`நீட்’ – தகுதித்தேர்வா? தரப்படுத்துதலா? சர்வதேச நாடுகளில் நுழைவுத் தேர்வு உண்டா?

(ஜீலை 2018, குங்குமச்சிமிழ் – கல்வி இதழுக்காக எழுதிய கட்டுரையின் முழு வடிவம்)

2012இல் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபொழுது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தது. 2013இல் உச்ச நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தப் பிறகு, 2016இல்தான் முதன்முறையாக தேர்வு நடந்தது. அதுவும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே.

2012இல் தீவிரமாக எதிர்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரந்திர மோடியின் பிரதமரானவுடன் நீட் தேர்வை நாடெங்கும் வலிந்து திணித்து செயல்படுத்துகிறார். 2012இல் இருந்து தான் இறக்கும் வரை நீட் தேர்வை எதிர்த்து வந்த ஜெயலலிதாவை மறந்துவிட்டுத்தான் அவரது கட்சியினரின் ஆட்சி நீட் தேர்வை வரவேற்று மகிழ்கிறது. சரி, ஜெயலலிதா ஏன் எதிர்த்தார்?

2012, 2013, 2016 பிப்ரவரி மற்றும் ஜூலை ஆகிய நான்கு தருணங்களில் ஜெயலலிதா அம்மையார் இந்திய கூட்டரசின் பிரதமருக்கு எழுதிய கடித்ததில் நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வு முறைகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

neet

அக்கடிதங்களில் அவர் குறிப்பாக, ”2005 இல் இருந்து தமிழக அரசு, உயர்க்கல்வி நுழைவிற்கான தேர்வு முறையினை இல்லாது செய்ய நடவடிக்கைகள் எடுத்து, அதன் மூலம் நன்கு கல்விக் கற்கக்கூடிய கிராமப்புற ஏழை, எளிய மாணவ/மாணவியர்களுக்கு உயர்க்கல்வி வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் சமூக நீதி தமிழகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நீட் போன்ற பொது நுழைவுத்தேர்வு மூலம் உயர்க்கல்வி மூலம் கிடைக்க வேண்டிய, சமூக பொருளாதார மேம்பாடு தகர்க்கப்பட்டு சமூக நீதி இல்லாத வருங்காலம் உருவாகும் எனவும்,

”ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உயர்க்கல்வி நுழைவிற்கான மாநில அரசின் நிர்வாக முறைமைகள் தகர்க்கப்படுவதோடு, மாநில அரசின் வலிமையும் அதிகார எல்லையும் குறைக்கப்படும் ஆபத்தும் உருவாகும். பல ஆண்டுகாலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள தமிழக மருத்துவத்தின் வெற்றியும் உயர்ந்த தரமும் நீட் தேர்வு இல்லாத தமிழக அரசின் செயல்திட்டங்களின் வெற்றிக்கு சாட்சி. இவ்வெற்றி, நீட் போன்ற தேர்வால் சிதையும்” எனவும் சுட்டிக்காட்டி இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெரும்பாலுமான கல்வியாளர்கள் மற்றும் சமூக/அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பிற்கும் மத்தியில் 2017 மற்றும் 2018இல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

2017 இல் தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காலி, குஜராத்தி, அசாமி மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டாலும் ஆங்கிலம் இந்தி மொழி கேள்வித்தாள்களுக்கும் ஏனைய மொழி கேள்வித் தாள்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது.

குறிப்பாக, 2018 தேர்வு கேள்வித் தாள்களில் மொழிப்பெயர்ப்பில் பல்வேறு குளறுபடிகளும் நிறைந்திருந்தது. இது மொழி பாரபட்சமா, இந்தி மொழி மக்களுக்கும் பணக்காரர்களின் கல்வி மொழி ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு துணை நின்று, ஏழை, எளிய, கிராமப்புற மாணவ/மாணவியர்களின் வாழ்வை சிதைக்கும் திட்டமிட்ட செயலா என்பதனையும் கேட்க வேண்டியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழில் எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 வழங்க வேண்டும் என உத்திரவிட்டபொழுதும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.ஈ அமைப்பு அவ்வளவு பலமான அமைப்பா? தவறு நடந்துள்ளது அடுத்த வருடங்களில் இருந்து திருத்திக்கொள்வோம் என்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி பழிச்சொல்லிக்கொண்டும் மொழிப்பெயர்ப்பாளர்களின் தவறு என்று திசைமாற்றி, அவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பி, இளம் தலைமுறையினரின் வாழ்வோடு விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் பொறுப்பற்றுத் திரிகிறார்கள்.

எண்ணற்ற மாணவ, மாணவியர்களின் வாழ்க்கைக் கனவு வீணாவது பற்றியோ, அவர்களது வாழ்க்கையே திசை மாறிவிடும் ஆபத்து இருப்பது பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் சர்வாதிகாரத்தனத்துடன் நடந்துகொள்ளும் கல்வி அமைப்பு, நீதிமன்றம், அரசு, நவீன இந்தியாவை சிதைத்துத் கொண்டிருக்கிறது. கல்வியைப் பறிப்பதும், அதனை அழிப்பதும், ஒரு தலைமுறையின் கல்வி வாய்ப்பை திசை மாற்றுவதும் இனவழிப்பிற்கு ஒப்பானது.

இலங்கையில், இப்படித்தான் 1960களில் தரப்படுத்துதல் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழர்களின் உயர்க்கல்வி திட்டமிட்டு பறிக்கப்பட்டு, இனத்தின் வரலாறையே மாற்றி அமைத்தார்கள். பல்கலைக்கழங்களில் தமிழர்களின் இடங்கள் முழுமையும் சிங்களர்கள் ஆக்கிரமித்தார்கள். அதில் இருந்துதான் தேசிய உரிமைக்கான போராட்டம் ஈழத்தமிழர்களால் கூர்மையாக முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு.

இந்தியா தவிர்த்த பிற நாடுகளில், நுழைவுத் தேர்வு இருக்கிறதா? பெரும்பாலான நாடுகளில் மேல் நிலை வகுப்பின் (2 அல்லது 3 ஆண்டுகளின்) கூட்டுப்பதிப்பின் அடிப்படியிலேயே பல்கலைக்கழகங்கள் மேற்படிப்பிற்கான இடத்தைப் பூர்த்தி செய்கின்றன. இன்னும் சொல்லப்போனால், நோர்வே (கனடா நாட்டிலும் என நினைக்கின்றேன்) போன்ற நாடுகளில் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளின் கூட்டுமதிப்பில் தமிழ் மொழிப்பாடமும் உள்ளடக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே தமிழ்ப்பாட மதிப்பெண் பொறியியல், மருத்தவ  நுழைவு தரவரிசையில் சேர்க்கப்படாத பொழுது நோர்வேயில் பிறந்து வளரும் குழந்தைக்கு `தமிழ்` மருத்துவ, பொறியியல் கனவிற்கு வலுசேர்க்கிறது.

சில நாடுகளில், தகுதித் தேர்வு இருக்கிறது. அவை, ஆங்கில மொழி, கணக்கு மற்றும் பொது அறிவு சார்ந்து இருக்கிறது. அவை உயர்க்கல்வியில் சேருவதற்கான தகுதித் தேர்வுதான். அதாவது, குறிப்பிட்ட மதிப்பெண்ணை கடந்து இருந்தால் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் தகுதியினை பெறுகிறார்கள் என்று பொருள். உயர்க்கல்வியில் நுழைவதற்கான தரவரிசை மேல்நிலைப்பள்ளிப் படிப்பின் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அமைகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்கலைக்கழகங்கள் அவரவர் அளவில் நுழைவு முறைகளை பின்பற்றுகிறார்கள். தகுதித் தேர்வு பொதுவெனினும், மேற்படிப்பில் நுழைவதற்கான தகுதியினை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அவரவர் அளவில் பின்பற்றுகிறார்கள்.

சில பல்கலைக்கழகங்கள் தகுதித் தேர்வை பொருட்படுத்தாது, பள்ளி மேல்நிலைப்பாட மதிப்பெண்ணின் கூட்டுத்தொகையின் அடிப்படையிலும், சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பொதுச்சேவை, சாரணர் இயக்க செயல்பாடுகள் உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையிலும் பள்ளி மேல்நிலை வகுப்பின் மதிப்பெண்களை உள்ளடக்கி தரவரிசை இட்டு, மேற்படிப்பிற்கான நுழைவை உறுதி செய்கின்றன.

சமூக பொருளாதார சமத்துவம், பொதுவான கல்வித்தரம் உள்ள போதிலும், அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் ஒரே நாடு ஒரே தேர்வு சாத்தியமில்லை. சீனா போன்ற நாடுகளில் ஒரே நாடு ஒரே தேர்வு முறை பின்பற்றப்பட்டாலும் தகுதித் தேர்வு ஆங்கில மொழித் திறமை சோதிப்பதற்காக மட்டுமே. அவை, தகுதியை உறுதி செய்கின்றனவே தவிர, நுழைவு தர வரிசை இட இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாடு, ஒரே மொழி, சமூக பொருளாதார சமத்துவம் உண்டெனினும் பொது நுழைவுத் தேர்வு முறைகள் பெரும்பாலான நாடுகளில் இல்லை, இருக்கும் நாடுகளிலும் இந்தியாவின் ’நீட்’ற்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.

பல மொழிகள், பல தேசங்கள் கொண்ட கூட்டாட்சி நாடான இந்தியாவில், பொருளாதார சமத்துவமும் இல்லாத, சமூக வேறுபாடுகளும் நிறைந்த நிலப்பகுதியில், ஒரே நாடு ஒரே தேர்வு முறை எப்படி சாத்தியமாகும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தகுதி-நுழைவுத் தேர்வு முறைகளுக்கு எதிர்ப்பு இல்லை. பெரும் பொருளாதர முதலீட்டில் மாணவர்களை நிரப்பும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பொதுத் தகுதித் தேர்விற்கு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. மாநில அரசின் நிதியில் மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கல்லூரிகளுக்கே இத் தேர்வு நியாயமானதாக இருக்காது என சொல்கிறோம்.

2018 நடந்த தேர்விற்காக இரண்டாண்டுகள் தனிப்பயிற்சியில் படித்து எழுதிய மாணவி முதலிடம் பெற்றார். எண்ணற்றோர், பள்ளிக்கூடத்திற்கு முறையாக செல்லாமல், பெரும் தொகை முதலீட்டில் தனிப்பயிற்சி மையங்களில் மட்டுமே தேர்விற்கான பயிற்சி பெற்று தேர்வு எழுதியுள்ளனர். மேல் நிலை வகுப்பு மதிப்பெண்ணே கணக்கில் கொள்ளாத தேர்வு முறையில் தரத்தை எப்படி உறுதி செய்ய முடியும் என்றும் கேட்கிறோம்.

அதேபோல, 85% மாநில அளவிலான இட ஒதுக்கீடு உள்ளதென சொன்னாலும், கடந்தாண்டு தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே 500ற்கும் மேற்பட்ட பிற மாநில மாணவர்கள் தமிழக மாணவர்களுக்கான இடத்தினுள் நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டு இன்னும் முடிவுக் காணப்படவில்லை.

நீட் தேர்வு அடுத்தாண்டு முதல் இரண்டு தருணங்களில் கணினி வழியே நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இது தனியார் பயிற்சி மையங்களுக்கான கட்டணக் கொள்ளையை உயர்த்தும்.

மாநில நிர்வாக உரிமையை முழுமையாக பறிக்கும் இத்தகைய தேர்வு முறையினை இல்லாது செய்ய ஒரே வழி, கல்விக்கான முழு உரிமையும் மாநில அதிகார வரம்பிற்கே கொண்டு வரப்பட வேண்டும். தமிழக அரசு, கடந்த இரு ஆண்டுகளாக நடந்த நீட் தேர்வு, அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாணவ, மாணவியர்களின் உளவியல் தாக்கங்கள் குறித்தான ஆய்வினை சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து முடிவினைத் தெரிவிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: