உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி

நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வெழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாட தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம்/பொறியியல் சேர்க்கைக்கான கூட்டுமதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணை சேர்த்துக்கொள்ளலாம்.

அதாவது, நோர்வே நாட்டினில் தமிழ் மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண், நோர்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது.

Mother Tongue is the Key to Education, Knowledge, Science and English Learning

சரி, அடுத்ததாக சுவீடன் பற்றிப் பார்ப்போம்!

சுவீடனில் பிறந்து வளரும் பிற மொழி குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பேசி, கற்று, தொடர்ந்து தாய் மொழியின் அறிவினை குழந்தை பெற்று சிறக்க, சுவீடன் கல்வி துறை செயலாற்றிக் கொண்டிருக்கிறது. பிற மொழிக் குழந்தைகளுக்கான தாய் மொழிக் கல்வியின் அவசியம் பற்றி சுவீடன் கல்வித்துறை இணையத்தில், “The mother tongue will help the child to develop their knowledge of the language. It will also help your child feel confident that belong to several cultures” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

குழந்தைகள் தங்கள் வீட்டில் பேசும் மொழியிலேயே மழலையர் கல்வி அமைய, பயிற்றுவிக்க, ஊக்குவிக்க, சுவீடன் அரசு விரும்புவதாகவும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழ், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளுக்கு கல்வித் துறையில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதே போன்று, பிற நாட்டு மொழிகளுக்கும் அலுவர்களும் அலுவலகமும் இயங்கி வருகிறது. சுவீடன் நாட்டு தம்பதியர், வேறு ஒரு நாட்டில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தாலும், அக்குழந்தை தன் தாய் மொழியை வீட்டில் பேசாமல் இருந்தாலும் கூட, அக்குழந்தை தாய் மொழியில் பேச, பயில, கற்க இத்திட்டம் துணை நிற்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்கள்.

சுவீடனில் பிறந்து வளரும் பிற மொழிக் குழந்தைகள், பெற்றோர்களின் வாழ்வு சார்ந்த இடப்பெயர்வின் காரணமாக சுவீடனில் வளரும் குழந்தைகள், அகதியாக தஞ்சம் புகுந்தவர்களின் குழந்தைகள் என அனைவருக்கும் அவரவர் தாய் மொழியைக் கற்க சுவீடன் அரசு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?

பல பண்பாட்டுச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கும், தன் நாடல்லாத, தன் மொழி பேசாத நாட்டில் வளரும் குழந்தைகளுக்கும், கல்வியில் சிறந்த விளங்கவும், புது மொழி, புது பண்பாடு, புது வாழ்வை ஏற்று அனைவரோடும் ஒன்றிணைந்து சிறப்பாக வாழவும், அக்குழந்தைகளுக்கு தாய் மொழி தெரிந்திருத்தல் அவசியம் என்ற ஆய்வுகளின் அடிப்படையிலான அறிவியல் உண்மையை கல்வியாளர்களும் குழந்தை மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரலை இந்த அரசுகள் பிரதிபலிக்கிறது. அவரவர் தாய் மொழியில் கற்க வைப்பதன் மூலம், குழந்தைகளின் மனநல வளர்ச்சியும்,பள்ளிக்கல்வியில் கற்பதில் கூர்மையும், அவர்கள் பிற மொழியினை கற்கும் திறனும் கிடைக்கப்பெறுகிறார்கள்.

ஆக, சுவீடனில் வளரும் பிற மொழிக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க அவரவர் தாய் மொழியினை கற்பது மிக முக்கியம் என கருதுவதால், பெரும் பொருளாதாரத்தை சுவீடன் அரசு செலவழிக்கிறது. அவர்களை பொறுத்தவரை, அது செலவு அல்ல! சமூக முதலீடு. தன் நாட்டில் வளரும் குழந்தைகளை, அறிவில் சிறந்தவர்களாக மாற்றுவதன் மூலம், அவர்களின் வருங்காலத்தை சுவீடனின் வளர்ச்சிக்கு உள்வாங்கிக்கொள்வார்கள்.

இப்படித்தான் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும், தன் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழி கல்வியை வழங்கி வருகிறார்கள். அதனினும் கூடுதலான, மகிழ்வான செய்தி என்னவென்றால், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலுமானவற்றில், முழுமையான தனித்துவமான தமிழ் பள்ளிக்கூடங்களே தனி மனிதர்களாலும் தனி அமைப்புகளாலும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தமிழர் அமைப்புகளாலும், அந்தந்த நாட்டு அரசின் பொருளாதார, அலுவலக ஒத்துழைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல, பல மொழியினருக்கும் அவரவர் தாய் மொழி கல்விக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் வழங்குகின்றன.

ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், கொரியா, சீனா என அனைத்து நாடுகளிலும் பள்ளிக் கல்வி முதல் கல்லூரி கல்வி, முனைவர் பட்டப் படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே கற்கும் கல்விக் கொள்கையே இருக்கிறது.

சரி, எங்கெல்லாம் தாய் மொழி இல்லாத பிற மொழி வழியிலான கல்வி இருக்கிறது? எந்தெந்த நாடுகளெல்லாம் காலனியாதிக்கத்தில் இருந்தனவோ, எந்தெந்த நாடுகளிலெல்லாம் பல மொழிகள் பேசப்படுகின்றனவோ, அங்கெல்லாம் பிற மொழி வழியிலான கல்வியே இருக்கிறது. குறிப்பாக, ஆங்கிலமோ, பிரஞ்சோ, ஸ்பானிய மொழியிலான கல்வி. அதிலும் குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளில்.

தாய் மொழி இல்லாத பிற மொழியோ, அல்லது அந்நாட்டின் ஆதிக்க மொழியோ கல்வி மொழியாக இருக்கும் நாடுகளின் குழந்தைகளின் கற்கும் திறன், கல்வி பயிலும் காலங்கள், அவர்களின் உயர்க்கல்வி வாய்ப்புகள் குறித்தான ஆய்வுகளை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மூளை, நரம்பியல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். வருகின்றனர்.

முக்கியமாக சில அடிப்படை முடிவுகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • குழந்தையின் 5-8 வயது வரையில் தாய் மொழிக் கல்வி மிக அவசியம். அதுவே, அக்குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும், சிந்தனை திறனுக்கும், செயல்திறனுக்கும் வழிவகுக்கும். எந்த மொழியோடு ஒரு குழந்தை குடும்பத்தோடும் சமூகத்தோடும் உறவாடுகிறதோ, அதுவே தாய் மொழி அல்லது முதன்மை மொழி என வரையறுக்கப்படுகிறது.
  • தாய் மொழியோடு அக்குழந்தை பிற மொழிகளையும் கற்கலாம். பல மொழிகளை ஒரு சேர கற்பதும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உகந்த செயல்பாடுதான். ஆனால், தாய் மொழியினை முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்கும் பொழுதே, பிற மொழியினை சீராக கற்கவும் முடியும், மூளை வளர்சிக்கும் உகந்ததாகவும் இருக்கும். அனைத்திற்கும் அடிப்படையே தாய் மொழிதான்.
  • முதன்மை மொழி அல்லது தாய் மொழியில் ஒரு குழந்தை முழுமையான அடிப்படை அறிவினை பெற குறைந்தது 12 ஆண்டுகள் எடுக்கும். 12 வயதிற்கு முன்பே, பிற மொழிக் கல்வி பெறும் சூழல் உருவாகும்பட்சத்தில், அக்குழந்தைக்கு முறையான, நிலையான தாய் மொழிக் கல்வியையும் பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய சூழலினாலே, அக்குழந்தை, பிறநாடுகளிலோ, பிற மொழி பிரதேசங்களிலோ வளரும்பொழுது, ஆரோக்கியமான கல்வித்திறனை பெறும்.
  • அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை பிற மொழியில் கற்க வேண்டுமாயின், குழந்தை அந்த மொழியினை தொடர்ச்சியாக 5-6 ஆண்டுகள் கற்க வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் கற்று சிறந்து விளங்க, 5 வருடங்கள் ஆங்கிலத்தை மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். அதற்கு முன்பும், இணையாகவும் தமிழை படிக்க வேண்டும். தமிழில் அறிவியல், கணிதம் இருக்க வேண்டும். ஆங்கிலம் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு துணை மொழிப்பாடமாக இருக்கலாம்.

1955 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஆங்கில வழிக் கல்வியோ அல்லது நிலத்தோடும் மக்களோடும் தொடர்பில்லாத ஆப்பிரிக்க மொழிக் கல்வியோ இருந்தது. இதே காலக்கட்டத்தில், தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபிய நாடுகளில் அனைத்து பிரதேசங்களிலும் பேசப்பட்டு வந்த ஆப்பிரிக்க மொழியே கல்வி மொழியாக இருந்தது. தாய் மொழிக் கல்வித் திட்டத்தால், பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்யும் மாணாக்கர் எண்ணிக்கை 83%மாக உயர்ந்தது. ஏனைய ஆப்பிரிக்க நாடுகள், பிற மொழிக் கல்வித் திட்டத்திற்கு செய்த செலவுகளை காட்டிலும் தென் ஆப்பிரிக்க மற்றும் நமீபியா பாதியளவு பொருளாதாரத்தையே கல்விக்கு செலவிட்டிருந்தது.

1990களில் தென் ஆப்பிரிக்க நாடு தன் கல்விக் கொள்கையாக ஆங்கில மொழியை பின்பற்றத் தொடங்கியதும், பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்யும் மாணாக்கார் வீதம் 44%ஆக குறைந்தது. தாய் மொழிக் கல்வி நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தை விட, ஆங்கில வழிக் கல்வியில் ஆங்கில மொழி கற்கும் திறனும் குறைந்திருந்தது.

2011 ஆம் ஆண்டு, நமீபியா நாட்டு அரசாங்கம் தன் நாட்டு கல்விக் கொள்கை குறித்து ஆய்வினை நடத்தியது. 1990 வரையில் 13 அப்பிரிக்க மொழிகளில் வழங்கப்பட்டு வந்த கல்வியை, ஆங்கில வழிக்கு மாற்றியது அன்றைய நமீபியா அரசாங்கம். 1990ஆம் ஆண்டுக்கு முன்பு செலவிட்ட பொருளாதாரத்தை விட 4 மடங்கு அதிகரித்து செலவிட்டது நமீபியா அரசாங்கம். 20 ஆண்டுகளுக்கு பிறகான ஆய்வில், 98% ஆசிரியர்கள் அங்கில மொழியில் புலமை பெறாதவர்களாகவும் அவர்கள் ஆங்கில வழிக் கல்வியை முன்னெடுத்து செல்ல அக்கறை அற்றவர்களாகவும் இருந்தனர். அதோடு, பள்ளித் தேர்ச்சி விகிதம் 36% வீதமாகவும் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 96% மாணவ, மாணவியர்களால் பாடங்களை கவனிக்கவோ கற்கவோ முடியவில்லை. காரணம், அம்மாநிலத்தில் 4% பேர் பேசும் இந்தி மொழியினை கல்வி மொழியாக திணித்திருக்கிறார்கள்.

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம், 22 நாடுகளில் 160 மொழிக் குழுகளிடம் செய்த கல்விக் குறித்த ஆராய்ச்சியில், பெரும் எண்ணிக்கையிலான மாணாக்கர்களின் பள்ளிக்கூட கல்வி முழுமை பெறாததற்கும் பிற மொழியினை கற்கும் திறன் இழந்த தற்கும் தாய் மொழி அல்லாத பிற மொழிக் கல்வியே காரணம் என உறுதி செய்தார்கள்.

அவர்களின், ஆய்வு முடிவுகளின் படி தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஐநாவின் அங்க அமைப்பான யுனெஸ்கோவுடன் இணைந்து பல அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி என்ற முழக்கத்துடன் 2008 முதல் களப்பணியில் இறங்கினர். அதன் முடிவுகள் எதனை தெரிவிக்கின்றன என பார்ப்போம்.

எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு ஒரே வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பெரு நாட்டில், தாய் மொழி வழியே இருமொழிக் கல்விக் கொள்கை 1952 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1972இல் வேலஸ்கோ தலைமையிலான புரட்சிகர அரசு அமைந்தபிறகுதான் அரசின் முழுமையான நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது எனலாம். 1975 ஆம் ஆண்டு, அமேசான் காட்டு பூர்வக்குடிகளின் மொழியினையும் ஆந்தீயான் பூர்வக்குடிகளின் கோயுச்சா மொழியினையும் முதன்முறையாக தேசத்தினுள் பேசப்படும் மொழியாக அறிவித்தார். 1994 இல் தாய்மொழிக் கல்விக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட்டதைத் தொடார்ந்து ஸ்பானிய மொழி மட்டுமே கற்று வந்த பெரு நாட்டு பூர்வக்குடிகள் அவரவர் தாய் மொழிக் கல்வியினை பள்ளி முதன் நிலை வகுப்புகளிலும், பள்ளி உயர்வகுப்புகளில் தாய் மொழியோடு ஸ்பானிய மொழியையும் கற்று சிறந்து விளங்குகின்றனர்.

கோத்தமாலா நாட்டில், தாய் மொழி வழியே இரு மொழிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. 15% மக்கள் தொகையினை இத்திட்டம் உள்ளடக்கியது. ஏனைய பள்ளிக்கூடங்களை ஒப்பிடும்பொழுது, இப்பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது, கல்வி இடை நிறுத்தமும் வெகுவாக குறைந்தது. தாய் மொழி வழியிலான இரு மொழிக் கல்வித் திட்டத்திற்கு கோத்தமாலா நாடு மாறிய பொழுது பெரும் பொருளாதரத்தை கல்விக்கு ஒதுக்கினாலும், காலப்போக்கில் அந்நாடு, 5.6 மில்லியன் அமெரிக்கன் டாலரை வருடந்தோறும் சேமிக்கத் தொடங்கியது.

பாப்பூ நியூ கினியா என்னும் நாட்டில் உள்ள 800 மொழியில் 450 மொழியினை கல்வி மொழியாக அந்நாடு பின்பற்றுகிறது. அனைத்து மொழிக்குமான பாடத்திட்டம் கணினி மையப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரும் பொருளாதாரத்தை அந்நாடு மிச்சப்படுத்துகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுபுவோகன் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக, 2002 ஆண்டு, தாய் மொழி வழியே இரு மொழிக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து, வெற்றிகரமாக கருதப்படுவதால், அனைத்து பூர்வக்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்க, 2012 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கொள்கை முடிவாக எடுத்தது. இதன் வழியே, பள்ளிக் கல்வியின் முதல் மூன்றாம் ஆண்டு, அவரவர் தாய் மொழியிலும், அதன்பின்னர், ஆங்கிலமும் துணைப்பாட மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

சீனா நாடும் இந்தியா போன்று பல்வேறு மாநிலங்களும் பல்வேறு மொழிகளும் கொண்ட நாடுதான். ஆனால், அனைத்து மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தையும் எழுத்து நடைகளையும் கொண்டவை. இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழியில் பள்ளியின் 5 ஆண்டுகள் கல்வியும், பிறகு மாண்டரின் மொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளது.

மேற்கூறிய செய்திகள் வழியே, தாய் மொழிக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதனையும், பிற மொழியில் சிறந்து விளங்கவும் கூட தாய் மொழி வழி கற்றலே சரியானது என்றும் புரிந்திருக்கும்.

இத்தலைப்பில் தொடர்புடைய பிற கட்டுரைகள்:

தமிழர்களின் பல்லாயிர கால வரலாற்றில் தமிழின் போராட்டம் – சமூகத்திலும் கல்வியிலும்!

தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்

`நீட்’ – தகுதித்தேர்வா? தரப்படுத்துதலா? சர்வதேச நாடுகளில் நுழைவுத் தேர்வு உண்டா?

கல்வித்தடுமாற்றங்கள் – தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும்

தரவுகள்:

 

12 thoughts on “உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: