தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!

(2016 ஜூன் மாதம் எழுதப்பட்டது)

எங்களது (விஜய் அசோகன்-இளவரசி வேலண்டினா) மூத்த மகன் கவின் திலீபனுக்கு இதோ ஆறு வயது நெருங்கப்போகிறது. அவரை நாங்கள் இன்னும் பள்ளிக்கூடம் சேர்க்கவில்லை. தாய் மொழி வழிக்கல்வி, அரசு பள்ளி என்பதில் நாங்கள் இருவரும் தீர்க்கமாக இருக்கிறோம். அதனினும் தீர்க்கமாக, பெரும் பொருட்செல்வு செய்து, இன்றைய மன அழுத்தம் தரும் தனியார் பள்ளிக்கூட பாட முறைகளுக்குள் எங்களது குழந்தைகளை சிக்க வைத்து அவர்கள் வாழ்வை சிதைக்க வைக்க நாங்கள் துளியும் விரும்பவில்லை.

Trollstingen July 2014

எங்களுக்கு 2009 மார்கழி மாதத்தில் திருமணம் நடந்து (சென்னையில்), அடுத்த பத்து நாளில் நோர்வேயில் இணைந்து வாழ்வை தொடங்கியது முதல் 2015 வரை நோர்வேயிலேயே வசித்து வந்தோம். 2010 கார்த்திகையில் எங்கள் மூத்த மகன் கவின் திலீபனும் 2013 தை மாதத்தில் எங்கள் இரண்டாம் மகன் கதிர் நிலவனும் எங்கள் வாழ்வில் புகுந்து எங்களது வாழ்வை செழிப்பாக்கினார்கள். 2015 பங்குனி மாதம் நோர்வேயில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் குடியேறிய முதல் நொடியில் இருந்து எங்களை பார்க்கும் எல்லோரும் கேட்கும் முதல் இரு கேள்விகள், “பசங்களுக்கு தமிழ் தெரியுமா?”, “இன்னுமா பள்ளிக்கூடம் சேர்க்கவில்லையா?” என்பதாகவே இருக்கும்.

எங்கள் மூத்த மகனிடம் பேசிய பிறகு இவன் உண்மையில் நோர்வேயில் பிறந்து அங்கேயே வளர்ந்தவனா? இல்லை, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவனா என ஆச்சர்யத்தோடு அடுத்த கேள்வியை அவர்கள் கேட்கும் அளவிற்கு எங்கள் மகன் கவின் திலீபன் அழகு தமிழில் பேசுவான். நான் சிரித்துக்கொண்டே, “தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தால், இத்தனை அழகாக தமிழில் பேசியிருப்பானா? ” என்பேன்.

இரண்டாவது, “இன்னும் ஆறு வயதாகவில்லை, அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் முதலாம் வகுப்புதான் சேர்க்கபோகிறோம்” என்று சொன்னால், எங்களை வினோத பிறவியாக பார்த்து உடனடியாக அறிவுரை படலம் தொடங்கும். என்னை நன்கு அறிந்த உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றாக தெரியும், “இது திருத்த முடியாத பிறவி” என்று. ஆதலால், என் கொள்கை பிடிவாதத்தோடு பெரிதாக முரண்டு பிடிக்கமாட்டார்கள். ஆனாலும், ஆங்காங்கே சிறு சிறு வார்த்தை அறிவுரைகள் தென்படும்.

வெறும் தமிழில் படிக்க வைத்து, ஆங்கிலமே தெரியாமல் வளர்த்தால், உங்கள் மகன்கள் பெரிதும் சிரமப்படுவார்கள் என்ற அக்கறை வார்த்தைகளும் தெறிக்கும். ‘தமிழில்’ பேசுங்கள் என்று சராசரியாக சொன்னாலும் ஆங்கிலம் தெரியாமல் எப்படி பிழைப்பதாம் என்பதும் தமிழில் கல்வி கற்க வைக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் ஆங்கிலம் தெரியாமல் எப்படி முன்னேறுவான் என்பதும், இந்த முரண்பட்ட மன நிலை எனக்கு புரியவேயில்லை. தமிழ் வழி கல்வி, தமிழ் மொழியில் பேசுவது என்று சொல்வதிலும் செயல்படுவதிலும் பிற மொழியே தெரியாமல் இன்னபிற அறிவே இல்லாமல் வாழு என பொருள்படுவதாக கொள்ளும் மனநிலை எப்படி முளைத்தது என புரியவேயில்லை.

அது ஒரு புறம் இருக்க, இதுவரை பள்ளிக்கூடமே செல்லாத எங்கள் கவின் திலீபனுக்கு எது தமிழ், எது ஆங்கிலம் எது நோர்வேஜிய மொழி என மிகத் தெளிவாக தெரியும். தமிழகம் வந்து குடியேறும் வரை, ஒரு மொழி பேசும்பொழுது இன்னொரு மொழியை கலக்கமாட்டான். இங்கு வந்ததும், ஆங்கிலம் என்பது எல்லா இடத்திலும் பரவிக்கிடப்பதை உணர்ந்தவன் அவனாகவே ஆங்கிலமும் கற்றுக்கொள்கிறான். ஆனால், அது ஆங்கிலம், நம் வீட்டில் பேசுவது தமிழ் என்று நன்கு பகுத்துணர்ந்து பேசுகிறான். ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லையும் தமிழ்ச்சொல்லுக்கு நிகரான ஆங்கிலச்சொல்லையும் அவனே தேடுகிறான். கேட்டு தெளிகிறான்.

நோர்வே நாட்டில் 2014 ஆம் ஆண்டு ஆடி மாதம் தொடக்கம் 2015 ஆனி மாதம் வரை நோர்வே நாட்டு மழலையர் விளையாட்டுப்பள்ளிக்கு சென்று வந்தான். அங்கே ஆறு வயது வரை பாட நூல்கள் இல்லை. விளையாட விடுவார்கள், நூலகம் அழைத்து செல்வார்கள், காட்டிற்குள் அழைத்து சென்று மரக்கிளைகள் வெட்டி சுத்தம் செய்ய பழகுவார்கள், வீட்டினுள் பொருட்களை எப்படி அடுக்கி வைக்க வேண்டும், சாப்பிடும் முறை, மழை, வெயில், வெண்பனி பொழிவில் சாலையில் நடப்பது கடப்பது, சாலை விதிமுறைகள், கடைகளில் பொருட்களை எப்படி தேடி எடுப்பது, இதுதான் அங்கே அவன் படித்தது!

Apr 2011-4

வீட்டில் பொதுவாக தமிழில் மட்டுமே பேசுவது வழக்கம். பள்ளிக்கூடத்தில் நோர்வே மொழி புரியாமல் சற்று சிரமப்படுவதாக அவ்வப்பொழுது நடக்கும் பள்ளிக்கூட பெற்றோர்கள் கலந்துரையாடலில் கேள்விப்பட்டதுண்டு. நாங்கள், எப்படியும் நோர்வேயை விட்டு வெளியேறி விடுவோம் என்பதால், நோர்வே மொழி கட்டாயம் பயிற்றுவித்தாக வேண்டியதில்லை என ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஆதலால், அவர்களும் சிரமப்படவில்லை. பள்ளிக்கூடம் சென்ற 8 மாதத்திற்கு பிறகும் வீட்டில் எவ்வித நோர்வேஜிய மொழி கலப்பும் இல்லாமல் தமிழில் பேசுவான். ஒரு முறை வீட்டில் தமிழிலேயே பேசுகிறான் இவனுக்கு நோர்வே மொழி கொஞ்சம் கூட மூளையில் ஏறவில்லையோ என நானும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த நாள், பள்ளிச்சென்று அவனை விட்டுவிட்டு கிளம்பும் முன், எங்கள் இருவரையும் காத்து நிற்க சொல்லிவிட்டு, தனது தோழர் தோழிகளை அழைத்து வந்து எங்கள் இருவரையும் நோர்வேஜிய மொழியில் அறிமுகம் செய்தான், எங்கள் இருவர் முன்பும் அவர்களுடன் அவர்களுக்குரிய மழலை நோர்வேஜிய மொழியில் கலந்துரையாடிவிட்டு எங்களை வழியனுப்பினான். “எனக்கு இரு மொழியும் தெரியும். வீட்டில் தமிழில் மட்டும்தான் பேசுவேன், இங்கே நோர்வேஜிய மொழியிலும் உரையாடுவேன். நீங்கள் சிறு வயதில் இருந்து அதைத்தானே சொல்லிக்கொடுத்து வளர்த்தீர்கள்” என மாலை வரும்பொழுது மழலை தமிழில் என்னுடன் பேசியபொழுதே எங்கள் வளர்ப்பின் பெருமை புரிந்தது.

எங்கள் மகனை போலவே, அப்பள்ளியில், ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டுக்குழந்தை பீட்டரும் இருந்தான். அவனுடன் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். அதன் மூலம், இதுதான் ஆங்கிலம் என பகுத்துணர எங்கள் மகனுக்கும் தெரிந்திருந்தது. அவன் எந்த அளவிற்கு அதனை உள்வாங்கியுள்ளான் என்றால், ஒரு வருடம் கழித்து, சில ஆங்கிலச் சொற்களை சொல்லி, இதற்கு தமிழில் என்ன என்று கேட்டான், எங்கே இதனை தெரிந்துகொண்டாய் என்று கேட்டபொழுதே, பீட்டரிடம் பிறர் பேசுவதை கவனித்திருக்கிறேன் என்று பதிலுரைத்தான். பள்ளிக்கூடப் படிப்பை இன்னும் தொடங்கவேயில்லை. அதற்குள் அவனது சிந்தனை திறன், ஒரு பாடலை பாடும்பொழுது, அதற்கான பொருளை அவனே தேடி, பிழை ஏற்பட்டால், நிதானமாக உள்வாங்கி அவனது பிழையான சொற்களை அவனே திருத்தி, தமிழில் மழலையர் பாடலை பாடுகிறான். தாய் மொழியிலேயே அவனை சிந்திக்க வைத்ததன் பலனை ஆறு வயதிலேயே நாங்கள் நன்றாக பார்க்கிறோம்.

என் மனைவியின் துணை இன்றி இவ்வளவு சாத்தியப்பட்டிருக்காது.

நோர்வேஜிய வளர்ப்பு முறையும் மருத்துவர்களின் ஆலோசனையும் எங்கள் இருவருக்கும் தாய் மொழி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற தெளிதலையும் புரிதலையும் எங்களுக்கு ஏற்படுத்தியது.

கரு உருவானது முதல், நானும் என் மனைவியும் அழகான தமிழ் பாடல்களை கேட்டோம், பார்த்தோம். குறிப்பாக, தமிழீழத்தில் இருந்து வெளியான “அழகே அழகே தமிழ் அழகே” பாடலைத்தான்அடிக்கடி பார்ப்போம். குழந்தையாக அவன் இம்மண்ணில் காலடி வைத்தது முதல் அவனுக்கு பிடித்த பாடல், எங்கள் பாவலர் அறிவுமதி அண்ணன் எழுதிய, சிறுத்தை படப்பாடல், “ஆராரோ ஆரிராரோ”. எவ்வளவு அழுகை வந்தாலும், இப்பாடலை ஒளி/ஒலிப்பரப்பினால், சட்டென நிறுத்திவிட்டு, பாடலை முழுமையாக கேட்டுவிட்டு அழுகையை தொடர்வான்.

நோர்வே நாட்டில் மகப்பேறு காலம் முதல் குழந்தை வளர்ப்பு காலம் வரையிலான மருத்துவம் இலவசம் என்பதோடு மிக சிறந்த கவனிப்பும் பாதுகாப்பும் கொண்டவை. அடிக்கடி மருத்துவர்கள் கரு முதல் குழந்தை வளர்ப்பின் எல்லா பருவங்களையும் கவனித்து பெற்றோர்களிடம் கலந்துரையாடுவார்கள். அப்பொழுது அடிக்கடி நாங்கள் கேட்ட அறிவுரை, “வீட்டில் தாய் மொழியிலேயே பேசுங்கள்” என்பதே. ஏற்கனவே வெளிநாட்டில் வசிப்பதால் தாய் மொழி சுவாசம் அவனது மூளை வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியம் என சொல்வார்கள். ஏற்கனவே இருந்த மொழிப்பற்றோடு எங்களுக்கு மருத்துவர்களின் அறிவுரை மருத்துவ ரீதியிலான தேவையையும் உணர்த்தியது.

பேசத் தொடங்கிய காலத்திலேயே ஒரு முறை கடற்கரையோரம் மகிழுந்துவில் பயணிக்கும் பொழுது, என் மனைவி வாய் தவறி “அங்கே எவ்வளவு பெரிய ship பாரு தங்கம்” என்று சொன்னதற்கு, எங்கள் மகன், ” நீங்கள் பேசுறது இங்கிலீசு, அப்பா திட்டுவாரு, தமிழில சொல்லுங்க, எனக்கு புரியல” என்றான். ship என்றால் கப்பல் என புரியாதவனுக்கு அது ஆங்கிலம் என்று மட்டும் புரிந்திருந்தது எங்கள் இருவருக்கும் அவ்வளவு வியப்பானவையாக இருந்தது. அது முதல் என் மனைவியும் அவனிடம் மிக கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார்.

2011 இல் ஒரே ஒரு முறை ஒரு கலந்துரையாடலில் அரசு பள்ளிக்கூடம், தாய் மொழி கல்வி பற்றி அச்சத்தோடு பேசினார் என் மனைவி. அதன் பிறகு நாங்கள் அவ்வப்பொழுது ஆங்காங்கே கலந்துரையாடினோம். அவ்வப்பொழுது செய்திகளை பரிமாறிக்கொண்டோம். தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளின் மோசமான கலாச்சாரத்தை பற்றி பேசித்தெளிந்தோம். இன்று மிக உறுதியாக இருக்கிறோம். தாய் மொழி கல்வி மட்டுமே எங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததென்று முடிவெடுத்தோம்..

இந்த வருடம் கார்த்திகையில் எங்கள் மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது தொடங்கப்போகிறது. எங்கே குடியேறப்போகிறோம் என்பதில் இன்னும் எங்களுக்குள் தெளிவில்லாததால், இதுவரை முதலாம் வகுப்பு பாடத்தை வீட்டிலேயே படித்து வருகிறான். அடுத்த மாதத்திற்குள் எந்த ஊரில் குடியேறுவோம் என முடிவெடுத்துவிடுவோம். பிறகு பள்ளிக்கூடம். தமிழி வழியில் படிக்கும் என் மகன் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளை விட ஆங்கிலத்தில் மிக தெளிவாகவும் உறுதியாகவும் பேசுவான். தாய் மொழி கல்வி என்பதால், பாட அறிவிலும் மிளிருவான். சவால் விட்டு சொல்கிறேன். அவன் பள்ளிக்கூட படிப்பை முடிக்கும் 17 ஆம் வயதில் கவின் திலீபனை வாழ்த்த நாங்கள் இருவரும் காத்து நிற்கிறோம்.!!!!

************************************************************************

பின் குறிப்பு: இக்கட்டுரை 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எழுதப்பட்டது. தற்பொழுது எங்கள் கவின் திலீபன் கோவையில் அரசு நிதியுதவி பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் இரண்டாம் வகுப்பு மிக மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் படித்து வருகிறான்

4 thoughts on “தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!

Add yours

  1. தமிழ் வழிக் கல்வி அல்லது தாய் மொழி வழிக் கல்வி பற்றி தங்களின் நிலைப்பாடு குறித்து பெரு மகிழ்ச்சி. இதைப் பற்றிய வழிகாட்டலும். அதற்கான சூழ்நிலையும் தமிழ் நாட்டில் (தஞ்சையில்) இல்லையே என மனவருத்தம் ஏற்படுகிறது, என் மகன் அர்சலான் இந்த வருடம் யு,கே.ஜி. படித்து வருகிறான், கார்த்திகை மாதம் என்பது டிசம்பர் 2017 அதுவரை எந்த ஊரில் குடியேறப்போகிறீர்கள். எந்த தமிழ் வழிக் கல்வி பள்ளிகூடத்தில் கவின் திலீபைன சேர்க்கப்போகிறீர்கள் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன், உங்களுடன் சேர்ந்து கதில் நிலவனையும் நானும் என் மனைவியும் வாழ்த்துகிறோம்,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: