சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

 நோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனும் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. வெயில் காலங்களில் 20 மணி நேரமும் சூரியனின் பார்வையும் குளிர் காலங்களில் 20 மணி நேரமும் காரிருள் படர்ந்த வானமுமே நிலைத்திருக்கும். கடும் இருளோடு வெண்பனி (snow) முழுமையாக படர்ந்த சாலை, கதிரவன் நிறைந்திருக்கும் காலங்களிலும் எல்லா வழித்தடங்களிலும் மலையின் உச்சியிலிருந்து உருகி விழுந்து வழிந்தோடும் அருவி உருவாக்கும் குளிர்ச்சியும், நெடுநெடு மலைகளுக்கு இடையே குடைந்து போடப்பட்டிருக்கும் குகைச்சாலை உள்ளே நுழைந்து வெளிவரும்பொழுது முழுமையன புது நிலம் போன்ற பிரமிப்பு உணர்வும் என ஒவ்வொரு பொழுதுகளிலும் ஒவ்வொரு பாதைகளிலும் ஒவ்வொரு அழகை ரசிக்கலாம்.

IMG_0802.JPG
படம்: 2013 ஆம் ஆண்டு சோங்கனேஃபியோர்டு (Sognefjord) – லாவுர்டால் (Laerdal) மலையில்! நிலத்திலிருந்து மலைகளுக்கிடையே கடலை தொடும் இந்த நீர்வழியையே ஃபியோர்டு- கடனீர் இடுக்கேரிகள் – கடல் நீரேரி என கூறுகிறார்கள். இருப்பதிலேயே மிக நீளமானது இந்த சோங்கனேஃபியோர்டுதான், மொத்தம் 200 கிமீ .

பெரும்பாலுமான தென் நோர்வேயை மகிழுந்து மூலம் பயணம் செய்து கண்டு ரசித்திருக்கிறேன். பல வருடங்களாக நோர்வேயிலேயே வாழும் எனது ஈழத்தமிழ் நண்பர்களுக்கு கூட தெரியாத வழித்தடங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி என அவர்கள் சொல்லும் அளவிற்கு ஒரே ஊருக்கு கூட பல வழித்தடங்களில், குறிப்பாக நெடும் மலைகள், கடும் காடுகள், சமவெளி நிலங்கள் என பலவகைப் பாதைகளில் பயணம் செய்து தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு நோர்வேக்குள் பயணம் என்பது எனக்கு அவ்வளவு ரசனைக்குரியது. அதுவும் மகிழுந்துவை நானே இயக்கி செல்லும் தொடர் நெடுந்தூர பயணங்கள் அவ்வளவு இனிமையானவையாக தோன்றும். ஒவ்வொரு நகரத்திற்கும் இடையே 500-700 கிமீ தூரம் இருக்கும். பலமுறை தனியே பயணித்திருக்கிறேன். எப்ரல் முதல் ஆகஸ்து காலம் என்றால், நிச்சயம் இரவு மட்டுமே மகிழுந்துவை இயக்குவேன். இரவு 12ம் அதற்கும் மேலாக கூட சூரிய வெளிச்ச இருக்கும். அதேபோல, அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கெல்லாம் மீண்டும் சூரியன் ஒளி வீசத் தொடங்கிவிடும். அதேவேளை, முழு வெளிச்ச இரவு வேளைகளில், சாலைகளில் போக்குவரத்து மிக குறைந்த அளவிலேயே இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக தனியாக நெடுந்தூரம் பயணிப்பது அவ்வளவு பிடிக்கும். வார்த்தைகளில் வருணிக்க முடியாது. கிட்டதட்ட நானே ராஜே இதுவே என் நிலம் என்பது போன்ற தன்னந்தனியாக நெடுந்தூரம் யாரும் தென்படாத பயணங்கள் அவை!

அடுத்த இலக்கு! வடதுருவ முனைக்கு சென்று ரசிக்க வேண்டும். இவ்வுலகின் வடதுருவத்தைப் பார்ப்பது வாழ்நாள் கனவாக மாறியிருந்தது. அதுவும் மகிழுந்து பயணத்தில் என்பது பெருவிருப்பமானது!  கடந்த 2014 டிசம்பர் கிறிஸ்துமஸ் காலத்தில் வட துருவம் நோக்கி பயணிப்பதென நானும் என் நண்பன் விஷ்ணுவும் முடிவெடுத்தோம்.

எனது நண்பன் விஷ்ணுவும் நானும் பி.எஸ்.ஜி தொழிற்நுட்பக் கல்லூரியில் படிக்கும் பொழுதிருந்தே பயணத்தில் விருப்பம் உள்ளவர்கள். அவனும் நானும் நோர்வேயில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். நான் பேர்கன் நகரிலும் அவன் ஓஸ்லோ நகரிலும். அவனுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து முதன்முறையாக நோர்வே வர இருக்கும் அவனது மனைவியையும் எங்களுடன் இணைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம். சென்று சேர கிட்டதட்ட 2000 கிமீ என்பதாலும் -30 அல்லது -35 டிகிரி வரை குளிர் இருக்கும் என்பதாலும் தொடர்ச்சியாக 30 மணிநேரம் பயணம் செய்வது உகந்ததாக இருக்காது என எனது குழந்தைகளோடு செல்வதைத் தவிர்த்தோம். அதனால், எனது மனைவியும் எங்களுடன் வர இயலாமல் போய்விட்டது.

 அச்சுறுத்திய நண்பர்களும் அதற்கான காரணங்களும்:

எனது முனைவர் பட்டப்படிப்பில், எனது ஆலோசகராக இருந்த பேர்கன் பல்கலைக்கழகப் பேராசிரியை, இந்த பயணத்தை மிக ஆபத்தானது என அச்சுறுத்தினார். 20-30 வருடங்களாக, நோர்வேயிலேயே வாழும் ஈழத்து நண்பர்கள், இப்பயணத் திட்டத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். வட முனை நோர்வேயில், பல வருடங்களாக வாழ்ந்து அனுபவம் பெற்றிருந்த எனது நண்பர் சிம்மன், அவரும் ஈழத்தமிழர், அவர் மட்டும் சில ஆலோசனைகளை கூறினார். நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்த, எனது பல்கலைக்கழக நண்பர்கள், இதனை ஒரு வினோத நோயாகவே பார்த்தனர்.

இத்தனை அச்சுறுத்தல்களும் ஆலோசனைகளும் ஏன் என்று சிந்திக்கிறீர்களா?

ஒன்று, 2000 கிமீ நான் தனி மனிதனாக மகிழுந்துவை இயக்கப்போகிறேன். , சென்று திரும்ப, ஊர் சுற்ற என ஒட்டுமொத்தமாக 4000-4200 கிமீ ஆவது ஆகும் என்ற நிலை. (சென்று திரும்பும் வழியில் நாங்கள் வேண்டுமென்றே சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்று வந்தோம். அங்கிருந்து ஓஸ்லோ திரும்பும் பயணம் ஏற்கனவே இருந்த பயணப்பாதையில் 350 கிமீ கூட்டுச்சேர்ந்தது என்பது தனிக்கதை).

இரண்டு, கிறிஸ்துமஸ் காலத்தில் எங்குமே எந்த கடைகளும் உணவகங்களும் திறந்து இருக்காது. மூன்று, தென் முனையில் இருக்கும் 3-4 மணி நேர வெளிச்சம் கூட வட முனையில் இருக்காது. 24 நேரமும் இருட்டு. நான்காவது காரணம், கடும் வெண்பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. சாலை முழுமையும் திடீரென வெண்பனிப் பொழிவால் மூடப்பட்டு விடும். மலைகளில் பனிப்புயல் அடித்தால், பாலைவனம் போல மாறிவிடும். எந்த திசை என தெரியாது. பயணம் செய்வது ஆபத்தென தெரிந்தால், அரச சாலை நிர்வாகத்துறையினரால் சாலைகள் சில நேரம் மூடப்பட்டுவிடும். மீண்டும் எப்பொழுது திறக்கப்படும் என தெரியாது.

ஐந்தாவது காரணம், நாங்கள் செல்லத் திட்டமிடப்படிருந்த காலம் -30லிருந்து -35 டிகிரி தட்பநிலை.  சமாளிக்கவே முடியாத குளிராக இருக்கும். அடுத்ததாக, ஐந்தே நாட்களில் சென்று வருவது சாத்தியமே இல்லாததாக நண்பர்கள் கருதினார்கள். அதுவும் 4500 கிமீ ஒருவரே மகிழ்ந்துவை இயக்க வேண்டும் என்ற நிலை பெரிய ஆபத்தில் போய் முடியலாம் எனவும் அஞ்சினர்.

எப்படியும் அடுத்த 6 மாதங்களில் தமிழகம் திரும்ப திட்டமிட்டிருந்ததால், அதற்குள் வடதுருவத்தைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் ஒரு புறம். எப்பொழுதும் போல எனது விருப்பமான மகிழுந்துப் பயணம்தான் என்ற முடிவு ஒருபுறம். வான்வழியோ கடல்வழியோ கூட செல்லலாம்! இப்படியொரு சவாலை எதிர்கொள்வது எனக்கும் என் நண்பன் விஷ்ணுவுக்கும் பிடித்தமானதுதான். பிறரின் எல்லா ஆலோசனைகளும் காற்றில் விடப்பட்டன. எங்களது பயணத்தை உறுதி செய்துகொண்டோம்.

 பயணத்திற்கான திட்டமிடல்:

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து பயணம் தொடங்குவது என முடிவு செய்திருந்தோம். நான் பேர்கனில் இருந்து ஓஸ்லோ சென்று அங்கிருந்து அனைவரும் மகிழுந்து மூலம் கிளம்ப எண்ணினோம். கிட்டதட்ட 20 நாட்கள், வசதியான சாலை வழித்தடங்கள், தங்குமிடம், சுற்றிப்பார்க்க நினைத்த இடங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்வது போல படித்து குறித்துக்கொண்டிருந்தேன்.

நோர்வேப் பாதையில் செல்வதை முதலில் தவிர்த்தேன். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன், பின்லாந்து பிறகு நோர்வேயின் வட முனை என வரையறுத்துக்கொண்டேன். நோர்வே முழுமையும் மலைகள் நிறைந்த பகுதியென்பதால் அடிக்கடி பனிப்பொழிவின் ஆபத்து காரணமாக மூடப்படும் நிலை உருவாகலாம். அதனால், எங்களது பயணம் தடை பட வாய்ப்பு உருவாகலாம் என்பதால் இந்த எண்ணம். அதுவும் இல்லாமல், நோர்வேயின் மேற்கு பகுதிகளிலும் வடப்பகுதிப் பயணப் பாதைகளிலும் கடல் நீர் மலைக்களுக்கு இடையே பலநூறு கிலோமீட்டர்கள் உள்ளே நிறைந்திருக்கும். அதனால், ஒவ்வொரு 100-200 கிமீ இடையில் நீர் நிலைகளைக் கடக்க கப்பல்களிலும் மகிழுந்துவை ஏற்றி இறக்க வேண்டும். நேர விரயம் மட்டுமல்ல, பொருளாதாரச் செலவும் அதிகம். ஆக, நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன் வழியாக பயணிப்பது முதல் திட்டம்.

அடுத்ததாக சுவீடன், பின்லாந்து நாடுகளிலும் மலைப்பகுதிகளை தவிர்த்தேன். சுவீடன் கிழக்கு கரையில் வடக்கு நோக்கி பயணித்து பின்லாந்து நாட்டு எல்லையில் இருந்து வடக்கு நோக்கி மீண்டும் பயணம் தொடர்ந்து நோர்வேயின் வடமுனை அடைவதாக திட்டம் தீட்டிக்கொண்டேன்.  அதாவது ஓஸ்லோ நகரில் இருந்து கிழக்கு நோக்கி 50 கிமீ சுவீடன் எல்லை அங்கிருந்து 405 கிமீ  காவ்லே (Gavle) அங்கிருந்து வடக்கு நோக்கி சுண்ட்சுவால் (Sundsvall) 209 கிமீ, அங்கிருந்து உமீயா (Umea), லூலியா (Lulea)வழியாக சுவீடன்-பின்லாந்து எல்லை டோர்னீயோவிற்கு (Tornio) மொத்தமாக 663 கிமீ. பிறகு, டோர்னியோவில் இருந்து ரோவெநிமி (Rovenimi) நகரைக் கடந்து இனாரிக்கு (Inari) 450 கிமீ அங்கிருந்து நோர்வே எல்லைக்கு 180 கிமீ பிறகு 40 கிமீ வட துருவ நகரமான கிர்க்னெஸ் (Kirkenes). ஆக, ஒட்டுமொத்தமாக, 1997 கி.மீ நெடும்பயணம். இதுதான் பயணப்பாதை என்பதனை உறுதி செய்துக்கொண்டேன்.

Untitled
படம்: நோர்வே தலைங்கர் ஓஸ்லோவில் இருந்து சுவீடன் காவ்லே, லூலியா வழியாக பின்லாந்து  டோர்னியோ, இனாரி வழியாக நோர்வே வட முனையும் உலக வட துருவ நகரமும் ரசிய எல்லையில் இருக்கும் நகரமுமான கிர்கனெஸ் சென்ற வரைபடம்

பயணத்திட்டமிடலின் பொழுதே, அவ்வப்பொழுது தட்பநிலைகளை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். ஆங்காங்கே, பயணப்பாதைகளில் இருக்கும் நகரங்களை ஒட்டிய சாலைகளில் இருக்கும் காணொளி பதியும் கருவி (webcam) பதிவுகளை, இணையங்கள் மூலம் பார்த்து சாலைகள், பனிப்பொழிவின் பொழுது நடக்கும் மாற்றங்கள் என அனைத்தையும் பார்த்துக்கொண்டேன். நான் அந்தந்த நகரத்தை கடக்கும் பொழுது இருக்கும் நேரத்திற்கு அந்த கருவிகளில் என்ன பதிவாகிறது, போக்குவரத்து எவ்வாறு உள்ளது என்பதனை சரியாக பார்த்துக்கொண்டேன். பயணங்களில் அவ்வப்பொழுது ஏதேனும் மாற்றம் நிகழுமாயின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இத்திட்டமிடல்கள் மூலம் ஒரு தெளிவு பிறந்தது.

இனாரி:

இதில் இனாரி வழியாக பாதை அமைவதை நான் விரும்பினேன். வடக்கு நோர்வே, வடக்கு சுவீடன், வடக்கு பின்லாந்து முழுமையும் பூர்வக்குடி மக்களான சமி (Sami) இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள், அந்தந்த நாட்டிற்கு சொந்தமானவர்களாக அரசியல் காரணத்தினால் இணைக்கப்பட்டிருந்தாலும், நோர்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகளில் முறையே அவர்களுக்கு நாடாளுமன்றங்கள் இருக்கிறது. அது, அந்தந்த நாட்டு அரசியல் எல்லைகளுக்கு கட்டுப்பட்டிருந்தாலும் சுயாதீன (autonomous) முறையில் இயங்கும் தன்மையோடு அரசியல் யாப்பு (constitutional draft) வரையறுக்கப்பட்டுள்ளது.

அவர்களது பிரதிநிதிகள் பூர்வக்குடி மக்களில் ஒருவராகவே இருக்கிறார்கள். அவர்களது பண்பாட்டிலோ, வாழ்க்கை முறையிலோ, எந்த அரசாங்கங்களும் தலையிட முடியாது. அவர்களது வரையறுக்கப்பட்ட எல்லையில் அவர்களது தனி அரசுதான்.

அந்த பூர்வ குடி மக்களின் பாராளுமன்றங்களில் ஒன்று பின்லாந்து நாட்டில் இனாரியில் இருக்கிறது. அதனால், அதனை காண விரும்பினேன். சுவீடன் நாட்டில் கிருனா (Kiruna) நகரிலும் நோர்வே நாட்டில் காரஸ்யோக் (Karasjok) நகரிலும் அவர்களது நாடாளுமன்றம் இயங்குகிறது. இதனை இணைக்கும் பாதைகள் பெருமலைகளால் சூழப்பட்டிருந்ததால் ஏற்கனவே தவிர்க்க நினைத்தப் பாதைகளில் அவ்விரு ஊர்களும் அடங்கிவிட்டது.

வடதுருவ வெளிச்சம்:

அடுத்ததாக, நாங்கள் பார்க்க விரும்பிய காட்சி, வட துருவ வெளிச்சம்/ஒளி (Northern Lights). வட துருவப் பகுதிகளில் மட்டுமே காட்சியளிக்கும், வானெங்கும் நிறைந்திருக்கும் பல நிறங்களில் (பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கலந்த) ஆன ஒளி. ஆங்கிலத்தில்,  Aurora, Northern Lights, Artic lights  என சொல்வார்கள். வான்வெளியில், காஸ்மிக் கதிர்கள் மற்றும் வான்வெளி காந்த புலத்தில் உருவாகும் பிளாஸ்மா (plasma) வடதுருவக் காற்றொடு கலந்து வெளிப்படும் இயற்பியல் மாற்றமே வானெங்கும் அழகான ஓவியமாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இது எப்பொழுது நிகழும் என நிர்ணயம் செய்ய முடியாது. நாம் பயணிக்கும் நேரத்தில் வெளிப்பட்டால் காணலாம் அல்லது பார்க்காமலேயே திரும்ப வேண்டியதுதான்.

images

 வாடகை மகிழுந்துவில் பயணம்:

ஓஸ்லோ நகரில் இருந்து மகிழ்ந்துவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாங்கள் மூவரும் 24.12.2014 அன்று காலை பயணத்தைத் தொடங்கினோம். அன்றைய நாள் மாலை 4 வரைதான் கடைகள், உணவகங்கள் திறந்து இருக்கும் அடுத்த நாள் முழுமைக்கும் பூட்டு,  26.12.2014 அன்றுதான் மீண்டும் திறக்கும். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சில நேரங்களில் உணவு கிடைக்கலாம். அதுவும் எல்லா நிலையங்களிலும் இருக்காது. பெரும்பாலும் எரிபொருள் நிரப்புவது நாமே செய்துகொள்ளும் வேலை என்பதால் வேலை செய்ய யாரும் இருக்கத் தேவையில்லை. ஆனால், சில நிலையங்களில் தேநீர், உணவு, கழிப்பிட வசதிகள் இருக்கும். அங்கு மட்டும் வேலைக்கு ஒருவர் நிற்பார். கிறிஸ்துமஸ் காலத்தில் அதுவும் இருக்குமா என்று தெரியாத நிலையில் பயணம் தொடங்கப்பட்டது. குடிக்கவும், உண்ண சிறு வகை உணவு பொட்டலங்களும் மட்டும் எங்கள் கைகளில் இருந்தது.

 காவ்லே – உணவு இடைவெளி:

வழியெங்கும் -10 டிகிர் குளிர், முழுமைக்கும் படர்ந்திருந்த வெண்பனி. ஆங்காங்கே வளைவுகளில் சிறிது வழுக்கல். புதிய வகை மகிழுந்து (Hyundai i30  -2014) என்பதால், சாலை பயணத்தை கட்டுப்படுத்தும் தானியங்கி வசதி அதில் பொருத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே வளைவுகளில், பனியினால் நிகழ்ந்த தடுமாற்றத்தை தானியங்கி கட்டுப்படுத்தி எங்களுக்கு பெரிய நெருக்கடி வராமல் பாதுகாத்தது. நோர்வே சுவீடன் எல்லை ஒரே ஒரு பலகை அதுவும் மரத்தின் அடியில் உடனே புலப்படாத வகையில். இதுவே இரு நாட்டில் எல்லைக்கோடு. எவ்வித கட்டிடங்களோ மனித நடமாட்டமோ இல்லாத காட்டுப்பாதையின் நடுவே இரு நாட்டின் எல்லைக்கோடு. எளிதாக கடந்தோம். முதன்முறையாக நோர்வே தவிர்த்த இன்னொரு நாட்டில் மகிழுந்து இயக்கிக்கொண்டிருக்கிறேன் என்பது மனமகிழ்வை கூடுதலாக்கியது.

பயணம் தொடங்கிய நேரத்தில் இருந்து மாலை 4 மணி வரை எங்கும் உணவிற்கும் நிறுத்தாமல் காவ்லே சென்று சாப்பிடலாம் என முடிவெடுத்தோம். காரணம், பெரிய ஊர் என்பதால், ஓரிரு உணவங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அல்லது பெரிய நகரங்களில் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களின் உணவகம் இருக்கும். அவர்கள் எப்படியும் திறந்து வைத்திருப்பார்கள்.

 வெண்பனிப் புயல்:

மென்மையாக சென்று கொண்டிருந்த எங்களது பயணத்தில், மதியம் 2.30 மணிக்கெல்லாம் சிறிது இருட்டு வரத்தொடங்கி 3 மணிக்கெல்லாம் கடும் இருள் சூழ்ந்தது. -10 டிகிரி -6, -4 என அதிகரித்தது. வெண்பனி,  +3 டிகிரியிலிருந்து -4ற்குள்தான் பொழியும். -4டிகிரிக்கு கீழ் -40 சென்றாலும் கடும் குளிர் இருக்குமே தவிர பனிப்பொழிவு இருக்காது. எங்கள் பயணத்தில், இனி நிச்சயம் வெண்பனி பொழிவிற்கு வாய்ப்பிருக்கிறது என எண்னியிருந்த வேளையில், புயல் காத்து போல வெண்பனி பொழிந்து எங்களது பயணத்தையும் எங்களது மகிழ்வையும் சோதித்தது.

பயணம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. 2000 கிமீ பயணத்தில் முதல் 400 கிமீலேயே இப்படியான நெருக்கடி வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. மகிழுந்து செல்லும் திசைக்கு எதிரே எங்களை நோக்கி பெரும் பனி பொழிந்துகொண்டே இருந்ததாலும், கடுமையான இருட்டென்பதாலும் நான் மிக கவனமாகவும் மிக மெதுவாகவும் மகிழ்ந்துவை செலுத்த வேண்டிய நிலையில் இருந்தேன். நான் கணக்கிட்ட நேரத்தில் இருந்து 1.5 மணி நேரம் முன்பே சென்று விடுவோம் என நினைத்திருந்த எங்களது பயணம் 1 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு காவ்லே சென்றடைந்தது. புதிய பனிப்பொழிவு சாலை முழுமைக்கும் நிறைந்திருந்தாலும் வாகனங்களின் பயண எண்ணிக்கை மிக்க்குறைவு என்பதாலும் வெண்பனி மணல் போல பல அடிக்கு குவிந்திருந்தது. காவ்லே நகரத்திற்குள் உணவகம் தேட மிக நேரமானது. எதிர்ப்பார்த்திருந்தது போல இஸ்லாமியர்களின் பிஸ்ஸா (Pizza) கடை திறந்திருந்தது எங்களுக்கு மன நிறைவை அளித்தது.

காவ்லேவில் இருந்து டோர்னியோ வரை:

காவ்லேவில் இருந்து நாங்கள் பயணம் தொடங்கிய நேரம் வெண்பனி பொழிவு குறைந்திருந்திருந்தது. அங்கிருந்து டோர்னியோ வரை ஐரோப்பிய சாலை (European highway). காவ்லேவில் இருந்து டோர்னியோ வரை கிட்டதட்ட 880 கிமீ. நான் ஏற்கனவே கணக்கிட்டிருந்தது போல அடுத்த நாள் காலை 5 மணிக்கு டோர்னியோ செல்ல வேண்டும்.

காவ்லேவில் இருந்து லூலியா வரை நேர் கோடு போட்டது போன்ற சாலை. வெறும் இருள் என்பதால், அருகாமையில் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை. குதிரையின் பார்வை போல நேராக சாலையை மட்டும் பார்த்து வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். நோர்வேயில் முழுமையான மலைகள் சூழ்ந்த, மேலே, கீழே, முழு வளைவு, கொண்டை ஊசி வளைவு சாலை என பலவாறு இருக்கும் சாலைகளிலே மட்டும் வாகனம் ஓட்டிய எனக்கு, தொடர்ச்சியான நேர்க்கோட்டு சாலை வித்தியாசமாக தெரிந்தது.

காலை 10 மணிக்கு தொடங்கிய பயணம் என்பதாலும், தொடர்ச்சியான நேர்க்கோட்டுப் பாதை, முழு இருட்டு என மிக சவாலான பயணமாகவே இது அமைந்தது. தூக்கம் இல்லையெனினும் சலிப்பு தொடங்கியது. இருப்பினும், விஷ்ணுவுடனான பல மணி நேரப்பேச்சு என்னை இயக்கிக்கொண்டிருந்தது. கிட்டதட்ட எங்களின் கடந்தகால பத்து வருட நட்பில் நடந்தவை, தெரிந்தவை, தெரியாதவை என எல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டே நேரான சாலையில் வாழ்வை பின்னோக்கி சுவைத்துக்கொண்டே சென்றோம். வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த நந்தினி எப்பொழுது உறங்கினார் எனக் கூடத் தெரியவில்லை.

மாலை 6 முதல் அதிகாலை 1:30 வரை தொடர்ச்சியாக நேர்க்கோட்டு சாலை கடும் இருள். சாலை முழுமையும் வெண்மையான பனிகள் நிறைந்த கடும் குளிர் சூழல். நினைக்கவே மலைப்பாக இல்லையா? தேநீருக்கு கூட ஓய்வெடுக்காமல் சென்றிருந்தால் அவ்வளவுதான். மனச்சோர்வு கடுமையானதாக மாறியிருக்கும். நல்லவேளை, காவ்லேவை கடந்த பாதைகளில் இரு இடங்களில் தேநீர் குடிக்க வாய்ப்பிருந்தது. காவ்லேக்கு முன்பு நிகழ்ந்த புயல் போன்ற பனிப்பொழிவும் காவ்லேக்கு பிறகான நேர்க்கோட்டு இருட்டுச் சாலையும் எங்களது பயணத்தின் சவாலை உணர்த்தியது.

பெரும் இன்ப அதிர்ச்சியாக எங்கள் பயணத்தடத்திலேயே வடதுருவ ஒளியை காணக்கிடைத்தது. உமியாவிலிருந்து லூலியா சென்றுக்கொண்டிருந்த பாதையில் வடதுருவ ஒளி வானத்தில் காட்சியளித்தது. மகிழுந்துவை நிறுத்தவில்லை. அப்படியே ரசித்துக்கொண்டே சென்றோம். இதனை படம் பிடிக்க முடியாது. அதி நவீன கருவிகளில் சில நேரம் படம் பிடிக்கலாம். ஆனால், வானத்தில் ரசிப்பது போல அழகாகவும் தெளிவாகவும் தெரியாது. லூலியாவில் இரவு 1:30 மணிக்கு வாகன எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்திருந்தது இன்ப அதிர்ச்சியை வழங்கியது. தன்னந்தனியாக ஒரு இளம் பெண் வேலை செய்துகொண்டிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு காலை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என ஆனந்த புன்னகையோடு எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு சற்று இளைப்பாறலுக்கு பிறகு கிளம்பிய எங்கள் பயணம், அதிகாலை 4 மணிக்கெல்லாம் டோர்னியோ சென்றடைந்தது. திட்டமிட்டதில் இருந்து ஒரு மணி நேரம் முன்பே வந்து சேர்ந்த மகிழ்ச்சி, எல்லா சோர்வையும் போக்கியது  எனலாம். சுவீடன்-பின்லாந்து எல்லையில் முறையே அப்பரண்டா-டோர்னியோ (Haparanda – Tornio) நகரங்கள் இருக்கிறது. ஒரு ஊரின் எல்லையை கடந்தால் இன்னொரு ஊர். இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாலம்தான் இரண்டு நாட்டிற்கும் ஆன எல்லையைக் கட்டுப்படுத்துகிறது.

20141225_Sweden-Finland (2).jpg
படம்: சுவீடன்-பின்லாந்து எல்லை – டோர்னியோ நகர நுழைவாயில். இதன் எதிர்புறமே சுவீடன் நாட்டு அப்பரண்டா நகர எல்லை முடிவு இருக்கிறது

 கடைகளே இல்லாத பின்லாந்து:

அடுத்த 7 மணி நேரங்கள் கடைகளே திறந்திருக்காது என்பது தெரிந்திருந்தாலும் நெஞ்சில் ஒரு ஓரத்தில் சிறு ஆசை குடியிருந்தது. ஒரே ஒரு தேநீர் கடைக்கூடவா இல்லாமல் போய்விடும் என இருந்த எதிர்ப்பார்ப்பும், பயணப்பாதையில் சுக்குநூறாகி சிதறுண்டது. கிறிஸ்துமஸ் அதிகாலை. வழியில் ஆள் நடமாட்டம் கூட இல்லை. அப்புறம் எங்கு போய் கடைகளை தேடுவது. 450 கிமீல் இருக்கும் இனாரிக்கு சென்றால்தான் கடைகள் இருக்கும். நல்லவேளையாக, அதுதான் கடைசியாக நாங்கள் பார்க்கும் கடை என தெரியாமலையே லூமியாவில் நாங்கள் வாங்கி வைத்த குடிநீர், பழச்சாறு, சிறு உணவுகள்தான் எங்களுக்கு கைக்கொடுத்தது.

தூக்கத்தோடு தொடர்ந்த பயணம்:

டோர்னியோ கடந்த ஒரு மணி நேரத்தில், காலை 5 மணிக்கு மேல், விஷ்ணுவும் தூங்கிவிட்டான். அவன் பின் இருக்கைக்கு மாற, நன்றாக தூங்கி தெளிவாக இருக்கிறேன் என்று கூறிய நந்தினி முன் இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னுடன் பேசிக்கொண்டே, என்னை தூங்காமல் பார்த்துக்கொள்வதாய் சபதம் எடுத்து அமர்ந்தவர் கூடிய விரைவிலேயே தூங்கிவிட்டார். அடுத்த நான்கரை மணி நேரம் தனிமைப்பயணம் போலவே இருந்தது. அவ்வப்பொழுது கண் விழித்த நந்தினி நான் தேர்ந்தெடுத்து மகிழுந்துவில் இயங்கிக்கொண்டிருந்த பாடல்களே தனக்கு தூக்கத்தை வரவழைத்தது என என்னை குற்றம்சாட்டிவிட்டு தன் கடமையைத் தொடர்ந்தார்.  அதிகாலை 1:30 மணிக்கு தேநீர் குடித்தது. காலை 8 மணி கடந்த பயணம் வரை பழச்சாறுகள் குடித்துக்கொண்டிருந்தேன். அதுவும் முடிந்துவிட்டது. அவ்வப்பொழுது தண்ணீர் மட்டும். தூக்கம் நிறைந்த கண்கள். பின்லாந்து நாட்டின் ரோவேநிமி (Rovenimi) கடந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதி. நோர்வே சாலை போல இருந்தது. முழுமையான வெள்ளை சாலை, கடும் குளிர். -25 டிகிரியை கடந்திருந்தது. பிறகு இனாரிக்கு 50 கிமீ முன்பு வரையிலான பாதையின் நடுவில் கிட்டதட்ட நூற்றி இருபது கிமீ சாலை முழுமையாக மைதானம் போன்ற பரந்தவெளி. நல்ல உயரத்தில் இருக்கிறோம் என்பது புரிந்தது. முழுமையாக வெண்பனி படர்ந்த வெள்ளை பாலைவனம். தூக்கத்தில் சாலை தவறினாலும் எவ்வித ஆபத்தும் நேராது என்பதனை மனதில் சொல்லிக்கொண்டேன். போதாக்குறைக்கு கிறிஸ்துமஸ் காலையில் ஒருவர் கூட பயணப்பாதையில் இல்லாத நிலை. நானே மன்னன். இதுவே என் நிலம் என்னுமளவிற்கு தனியுரிமை கொண்ட பாதையில் கண்ணில் நிறைந்த தூக்கத்தோடு பயணம்.

இனாரியில் மதிய உணவும் அதிர்ச்சியும்:

கண் கட்டிய தூக்கத்தை அவ்வப்பொழுது ருசித்துவிட்டு, ஆங்காங்கே சமாளித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தேன். மதியம் 11 மணிக்கு இனாரி வந்து சேர்ந்தோம். நான் வேக வேகமாக உணவை உண்டுவிட்டு மகிழுந்துவில் வந்து உறங்கினேன். 30 நிமிட உறக்கம்.

பிறகு வாகனத்தைத் தொடங்க வேண்டிய நிலையில் வாகனத்தில் முன் கண்ணாடியில் படர்ந்திருந்த பனியை போக்க தானியங்கி நீரை தெளித்தேன். அப்பொழுதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணாடியை தானியங்கி மூலம் சுத்தம் செய்ய நம்மூர் வாகனங்களில் ஒரே வகை நீர்தானே! இங்கு குளிர் காலங்களுக்கென்றே தனியாக திரவம் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குளிர் காலக்கட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வேதியியல் தன்மையுடைய திரவம். நான் ஏற்கனவே இணையம் மூலம் கிடைத்த தகவலின் படி -30 டிகிர் குளிர்தான் இருக்கும் என யூகித்து அதற்கேற்ற திரவம் நிரப்பியிருந்தேன். ஆனால், இனாரியிலேயே -30 டிகிரிக்கும் மேலான குளிர். கண்ணாடி சுத்தம் செய்ய திரவத்தை கொண்டுவரும் தானியங்கியில் இருந்து திரவம் மேலே வந்து கண்ணாடியில் படுவதற்குள் பனிக்கட்டியாக மாறி மகிழுந்து கண்ணாடி மீது கல் போல விழுந்தது. நல்லவேளையாக, உயரம் குறைவென்பதால், கண்ணாடிக்கு ஆபத்து வரவில்லை. இருப்பினும், முழுமையாக சுத்தம் அடைய மகிழுந்துவில் இருக்கும் வெப்பத்தை கூட்டி, சிறிது நேரக் காத்திருப்புக்கு பின்னே பயணத்தைத் தொடர முடிந்தது.

பிறகு இனாரியில் இருக்கும் சமி இன மக்களின் நாடாளுமன்றத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வட நோர்வே நோக்கிப் பயணித்தோம்.

20141225_Sami Parli Inari 6.jpg
சமி இன மக்களின் நாடாளுமன்றம்

 வடதுருவ முனையில் முழு பனி நிலத்தில் தொடர்ந்த பயணம்:

முழுமையாக காட்டுப்பகுதி, இடையில் ஊர்களே இல்லாத 175 கிமீ பயணம். முழுமையாக படர்ந்திருந்த வெண்பனி, -32 டிகிர் குளிர் என அனைத்தையும் கடந்து மாலை 3.30 மணிக்கு கிர்க்னெஸ் சென்றடைந்தோம். தங்குமிடம் சென்று 8.30 மணி வரை உறக்கம். பிறகு கடுமையான பசி. உணவகம் தேடினால் ஒன்றுமே கிடைக்கவில்லை. தெருத்தெருவாக நடந்தோம். பத்து நிமிடத்திற்கு மேல் நடக்க முடியவில்லை. கடுமையான குளிர். கை, காது, கால் எல்லாம் கடுமையான வலி. சரி மீண்டும் தங்குமிடம் வந்து மகிழுந்துவை எடுத்துச் சென்று உணவகம் தேடலாம் என்று திரும்பினோம். மகிழ்ந்துவின் உள்ளே வைத்திருந்த தண்ணீர் பாட்டில் உறந்த நிலையில் இருந்தது. வாகனத்தின் உள்ளே அமரவே முடியவில்லை. அவ்வளவு குளிர். ஒருவழியாக, வாகனத்தை இயக்கி, ஒரு எரிபொருள் நிலையத்தை கண்டுபிடித்தோம். அதுவும் ஐந்து நிமிடத்தில் மூடப்படும் நிலை. கண்ணுக்கு கிடைத்ததை எல்லாம் வாங்கிக்கொண்டு தங்குமிடம் வந்து சாப்பிட்டு உறங்கினோம்.

வெண்பனி குகை தங்குமிடம்:

அடுத்த நாள் காலை வெண்பனி குகை தங்குமிடம் (snow hotel) சென்று பார்வையிட்டோம். வெறும் பனி மலையை வெட்டியே தங்குமிடம். படுக்கையும் பனிக்கட்டியில்தான். மெத்தை விரிப்பு அதற்கென பிரத்யேகமாக இருந்தது. உணவக இருக்கையும் பனிக்கட்டியில்தான். அனைத்தையும் அழகாக அதனதன் தன்மைக்கு ஏற்ற வடிமைப்பிலேயே செதுக்கி வைத்திருந்தார்கள். பதினைந்து நிமிடத்திற்கு எங்களால் உள்ளுக்குள் நிற்க முடியவில்லை. அவ்வளவு குளிர். இதில் ஒரு நாள் பகலும் இரவும் தங்க வாடகை 50000 ரூபாய். இவ்வளவு காசு கொடுத்து சிரமத்தை வாங்கவும் ஆள் இருக்கிறதே என எண்ணுகையில் வியப்பாக இருந்தது.

20141226_123819.jpg
கிர்கனெஸ் வெண்பனி தங்குமிடம்- Kirkenes Snow Hotel
20141226_132448.jpg
படம்: கிர்கனெஸ் வெண்பனி தங்குமிடத்தினுள் இருக்கும் உணவகம். இருக்கைகள் மற்றும் மேசைகள் கூட பனிக்கட்டிகளால் செய்திருப்பதை காணலாம்.Snow Hotel Restaurant

பிறகு அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ரசியா நாட்டு எல்லைப்பகுதிக்கு சென்று, அங்கு அருகாமை பகுதிகளைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம்.

பிறகு, மாலை பனி மலைகள் அனைத்தும் சுற்றிக்காட்டி இரவெல்லாம் மலைகளில் நடந்து (அல்லது நாய் வண்டிகளில்) சென்று உயரமான மலைப்பகுதியில் வடதுருவ ஒளி வருவதை காண அழைத்துச் சென்றார்கள். ஒரு நபருக்கு தலா 25000 ரூபாய். நான் உறங்கச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். எனது நண்பனும் அவனது மனைவி மட்டும் சென்றார்கள். இரவு 1 மணிக்கு மேல் திரும்ப வந்தார்கள். கடும் குளிரில் அவதிப்பட்டதுதான் மிச்சம், வடதுருவ ஒளி இன்று காணக்கிடைக்கவில்லை என்றார்கள்.

அடுத்த நாள் நோர்வே நோக்கி பயணித்தோம். ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து உமியா என்ற இடத்தில் தங்கிவிட்டு அதற்கு அடுத்த நாள் நோர்வே வந்து சேர்ந்தோம். ஒரு நாள் முழுமைக்கும் நான் உறககத்திலேயே இருந்தேன். மன நிறைவான பயணம். சவால்கள் நிறைந்த, மனதை சோர்வடைய வைத்த வழித்தடங்கள் என அனைத்தையும் கடந்து பிறர் ஊட்டிய அச்சத்தை உடைத்தெறிந்து வெற்றியோடு திரும்பியது எங்களுக்கு பெரிய மன பலத்தை அளித்தது என கூறலாம்.

20141226_140521.jpg

படம்: நோர்வே-ரசிய எல்லை;  முழுமையான இருட்டோடு காட்சியளிக்கும் மதியம் 2 மணி;

20141227_NO-FI Border 3படம்: வட நோர்வேயில் இருந்து திரும்பும் வழியில் பின்லாந்து நாட்டின் எல்லையை குறிக்கும் பதாகை. காலை ஒன்பது மணி

5 thoughts on “சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

Add yours

  1. தோழர்களுடன் சேர்ந்து நார்வே, பின்லாந்து, உருசிய பார்டர், வட துருவப் பனிப்பகுதிகளுக்கு நாங்களும் பயணித்த மகிழ்ச்சி… காட்சிப் படங்களும் சிறப்பு….மிக்க நன்றி…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: