மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது – டிசம்பர் 2017)

இன்றைய நவீன உலகின் தேவைகளிலும் பிரச்சனைகளிலும் முதன்மையான பங்காற்றுவது மின்சாரம். உற்பத்தி முறைகளிலும் செயல்வடிவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளினால் காற்று மாசடைதல்/கார்பன் உமிழ்வு, இவைகளால் தீங்கின் கொடும் எல்லைக்கு இட்டுச்சென்ற புவி வெப்பமடைதல் உட்பட எரிபொருள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் மரபு சாரா எரிசக்தி உற்பத்தி நோக்கி நவீன உலகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் அணுசக்தி மின்சார உற்பத்தி 5.73%லிருந்து 4.44%க்கு குறைந்துள்ளது, எண்ணெய் வழி ஆற்றல் உற்பத்தி 35.96%லிருந்து 32.94%க்கு குறைந்துள்ளது, எனினும், வாயுக்கள் (Gas) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் 22.85%லிருந்து 23.89%க்கு அதிகரித்துள்ளது. தமிழகச் சூழலை ஒப்பிட்டு சிந்திக்கும்பொழுது உலகளவில் நடந்துவரும் மாற்றம் அணுசக்தி மின் உற்பத்தி குறைவது நல்லதெனினும் வாயுக்கள் வழி ஆற்றல் உற்பத்தி அதிகரிப்பும் அது சார்ந்த துறை வளர்ச்சியும் அச்சத்தை வரவழைக்கிறது. 

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த சிந்தனை மாற்றம் வரத்தொடங்கிய பின், மிக சமீபகாலமாக உலகின் பல நாடுகள், மரபு சார்ந்த மின் உற்பத்தியில் இருந்து மரபு சாரா மின் உற்பத்திக்கு படுவேகமாக நகர்ந்து வருகிறது எனலாம். குறிப்பாக, விமான நிலையங்களின் கூரைகளை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களின் கூரைகளை சூரிய ஒளி மின்சார உற்பத்தி தகடுகளால் நிரப்புவது, நகரப்பேருந்துகளை நகரத்தின் காய்கறி/பழங்களின் கழிவுகளில் உருவாக்கப்படும் ஆற்றலில் இயக்குவது என பல பல மாற்றங்கள் நடந்தேறி வருகிறது.

இவ்வகையான மின்/ஆற்றல் உற்பத்தி முறைக்கு உலகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வல்லமை இல்லையெனினும் பல்வேறு அடுக்களிலும் நிலைகளிலும் இம்மாதிரியான மாற்றங்களை செயல்படுத்தும்பொழுது பசுமையான மின் உற்பத்தி இவ்வுலகில் சாத்தியமாகும்.

அடுத்ததாக, மரபுசாரா மின் உற்பத்தி முறைகளில் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்த்துவிடுவோம்.

சூரிய ஒளி வழி மின்சாரம் (Solar cell), உயிரியல்/உயிர்பொருள் (Biofuels/Biomass), காற்றாலை (Wind), புவிவெப்பச் சக்தி (Geothermal) உள்ளிட்ட மரபுசாரா மின் உற்பத்தி முறைகளில் கார்பன்-டையாக்ஸைட் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு முற்றிலுமாக இல்லை அல்லது மிக குறைவெனலாம்.

International Panel on Climate change வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இயற்கை வாயு மின் உற்பத்தியில் 0.6-2 பவுண்ட் கார்பன்-டையாக்ஸைட் (CO2E /KWatt-hr) வெளியிடப்படுகிறது. நிலக்கரி மின் உற்பத்தியில் 1.4-3.4, காற்றாலை மின் உற்பத்தியில் 0.02-0.04, சூரிய ஒளி மின் உற்பத்தியில் 0.07-0.2, நீரியியல் மின் உற்பத்தியில் 0.1-0.5 புவிவெப்ப மின் உற்பத்தியில் 0.1-02 பவுண்ட் கார்பன்-டையாக்ஸைட் (CO2E /KWatt-hr) வெளியிடப்படுகிறது. உயிரியல் வகை மின் உற்பத்தியில் பிற நன்மைகள் இருப்பினும் கார்பன்-டையாக்ஸைட் வெளியேற்றம் மின் உற்பத்திக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் பெரும் மாற்றம் கொண்டவை.

2009 இல் Union of Concerned Scientist வெளியிட்ட அறிக்கையின்படி, மரபு சாரா மின் உற்பத்தியை 2025ற்குள் உலகத்தின் தேவைகளில் 25%ஆக அதிகரித்தாக வேண்டும் என்று வரையறுத்தார்கள். மரபு சார் மின் உற்பத்தி முறைகளில் ஏற்படும் காற்றும் மாசு மற்றும் நீர் மாசு உள்ளிட்டவைகளால் இதய நோய், நரம்பியல் தளர்ச்சி மற்றும் நோய், மூச்சு தினறல் மற்றும் பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உண்டாகிவருகிறது எனவும் மரபு சாரா மின் உற்பத்தி பெருகினால் மட்டும் இவ்வகையான நோய்கள் மற்றும் இவைகளால் உண்டாகும் இறப்பு விகிதம் குறையும் எனவும் வரையறுத்தார்கள். மரபு சார் மின் உற்பத்தி முறைகளால் உண்டாகும் சுகாதார கேடுகளால் ஆண்டொன்றுக்கு அமெரிக்காவில் மட்டும் 361 பில்லியன் டாலர் செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி முறைகளில் நீர் பயன்பாடு மிக குறைவெனலாம். உதாரணமாக, அணுமின் உற்பத்தியில், 400-750 Gallon/MWhr  தண்ணீர் தேவைப்படுகிறது, இதுவே சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி முறைகளில் கிட்டதட்ட 30 Gallon/MWhr  தண்ணீர் பயன்படுகிறது.

இப்படியான நன்மைகளும் இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை குறைக்கவும் வருங்காலத்தில் இல்லாதொழிக்கவும் உலகம் முழுவதும் மரபுசாரா எரிசக்தி முறைக்கு நல்ல வரவேற்பு அளிப்பதோடு, அனைத்து நாடுகளையும் பின்பற்ற கோரிக்கைகளும் நிபந்தனைகளும் விடுத்தே சமீபகாலத்தில் நடக்கும் அனைத்து அரசு சார்ந்த/அரசு சாராத சுற்றுச்சூழல் மாநாடுகள் நடந்தேறி வருகிறது.

அதேபோல, 2016 அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், காந்தியின் பிறந்த நாளில்,  ஐநா அமைப்பின் அறவழிப்போராட்ட நினைவுகூரல் நிகழ்வில், இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் இன்றைய எரிசக்தி கொள்கை முற்றிலும் பாரிஸ் ஒப்பந்தத்திற்கு எதிரானது. அதில், முக்கியமானது, 2030ற்குள் இந்தியா படிசல் எரிபொருள் அற்ற (Non-fossil fuel) உற்பத்தியை குறைந்தது 40% ஆக நிலைநிறுத்தும் என்பது. அதில், 2022ற்குள் 175GW மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை கொண்டுவருவது என்பதும் உள்ளடக்கம். அதாவது 2040ற்குள் கிட்டதட்ட 400GW  ஆதாரம் கீழே:

https://www.theguardian.com/environment/2016/oct/02/india-paris-climate-change-agreement-un-narendra-modi

2015 இல் வெளியான சர்வதேச ஆற்றல் முகமையகம் (International Energy Agency) வெளியிட்ட உலக நாடுகளின் ஆற்றல்/சக்தி தேவை, உற்பத்தி, வருங்கால செயற்பாடுகள் குறித்து வெளியீட்டில் மிகத் தெளிவாக இது குறித்து விளக்கம் உள்ளது. ஆதாரம் கீழே:

https://www.iea.org/publications/freepublications/publication/IndiaEnergyOutlook_WEO2015.pdf

அரசு சார்ந்த/அரசு சாராத நிறுவனங்களோடு, சமீபகாலமாக பசுமை இடதுசாரி அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் கூட மரபு சாரா மின் உற்பத்திக்கு ஆதரவை வழங்கி வருகின்றன.

2014இல் பிலிபைன்ஸ் நாட்டு இடதுசாரி இயக்கமான Party of Laboring Mass, எரிசக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தங்களது பார்வையையும் தங்கள் அதிபருக்கான கோரிக்கையும் வழங்கியிருந்தார்கள். அதில்,

“மரபுசார்ந்த எரிசக்தி பயன்பாட்டை குறைக்கச்சொல்லி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அதனை பொருட்படுத்தாத அதிபர் மக்கள் திரள் இயக்கங்களின் எவ்வித கோரிக்கைக்கும் செவி சாய்க்காது முதலாளிகளுக்கு ஏற்ற வகையிலேயே அனைத்து திட்டங்களையும் முன்மொழிவதிலிருந்து அதிபர் மக்களுடன் நிற்கிறாரா இல்லையா எனது தெளிவாக தெரிகிறது. இந்நாட்டில் 100% மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கான வேலைகள் தொடங்கப்பட வேண்டும். அது எமது நாட்டின் சமூக பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும் சமூக கட்டமைப்பை பலப்படுத்தும் திட்டத்துடன் பொருந்தியதாக அமைய வேண்டும். மாறாக, மையப்படுத்தப்பட்ட அமைப்புகளைக் கொண்ட (centralized systems) பெரு முதலாளிகளை உள்ளடக்கிய திட்டமானது ஊழலை வளர்க்க மட்டுமே பயன்படும். அதுமட்டுமன்றி, அத்திட்டங்கள் பெரு நிறுவனங்களின் (corporates) நலனை சார்ந்தே இயங்கும். மையப்படுத்தப்படாத (decentralized) அமைப்புகளை சார்ந்து உருவாக்கப்படும் திட்டங்கள் சமூக உரிமைக்கு (community ownership) உகந்ததாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு பசுமை இடதுசாரி வார இதழில் (Green Left weekly) சுற்றுச்சுழலை பாதுகாக்க சமஉடமைவாதிகளின் (Socialist) உடனடி கோரிக்கை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், “அனைத்து வீடுகளிலும் சூரியசக்தி மின்சார உற்பத்திக்கான சாதனங்களை நிறுவ வேண்டும். மின்சார உற்பத்தி செய்யும் அனைத்து தனியார் பெரு நிறுவனங்களையும் அரசு கையகப்படுத்தவேண்டும், அதனை ஜனநாயகப்படுத்த வேண்டும். மரபுசார்ந்த எரிசக்தி உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சிறுவாகன உற்பத்தி முறையை அரசு சீர்திருத்த வேண்டும். சிற்றுந்துகளை மின்சார சக்தியால் ஓடக்கூடியதாக மாற்றியமைக்க வேண்டும்” என்று இருந்தது. இதோடு, விவசாயத்தில் இயற்கை முறையிலான உற்பத்தி, காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளையும் சேர்த்திருந்தார்கள்.

சமூக உரிமைக்கு உகந்த திட்டமாக சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தையே சர்வதேச அளவிலான இடதுசாரிகளும் சமவுடமைவாதிகளும் அடையளாம் காட்டுகின்றனர். ஓரிடத்தில் உருவாக்கப்பட்டு பெரு நிறுவனங்களின் /மைய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கும் மின்சார உற்பத்தி திட்டங்களை விட சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி என்பது, மின்சாரம் தேவைப்படும் இடங்களிலேயே உற்பத்தி செய்யப்படும், அதேவேளை ஒரு கிராமத்திற்கு தேவையான அளவை கூட சமூக கட்டமைப்புகளின் கூட்டு முயற்சியில் உருவாக்க வாய்ப்பாக அமையும். தேவையற்ற பொருட் செலவையும் கால விரயத்தையும் குறைக்கும். இது போன்ற திட்டங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. அதேநேரத்தில் அறிவியல் ரீதியாகவும் தொழிற்நுட்ப ரீதியாகவும் மிகவும் சாத்தியமானதும் ஆகும். ஆனால், இந்தியாவின் இன்றைய தனியார் மையக் கொள்கைகளால் இது போன்ற திட்டங்களின் செயல்பாட்டுமுறை இதுவரை சாத்தியமற்றதாகவே இருக்கிறது. முதலாளித்துவ – சமூக உரிமை கொள்கை போட்டியில், தனியார்மைய/பெருநிறுவனங்களே அனைத்தையும் முடிவு செய்கிறது/வெற்றியும் பெருகிறது.

மரபு சாரா மின் உற்பத்தி நோக்கிய அரசியல் பார்வையும் சமூக அளவிலான பார்வைகளும் உலகளவில் வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்தியாவில் நாம் மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைக்கு தொடர்ந்து எதிர்ப்புகளை பதிந்து வருவதோடு மக்களிடம் மரபு சாரா மின் உற்பத்தி முறைக்கான விழிப்புணர்வை ஊட்டுவதும் நம் கடமை ஆகிறது. மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகள் நிறுவனங்களாலும் அரச கட்டமைப்புகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. ஆனால், மரபு சாரா மின் உற்பத்தி முறைகள் நாம் இல்லங்கள்தோறும் கொண்டு செல்ல முடியும். வீதிகள் தோறும் கொண்டு செல்ல முடியும். சமூகக் கூட்டு நடவடிக்கைகளால், கிராம கூட்டு முயற்சிகளால், இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகளால், என நமக்கு நாமே மாற்றங்கள் முன்னெடுக்க முடியும். நமக்கு நாமே நமது தேவைகளை நிறைவு செய்ய முடியும். அதேவேளை, இன்னும் நமது அரசு சட்டங்கள் இதற்கு உகந்ததாக இல்லை, மாறாக எதிராக உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு மாற்றங்களை எல்லா படிநிலைகளிலும் கொண்டு வர முயல்வோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: