நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் ஒரு நிலைதான் நியூட்ரினோ ஆய்வு மையங்கள். இந்த ஆய்வு மையங்கள், உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பல்வேறு அரசுகளும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி கூடங்களும் பெரிதளவில் ஒருங்கிணைந்து வருவது இதுவே முதன்முறை எனலாம்.

ஆனால், இந்தியாவில் செயற்படுத்தப்பட இருக்கிற நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அச்சம் ஏற்படுத்தக்கூடிய செய்திகள் ஏராளம். இத்திட்டம் அறிவியல் உலகில் எவ்வித வெSchematic-view-of-the-Underground-neutrino-lab-under-a-mountainற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்பதற்கு அப்பால், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் முழுமையாக அழித்தொழிக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்க ஏகதிப்பத்தியத்தின் ஏவல் ஆளாகவே மாறிவிட்ட இந்தியத் துணைக்கண்டம் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கும் அமெரிக்க அறிவியல் கூடத்திற்கும் அடியாள் வேலை செய்யத்தான் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை கட்டவிருக்கிறது. எப்படி என்பதனையும் அதன் விளைவுகளையும் நமது மண்ணிற்கு எவ்வகையில் சவாலாக இருக்கப்போகிறது என்பதனையும் தொடர்ச்சியாக பார்ப்போம். நியூட்ரினோ திட்டம் எவ்வகையில் ஆபத்து என்பதனை நமது மக்களுக்கு நாம் புரிய வைத்தால்தான் அதனை எதிர்க்கும் வல்லமையை நாம் பெற முடியும். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக செல்வதற்கு முன் சிறிது இயற்பியல் புரிதல் தேவை என நினைக்கின்றேன்.

அணு மற்றும் அணுத்துகள்கள்:

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. ‘அணு’ (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழுலகில், தமிழிலக்கியத்தில் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு துகளுக்கு ‘அணு’ என்ற பெயர் இருந்து வந்துள்ளதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர். மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல். அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர். எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூட்ரான் என்றுதான் பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் “A little neutral one” என்பதாகும்.

நியூட்ரினோ – பிசாசு துகள்:

சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நீயூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றதனால் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படிப்பதற்கு இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இந்நல்லப்பிள்ளைக்கு அறிவியல் உலகம் முதலில் வைத்த செல்லப்பெயர் ‘பிசாசுத் துகள்’

ஆற்றல் அழியா விதியின் படி (Law of conservation of energy) ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது, அது அழியவும் அழியாது. ஆனால், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடையும். ஒரு வினையின் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றல், இயங்குவிசை என அனைத்தும் வினை நிறைவுறும் தருவாயிலும் நிலைத்திருக்கும். இயற்பியலாளர் வுல்ஃகாங்க் பௌலி (Wolfgang Pauli) 1930 இல் பீட்டாதேய்வு (Beta Decay) தொடர்பாக ஆய்வுகளை செய்யும்பொழுது வினை நிறைவில் கிடைக்கப்பெற்ற ஆற்றலிலும் (energy) இயங்குவிசையிலும் (momentum) மாற்றம் இருந்தது. அதாவது அழிவு இருந்தது. இது இயற்பியலின் ஆற்றல் அழியா விதியின்படி முரண்பாடானதாக பார்க்கப்பட்டது. பௌலி, வினையின் இறுதியில் கண்டுபிடிக்க முடியாத ஆற்றலையும் இயங்குவிசையையும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உட்துகள் ஒன்று கொண்டிருக்கிறது என வரையறுத்தார். ஆனால், அந்த உட்துகளை சோதனை வழியாக நிறுவ முடியாமல் கோட்பாட்டு முறையிலேயே உணர்ந்து வந்தனர். அந்த உட்துகளில் மின்னூட்டம் இல்லாத நிலையில் இருப்பதை அறிந்து, பௌலி அதற்கு நியூட்ரினோ என பெயரிட்டார். அடுத்ததாக வந்த 26 வருடங்கள் நியூட்ரினோவை சோதனை வழியாக கண்டுபிடிக்க முடியாமலேயே இயற்பியலாளர்கள் தவித்து வந்தனர். ஹிக்ஸ் போசானிற்கு ‘கடவுள் துகள்’ என பெயரிட்டது போல நியூட்ரினோவிற்கு ‘பிசாசு துகள்’ என அறிவியல் உலகம் பெயரிட்டது.

இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்:

1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னனியில் இருக்கும் அமெரிக்க கொள்கையை விரிவாக பிறகு பார்ப்போம்.

சிங்காராவில் அமைப்பதாக இருந்த இந்த ஆய்வு மையத்திற்கு 2009 இல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக அனுமதி கேட்ட சிங்காரா பகுதிக்கு அருகிலேயே முதுமலை வன சரணாலயம் அமைந்திருக்கிறது. அரிதிலும் அரிதான புலி வகைகள் வாழும் பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிக்கு அருகில் இத்தகைய ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்க முடியாது” என கூறினார். ஆனால், தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவிக்கு அருகாமையில் அமைத்து கொள்வதாக இருந்தால் அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் பரிந்துரைத்திருந்தார்.

அதன்பிறகு இதுதொடர்பாக, இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத்தின் பேச்சாளரும் டாடா ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்தவருமான மொண்டால் அவர்கள் எழுதிய கடிதத்தில், “சுருளி அருவிக்கு அருகாமையில் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால், ஆய்வு மையம் அமைக்க வேண்டுமானால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கான முழுமையான அனுமதியையும் ஒத்துழைப்பையும் வழங்கினால் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்” என பதிலுரைத்திருந்தார்.

தொடர்ச்சியாக எழுதிய கடிதத்தில் மொண்டால் அவர்கள், “சுருளியாறுக்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் தேவாரம் பகுதியில் ஆய்வு மையம் அமைக்க விரும்புவதாகவும் ஆனால், அங்கே ஆய்வு மையத்திற்கு தேவையான நீர் வசதி பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனை சரி செய்ய அரசு முன்வந்தால் திட்டத்தினை செயல்படுத்துவதில் எங்களுக்கு சிரமம் இருக்காது” என கூறினார்.

பரிசீலிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை முதலில் பார்ப்போம். நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன் இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும்.

நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையை தேர்வு செய்திருக்கிறார்கள் இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.

ஆக, இயற்பியலாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொருத்தமான இடம் இத்தகையதுதான். அதற்காக இந்தியாவிலேயே இந்த ஒரு பகுதிதான் இத்தகைய தன்மையுடையது என்பது இல்லை. ஏனைய இடங்களில் வைத்தால் மக்கள் போராட்டம் இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை அதனை தடுக்க பல வழிகள் இருக்கிறது என்ற திமிர் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

ஆனால் நாம் பகுத்துணர வேண்டிய செய்திகள் இதில் ஏராளம்.

  • முதுமலை காடுகளில் அரிதிலும் அரிதான வன விலங்குகள் வாழ்வது அணுசக்தி கழகத்திற்கும் டாடா ஆராய்ச்சி கழகத்திற்கும் சுற்றுச்சூழல் துறை சொல்லும் வரை தெரியாதா? இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் துடைத்தெறியப்பட்டு, அதனால் ஏற்படும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் வந்தாலும் ஆய்வுத் திட்டமே முக்கியம் என கருதும் குறுகிய மனம் படைத்தவர்கள்தான் இவர்கள்.
  • மொண்டால் எழுதிய கடிதத்தில் சுருளியாறு பகுதிகள் காடுகளை அழிக்க அரசின் உதவியையே நாடுகிறார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனை உலகத்தில் எங்குமே நடக்காது. ஒரு அரசிடம் ஒரு மனிதர் வெளிப்படையாக இயற்கை வளங்களை அழிக்க கோர முடியுமா? இந்நேரம் அவர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அல்லவா அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இந்திய துணை கண்ட அரசு காடுகளை அழிக்கக் கோரும் நபரை கெளரவப்பதவி கொடுத்து வைத்திருக்கிறது.
  • நீரே இல்லாத பகுதியாயினும் 30 கிமீக்கு நீரை எடுத்துச்செல்லும் குழாய்களை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். காவிரி குடிநீரை ஹொகேனக்கல் பகுதியில் இருந்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக வெறும் 18 கிமீ எடுத்து வர முடியாமல் 20 வருடங்களாக வக்கற்று நிற்கும் அரச நிறுவனங்கள் 10-20 அறிவியலாளர்களின் சாதனைக்காக அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் அரசு மக்களுக்கானதா? அல்லது அதிகாரிகளுக்கானதா? ஆராய்ச்சி நிறுவனங்களுக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
  • புலிகளும், யானைகளும் நடமாடும் பகுதி/பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என கூறி நீலகிரியில் திட்டம் செயல்படுத்த அனுமதி மறுத்த சுற்றுச்சூழல் துறை, மனிதர்கள் வாழும் தேனி பகுதியில் திட்டம் செயல்படுத்த அனுமதியளித்திருக்கிறது. விலங்குகளை விடவா மனிதர்கள் மதிப்பற்றவர்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

இத்திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. “மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. நிறைய தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும் கூட. இங்கு நிறைய அணைகள் அருகருகே இருக்கிறது. கிட்டத்தட்ட 10ற்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. பூமிக்குள் சுரங்கம் தோண்டும்பொழுது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளை தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பகுதியில் வாழும் பல் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என கூறுகின்றனர்.

அதேபோன்று, இத்திட்டம் அமைக்கப்போவதாக சொல்லுகின்ற 34 ஹெக்டேர் பகுதி, மக்களோட வாழ்வாதாரமா இருக்கிற கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் என சமீபத்திய ஆன்ந்த விகடன் கட்டுரை தெரிவிக்கிறது. 2.5 கிமீ சுரங்கம் தோண்டும் பொழுது உருவாகும் தூசி மண்டலம், அந்த பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான சுமையுந்துகள் குறுக்கும் நெடுக்குமாக பாடும் பொழுது அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பல மாதங்களுக்கு பாதிக்கும்.

மேலும், இது குறித்தான புரிதல் ஏற்படுத்தும் விதமாக அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவிசார்தொழிற்நுட்ப முறை (Geotechnical studies) ஆய்வுகளை அணுசக்தி கழகமும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கையை இதுவரை இல்லை. அதாவது, சுரங்க கிடங்குகள் அல்லது ஆய்வகங்கள் அமைக்கும்பொழுது நீர் அடுக்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் எவ்வகையிலான பாதிப்புகள் வரும் என்பதனை கணிக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது நடக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை பதில் இல்லை.

ஒரு திட்டம் வரும்பொழுது, கட்டுமானம், போக்குவரத்துகள், வாழ்வியல் பாதிப்புகள் வருவது இயல்பு என வாதம் செய்வோர்கள் கவனத்திற்கு, யாரோ 20-30 அறிவியலாளர்களின் வெற்றிக்காக பல லட்சம் மக்களை பலிக்கடாவாக்க முடியாது என்பதனை நினைவில் கொள்க.

கதிர்வீச்சு அபாயம்:

சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் தமிழர்களின் வாழ்வாதார பாதிப்புகளும் மட்டும் என்றில்லை, கதிர்வீச்சு அபாயமும் இருக்கிறது. வான்வெளியில் இருந்து வந்துகொண்டிருக்கும் நியூட்ரினோவின் ஆற்றல் நம்மை பாதிப்படையச் செய்யும் கதிர்வீச்சு அல்ல. ஆனால், முதலில் வான்வெளியில் இருந்து பொழியும் நியூட்ரினோவை பதிவு செய்து ஆய்வு செய்வதோடு, இத்திட்டம் நிறைவுறப்போவதில்லை. சமகாலத்தில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் நியூட்ரினோ ஆய்விற்கான சுரங்க ஆய்வகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயங்கும் நியூட்ரினோ உற்பத்திசாலையில் இருந்து நியூட்ரினோக்கள் நமது மண்ணை நோக்கி செலுத்தி, அதன் மிக தொலைவில் இருந்து பயணப்படும்பொழுது ஏற்படும்/ஏற்படுத்தும் மாற்றம், இயற்பியல் கோட்பாட்டு நிகழ்வும்கள், பிற கதிர்வீச்சுகளோடு வினைபுரியும் வாய்ப்பு என அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்படும். இதில்தான் பெரிதளவிலான சிக்கல்கள் இருக்கின்றன.

எப்படி என சிந்திக்கிறீர்களா?

வான்வெளி நியூட்ரினோவிற்கு நம் மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இல்லை என்றாலும் செயற்கையாக உற்பத்தியாகும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (MeV) வரை ஆகும். ஆனால், அமெரிக்க நியூட்ரினோ 500-1500 கிகா எலக்ட்ரான் வோல்ட் (GeV). செயற்கை நியூட்ரினோ 10 கோடி மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது. இயற்கை நியூட்ரினோக்கள் தனித்தனியாக பயணிக்கக் கூடிய வல்லமை படைத்தது. ஆனால் செயற்கை நியூட்ரினோக்கள் அமெரிக்காவில் இருந்து அனுபப்படும்பொழுது அது நேர்திசையாக்கள் செய்யப்பட்டு கற்றைகளாக பயணிக்கும். அதனால் செறிவும் (Intensity) அடர்த்தியும் பன்மடங்கு கூடும்.

பிற்காலத்தில் ஜப்பான் மற்றும் அண்டார்டிக்காவில் இருந்தும் தமிழகம் நோக்கி இக்கதிர்வீச்சு அனுப்பப்படலாம். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏனைய நாடுகளின் அரசும் மக்களும் ஒருபொழுதும் தன் நாட்டின் மீது இத்தகைய கதிர்வீச்சு படையெடுப்பை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் இது முற்றிலும் சாத்தியம். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்திய துணைக்கண்டத்தில் விற்பனை செய்யப்படுவது சாத்தியமாக இருக்கும்பொழுது, பல நாடுகள் தடை செய்த வேதாந்த நிறுவனம் இங்கு செயல்படுவடு சாத்தியமாக இருக்கும்பொழுது, உலக வல்லரசுகளின் பொருளாதார வேட்டைக்காடாகவே இந்திய துணைக்கண்டம் மாற்றிவிட்ட சூழலில் இது முற்றிலும் சாத்தியமே. இங்குதான் ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி நினைத்தாலே எவனின் தலையெழுத்தையும் மாற்ற முடியுமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: