திராவிட இயக்கம் – 100 – திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி – 50

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி 50 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட இயக்கம் தன் இலக்கை அடைந்துவிட்டதா என்றால் இல்லை எனலாம். திராவிட இயக்கங்கள் (திக, திமுக, மதிமுக) தங்கள் இயக்க வரலாற்றோடு ஒட்டி இயங்குகிறதா என்றால் இல்லை எனலாம், திராவிட இயக்கங்கள் வலுவான அமைப்பாக நின்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாளும் நிலையில் உள்ளதா என்றால் இல்லை எனலாம், தமிழ்நாட்டிற்கான தமிழர்களுக்கான பாதுகாப்பு அரணை இவர்களால் வழங்க முடியுமா என்றால், இன்றைய நிலையில் இல்லை எனலாம். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றையாட்சி சிந்தனையையும் மதவாத/சாதியவாத பேரமைப்புகளால் உருவாகும் பேராபத்தை தடுக்கும் வல்லமை கூட இன்றைய திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இல்லை எனலாம்.
m6-500x261
ஆனால், தமிழ்நாடு என்ற கட்டமைப்பு அரசியலால் பின்னி பிணைந்த அமைப்பு. தமிழ்நாடு என்ற கட்டமைப்பு மேற்கூறிய எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திராணி படைத்தவை. அந்த கட்டமைப்பு இன்றைய நிலையில் பேர் சொல்லும் அமைப்பாக இல்லை, ஆனால், எண்ணற்ற தனிமனிதர்களிடம் வேரூன்றி உள்ளது. இந்தியாவில் எதிர்ப்பே இல்லாத எத்தனையோ சுற்றுச்சூழல் அழிவுத்திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும், நீட் உள்ளிட்ட சமூகநீதிக்கெதிரான எண்ணற்ற செயல்திட்டங்களுக்கு தொடக்கத்திலேயே எதிர்ப்பு உருவாகிவிடும். காஸ்மீர் ஆகட்டும், பாலஸ்தீன் ஆகட்டும், ஈழம் ஆகட்டும் உலகின் எந்த மூளையில் நடக்கும் அநீதியாகட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முதல் ஆதரவு குரல் தமிழகத்தில் இருக்கும். வெகு தொலைவிற்கு முன்னோக்கி பார்க்கும் வருங்கால பார்வை இங்கே வீரியமாய் வெளிப்படும்.
எதிர்ப்புணர்வு மட்டுமே கொள்கையாக இல்லாமல் மாற்றுத்திட்டம் இங்கே கூறப்படும். இது எல்லாம் சாத்தியமானதற்கு தமிழர்களின் வரலாற்று பெருந்தொடரின் மரபுவழி அரசியல் பாரம்பரியமும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால், இவ்வராலாற்று பெருந்தொடரில், திராவிட இயக்கத்தின் பங்கையும் அவ்வளவு எளிதில் யாரும் புறந்தள்ளிவிடமுடியாது. மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்கியதில் அல்லது தக்க வைத்துக்கொள்ள, வருங்காலத்திற்கு முன்னெடுத்து செல்ல, கடந்த நூற்றாண்டுகளில் திராவிட இயக்கத்தின் தோற்றமும் செயல்பாடும் பெருந்தாக்கம் கொண்டவை என்பதனை உணரும்பொழுதே தமிழர்களுக்கான அரசியலின் அடுத்த புள்ளியினை எட்ட முடியும் என்பது என் கருத்து.
400 ஆண்டுகாலமாக ஆங்கிலேயனிடம் அடிமை மனப்பான்மையில் ஊறித் திளைத்த மனித கூட்டம், இந்தியா என்ற ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் சிக்கி சிதற எல்லா வாய்ப்பும் இருந்த நிலையில், 1947 ற்கு பிறகு ஒற்றையாட்சி முறைக்குள் எளிதாக எல்லா தேசிய இனங்களின் வரலாற்றையும் நசுக்கும் வல்லமை பெற்ற பேராளுமை காங்கிரஸ் காலத்திலும் சரி, 2014 ற்கு பிறகு அதனினும் பெரும் மடங்கு வல்லமையோடு அரசியல் சக்தி பெற்று நிற்கும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் காலத்திலும் சரி, எப்பொழுதுமே சவால் விட்டுக்கொண்டிருக்க தமிழகத்தால் முடிகிறதென்றால் அவ்வளவு எளிதாக திராவிட இயக்கங்கள் போட்ட விதைகளை புறந்தள்ளிவிட்டு வரலாற்றைக் கடந்துவிட முடியாது.
பல்வேறு முற்போக்கு இயக்கங்களை கொண்ட இந்தியாவின் வேறு மாநிலத்தில் உள்ள முற்போக்கு இயக்கத் தலைவர்களே இன்னும் சாதியப்பெயரோடு வலம் வரும் வேளையில் தமிழ்நாட்டில் சாதியக் கட்சித் தலைவர்கள் கூட சாதியப்பெயரோடு வலம் வருவதில்லை (தமிழகத்தில் இச்சூழல் மாறிக்கொண்டு வருகிறது என்பதனையும் மறுப்பதற்கில்லை). பெண்களுக்கான சொத்துரிமை, மகப்பேறு நலத்திட்டம் முதல் உழைப்பாளர்கான நலவுரிமை உள்ளடக்கிய பல்வேறு சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது, இங்கே முன்மாதிரி திட்டங்கள் முளைத்திருக்கிறது.
ஆனால், இவையெல்லாம் திராவிட இயக்கத்தினால் மட்டும் விளையவில்லை எனவும் வாதிட சிலர் உண்டுதான் மறுப்பதற்கில்லை. திராவிட இயக்கத்தாலும் விளைந்தவை என்பதனையாவது மறுக்காதவனே அரசியலை நேர்மையாக அணுகுகிறவன் ஆகிறான் என்பது என் நிலைப்பாடு. கடந்தகால அரசியலையும் வரலாற்றையும் சரியாக அணுகி சரிகளை எடுத்து தவறுகளை களைந்து முன்செல்லும் அமைப்பே வருங்கால அரசியல் சக்தியாக காலத்தோடு நிலைத்து நிற்கும். நூற்றாண்டு இயக்கத்தை ஒரே கண்ணோட்டத்தில் புறந்தள்ளிவிட்டு வருங்காலத்திற்கான சித்தாந்தங்களை முன்னெடுத்து சென்றுவிடமுடியாது. திராவிட இயக்கங்கள் இல்லா புதிய கோட்பாட்டோடு புதிய தமிழகம் சாத்தியமா என்றால், சாத்தியம் என்பேன். திராவிட இயக்கங்களை மறுதலித்துவிட்டு புதிய இயக்கம் சாத்தியமா என்றால் கனவில் கூட சாத்தியமில்லை என்பேன்.
திராவிட இயக்கம் உருவானதே தமிழர்களை அழிக்கவா எனில் நிச்சயம் இல்லை என்பது கருத்து. 1916ன் இறுதியில் தோன்றிய தென்னிந்திய நலவுரிமை சங்கத்தில் இருந்து 1947 இல் தொடங்கப்பட்ட திமுக வரை நோக்கம் சரியாகவே இருந்தது. அதன் பாதை, சமூகநீதிக்கான ராஜபாட்டை அமைப்பது. அதன் கொள்கை, வல்லாதிக்க சக்திகளிடம் இருந்து எளியவர்களை காப்பது. அதன் கொள்கை, எல்லோருக்கும் எல்லாவற்றையும் சமமாக்குவது. அதன் கொள்கை, தேசிய இனங்களுக்கான தீர்வளிப்பது அதன் கொள்கை தன் நிலத்தோடு தொடர்புள்ள எல்லா நிலத்தையும் பாதுகாப்பது.
அதேவேளையில், 2017 இல் திராவிட இயக்கங்களை பார்ப்பவர்களுக்கு இதுவெல்லாமா இவர்களது பாதை? என சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றால், திராவிட இயக்கங்கள் தன் பாதையில் தெளிவாக ஓடவில்லை என்பதனை இன்றாவது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நசுக்குவதே திராவிட இயக்கங்கள்தானே! என ஒடுக்கப்பட்டவன் சிந்திக்கிறான் என்றால், இனியாவது தன் செயல்பாட்டை வேறு வடிவிற்கு மாற்ற வேண்டும். ஆட்சிதான் திராவிட இயக்கத்தின் உயிரோட்டத்தை தக்க வைக்குமென்றால், ஆட்சிக்கு வர என்ன செய்கிறார்கள் திராவிட இயக்கத்தவர்கள் என்பதற்கு அப்பால், ஆட்சிக்கு வந்த பிறகு எதனை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
அதேவேளையில், அனைவரும் ஒன்றை உணர வேண்டும். நிகழ்கால ஓட்டத்தோடும் இயங்காமல், அதே வேளையில் மண்ணின் வரலாற்று தொடர்போடும் ஒட்டாத, எந்த அமைப்பும் நிச்சயம் அழிவை நோக்கியே செல்லும் என்பதனை மறவாது செயல்பட வேண்டியது மிக அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: