மீத்தேன்-ஐதரோகார்பன் (hydrocarbon) – எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம்

(பூவுலகு மாத இதழுக்காக (2017 மார்ச்) எழுதப்பட்ட கட்டுரை)

ஐதரோகார்பன் – hydrocarbon – நீரகக்கரிமம் எனப்படுவது நீரகம் (hydrogen) மற்றும் கரிமம் (carbon) ஆகிய இரு தனிமங்களின் பல்வேறு கூட்டுச்சேர்க்கையில் உருவாகும் வெவ்வேறு விதமான பொருள்களுக்கான பொதுப்பெயர். நீரகத்தையும் கார்பனையும் சேர்த்து நிற்கும் பிணைப்புகளில் (bonds) அதிகளவிலான வேதியியல் ஆற்றல் பொதிந்திருக்கும். ஐதரோகார்பன் வெடிக்கும்பொழுதோ எரிக்கப்படும்பொழுதோ நிகழும் சிதைத்தலினால் (decomposition) பெருமளவு ஆற்றல் வெளிப்படும். குறைந்த அளவிலான ஐதரோகார்பன் கூட பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால், எரிசக்தி முதல் வாகன எரிபொருள் வரையிலான எண்ணற்ற பயன்பாடுகளில் இதனைப் பொருத்தலாம்.

மீத்தேன் வளிமம் (methane gas) உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்கள் (natural gas) முதல் கச்சா எண்ணை (crude oil) வரை நீரகக்கரிம வகைகளில் பொருத்தலாம்.

நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகையிலான நீரகக்கரிமமான, கச்சா பாறை எண்ணையில் (petroleum) இருந்தே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் (கல் எண்ணை), டீசல் (வளி எண்ணை), கெரோசீன் (மண்ணெண்ணெய்) ஆகியவைகளை சுத்திகரிப்பு முறைகளில் பிரித்தெடுத்து பயன்பாட்டுக்கேற்ற வகைப்படுத்துகிறார்கள். கச்சா பாறை எண்ணை (petroleum) பெரும்பாலும் இயற்கை எரிவாயு கிடைக்கும் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ கிடைக்கும்.

2011-511-coal-seam-gas-fracturing-John-Ditchburn-

அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஐதரோகார்பன்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஐதரோகார்பன்களில் மிக எளிமையான (புரிதலில்) ஐதரோகார்பன் வகைகளை முதலில் பார்ப்போம். இதில், மீத்தேன் (CH4), ஈத்தேன் (C2H6), பிரொப்பேன் (C3H8) மற்றும் பூட்டேன் (C4H10) என்பது தன்னகத்தே கொண்டிருக்கும் கார்பன் எண்ணிக்கையைப் பொறுத்துப் பிரிக்கப்படுகிறது என்பதனை நாம் பள்ளிக்கூட வேதியியல் வகுப்புகளிலேயே படித்திருப்போம். இருப்பினும் நினைவூட்டலுக்காக இங்கே இடம்பெறுகிறது.

இயற்கை எரிவாயுக்களில் ஒரு வகைதான் மீத்தேன் (Methane), ஈத்தேன் (Ethane), பிரொப்பேன் (Propane) மற்றும் பூட்டேன் (Butane). இது தனியாகவும் சில இடங்களில் எண்ணெயோடு கலந்தும் காணப்படும். நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்பொழுது, நீர், எண்ணெய், கந்தகம் (sulfur), நைட்ரஜன் (Nitrogen,), கரியமிலவாயு (CO2 – Carbon dioxide) என கலந்திருக்கும். எளிதாக எரியக்கூடிய தன்மையுடைய இயற்கை எரிவாயுக்கள் வளிமத்தை அன்றாட பயன்பாட்டில் எளிதாக காணலாம். சமயல் முதல் மின்சாரம் வரை, வீடுகள், பள்ளிக்கூடங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்து வகைப்பயன்பாட்டிலும் மீத்தேனை பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அதிகளவில் மேற்கூறிய பயன்பாட்டில் இயற்கை எரிவாயுக்களையே நம்பி இருக்கிறார்கள். ஈத்தேன் பெரும்பாலும் எதிலின் (Ethylene) எனப்படும் நெகிழி உருவாக்கவே பயன்படுகிறது.

நமது இல்லங்களில் நாம் சமயலுக்கு பயன்படுத்தும் Liquefied Petroleum Gas (LPG) என்பது பிரொப்பேன் (C3H8) மற்றும் பூட்டேன் (C4H10) கலவையிலானது என்பதனையும் கவனத்தில் கொள்க.

பெட்ரோலியம் வாயு என்ற பிரிவில் 1-4 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்; நாப்தாவில் (Naphtha – நெய்தை) 5-9 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்; இவை பெரும்பாலும் மரப்பொருள் மெருகூட்டல் அல்லது நிறப்பூச்சு (Paint) ஆகியவைகளில் பயன்படுத்தப்படும்; கல்நெய் (Gasoline) என்ற பிரிவில் 6-11 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்; மண்ணெண்ணெய் (Kerosene) என்ற பிரிவில் 10-18 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்; டீசல் (Diesel) என்ற பிரிவில் 12-24 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்; உராய்வு நீக்கல் எண்ணெய் (Lubricative oil) என்ற பிரிவில் 10-18 கார்பன்கள் அடங்கிய மூலக்கூறுகள் இருக்கும்;

 

நிலத்தடியில் எப்படி உருவானது?

ஏனையவைகளை பார்க்கும் முன், வாயுக்கள் முதல் எண்ணெய் வரை நிலத்தடியில் உருவாக காரணம் என்ன? ஏன் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இவை கிடைக்கின்றன? போன்ற கேள்விகளுக்கான விடையை முதலில் காண்போம்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நுண்ணுயிர் விலங்குகளும் தாவரங்களும் சூரியனிடம் இருந்து அதிகளவிலான ஆற்றலை பெற்று தன்னகத்தே அந்த ஆற்றல்களை கார்பன் மூலக்கூறுகளாக (molecules) சேகரித்து வைத்துள்ளது. இறந்த பிறகு கடலுக்கு அடியிலோ ஆற்றுப்படுகைப்பகுதிகளிலோ புதைந்திருக்கும் இவ்வுயிரனங்களின் உடல்களின் மேலே எண்ணற்ற ஆயிரம் ஆண்டுகளாக கடக்கக்கடக்க வண்டல்கள்/கடல் படிவுகள் (sediments/marine sediments) உருவாக, அதன் மேல் தாவரங்களும் நுண்ணுயிர்களும் வளர்ந்திருக்கும். இவ்வகையில், ஆளமாகவும் அடர்த்தியாகவும் புதையப் புதைய அப்பகுதிகளில் வெப்பமும் அழுத்தமும் (heat and pressure) அதிகரிக்கும். புதைந்துள்ள இடமும் சூழலும் பொருத்து, அதன் அருகாமையில் உருவான உயிரினத்தொகுதி (biomass) பொருத்தும், எண்ணெய் அல்லது வளிமம்/வாயு ஆக உருமாறும்.

ஆனால், வெகு சில ஆராய்ச்சிகள், இத்தகைய உயிரன நிகழ்வு நடைபெறாத நிலையிலும், கரிமத் தேக்கம் இல்லாமலும், ஆழமான பகுதிகளில் புதைந்திருக்கும் பாறைகளினால் உண்டாகும் அழுத்தமும் வெப்பமும் பல்லாயிர ஆண்டுகால சுழற்சியில் கரிமமற்ற/கனிம வேதியியல் வினைகளினாலும் பிற்பாடு வந்து சேரும் கரிம சேர்க்கையாலும் கூட இயற்கை எரிவாயுக்கள் கிடைக்கப்பெறலாம் என்றும் கூறுகின்றன.

இவ்வாறு உருமாறும் எண்ணெய்/வளிமம் சூழலைப் பொருத்து இடப்பெயர்வுக்கு (migration) உள்ளாகி, சில வேளைகளில் மேற்பரப்பு வரைக்கூட ஊடுருவி வெளியேறிவிடும். அல்லது, ஆங்காங்கே நிலத்தடியில் இருக்கும் உட்புகமுடியாத பாறை அல்லது களிமண்களின் இடுக்களில் சிக்கித் தேங்கிவிடும். கிட்டத்தட்ட, அடர்த்தியான பஞ்சுகளுக்கு இடையில் நீரை ஊற்றி அடைத்து வைப்பது போல எண்ணெய்/ வளிமம் அடர்த்தியான பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கும்.

கடலுக்கு அடியிலும் ஆற்றுப்படுகைப் பகுதிகளிலுமே வெப்ப/அழுத்த சூழல் அமைய அதிக வாய்ப்புள்ளது என்ற தகவலை, காவிரிப்படுகை முதல் கோதாவரிப் படுகை பகுதிகள் என இந்தியாவின் வங்காள விரிகுடா பகுதிகளில் எரிவாயு/எண்ணெய் எடுக்கும் திட்டத்தோடு பொருத்திப்பார்க்கலாம்.

வரலாற்றில் ஐதரோகார்பன் பயன்பாடு:

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகத் தொடங்கிய ஐதரோகார்பன்களில் பயன்பாடு, வரலாற்றில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதாக பல ஆதாரங்கள் இருக்கிறது. எண்ணெய் வைத்து விளக்கு ஒளி உருவாக்கியதே முதல் பயன்பாடு. பெட்ரோலிய வண்டல்/ கட்டித்தார் (Bitumen) வைத்து வெள்ளத்தின் பொழுதும் பெருமழையின் பொழுதும் வீடுகளை காத்து இருக்கிறார்கள் ஆதிகால மக்கள். அதன் பிறகு, இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு, பெர்சியர்கள் எதிரிகளின் மீது எரியும் ‘கை எறிகுண்டாக’ கட்டித்தாரை பயன்படுத்தி உள்ளார்கள்.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தியர்கள் மம்மிகளை உருவாக்க பயன்படுத்தக்கூடிய பலப் பொருட்களில் கட்டித்தாரும் உண்டு. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சீனர்கள் நிலத்தினை துளையிட்டு முதன் முதலில் எண்ணெய்/ இயற்கை எரிவாயுக்களையும் கண்டறிந்துள்ளனர். கிடைக்கபெற்ற கச்சா எண்ணெயை சுத்திகரித்து விளக்குக்கு பயன்படக் கூடிய எண்ணெயைப் பெற்றுள்ளனர்.

இன்னும் ஏராளுமான வரலாற்று நிகழ்வுகளைக் கடந்து, 1896இல், ஹென்றி ஃபோர்டு, முதன் முதலில் உருவாக்கிய தானியங்கி சிற்றுந்தில் எரிபொருளாக எத்தனாலை (Ethanol) பயன்படுத்தி உள்ளார். இன்றைய காலக்கட்டத்தில், கார்பன் மோனாக்ஸைட் (Carbon Monoxide) தாக்கத்தைக் குறைக்க எத்தனாலை கல்நெய் (Gasoline) சேர்த்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது தனிச்செய்தி.

நிலத்தடி எண்ணெய்/எரிவாயுக்களை எடுக்கும் முறை:

1930களில் இருந்து பெட்ரோலியம் இல்லாத உலகம் சாத்தியமில்லாமல் போனது. 1972 இல் உருவான ஆழ் துளையிடும் தொழிற்நுட்பம் எரிவாயு/எண்ணெய் தேடும்/உறிஞ்சும் பணியை எளிதாக்கியது எனலாம்.

1990களில் இருந்தே எண்ணெய்/எரிவாயு எடுக்கும் பணியில் முனைப்பு தோன்றியது என்றாலும், அன்றைய காலங்களில், எங்காவது நில மேற்பரப்பில் எண்ணெய்த் துளிகள் நிறைந்த/காணப்படும் பகுதிகளில், அல்லது புவியியல் வல்லுனர்களின் துணை கொண்டு சிலவகையிலான பாறைகள் நிறைந்த பகுதிகளை ஆராய்ந்து, அங்கே துளையிட்டு எடுப்பார்கள். இந்த முறையிலான இயற்கை எரிவாயு எடுக்கும் முறை முழுமையான வெற்றியைத் தராது. சில நேரங்களில் தோல்வியிலும் முடியலாம்.

அதன் பிறகான காலங்களில், நிலத்தடியில் சிறு வெடிப்பை நிகழ்த்தி, நிலத்தடி சுற்றுப் பகுதிகளிலிருந்து கிடைக்கப் பெறும் நில அதிர்வு தகவல்களின் அடிப்படையில் எண்ணெய்/எரிவாயு புதைந்திருக்கும் பகுதிகளை கண்டறிந்தார்கள்.

இன்றைய நவீன காலத்தில், முப்பரிமாண நிலநடுக்கக் கருவி (3D Seismic instruments) துணை கொண்டு எளிதில் அத்தகைய பகுதிகளை அடையாளமிடலாம். ஒவ்வொரு பகுதிகளாக துளையிடுவதைவிட ‘L’ விடிவிலான ‘துளையிடல் – எண்ணெய்/எரிவாயு உறிஞ்சும்’ கருவிகளை இப்பொழுதெல்லாம் பயன்படுத்தி ஒரிடத்தில் இருந்தே பல இடங்களில் ஊடுருவி உறிஞ்சி எடுக்கிறார்கள்.

ஆனால், நமது நிலத்தில் இருந்து எடுப்பது என்பது, சாதாரணமாக நமது வயல்களிலும் வீடுகளிலும் நிலத்தடி நீர் எடுக்க ஆழ்த்துழை கிணறுகள் தோண்டுவது போல் அன்று.

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதில், அளவீடுகள், வேதியியல் பயன்பாடு மற்றும் துளையிடுதல் முறையில் தொழிற்நுட்ப மாறுதல்கள் உண்டு என்றாலும் அந்த மாறுபாடுகளை இக்கட்டுரை விரிவாக பிரித்தெடுத்து விளக்க முற்படவில்லை என்பதனை புரிந்துகொண்டு, பின்பற்றப்படும் நடைமுறைகளின் இருக்கும் பொதுத்தன்மை தொழிற்நுட்பத்தை மட்டும் இக்கட்டுரை விளக்கியுள்ளது என்பதை கணக்கில் கொள்க;

முதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

இம்முறையிலாimagesன மீத்தேன் எடுக்கும் திட்டத்தில், பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அல்லது தேவையேற்படின் அதற்கு மேலுமான ஆழத்திலும் துளையிடுவார்கள். பிறகு, அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்கு மேலும் எல்லா திசைகளிலும் துளையிடப்படும் (bore). இப்படி எல்லா திசைகளிலும் துளையிடப்பட்ட பின்
பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண்துகள்கள் கலந்த நீரை செலுத்துவார்கள்.  இதன் மூலம் துளை நீண்டிருக்கும் எல்லா பகுதிகளிலும் விரிசல்கள் உண்டாகும். நிலத்தடியில் அடைபட்டுக்கிடந்த இயற்கை எரிவாயு ஒன்றோடு ஒன்று கலந்து துளையூடாக செல்லும் நீரில் கலந்துவிடும். அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்ப
ட்டு எஞ்சிய கழிவு நீர் ஆவியாகப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் முறை.

இந்தியாவின் பயன்பாட்டுத் தேவையும் பின்பற்றப்படும் வழிமுறைகளும்:

இன்றைய நிலையில், எண்ணெய் பயன்பாட்டில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாதான் இருக்கிறது. 2015-2016 கால அளவுகோலின்படி, இந்தியா தனது உள்நாட்டுத் தேவையில் 81% அளவை இறக்குமதிதான் செய்கிறது. 2015-2016 கால அளவுகோலின்படி, இந்தியாவின் 34.4% எரிசக்தி பயன்பாட்டில், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் பங்களிக்கிறது. 2015 இன் கணக்கீட்டின் படி, திரவ இயற்கை எரிவாயு (Liquefied Natural Gas) இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.

2015 இல் அளவுகோலின்படி, இந்தியாவில் 54 டிரிலியன் கன சதுர அடிகள் (Trillion Cubic Feet) இயற்கை எரிவாயு வள ஆதாரங்கள் இருப்பதாகவும் அதில் 34% இந்தியாவின் நிலப்பகுதிகளிலும் 66% கடற்பகுதிகளிலும் இருப்பதாக கண்டறிந்தனர். இதில் உண்மை என்னவென்றால், கடலில் இயற்கை எரிவாயு எடுப்பது பன் மடங்கு செலவை கூட்டும் என்பதால் மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை, சுற்றுச்சூழல் எதனையும் கருத்தில் கொள்ளாது நிலத்தினை மட்டும் குறிவைக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் நாள் நடந்த, பொருளியல் விவகார அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா முழுமையிலும் மொத்தமாக 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை, நெடுவாசல் மற்றும் காரைக்காலும் அடங்கும்.

மேலும் அதிர்ச்சியான செய்தி என்னவெனில், இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்காக மத்திய அரசிடம் செலுத்த வேண்டிய வரியில் இருந்து விலக்களிக்கப்படுகிறார்கள் (ஆதாரம்: http://www.makeinindia.com/sector/oil-and-gas). மேலும், நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நில ஆக்கிரமிப்பில் சலுகை, நிலத்தை பதிவு செய்வதில் வரிச்சலுகை, வருமான வரியில் சலுகை என அனைத்து வகையான மாநில வரி அளவுகளில் இருந்து சலுகையும் சிலவற்றில் விலக்களிக்கவும் வழியுள்ளது.

இவ்வகையான திட்டங்களிலும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைப் பின்பற்ற 2016 முதலே இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கான இந்த திட்டம் நமக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்பது மட்டும் திடமாகவே தெரிகிறது.

இன்றைய சூழலில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC), காவிரி படுகைப் பகுதிகளில் அதிக ஆர்வம் காட்டுவதையும் மீண்டும் மீண்டும் ஆராய்ச்சிக்காக மட்டுமே தற்பொழுது பணியாற்றுகிறோம் என்று கூறியுள்ளதையும் ஒன்றோடு ஒன்று முடிச்சிப்போட்டு பார்த்துக்கொள்ளவும். மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தும் அந்நிறுவனத்தின் வாக்குறுதிக்கு பின்னால் பல ஆண்டுகளுக்கான செயற்திட்டங்களும் பல கோடி பில்லியன் டாலர் வியாபாரத்திற்கான கொடும் நோக்கமும் ஒழிந்திருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் ‘இந்திய’ அணுகுமுறை:

உலகம் முழுமையிலும் பின்பற்றும் இந்நடைமுறை குறித்து நிறுவனங்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் எல்லா நாடுகளிலுமே கருத்து மோதல்கள் உண்டு. நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்நடைமுறை மட்டுமே அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஒத்துவரக்கூடிய வழிமுறை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி மக்களை பொருத்தவரை, இத்திட்டத்தால் உண்டாகும் காற்று மாசடைதல், இரைச்சல், நீர், நிலம் மாசடைதல், நில அதிர்வை தூண்டிவிடும் அபாயம், இவை அனைத்தாலும் உண்டாக வாய்ப்புள்ள மக்களின் சுகாதாரப் பிரச்சனை என எண்ணற்றவைகள் எதிர்ப்பதற்கான காரணங்களை உருவாக்குகிறது.

நவீன தொழிற்நுட்பங்கள் நிறைய உருவானாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவே முடியாது என்பதனையும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் இன்றும் வளர்ந்த நாடுகளில் இதற்கென தனியாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதனை மறுத்துவிட்டு யாராலும் பேசிவிட முடியாது. குறிப்பாக, பசுமை இல்ல வாயு பிரச்சனைகள் (Greenhouse effect) குறித்து உலக நாடுகள் அனைத்துமே விவாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இத்திட்டங்களால் பிரச்சனையே இல்லை என வாதாடும் இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் எண்ணத்தைத்தான் எந்த விஞ்ஞானிகளினாலும் புரிந்துகொள்ளவே முடியாது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் சீனாவிலும் பெருமளவிலான எரிவாயு/எண்ணெய் உற்பத்தி இருக்கிறது என்பதனையும் அந்நாட்டின் பெருமளவிலான எரிசக்தித் தேவையை அவைகள் பூர்த்தி செய்கிறது என்பதனையும் மறுப்பதற்கில்லை. ஆனால், சதுர கிலோ மீட்டருக்கு 417 மக்கள் வசிக்கும் இந்தியாவை, சதுர கிலோ மீட்டருக்கு 146 மக்கள் வசிக்கும் சீனாவோடும், சதுர கிலோ மீட்டருக்கு 34 மக்கள் வசிக்கும் அமெரிக்காவோடும், சதுர கிலோ மீட்டருக்கு 4 மக்கள் வசிக்கும் கனடாவோடும், ஒப்பிடுவது பிழையாகித்தானே போகும். மேலும், கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல நெற்களஞ்சிய பூமியில் இயற்கை வாயு யாரும் எடுக்கத் துணியமாட்டார்கள்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால், மக்கள் தொகை அடர்த்தியில், சதுர கிலோ மீட்டருக்கு 125 எண்ணிக்கை கொண்ட நோர்வே நாட்டில், நிலப்பகுதிகளில் அளவற்ற இயற்கை எரிவாயு எடுக்க வாய்ப்புள்ளதெனினும் கடலில் மட்டுமே எடுக்க முடியும் என்ற கடுமையான சட்டம் உள்ளது. பெரும் வியப்பு செய்தி என்னவெனில், நோர்வே நாட்டின் மொத்த பரப்பளவில் 5% நிலப்பகுதிகளில் மட்டுமே இதுவரை மக்கள் வசித்து வருகிறார்கள்.

152088702நோர்வே, பல்கேரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதற்காக நிலப்பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்க தடை விதித்துள்ளார்கள் என அறிய, மீத்தேன் தொடர்பான சில ஆய்வு அறிக்கைகளை பார்த்தால் எளிதில் விளங்கும்.

கடந்த மார்ச் 2014 இல் வெளியான இணையதள செய்தியொன்று மீத்தேன் கசிவு மற்றும் ஆபத்தை துல்லியமாக படம் படித்து காட்டுகிறது. பார்க்க:

http://news.nationalgeographic.com/news/energy/2014/03/140312-east-harlem-explosion-natural-gas-leaks-risk/.

அமெரிக்காவில், கிழக்கு ஆர்லெம் என்ற இடத்தில், மீத்தேன் கசிவால் நடந்த வெடி விபத்தால் இரண்டு கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கின்றன. இரண்டு பேர் கொல்லப்பட்டும் 16 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், விபத்து நடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள், மீத்தேன் எடுத்துச்செல்லப்படும் குழாய்களை ஆராய்ந்து 5893 கசிவுகளை கண்டறிந்துள்ளனர் இதன் ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்:

http://pubs.acs.org/doi/abs/10.1021/es404474x .

இந்த ஆய்வைவெளியிட்ட பிறகு, இக்குழுத்தலைவர் ராபர்ட் ஜாக்சன், தவறுதலாக கீழே போடப்படும் சிகரெட் கூட மிகப்பெரிய வெடிவிபத்தை இப்பகுதியில் உருவாக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீத்தேன் எடுத்து செல்லும் குழாய்கள் பல நூறு மைல்கள் நீள்வதால் எல்லா நேரமும் எல்லா கசிவையும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அதனால், மக்கள் நிறைந்த பகுதிகளில் இவ்வாபத்தான திட்டம் செயல்படுத்துவது தவறென அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மீத்தேன் தொடர்பான கசிவுகளும் அதனால் விளைய நேரும் வெடி விபத்துகள் தொடர்பாக அறிந்துகொள்ள,

http://www.climatecentral.org/news/d.c.-methane-leaks-threaten-explosions-climate-16964  என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

Gas-Detection-Crowcon

ஒவ்வொரு வருடமும் மீத்தேன் கசிவால், விபத்துகள் அதிகமாகிக்கொண்டேதான் வருகின்றன என

http://www.explosionvictimresourcecenter.org/articles/natural-gas-explosions/

என்ற இணையதளம் அறிக்கை கொடுத்திருக்கிறது. மேலும் அவ்விணையதளம், மீத்தேன் கசிவால் ஏற்படும் விபத்து, நமது வீடுகளையும் நம்மையும் சேர்த்து அழிக்கும் அளவிற்கு வீரியம் கொண்டது என எச்சரிக்கிறது. தொடர்ச்சியான நீண்டகால கசிவுகளால், மீத்தேன் வளிமத்தின் கூட்டிணைவால், மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டென சுட்டிக்காட்டுகிறது. இந்த இணையதளத்தை Habush Habush & Rottier S.C. என்ற அமெரிக்க நிறுவனம் நடத்துகிறது. கடந்த 75 ஆண்டுகளாக, இயற்கை எரிவாயு உள்ளிட்ட மீத்தேன் கசிவால் ஏற்படும் வெடி விபத்துகளாலும் பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவியை பெற்றுதரும் வேலையை செய்து வருவதால், பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து மீத்தேனால் ஏற்பட்ட/ஏற்படக்கூடிய கொடிய வெடி விபத்துகள் தொடர்பான செய்திகளை இணையதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் சட்டத்திற்குட்பட்டு நடக்கும்பொழுது, முறையாக எல்லாவற்றையும் அரசே பார்த்துக்கொள்ளும் விபத்துகளுக்கு உரிய முறையில் நஷ்டஈடு கிடைக்கும் என நம்புவீர்களானால், யூனியன் கார்பைட் பிரச்சனையையும் முதலாளியும் அதிகாரிகளும் தப்பித்த வரலாறையும் மறந்துவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

images (1)வெடிப்பொருளாக மாறும் தன்மையுடையது என்பதால் மட்டும், மீத்தேனை ஆபத்தானதாக நாம் பார்க்கவில்லை. அதனில், இன்னும் கூடிய ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. நாம் மீத்தேனை சுவாசிப்பதாலும், மிகப்பெரிய ஆபத்து காத்து நிற்கிறது. மீத்தேனை நாம் நுகர்வதால் உடனடியாக பிரச்சனை இல்லை, ஆனால், நாம் நுகரும் ஆக்சிஜன் செறிவை (concentration) மெல்ல மெல்ல அது குறைத்துவிடும். ஆக்சிஜன் செறிவு நமது உடலில் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வரும்பொழுது, அது Asphyxia வை உருவாக்கும். Asphyxia இறுதியில் கோமா அல்லது மரணத்தை கொண்டுவரும் (http://en.wikipedia.org/wiki/Asphyxia). நமது உடலில் ஆக்சிஜன் குறைகிறது என்ற தகவலை நமது மூளை உடலுக்கு அனுப்பி அது அடுத்த செயற்பாட்டிற்கு செல்லும் முன் நமக்கு மயக்கம் வந்துவிடும், ஆதலால், நாம் கவனத்தில் எடுக்கும் முன்பே நமக்கு ஆபத்து ஏற்படும் என அறிவியல் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

இவ்வகையான திட்டங்களை எதிர்ப்பது என்பது இங்கு மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்திலும் மக்கள் எதிர்ப்பு கூடிக்கொண்டேதான் போகிறது. எல்லா நாட்டு மக்களும் தட்ப வெட்ப நிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவைகள் குறித்து விழிப்புணர்வு முன்னெப்பொழுதிலும் இல்லாத வகையில் கூடிக்கொண்டே செல்வதாலும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கான எதிர்ப்பு அலையும் சர்வதேச ரீதியில் கூடிக்கொண்டுதான் போகிறது. அந்நாட்டு மக்கள் தங்களுக்கான தேவையை அரசுதான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதுடன் அந்த திட்டங்களில் தங்களுக்கு பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்றும் கவனமாக உள்ளனர். என்ன, அங்கெல்லாம் மக்களை யாரும் அறிவியல் தெரியாத முட்டாள்கள் என்று விளிப்பதில்லை, தேசத்துரோகி பட்டங்கள் இல்லை. மக்களின் ஜனநாயக உரிமையை யாரும் கேள்வி கேட்பதில்லை.

அதே போல, உலகெங்கிலும் இருக்கும் நடைமுறை, இத்திட்டம் பற்றின தொடக்க விவாதித்தின் பொழுதே, திட்ட செயல்பாட்டுப் பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்கும் முறை. அது வெறுமனே விளம்பரங்கள் மூலமோ அல்லது காகிதத் தாள் தகவல் விநியோகம் மூலமோ அல்லது ஒன்றிரெண்டு கூட்டங்களின் மூலமோ அல்ல. முறையான விளக்க உரை; முறையான கருத்து பரிமாற்றம்; முறையான காணொளி விளக்கம்; முறையாக கற்றறிந்தோர் குழுக்களின் கருத்து மோதல்கள்; அரசியல்/சமூக/சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிறுவன அதிகாரிகள், பொது மக்கள் அடங்கிய வெளிப்படையான நிகழ்ச்சிகள் மூலமே இவ்வகையான திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். வெறுமனே, டெல்லியில் அமர்ந்துகொண்டு, கையெழுத்து இட்டுவிட்டு, அறிவியல் தெரியாத ஆளும் கட்சி பிரதிநிதிகளை தொலைக்காட்சியில் பேச வைத்துவிட்டு, ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரை மக்களிடம் சமாதனப்படுத்தி சம்மதிக்க வைக்கும் நடைமுறை இந்தியாவில் மட்டுமே சாத்தியமானது.

 நீடித்த நிலையான பாதிப்பில்லா வளர்ச்சித் திட்டங்கள்:

இந்தியாவில் இருக்கும் பொதுவான பிரச்சனை, அப்படியாகின் வளர்ச்சித் திட்டங்களே கூடாதா என்ற கூக்குரல்கள்தான். இந்தியாவின் எரிசக்தி தேவை, உற்பத்தி திறன் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டிய அரசாங்கம், கால நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொண்டு செயலாற்றுங்கள் என்று சொல்வது எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதாக அமையும். வளர்ச்சி என்பது யாருக்கானது, எவ்வகையிலானது என்பதை பொருத்துத்தான் முடிவு செய்ய முடியும். இந்தியாவின் எரிசக்தித் தேவைக்காக இது ஒன்றுதான் வழி என்று நம்ப வைக்க முயற்சிப்பதே அறிவியலுக்கு எதிரான சிந்தனை. அறிவியலையும் வளர்ச்சி என்ற மந்திரத்தையும் மக்களை அமைதிப்படுத்த மட்டும் பயன்படுத்திவிட்டு சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் எவ்வகையிலான திட்டமும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகாது. நீடித்த நிலையான பாதிப்பில்லா வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவேண்டியது அரசின் கடமை. அதனை செய்யும்பொழுது அனைத்துத் தரப்பு மக்களும் தானாகவே அரசோடு கரம் கோர்ப்பார்கள். அது நிகழாத பொழுது எதிர்ப்பலைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும்.

பாரிஸ் ஒப்பந்தமும் இந்தியாவின் எரிசக்தியும்:

Master.jpg

கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், காந்தியின் பிறந்த நாளில்,  ஐநா அமைப்பின் அறவழிப்போராட்ட நினைவுகூரல் நிகழ்வில், இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் இன்றைய எரிசக்தி கொள்கை முற்றிலும் பாரிஸ் ஒப்பந்தத்திற்கு எதிரானது. அதில், முக்கியமானது, 2030ற்குள் இந்தியா படிசல் எரிபொருள் அற்ற (Non-fossil fuel) உற்பத்தியை குறைந்தது 40% ஆக நிலைநிறுத்தும் என்பது. அதில், 2022ற்குள் 175GW மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை கொண்டுவருவது என்பதும் உள்ளடக்கம். அதாவது 2040ற்குள் கிட்டதட்ட 400GW  ஆதாரம் கீழே:

https://www.theguardian.com/environment/2016/oct/02/india-paris-climate-change-agreement-un-narendra-modi

2015 இல் வெளியான சர்வதேச ஆற்றல் முகமையகம் (International Energy Agency) வெளியிட்ட உலக நாடுகளின் ஆற்றல்/சக்தி தேவை, உற்பத்தி, வருங்கால செயற்பாடுகள் குறித்து வெளியீட்டில் மிகத் தெளிவாக இது குறித்து விளக்கம் உள்ளது. ஆதாரம் கீழே:

https://www.iea.org/publications/freepublications/publication/IndiaEnergyOutlook_WEO2015.pdf

ஆக, இயற்கை எரிவாயு திட்டத்தை விடுத்து, மாற்று எரிசக்தி கொள்கையில் செயலாற்றினால்தானே இந்தியா உலக நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உலக தட்பவெட்ப மாற்றத்தினைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை மீறாமல் செயல்படுவதுதானே இந்தியாவிற்கான அறம் சார்ந்த சிந்தனையாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: