக்கான சொத்தாக மாறவிருக்கிற தொகை. அல்லது தனி மனிதர்களின் சொத்து. காவிரி பகுதியில் முறையாக விவசாயம் நடந்தால், 35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்கள் நடக்கும். இது தமிழக மக்களுக்கு குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்குள் பகிரப்படும் தொகையாக இருக்கும். இதுதான் நம்மை நம் மண்ணை, நமது அடுத்தடுத்த தலைமுறைகளை காக்கும் சொத்தாக அமையும். கோடிக்கணக்கான மக்கள் பகிர்ந்துண்ணப்போகும் உணவை, உடையை, நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றே ஒன்று வளைக்கப்பார்க்கிறது.

மிகப்பெரிய அரச பலத்துடனும் மற்றும் பொருளாதாரத்தில் அசுர நிலையில் நிற்கும் தனியார் நிறுவனத்துடனும் மோதி வெற்றி பெற முடியுமா என கேள்வி எழலாம். இங்கே நமது வாழ்வு நமது இருப்பைவிட நமது சந்ததியினரின் இருப்பை முன்னிறுத்தியே நாம் எதனையும் சிந்திக்கவேண்டியுள்ளது. அவர்களுக்காக சொத்து சேர்க்க பல வகையில் நம்மை வதைத்து அவர்களுக்காகவே வாழ்வதாக சொல்கிறோம். அவர்கள் வசிக்க நிலம் வேண்டும் அல்லவா! அவர்கள் சுவாசிக்க காற்று வேண்டும் அல்லவா! அவர்கள் உண்ண உணவு வேண்டும அல்லவா!

தமிழீழத் தேசியத் தலைவரின் சிறப்பு பெற்ற வாசகங்களுள் ஒன்று, “நாம் போராடினால் நாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, போராடாமல் அப்படியே இருந்துவிட்டால் நம் மண்ணும் இனமும் அடிமையாய் வாழ்ந்து மடிவதுதான்”.

நமக்காக யாரும் விண்ணில் இருந்து குதித்து போராட வரமாட்டார்கள் நமக்கான போராட்டத்தை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நியூற்றினோ, கூடன்குளம் என நமது மண்ணையும் வளத்தையும் மலடாக்கும் திட்டங்கள் நம் முன் வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நம் மண்ணை மாசுப்படுத்தும் ஸ்டெர்லைட் பல ஆண்டுகளான நீதிப் போராட்டங்களுக்கு இடையேயும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, நம் வளத்தை காக்க அனைவரும் ஒன்று சேர்வது அவசியமாகிறது.

 

2 thoughts on “மீத்தேன் திட்டமும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியமும்

Add yours

  1. விரிவான விளக்கமான கட்டுறை. மீத்தேன் திட்ட எதிர்ப்பில், கட்சிகள்/கழகங்கள் தாண்டி ஒன்றுபட்டு நின்றாகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஈழப்போரின்போது செய்த அதே தவறை இன்னுமொறு முறை செய்தால் தமிழினத்தின் பெறும் அத்தியாயம் ஒன்றை மூடவேண்டிவரும் என்பது மட்டும் உணமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: