2014 – ஜெயலலிதா அம்மையார் மீதான வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் குறித்த பார்வை

Jayalalitha-and-John-M-Cunhaஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு முடிவை எட்டியது முதல் ஆதரவு எதிர்ப்பு என பல்வேறு குரல்கள் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், தமிழக அரசின் தலைமை மூலம் செய்த நன்மை தீமைகள், காலம் காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் எதிரிகள், அவரது ‘கண்ணசைவில்’ கிடைக்கும் நன்மைக்காக காத்து நிற்கின்ற உதிரிக் கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, ஈழ ஆதரவு சக்திகளில் சிலர், திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் நடிகர் நடிகைகள் என ஒவ்வொருவரும் தங்களுக்கான நிலையில் இருந்தே ஜெயலலிதாவின் கைதை அலசுகிறார்கள்.

4 வருடங்களுக்கு முன்பு இவ்வழக்கு முடிவடைந்து தீர்ப்பு இதே ரீதியில் வழங்கப்பட்டிருந்தால், ஜெயலலிதாவிற்கு இன்று கிடைத்திருக்கும் ஆதரவில், அதிமுகவினரைத் தவிர்த்து பெரும்பாலான பலரிடம் இருந்திருக்காது. 10 வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால், இன்று ஜெயலலிதா அம்மையாரை ஆதரிக்கும் பலரும் திமுகவினரைப் போல வெடிக்கொளுத்திக் கொண்டாடியிருப்பார்கள்.

இன்று ஜெயலலிதா அம்மையாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை முதலில் பார்த்துவிட்டு அடுத்தடுத்து யார் யார் எந்தெந்த காலக்கட்டத்தில் என்னென்ன நிலைப்பாடுகளை எடுத்திருப்பார்கள் என்பதனையும் பார்க்க வேண்டியுள்ளது. கொள்கைப்பரப்புச் செயலாளர் போல செயற்படும் வேல்முருகன் அண்ணன், அம்மையாருக்கு எதிராக ராமதாஸ் ஐயாவின் கண்ணசைவில் ஊழலுக்கு எதிராக துடித்து எழுந்திருப்பார். சரத்குமார் அவர்கள் அன்றைய காலத்தில் திமுகவில் இருந்ததால், திமுகவினரைப் போலத்தான் பேசியிருப்பார். இன்று மெளனம் காக்கும் சீமான் அண்ணன் பெரியார் மேடைகளில் ‘பார்ப்பனத்தி’ ஜெயலலிதாவின் ஊழலை பட்டியலிட்டு இருப்பார்.

திராவிடக் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் கருத்தில், சமூக நீதி காத்த வீராங்கனை காலக்கட்டத்திற்கும் திமுக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறிய காலக்கட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்திருக்கும்.  சுப.வீரபாண்டியன் ஐயா கருணாநிதி அவர்களின் மீதான எதிர்ப்பு நிலையிலிருந்து ஆதரவு நிலைக்கு இன்று மாறியிருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் மீதான தனது எதிர்ப்பில் மாற்றம் கண்டவரில்லை.

வைகோ ஐயா அவர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இதே தீர்ப்பிற்கு 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் என நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்கும். 2002-2004 காலகட்டம் என்றால், இன்னும் மாற்றம் இருந்திருக்கும். அண்ணன் திருமாவளவன் அவர்கள், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தவர்தான் என்றாலும் 2006 சட்டமன்றத் தேர்தல் காலம் தவிர்த்து ஏனைய காலங்களில் ஜெயலலிதா அம்மையார் மீதான வழக்கில் ஒரே மாதிரியான கருத்தைதான் வைத்திருந்திருப்பார். முஸ்லிம் அமைப்புகள், தலித் அமைப்புகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் ஏனைய அமைப்புகளும் அன்றைய கால கூட்டணியைப் பொறுத்து நிலைப்பாடில் மாற்றம் கண்டிருப்பார்கள்.

அடுத்து, எந்த காலத்திலும் ஒரே மாதிரியான ‘ஆதரவு’ அல்லது ‘எதிர்ப்போ காட்டாத’ நிலை எடுத்து இருந்திருப்பார் என நான் நம்புபவர் பழ. நெடுமாறன் ஐயா.

1991-1996 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அம்மையார் செய்த ஊழலிற்கான வழக்கு 1996 போடப்பட்டு அம்மையார் அவர்களாலேயே  கால தாமதம் செய்யப்பட்டு, இறுதி தீர்ப்பை 18 ஆண்டுகளின் பின் எட்டியிருந்தாலும், ஊழல் செய்ததும் அதற்கான தீர்ப்பும் உண்மைதான். ஆனால், அதனை பார்க்கும் அரசியல் தலைவர்களின் மனநிலைகளில் மாற்றம் இருக்கிறது என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, திரைப்பட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் காட்டிய ஒரு நாள் திரைப்படம் ‘மாபெரும் வெற்றிப்பட’ வரிசையில் சேர்க்கப்பட வேண்டியது. ‘விஸ்வரூபம், தலைவா’ பட பிரச்சனைகளை மறந்துவிட்டு ஆதரவா என தயாநிதி அழகிரி கேட்டது அவருடைய குரலில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், திரும்பவும் ‘விஸ்வரூபம், தலைவா’ பிரச்சனைகள் போன்று தங்கள் படங்களுக்கு அரசு ரீதியிலான தடைகள் வரக்கூடாது என பதறி ‘ஒரு நாள் திரைப்படத்தில்’ நடித்தவர்களே அதிகம் எனவும் வரையறுக்கலாம். தமிழகம் தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் நன்கறிந்த எனது நெருங்கிய நண்பருமான ஈழத்தமிழர், “திரைப்படங்களில் இவர்கள் எல்லாம் ஊழலுக்கு எதிராக பொங்குவது எல்லாம் நடிப்பா?” என அறச்சீற்றத்துடன் கேட்டார். எங்களது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வங்கி காசோலையில்தான் ஊதியம் வழங்குவோம் என நாங்கள் எடுத்த திடமான முடிவிற்கு முதலில் மென்மையாக எதிர்ப்பு தெரிவித்த எங்கள் பட நடிகை ஒருவர், இறுதியாக, நாங்கள் வழங்க வேண்டிய சிறியத் தொகையையாவது கணக்கில் வைக்காத பணமாக கையில் தருமாறு எங்களை கெஞ்சிப்பார்த்தார். இறுதி வரை எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக நின்றோம். பல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் தேசப்பக்தியை பறைச்சாற்றும் நடிகர் நடிகைகளின் உண்மை முகம் இதுதான் அண்ணா என அவரிடம் தெரிவித்தேன். கருப்புப்பண முதலாளிகளும் வரி ஏய்ப்பு செய்வதை கடமையாக கொண்டு கோடிகளை திருடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

அரசியலில் தனக்கான எதிரிகளே இருக்ககூடாது என ஜெயலலிதா அம்மையார் எடுத்த முடிவு அவருக்கான நல்ல/வலுவான நண்பர்களையும் இழக்கச் செய்துவிட்டது எனலாம். ஜெயலலிதா அவர்கள் செய்தது ஊழல்தான் அதற்கான தண்டனைதான் இத்தீர்ப்பு என்றாலும் தார்மீக ரீதியாக துணை நிற்கக்கூட ஆளில்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையில் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவரே தேடிக்கொண்ட விணை, வேறு என்ன செய்ய? அவர் தேடிக்கொண்ட நட்புகளும் இவரைப் பயன்படுத்தி பொருளியல் அரசியல் செல்வாகும் பெற்று அவரோடு சேர்ந்து தணடனை அனுபவிக்கிறார்கள். கூடா நட்பின் விளைவு!

இவர் உருவாக்கி வைத்திருக்கும் நிர்வாகிகளும் அமைச்சர்களும் கூட தனித்து சிந்திக்க முடியாத நிலையிலேயே வைத்திருந்தார். அவர்கள் எதனையும் ‘அம்மா’விடம் கேட்டு செய்ய வேண்டும் என பழகி, நெருக்கடியில் கூட என்ன செய்வதென்று தெரியாமல் சென்னைக்கும் பெங்களூருக்கும் அலைந்து திரிந்து முடிவுகளை எடுத்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக, சட்டசபையையே பெங்களூர் சிறைச்சாலைக்கு அருகில் சென்று நடத்தாத வரை பரவாயில்லை என நினைத்துக்கொள்ளலாம்.

அதிமுக அமைச்சர்களும் புதிய முதலமைச்சரும் பதவியேற்பு விழாவின் பொழுதும் அதன் பிறகு செய்யும் கூத்துக்களைப் பார்த்தால், விசுவாசம், அடிமைத்தனம், முட்டாள் தனமான தெய்வ வழிபாடு இவற்றையெல்லாம் சேர்த்து கலந்த அறிவீனத்தின் உச்சமாக தெரிகிறது. ஒரு கட்சித் தலைமையில் அல்லது தலைமைக்கு, பிரச்சனை வரும்பொழுது கட்சியைக் காப்பாற்ற அடுத்த நிலைத் தலைவர்கள் தலைமை ஏற்பதும் வழிநடத்துவதும் சராசரி நிலை. அதேபோல, ஆட்சி செய்பவர்கள் உடல்நிலை காரணமாகவோ மரணத்தின் மூலமோ அல்லது ஜெயலலிதா அம்மையாருக்கு நடந்தது போல வழக்கினால் பதவி பறிக்கப்படுவதும் என நடக்கும்பொழுது ஆளும் கட்சிக்கான பெரும்பான்மை வைத்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து முதலைமைச்சரை தேர்ந்தெடுப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள். இவர்கள், செய்வதைப் பார்த்தால் இவர்களுக்கு ஜனநாயகமும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை, முதலில் இவர்கள் மனிதப் பிறவிகளா என்பதே தெரியாத நிலையில் செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. சிந்திக்கும் குணமும் தனிமனித அறிவென்று ஒன்று மனிதர்களுக்கு இருப்பதும் தெரியவில்லை.

தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுபோன்ற தலைமை ‘விசுவாச’ பண்புக்கூறுகள் இருக்கிறதென்றாலும், அதிமுகவினர் செய்யும் கூத்துக்களை தமிழகம் எப்படி சலித்துக்கொல்ல முடியாமல் தவிக்கிறது எனறே சொல்லலாம். அதுவும் பதவியேற்பு விழாவின் பொழுது நடந்த ‘அழுகை’ நாடகம் காண சகிக்கவில்லை. முதலமைச்சர் பதவியேற்பவர் அழுவதும் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, இழவு வீட்டில் இருப்பவர் போல முகத்தை வைத்திருப்பதும் எந்த நாட்டிலும் எந்த காலத்திலும் நடந்திராத ஒன்று. இதனை கேள்விக்கு கூட உட்படுத்தாத ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் மக்களும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது நாம் எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்கியுள்ளோம், எம்மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை காட்டுகிறது.

தீர்ப்பு வந்த நாள் முதல், அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகளை எந்த கோணத்தில் எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை. இந்த தீர்ப்பை திட்டமிட்டு, தமிழர் – கன்னடர் பிரச்சனையாக சித்தரிக்க முயல்கிறார்கள். கருநாடக நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியதும் அதனை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடித்ததும் புரட்சித் தலைவிதான் என ஏன் இவர்களுக்கு நியாபகத்தில் இல்லை.

1991 ஆம் ஆண்டில் கருநாடகத்தில் நடந்த கலவரத்தில் தமிழர்களின் வீடுகள், வணிக நிவனங்கள் சூறையாடடப்பட்டன, எரிக்கப்பட்ட, பலரும் படுகொலை செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவரும் இதே புரட்சித்தலைவிதான். அப்போது அ.தி.மு.க.வினர் கன்னடர் இனவெறிக்கு எதிராக தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.

காவிரி தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தமிழகத்திற்குள்ள காவிரி நீர் உரிமைக் குறித்து தீர்ப்பளித்த போதெல்லாம் அதைச் செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. அப்போதெல்லாம் அ.இ.அ.தி.மு.க.வினர் கர்நாடக அரசின் சட்ட விரோத போக்கை கண்டித்து காவிரி நீர் பெற ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை.

ஈழத்தமிழர்கள் பிரச்சனை முதல் தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகள் வரையில் எதற்கும் சாலையில் இறங்கி குரல் கொடுக்காதவர்கள், பேருந்துகள் கடைகளை கொழுத்துவது அடித்து நொறுக்குவது என தமிழகத்தை கலவர பூமியாகவே மாற்றிவிட்டார்கள்.

காவல் துறைப் போல வேடிக்கை பார்க்கும் வல்லமை யாருக்குமே வராது. தமிழ்த்திரைப்படங்களிலாவது இறுதி காட்சியில் வந்தவர்களுக்கு வன்முறையின் பொழுது எங்குமே தலைக்காட்டக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள். ஜனநாயக வழியிலும் அமைதி வழியிலும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்பொழுதும் தமிழக வாழ்வாதாரம் மற்றும் மொழிக்காக போராடும்பொழுதும் தமிழக ‘சட்ட ஒழுங்கை’ பாதுகாக்கும் காவலர்கள் அதிமுகவினரிடன் அரக்கத்தனத்தை ‘அடக்கிய’ விதம் பெரிதும் கவனிக்கப்பட வேண்டியது.

இந்த வன்முறையைப் பயன்படுத்தி ‘சுப்பிரமணிய சுவாமி’க்கள் தேசியக் கட்சிகளும் அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர முயற்சி எடுக்க வாய்ப்புள்ளது என்பதனை தாமதமாக உணர்ந்த அதிமுக தலைமை திடீரென்று தனது தொண்டர்களை அமைதிப்படுத்தியதோ எனவும் கணக்கிடலாம். ஏற்கனவே, 1991 இல் திமுகவின் ஆட்சியை கலைத்த `பெருமை`யும் அனுபவமும், ஜனநாயகத்தை சு.சுவாமி போன்ற நச்சுக்கிருமிகள் எப்படியெல்லாம் புதைக்குழியில் தள்ளியது. தள்ளுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு புறம், 1996 இல் அம்மையார் ஜெயலலிதா மீதான வழக்கை போட்டதற்கு முன்பு ராஜீவ் படுகொலையில் சு.சுவாமி அம்மையாரை தொடர்படுத்தி கேள்விக்குட்படுத்தியது, அம்மையாரின் மறைமுக உதவியாலும் திருச்சி வேலுச்சாமி ஐயாவின் முயற்சியாலும் ஜெயின் கமிசன் விசாரணையில் சு.சுவாமி பெயர் சேர்க்கப்பட்டது பிறகு 1998 ஆம் ஆண்டு அம்மையாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் அதே சு.சுவாமி போட்டியிட்டு வெற்றியும் பெற்று அமைச்சரானது, 1999 ஆம் ஆண்டு அம்மையார் பிஜேபி அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்று புதிய தேர்தல் வரவிருந்த வேளையில் அடுத்த தலைமையை அம்மையாருடன் சேர்ந்து உருவாக்க டெல்லியில் சு.சுவாமி தேநீர் விருந்து வைத்தது, பிறகு ஜெயேந்திரர் கைது தொடர்பில் சுவாமி அம்மையாரை எதிர்த்தது சமீப காலமாக ஜெயலலிதா அம்மையார் எடுத்து வரும் ஈழ `ஆதரவு` நிலைப்பாட்டில் தான் கடுமையான எதிர்ப்புணர்வில் இருப்பதாகவும் தமிழகத்தில் தீவிரவாதம் வளர ஜெயா அம்மாவின் ஆட்சி வழிவகை செய்கிறது என்பது வரை பல பல திருப்பங்களுடனும் புரியா புதிர்களுடனும் சு.சுவாமி அம்மையார் நட்பு-எதிர்ப்பு சுழல்கிறது.

இதில், இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சு.சுவாமிதான் இவ்வழக்கை இவ்வளவு ஆண்டுகாலம் உயிர்ப்புடன் நடத்தியவர், அவரைப் போல உத்தமர்கள், தேசபக்தர்கள் இந்தியாவிலேயே இல்லை, அவரைப் போன்ற தலைவர் பாஜகவிற்கு கிடைத்ததற்கு நாங்கள் என்ன தவம் செய்தோமோ என தமிழக பாஜகவினர் வெற்றிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் ஊழலையே புரியாதவர்கள் போலவும், இந்தியாவின் மீதான தேசபக்திக்கே பாஜகவினர் மட்டும்தான் குத்தகைதாரர்கள், எனவும் பேசுகிறார்கள். தேசபக்திக்கு மட்டுமா? இந்தியாவில் வன்முறைக்கும் கொலை, வழிபாட்டு மைய இடிப்புகளுக்கு குத்தகை எடுத்து வைத்திருக்கும் `உத்தமர்கள்` இவர்கள். ஆனால், தமிழகத்தில் இவர்களின் வாதம், இவர்களை போல உத்தமர்களே இல்லை என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்குவதிலேயே இருக்கிறது. அதற்கு எளிதில் பலியாகும் நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது.

இந்நிலையில்தான், தமிழகத்தில் பாஜகவின் காலூன்றலை தொடர்புபடுத்தி சிந்திக்க வேண்டியுள்ளது. பாஜக காலூன்ற முடியுமா என சிந்திக்கலாம். ஏற்கனவே, ஜெயலலிதா அம்மையார், கடந்த கால தனது நரித்தன்மையுடனான அரசியல் செயல்பாட்டால், தன்னை எதிர்ப்பவர்களை பலமிழக்க வைத்திருக்கிறார். திமுக தானாகவே அழிந்து போக திமுகவில் உள்ளவர்களே திடமான வேலைகளை செய்து வைத்து இருக்கிறார்கள். அழியவில்லையென்றாலும், ஏற்கனவே காங்கிரசு அரசு செய்த கள்ளத்திட்டத்தின் தொடர்ச்சியாக பாஜக அரசும் இந்திய ஆதிக்க விரும்பிகளும் திமுகவை சிதைக்க திட்டமிட்டுவிட்டார்கள்.

2011 சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும், 2014 நாடாளுமன்ற, உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களிலும் ‘வியூகம்’ அமைத்து தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்கிறது. இவ்வேளையில், அதிமுகவை ஆட்டங்காணச் செய்யும் நிகழ்வாக ஊழல் வழக்கு தீர்ப்பு அமைந்திருக்கிறது. தீர்ப்பு விசாரணையை இவ்வளவு ஆண்டுகாலம் தாமத்தப்படுத்தியது ஜெயா அம்மையார் தரப்புதானென்றாலும், விசாரணையின் இறுதி தீர்ப்பின் காலம் நிகழ்கால தமிழக அரசியலில் முக்கியமான ஒன்றாகவும். ஒருவேளை திட்டமிடப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம்.

ஆனால், ஜெயா அம்மையார் பிற கட்சிகளை அழித்து தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து நிற்கும் வேளையில் அவரை ஆட்டங்காணச் செய்யும் நிகழ்வு நடந்துள்ளதால், அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. இதிலிருந்து அவர் ஒருவேளை மீண்டுவரலாம். ஆனால், நிச்சயம் காலம் பிடிக்கும். இப்படியான பொன்னான வாய்ப்பை தட்டிப் பறிக்க திட்டமிடும் பாஜகவிற்கும் சவால்விட தமிழக நலன் சார்ந்த கட்சிகளே இல்லை என்ற நிலையில், பாஜக சிறு அடி எடுத்து வைத்தாலும் அது எளிதாக வெற்றி பெறுமே. தமிழகத்தில், இன்று நிகழ்ந்துவிட்ட நெருக்கடியை சமாளிக்க அதனை பயன்படுத்தி தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்கும் வல்லமை இதுவரையில் தமிழகத்தில் யாரிடமும் இல்லை. தமிழ்த்தேசிய அரசியலில் இன்று இருப்பவர்களிடமும் (திராவிட இயக்கங்களும் கட்சிகளையும் சேர்த்தே) அதற்கான திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

திமுக அதிமுக மட்டும்தான் தமிழகத்தை ஆள முடிந்தது, ஆண்டு வந்தது. தமிழ்த்தேசியம், திராவிட கட்சிகள், சாதிக்கட்சிகள், தேசியக் கட்சிகள் என யார் முளைத்து வந்தாலும், இவையனைவரையும் சேர்த்து அவரவர்களுக்கு ஏற்ற கொள்கைகளையும் (திராவிட இயக்க, தமிழ்த்தேசிய கொள்கை, தேசிய ‘நலன்’, சாதிய வளர்ப்பு) இவர்கள் மட்டும்தான் முன்னின்று பேச முடியும், இவர்களுடன் சேர்ந்துதான் பேச வேண்டும் என்ற நிலையே முன்னின்று வந்தது. காங்கிரசுதான் முதன்முதலில் திமுகவை அழித்து தமிழகத்தில் காலூன்ற வேலை செய்தது. ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்தியாவெங்கும் தோல்வியைத் தழுவினாலும் தமிழகத்தில் ஈழப்பிரச்சனை காங்கிரசுக்கு எதிரான பெரிய ஆயுதமாக நின்றது. ஆனால், தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க நினைப்பவர்களான காங்கிரசும் பாஜகவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இம்முயற்சியில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

என்னதான் ஜெயலலிதா அம்மையார் இறுதி தீர்ப்பின் போதுகூட விடுதலைப்புலிகளால் தனக்கு உயிராபத்து இருக்கிறது என வாதம் வைத்தாலும் கூட ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்பாக சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார். இதுதான் அதிமுகவின் தலைமையின் இன்றைய பலம். நடிப்பிற்காகவாவது, தமிழக எண்ணவோட்டத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.

‘தீர்மான’ அரசியலை ஜெயா அம்மையார் தனது அரசியலுக்காக செய்தாலும், தமிழகத்தில் எந்த நிலைப்பாட்டையும் பிறர் எடுக்கவிடாமல் அதற்கான சக்தியாக தங்களை மட்டுமே காட்டிக்கொள்ளும் திமுக அதிமுக பாணி அரசியலின் (மேலே சொன்ன, திராவிடம், தமிழ்த்தேசியம், இந்தியம், சாதியம் மற்றும் இப்பொழுது ஈழம்) தொடர்ச்சியாகத்தான் என்றாலும், இந்திய ஆதிக்க சக்திகளால் இதனை சகித்து கொள்ள முடியாது. அதுவும் தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைமையை யார் பெற்றாலும் இந்திய தேசிய கட்சிகளை கூட்டணியுள் வைத்துக்கொண்டாவது செயலாற்ற வேண்டும், அப்படித்தான் திமுகவும் அதிமுகவும் செயல்பட்டும் வந்திருக்கிறது.  அதன் மூலம் ஒரு பிடி தங்களிடமும் இருக்கும் என நினைக்கும் தேசியக் கட்சியினருக்கு ஜெயலலிதா அம்மையார் தனிப்பெரும் சக்தியாக வளர்வது பிடிக்காதுதான்.

ஆக, பாஜக இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள துடிக்கும் அதற்கான செயல்திட்டத்தையும் போட்டிருக்கும். தமிழ்த்தேசியத்தை உருவாக்கும் வல்லமை பெறாத தமிழகம், அதனையும் வேடிக்கைப் பார்க்கலாம். அல்லது இவர்களின் வளர்ச்சியில் இருந்து விழிப்புணர்வு பெற்று தனக்கான சக்தியை உருவாக்கலாம். அதனை காலம்தான் தீர்மானிக்கும்.

இன்றைய நிலையில், தமிழகம் கருணாநிதி எதிர்ப்பு-ஆதரவு ஜெயா எதிர்ப்பு-ஆதரவு என்ற கோணத்தில் மட்டுமே பயணிக்கிறது. குறிப்பாக, ஒருபக்கம் ஈழத்தமிழர்களை காரணம் காட்டி ஜெயா ஆதரவும் கருணாநிதி எதிர்ப்பும், ஊழலில் கூட கருணாநிதி ஆதரவு-எதிர்ப்பு ஜெயா ஆதரவு-எதிர்ப்பு என்ற கோணத்திலேயே நிலைத்து நிற்கிறது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகள் இருவரின் ஒருவருக்கானதாக அதுவும் பெரும்பாலும் தேர்தல் கூட்டணியை முன்னிறுத்தியே அமைந்திருக்கிறது, அமைந்துவருகிறது. ஆனால், ஆதரவு தெரிவிப்பதற்கான காரணத்தில் ஒன்றாக தமிழர் நலன் அரசியலையும் எதிர்ப்பு தெரிவிக்கும் காரணத்தில் ஒன்றாக ஊழலையும் காட்டி அவர்களும் ஏமாந்துகொள்கிறார்கள் தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார்கள். இப்படி பலவீனமான நிலையில், பாஜக உள்ளிட்ட இந்திய தேசிய நலக்கட்சிகளை தமிழகம் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வி மிஞ்சி நிற்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: