சீனர்களின் சமூக அறமும் பெண்களின் நிலையும்

சீனாவைப் பற்றி, சீனா வருவதற்கு முன்பு இருந்த பிம்பமும், இந்தியாவில் சக இந்தியர்கள் கற்றுக்கொடுத்த சீனாவைப் பற்றின அறிவும், சீனா வந்து சில நாட்களிலேயே சுக்கு நூறாகிப்போனது.

சீனாவைப் பற்றி இன்னும் ஆளமாக தெரிந்துக்கொண்டப்பின் நிறைய எழுதலாம் என்றிருருந்த நிலையில் இரு செய்திகளை முன் வைத்து சிலவற்றை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். அதுவும் நான் நேரடியாக பார்த்த ஒரு சில சம்பவங்களை வரிசைப்படுத்தி எழுதினாலே அதனைப்பற்றின கருத்தோட்டம் எளிதாக புரிந்துவிடும் எனவும் நினைக்கின்றேன்

எனது பல்கலைக்கழக வளாகத்திற்கும் நான் தங்கியிருக்கும் விடுதிக்கும் பேருந்து அல்லது மிதிவண்டியில் செல்ல 20 நிமிடங்கள் ஆகும். இரவு ஒன்பது மணிக்கு மேல் பேருந்து இல்லாததால் நடந்து செல்லவேண்டுமாயின் 45 நிமிடங்கள் ஆகும். சீனா வந்த புதிதில் இரவு தாமதமாக செல்ல ஒரு வித அச்சம் மனதில் பரவியிருந்தது. சென்னையில் குடியேற்ற சோதனை அதிகாரி என்னிடம், “சீனாவா செல்கிறீர்கள். அங்கு ஒரு பயலும் நம்மளையெல்லாம் மனிதனாகக்கூட பார்க்க மாட்டானே! பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்று சொன்ன அந்த செய்தி என்னை இரவில் தனியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறிது காலம் அச்சுறுத்திக்கொண்டிருந்தது. பெரும்பாலும் இரவு 9 மணிக்கும் முன் பேருந்திலோ அல்லது நடந்து செல்ல வேண்டும் என்ற சூழலில் 10-11 மணிக்குள் சென்றுக்கொண்டிருந்தேன்.

ஐரோப்பாவில் வாழ்ந்த காலங்களில், நள்ளிரவில் கூட நான் இரு குழந்தைகளைகளோடு வீட்டில் இருக்க என் மனைவி அவ்வப்பொழுது காற்று வாங்க தனியே நடந்துச்சென்றுவிட்டு வருவார். மனதில் சிறு அச்சம் கூட இல்லாமல் நாங்கள் இருவருமே வாழ்ந்திருக்கிறோம்தான். 5 மாதங்கள் என் மனைவி தனியே நோர்வே நாட்டில் தங்கி படித்த காலங்களில் கூட மனதில் எவ்வித அச்சமும் இல்லாதிருந்தது. காரணம், ஐரோப்பிய நாடுகள் பற்றியும் சமூகம் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு பற்றியும் நன்றாக தெரியும், பார்த்து, வாழ்ந்தும் இருக்கிறோம். சீனா பற்றி எதுவுமே தெரியாததாலும் சீனாப்பற்றின இந்தியாவில் புதைந்திருக்கும் பொது பிம்பம் கற்றுக்கொடுத்த பாடத்தாலும் என்னை அறியாமல் அச்சம் என் மனதில் தேங்கி நின்றிருக்கிறது.

ஒரு இரவின் பொழுது வேலை முடித்து வீடு திரும்ப நள்ளிரவு 1 மணி. மனதில் ஏற்கனவே பதிந்திருந்த அச்சம் என்னை வதைத்துக்கொண்டிருந்தது. ஆனால், ஆச்சர்யம், சாலை வழித்தடம் முழுவதும் ஆங்காங்கே மனிதர்களின் நடமாட்டம், அதுவும் பெண்கள் தனியாகவும் தோழனோடோ, தோழியோடோ நடந்து சென்றுக்கொண்டிருந்ததை பார்க்கும்பொழுது மன திடம் உருவாகியது. நாட்கள் செல்லச்செல்ல வெயில் காலங்களில் பெண்களின் உடை மிகக்குறைந்து நம்மூர் கவர்ச்சி நடிகைகள் கூட போடத் தயங்கும் உடையோடு பெண்கள் மிக இயல்பாக எவ்வித அச்சமும் இன்றி நள்ளிரவில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்ததை பார்க்கும்பொழுதும் சீனப்பெண்கள் எந்த ஒரு ஆணையும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உடையில் அதீத மது போதையில் கூட தன்னந்தனியே நடுச்சாலையில் நின்று வாடகை மகிழுந்தில் எவ்வித மனக்குழப்பமும் இல்லாமல் ஏறி சென்றுக்கொண்டிருந்தைப் பார்க்கும்பொழுது சீனாவில் நள்ளிரவில் நடந்துச்செல்வதில் இருந்த தயக்கமும் அச்சமும் மாறிப்போயிருந்தது.

அதனினும் இந்நாட்டில், பெண்களின் வாழ்க்கை அவ்வளவு சுதந்திரமாகவும் தன்னியல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லா அழகிய வாழ்வு கொண்டதாகவும் இருப்பதைக் கண்டு இந்நாடு குறித்த புரிதலும் விருப்பமும் கூடியிருந்தது.

“இது என்னுடைய நாடு. இங்கு நான் தனியே இரவு முழுவதும் கூட சுதந்திரமாக நடப்பேன். என் உடையைக் கொண்டு என் உடலை சிதைக்கும் வக்கிரத்தை உடைய ஆண்கள் என் நாட்டில் இல்லை” என்ற எண்ணம் சீன நாட்டு பெண்களுக்கு உள்ளதெனின் இந்நாட்டு ஆண்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதனின் சுதந்திர வாழ்வில் இன்னொரு மனிதன் தலையிட எவ்வித தகுதியும் இல்லை என்ற நிலை இருக்கும் நாடே சுதந்திர நாடெனின் சீனா சுதந்திர நாடாகவும் இந்தியாவை எவ்வகையில் சேர்ப்பது என்ற குழப்பமும் நிரம்ப்பியிருக்கிறது.

அடுத்து, உணவங்கள் இரவு 10 மணியோடு மூடிவிடும் காலங்களில், நள்ளிரவு நேரங்களில் சில வேளை பசியோடு இருந்தால், சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் ஆங்காங்கே உணவுகள் சுடச்சுட கிடைக்கும். ஃபிரைடு ரைஸ் (வறுத்த அரிசிச் சோறு என்று சொல்லலாமா???) அல்லது நூடுல்ஸ் (தமிழில் தெரியவில்லை!!!!???) மலிவான விலையில் சாப்பிட ருசியாகவும் வயிற்றுப்பசிக்கு ஏற்றதாகவும் இருக்கும். எந்த ஒரு தெருவில் எந்த நேரத்தில் (இரவு 11-அதிகாலை 4 மணி வரை) சாப்பிட்டாலும் யாருமே ஒரு ஒரு ரூபாய் கூட என்னிடம் அதிகப்படியாக வாங்கியதில்லை. எல்லா இடங்களில் எல்லா நேரத்திலும் சீன மொழித்தெரியாத சைகை மொழியில் பேசும் தனியாக வந்திருக்கும் ஒரு வெளிநாட்டவனிடம் ஒரே ஒரு ரூபாய் கூட ஏமாற்றக்கூடாது என்ற எண்ணம் சாதாரண ஏழை சீனத் தொழிலாளிக்கும் இருக்கிறதென்றால், அறம், மதம் என எத்தனையோ அம்சங்கள் நல்லதைத்தான் போதிக்கிறது என்று கூறிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் காண முடியாத அறத்தை இங்கே காணுவது வியப்புதானே!!

அதுவும் சில நேரங்களில் கைப்பேசி வழியாக பணம் செலுத்த நேரிடும். சாப்பிட்டு முடித்துவிட்டு, விலை தெரிந்தால், நாமே நம் கைப்பேசியில் அவர்களுக்கு பணத்தை செலுத்திவிட்டு வந்துக்கொண்டே இருக்கலாம். சில வேளைகளில், தள்ளுவண்டியின் ஓரத்தில் இருக்கும் பணப்பெட்டியில் நாமே பணம் போட்டுவிட்டு மீதம் உள்ள சில்லறையையும் நாமே எடுத்து வந்துக்கொள்ளலாம். எதனையும் பார்க்காமல், தள்ளுவண்டி கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் ஆணோ, பெண்ணோ அடுத்தடுத்த வாடிக்கையாளருக்குத் தேவையானதை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.

பணம் செலுத்தினோமா, சரியான பணத்தைத்தான் செலுத்தினோமா என்று கூட சோதிக்க மாட்டார்கள். நாம் அந்த தள்ளு வண்டிக்கடையில் இருந்து உணவு சாப்பிட்டு நகர்ந்துவிட்டால் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நாம் பணத்தை கொடுத்துவிட்டோம் என அந்த தொழிலாளி எதை வைத்து நம்புகிறான் என்பது அதனினும் ஆச்சர்யம்.

அடுத்து இன்னொரு ஆச்சர்ய செய்தி. கனவில் கூட இந்தியாவில் காண முடியாத நிகழ்வு ஒன்றை சீனாவில் எதிர்கொண்டேன்.

கடந்த ஆண்டு நடந்த G20 மாநாடு சீனாவில் அதுவும் நான் வாழ்ந்துவரும் ஹாங்குஜூவோ நகரில் நடந்தது. இருபது நாட்டு பிரதமர்கள்/அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகள் தங்குமிடம் என் பல்கலைக்கழக வளாகம் ஒட்டியப்பகுதியில் அமைந்திருக்கிற மிக்கபெரிய ஏரியை ஒட்டிய பகுதியில் இருந்தது. 1 மாதங்கள் முன்பே எல்லா மாணவ/மாணவியர்களுக்கும் விடுமுறை கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். 2 மாதம் முன்பே பல்கலைக்கழக ஆய்வகங்களில் உள்ள வேதிப்பொருட்களை பரிசோதித்துவிட்டு, 1 மாதம் முன்பே எல்லா ஆய்வகங்களையும் இழுத்து மூடிவிட்டார்கள். 1 மாதம் முன்பே பல்கலைக்கழக வளாகத்திற்குள் பேராசிரியர்கள்/ஆராய்ச்சியாளர்கள் தவிர வேறு யாரும் வரமுடியாதபடி பாதுகாப்பு அதிகரித்திருந்தது. சாலைகளில் இரவு 10 மணிக்கும் மேல் நடந்துசென்றால் அடையாள அட்டை/கடவுச்சீட்டு சோதித்துத்துக்கொண்டிருந்தினர் காவல் துறையினர். சரியாக 20 நாட்களுக்கு முன்பே அந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் எல்லா உணவகங்கள் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு இராணுவ/காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.

இப்படியொரு நிலையில், பூட்டப்படும் இரண்டொரு நாட்களுக்கு முன்பாக ஏரிக்கரையை ஒட்டியுள்ள இந்திய உணவகம் சென்றுவிட்டு வெளியே வர இரவு பத்து மணிக்கும் மேல் ஆகிவிட்டிருந்தது. நானும் என் இரு நண்பர்களும் வெளியே வரும்பொழுது, முழுச்சாலைகளும் இராணுவமும் காவல்த்துறையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நடந்து செல்லும் எல்லா பாதைகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து இல்லாத மனிதர்கள் நடமாட்டம் தென்படாத சூழலில் நானும் என் இரு நண்பர்களும் அகப்பட்டிருந்தோம். அந்த சூழலை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இருபது நாடுகளில் பிரதமர்/அதிபர்கள் தங்கும் இருபது நட்சத்திர விடுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடுவில் மூன்று வெளிநாட்டினர் மட்டும் தையே. சுற்றிலும் பல கிலோ மீட்டர்களுக்கு தனி மனிதர்கள் இல்லா நிலையில், இராணுவ வாகனங்களும் காவல்துறையினரும் நிரம்பியிருக்க, ஒரு வித பதட்டமும் அச்சமும் மனதில் நிரம்பி அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்தது. என் மொழியை அல்லது நான் பேசும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லாத சீன மொழி மட்டுமே பேசக்கூடிய அங்கிருந்த காவல் அதிகாரிகள் எங்கள் சூழலை விசாரித்து எங்களை எவ்வித பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாக்காத மொழி நடையை கையாண்டு, எந்த வாகனங்களும் இங்கே கிடைக்காது என்பதை என்பதை எங்களுக்கு புரிய வைத்து எங்களை பாதுகாப்பாக 5 கிமீ நடந்து சென்று வாடகை மகிழுந்து பிடித்து செல்லுமாறு கூறி அனுப்பிவைத்தனர்.

2009 என்று நினைக்கிறேன்…. ஒருமுறை, நோர்வேயில் இருந்து சென்னை வந்திருந்தபொழுது சென்னை தொடரி நிலையத்தில் ஊருக்கு செல்ல தொடரியில் ஏறியபொழுது உள்ளே இருந்த காவல்துறை ‘நண்பர்’ மக்களை வழிநடத்திக்கொண்டிருக்க, அவர் என்னை அமரச்சொன்ன இருக்கையில் இன்னொரு நபர் வருவதாய் அவ்விருக்கையில் இருந்த நபர் கூற, நான் வேறு ஒரு இருக்கை நோக்கி நகர்ந்தபொழுது, காவல்துறை ‘நண்பர்’ என்னை கட்டாயப்படுத்தி அதே இருக்கையில் அமர சொல்ல, அங்கு இன்னொரு நபர் வருவதாகவும் நான் வேறு இருக்கைக்கோ அல்லது இருக்கை கிடைக்காது போனால் நின்றுக்கொண்டு பயணிக்கும் வசதியுள்ள இடத்திற்கு நகர்கிறேன் என சொல்ல, ” மூடிக்கிட்டு உட்காருடா………….., வாயைக்கிழித்துவிடுவேன்” என கூறிய ‘பாச’ வார்த்தைகள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க, சீனாவில் பார்த்த காவலர்களின் அணுகுமுறை யார் மனிதன் யார் மிருகம் என நன்றாக உணர்த்தியது எனக்கு,.

வேடிக்கை என்னவென்றால், இந்தியாவை ஜனநாயக நாடென்றும் சீனாவை இராணுவ நாடென்றும் கூறும் நல்லுள்ளங்கள் இந்தியாவில் நிறைய காணலாம்.

One thought on “சீனர்களின் சமூக அறமும் பெண்களின் நிலையும்

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: