கல்வித்தடுமாற்றங்கள் – தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும்

நீட் தேர்வு மற்றும் அனைத்து இந்திய பொது நுழைவுத்தேர்வுகளுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் அரசியலையும் சமூக நீதிக்கு எதிரான அச்செயல்கள் எப்படி அடித்தட்டு மக்களை பாதிக்கும் என்பதனையும் பிறகு விரிவாக அலசுகிறேன்.

இப்பொழுது பேச விரும்புவது வேறு.

நீட் தேர்வை எதிர்க்கும் பலரும் மத்திய அரசின் பாடத்திட்டங்களும் மாநில அரசின் பாடத்திட்டங்களும் வெவ்வேறானவை அதனால் எதிர்க்கிறோம் என்ற வாதம் வைக்கும்பொழுது மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறது. ஐ.ஐ.டி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் உயர்த்தர (நிதி ஒதுக்கீட்டு பாகுபாட்டு முறையால்) கல்வி நிறுவனங்களில் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் உள் செல்ல முடியாது என்ற வாதத்தை வைப்பவர்கள் இங்கே நடக்கும் கல்வி முறைகேடுகளை முன்னின்று நடத்துபவர்களாக இருக்க வேண்டும் அல்லது கடந்த 25-30 ஆண்டுகளாக சீர்கெட்டு கிடக்கும் கல்வி முறைகளை திட்டமிட்டு மறைக்கப்பார்க்கும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு பாடத்திட்டமோ மத்திய கல்வி நிறுவன பாடத்திட்டமோ, இயற்பியல் ஆகட்டும் வேதியியல் ஆகட்டும், புத்தகங்களில் இருக்கும் தலைப்பு, உள்ளடக்கம், கணிதம் சார்ந்த வினா விடைகள், ஆய்வு முறைகள் இதில் எதிலும் மாறுபாடுகளை புகுத்த முடியாது. Basic science, அடிப்படை அறிவியலை கற்க என்ன தேவையோ அவைகளை உலகம் முழுக்க வரிசைப்படுத்தினாலும் இங்குள்ள பாடத்திட்டங்களில் என்ன இருக்குமோ அவ்வளவுதான் இருக்கும், இருக்க முடியும். தமிழ்நாடு பாடத்திட்டத்திலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலும் உள்ளடக்கதில் எவ்வித மாறுபாடுகளையும் இயற்பியல்/வேதியியலில் காண முடியவில்லை. அதேபோல, கணக்கீடுகள் சார்ந்த இயற்பியல்/வேதியியல் பாடத்திட்டங்களும் தமிழக கல்வித்திட்டத்தில் தேவையான அளவிலேயே இருக்கிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு ஒப்பானவையாகவே இருக்கிறது.

ஆனால், அதனை பயிற்றுவிக்கும் முறைக்கான நவீன விளக்கங்கள் ஆய்வு முறை பாட முறைகள், ஆய்வுக்கூட வசதிகள், தேர்வு முறைகளில் என இவற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதேபோல, இதனை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் ஆசிரியர்/ஆசிரியைகளின் தரத்திலும் நேர்மையான உழைப்பிலும் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லைதான். சீர் செய்யவேண்டிய, செழுமைப்படுத்தக்கூடிய அனைத்தையும் பேசாமல், பாடத்திட்டம் எப்படி இருக்கிறது என்பதனை கூட ஆய்வுக்குட்படுத்தாமல் வெறுமனே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு வைப்பதால் எதிர்க்கிறோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

இதற்கெல்லாம் மாற்றமாகத்தானே சமச்சீர் கல்வி முறை வந்தது என்றால், ஆம், அதில் மாற்றுக்கருத்தில்லை. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களில் மேலே கூறிய சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கு இணையாக அனைத்தும் இருக்கிறது என்பதனை மறுப்பதற்கே இல்லை.

ஆனால், இதிலும் பிரச்சனை உள்ளது. ஒன்று, தேர்வு முறை, இரண்டு ஆய்வுக்கூட வசதிகள், மூன்று ஆசிரியர்/ஆசிரியைகளின் தரமும் நேர்மையும்.தரமும் நேர்மையும் என்று சொல்ல முனைவது, ஆசிரியர்/ஆசிரியைகளின் மேம்பாடுகள், புதியவைகளை அறிந்து தங்களை செழுமைப்படுத்தி மாணவ/மாணவியர்களுக்கு வழங்குதல் என்பனவற்றை. விதிவிலக்கான, கடும் உழைப்பை வழங்கும் ஆசிரியர்/ஆசிரியைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் வைத்துக்கொண்டு உலகத்தர பாடத்திட்டம் என்றே கொண்டு வந்தாலும் நம் அரசுப்பள்ளிக்கூட மாணவ/மாணவிகளால் போட்டித்தேர்வுகளை எழுத முடியாது.

அதனைவிட இன்னொரு முக்கியப்பிரச்சனை, 6-10 வரை திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி முறையை மாற்றியமைத்தப்பின் கடந்த 6 வருடங்களாக திருத்தமோ மாறுதல்களி கொண்டுவரப்படவும் இல்லை 11-12 ற்கான பாடத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமச்சீர் கல்வி முறையிலும் இணைக்கவில்லை மாற்றங்கள்/திருத்தங்களும் கொண்டுவரப்படவில்லை.

ஆக, பாடத்திட்டங்களை சரியான வழிமுறைகளில் காலத்திற்கு ஏற்ற வசதிகளை கொண்டு கல்வி கற்பவர்களிடம் கொண்டு சேர்க்காத கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துவிட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை காரணம் காட்டி சமூக நீதி பேசுவதே மிக தவறானவை மட்டும் அல்ல பச்சை துரோக செயல். நிச்சயமாக பல்வேறு சமூக பொருளாதார பின்னணியில் பிறந்து வளர்ந்து கல்வி கற்கும் அனைவராலும் பொதுவான நுழைவுத்தேர்வையோ மிக தரமான கல்வி நிறுவன நுழைவையோ எதிர்கொள்வது கடினமே. ஆனால், அதனை எதிர்கொள்ளத் தகுதி படைத்தவர்களை வருடா வருடம் உருவாக்கியும் எண்ணிக்கையை உயர்த்துவதும் வாய்ப்பு குறைவு உள்ளவர்களுக்கான சிறப்பு வாய்ப்புகளை உருவாக்குவதும்தானே சமூக நீதி.

சம வாய்ப்புள்ள அறிவியல் அறிவை புகட்டக்கூடிய பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு அதனை முறையான வழிகளில் எல்லாத்தரப்பு மக்களுக்கு சமமாக கொண்டு செல்லாமல் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்காமல் வெறுமனே நீட் உள்ளிட்ட அனைத்து இந்திய நுழைவுத்தேர்வை எதிர்ப்பதால் மட்டும் சமூக நீதி செழித்துவிடுமா? நீட்டை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் நீட் இல்லாமல் போனாலும் இங்கே சமூக நீதி இல்லா கல்வி கட்டமைப்புகளையே நாம் உருவாக்கி வைத்துள்ளோம் என்பதனை மறுக்கவோ மறைக்கவோ கூடாது.

இதனை எதிர்த்து இதுவரை யாருமே பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தும் எதிர்ப்புணர்வை காட்டவில்லை என்பதோடு கடந்த 10 ஆண்டுகளாக அரசு கல்வி நிறுவங்களும் அதிகாரிகளும் தூக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்றும் புரிகிறது. (திமுக கொண்டுவந்ததற்காகவே எதிர்த்து அழிக்க நினைத்த ஜெயலலிதாவை யாருமே மறந்துவிடக்கூடாது. அதேபோல கடந்த 7 ஆண்டுகளாக கல்வித்துறை மங்கி குப்பையாக போக வைத்ததிலும் அதிமுக ஆட்சிக்கும் பங்குண்டு என்பதனையும் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனையெல்லாம் விட, கடந்த 25-30 வருடங்களில் பெருகி பெருகெடுத்த தனியார் பள்ளிகளின் மதிப்பெண் ஒன்றே கல்வி என்ற கோட்பாட்டு கல்வி முறை. சமூக நீதிக்கு எதிராக குரல் உயர்த்துபவர்கள் முதலில் இறுக்கியிருக்க வேண்டியதே இந்த ‘மதிப்பெண் ஒன்றே கல்வி’, ‘பணமே கல்வி’ கோட்பாட்டு நிறுவனங்களைத்தான். எத்தனை எத்தனை தனியார் பள்ளிகள் வந்ததோ அத்தனை கோடிகள் லஞ்சங்கள் பெருக்கெடுத்த திருநாட்டில் அத்தனை அத்தனை ஊழல்கள் செய்த கட்சிகள் (திமுக/அதிமுக) செல்வாக்குடைய தமிழ்நாட்டில் சமூக நீதியை குழிக்குள் தள்ளியவர்களே இன்று சமூக நீதி என முழங்குவது வேடிக்கையாகவே உள்ளது.

பல மைல்களுக்கு அப்பால் படிக்க வைக்கும் வசதி வாய்ப்பு உள்ளவனும் உள்ளூர் பள்ளியே எனினும் தனிப்பயிற்சி வகுப்புகள் தனியார் நிறுவன பயிற்சிகள் என எதனையும் செய்யும் சமூக பொருளாதார பின் புலம் உள்ளவனின் பிள்ளைகளுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் பல மைல்கள் நடந்து சென்று படிப்பவனும், வேலை செய்துக்கொண்டே படிப்பவனும், விளக்கு ஒளியில்லா கிராமத்தில் வளர்ந்தவனும் பெறாத சூழலில் அவர்களுக்கு சென்று சேரவேண்டிய கல்வியை கெடுத்த அரசு அதிகாரிகளையும் அரசாங்க கட்டமைப்புகளையும் கேள்வி கேட்காதவர்கள் சமூக நீதி என்ற பெயரில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வை எதிர்ப்பது கேலிக்கூத்தானதாக இருக்கிறது.

இதுவரை தனியார் பள்ளிகள் செய்து வருகின்ற மதிப்பெண்ணிற்கான கல்வி முறையை எதிர்த்து கேள்விகேட்காதவர்கள், சீர்கெட்டுப்போயிருக்கும் அரசு பள்ளிகளின் தரத்தையும் செயல்பாட்டையும் பற்றி பேசாத எவரேனும் சமூக நீதிக்கான போராட்டமாக நீட் உள்ளிட்ட அனைத்து இந்திய நுழைவுத் தேர்வை எதிர்க்கும் காரணமாக வைப்பீர்களானால் நீங்கள் தான் முதல் குற்றவாளி.

சாதிய மேலாதிக்கம் உள்ள பகுதிகளில் தனியார் பள்ளிகளில் உயர்சாதி வகுப்பினரும் அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவன் படிக்க வேண்டும் என்ற சூழல் பெருகி வருவதை யாரேனும் சமூக நீதி முழக்க கட்சிகள் ஓங்கி குரல் கொடுப்பார்கள் என பார்த்தால் அதிலும் யாருமே தென்படவில்லை.

உண்மையான சமூக நீதிக்கு ஆதரவான போராட்டமே அரசு பள்ளிகளை தரம் உயர்த்துதலிலும் தனியார் பள்ளிகளின் ‘மதிப்பெண் கல்வி’ யை ஒழிப்பதிலும்தான் இருக்கிறது என்ற புரிதல் உள்ளவர்கள் நீட் தேர்வை மட்டுமல்ல அனைத்து இந்திய பொது நுழைவுத்தேர்வு முறையை அதற்கு எதிரான அரசியலை மாநில உரிமை பறிக்கும் நுட்பத்தை பேசலாம். திமுக, அதிமுக ஆட்சிகளில் ஊழல் பெருக்கெடுத்த கல்வி கட்டமைப்புகளை எதிர்க்காது/கேள்வி கேட்காது, லாப நோக்கில் கண் மூடி கிடந்த சமூக நீதி புரட்சியாளர்கள் இப்பொழுதும் வாய் மூடியே இருக்கலாம். நீங்கள் பேசினாலும் ஒன்றுதான் பேசாவிட்டாலும் ஒன்றுதான்.

One thought on “கல்வித்தடுமாற்றங்கள் – தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும்

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: