அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!

மொழி வழி மாநிலங்கள் உருவாக்க காங்கிரஸ் முதலில் தயங்கிய போதும், அதன் சாத்தியக்கூறுகள், பலவீனங்கள் குறித்து ஆராய அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் அமைக்கப்பட்ட தார் குழுவிற்கு (Dar Commission), 1948 அக்டோபர் மாதம் அண்ணல் அம்பேத்கார் வழங்கிய பரிந்துரையில், மொழி வழி மாநிலங்களின் தேவையை ஆதரித்ததோடு, அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கார் பரிந்துரைத்திருந்தார். (ஆதாரம்: http://www.allsubjectjournal.com/download/2609/3-3-113-456.pdf)

அண்ணல் அம்பேத்காரை பொறுத்தவரை, “ஒரு மொழி, ஒரு பண்பாடு கொண்ட மாநில அரசுகளால்தான் சிறப்பானதொரு நிர்வாகத்தை தன்னுள் கொண்டுவர முடியும். அதுவே இந்திய ஒன்றியத்தின் கூட்டுப்பலமாக இருக்கும்” எனக் கருதினார். மாகாணங்களின் எல்லைகள் இணைந்த ஒருங்கிணைவை விட இந்தியத் துணைக்கண்டத்தினுள் இருக்க வேண்டிய ஒற்றுமையே தனது முதன்மையான கொள்கையாக அண்ணல் அம்பேத்கார் எடுத்துரைத்துவந்துள்ளார்.

அவர் மேலும், மொழிக்கு ஒரு மாநிலம் என்பதைக் காட்டிலும், மாநிலத்திற்கு ஒரு மொழி என பிரிக்கப்பட்டு மாநில அரசுகள் அமைவதை விரும்பினார். அதாவது, பல மாநிலங்கள் ஒரே மொழியை கொண்டிருத்தலும் தவறில்லை. இன்றைய ஆந்திரா, தெலுங்கானா போல.

17 டிசம்பர் 1946ஆம் ஆண்டு, இந்திய அரசியல் நிர்ணயச் சபையில் தன் முதன் உரையில் அண்ணல் அம்பேத்கர், “வலுவான மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதிலும், அதேவேளை, முழுமையான இறையாண்மை உள்ள மாநில அரசுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றும் ஆணித்தரமாக விளக்கப்படுத்தினார்.

மேலும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் வலுவான அரசியலுக்கும் கெடுதல் விளைவிக்கும் சூழலில் மட்டுமே இந்திய மத்திய அரசு மாநில அரசுகளின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஏனைய தருணங்களில், மாநில அரசுகளின் இறையாண்மையிலும் அரசியல் அதிகாரங்களிலும் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டியதில்லை என்பதிலும் அம்பேத்கார் தெளிவாக இருந்துள்ளார். (ஆதாரம்: http://www.indiafoundation.in/revisiting-ambedkars-idea-of-nationalism/)

Architect of Life Dr. Babasaheb Ambedkar Wallpaper HD Quotes Jay Bhim Jai Bhim Buddhambedkar

இந்த எண்ணங்களையும் தத்துவங்களையும் வைத்தே அவர் இந்திய சுதந்திரத்திற்கு பிறகான அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளின் அதிகார எல்லைகளையும் அதன் முழு சுதந்திரத்தை பேணி காக்கும் இறையாண்மையையும் வகைப்படுத்தினார்.

அண்ணலை பொறுத்தவரை, இந்திய நிலப்பரப்பு எங்குமுள்ள, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்குத் தேவையான கல்வி, பொருளாதார மேம்பாடு, இவையனைத்தையும் பாதுகாக்கும் சமூக நீதி இவையே தேசத்தை (Nation) ஒற்றுமைப்படுத்தும், தேசியத்தை (Nationalism)  வளர்த்தெடுக்கும். இவையல்லாத, எதுவும் தேசமும் அல்ல, தேசியமும் அல்ல என்பது அவர் நிலைப்பாடு. (ஆதாரம்: http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/143134/10/08_chapter%203.pdf)

அண்ணல் அம்பேத்காரை பொறுத்தவரை, இந்திய நிலப்பரப்பு எங்கும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்குமான சமூக நீதியை உருவாக்கும் ஒற்றைக் காரணியாகவே, இந்திய நிலப்பரப்பு அரசுகளின் ஒருங்கிணைந்த இந்திய தேசியமாகவே (Nationalism) பார்த்துள்ளார். அதானாலேயே, அனைத்து தேசங்களும் இந்தியத் துணைக்கண்டமாக ஒருங்கிணைய அவர் விரும்பியுள்ளார்.

இதன் பார்வையில் இருந்தே இந்திய மத்திய அரசு, மாநில அரசுகள், அதன் உரிமைகள், மத்திய-மாநில அதிகார பகிர்வு என தனது பங்களிப்பில் உருவான அரசியல் சாசனத்தை அண்ணல் அம்பேத்கார் வகைக்கடுத்தினார்.

1970களில் இந்திரா அம்மையாரின் ஆட்சியில் அவசரகால நிலையில் (Emergency Situation) அண்ணல் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த பல உரிமைகள் மத்திய-மாநிலப் பொதுப்பட்டியலுக்கு சென்றுவிட்ட நிலையில், இந்தியத் துணைக்கண்டத்தை ஆளும் இன்றைய பாஜக அரசாங்கம், மாநில அரசுகளுக்கான உரிமையை முழுமையாகவே மத்திய பட்டியலுக்கு பறித்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட விளைவுகளிலேயே மிகக் கொடுமையானது கல்வித் துறையை இந்துத்துவமயமாக்கும் புதிய கல்விக் கொள்கை. கல்வித் துறை பொதுப்பட்டியலில் இருப்பதாலேயே, பாஜக அரசாங்கம், தனது இந்துத்துவ சித்தாந்தத்தை திணிக்கும் புதிய கல்வி முறையை, `புதிய கல்விக் கொள்கை`  என்ற பெயரில் இந்திய நிலப்பரப்பு எங்கும் செயல்படுத்தத் துடிக்கிறது. அதன் ஒரு அங்கமே `நீட்` போன்ற கொடியத் தேர்வு. புதிய கல்விக் கொள்கை அதன் உள் அங்கமான `நீட்`, வருங்காலத்தில் உலக வர்த்தக மையத்தோடு இந்திய அரசாங்கம் கையெழுத்திட இருக்கிற, `கல்வியை வர்த்தக`மாக்கும் ஒப்பந்தம் இவை யாவுமே அண்ணல் அம்பேத்காரின் சிந்தனைக்கு எதிரான, சமூக நீதியை குழித் தோண்டி புதைக்கும் பேராபத்துள்ள திட்டங்கள்.

அண்ணல் அம்பேத்கார், சமத்துவ சமூகத்தை கல்வியின் மூலமே கட்டமைக்க முடியும் என்று திடமாக நம்பினார். கல்வியே, சமூக பொருளாதார மேம்பாட்டையும் அரசியல் சுதந்திரத்தையும் பெற்றுத் தரும் பேராயுதம் என்பது அவரின் தொலைநோக்குப் பார்வை. அதனாலேயே கல்வி அனைவருக்கும் பொதுவாவும் பரவலாகவும் சென்றடைய விரும்பினார். (ஆதாரம்: https://www.researchgate.net/publication/322695770_DrBR_Ambedkar’s_views_on_Education).  நீட் தேர்வு,  அண்ணல் அம்பேத்காரின் கனவையே சிதைக்கும் பாஜகவின் பாசிச ஆயுதம் என்பதை நினைவுல் கொள்ள வேண்டும்.

“சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யாமல், வெறுமனே அரசியல் சுதந்திரத்தை இந்திய நிலப்பரப்பில் பிரித்தானிய அரசு வழங்கு முன்வருவது முற்றிலும் தவறானது” என்று 1940இல் அண்ணல் அம்பேத்கார் கருத்து தெரிவித்திருந்தார். (ஆதாரம்: The Times of India : March 21 1940 )

download

இந்த கண்ணோட்டத்தில் இருந்துதான், மாநில அரசுகளுக்கான அரசியல் மற்றும் பொருளாதார இறையாண்மையை நிலைநிறுத்தி இந்திய அரசியல் சாசனத்தை வகைப்படுத்துகிறார்.

2016 ஜீலையில், ஜெயலலிதா அம்மையார் தமிழக முதல்வராய் இருந்த பொழுது, இந்திய மத்திய அரசு திணிக்க முற்பட்ட, அவரது மறைவிற்கு பிறகு சதி செய்து தமிழகத்தில் திணித்த, சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பான சட்டத்தை எதிர்த்து இந்திய ஒன்றிய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “மாநில அரசின் பொருளாதார இறையாண்மையை முழுமையாக பறித்துவிடும். மேலும், இந்திய அரசியல் சாசனம் வழங்கிய மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தை முழுமையாக இல்லாதொழித்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். (ஆதாரம்: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/here-is-why-tamil-nadu-cm-jayalalithaa-does-not-want-gst/articleshow/52774195.cms)

சரக்கு மற்றும் சேவை வரி மாநில உரிமைகளில் தலையிடுவதோடு, மாநில அதிகார எல்லையில் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில் வர்த்தகத்தை முடக்கி, பெரு வணிகர்களை மட்டுமே வளர்த்தெடுக்கும். அது, ரிலையன்ஸ், அதானி போன்ற ஒற்றை நிறுவனங்களை ஊக்குவிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்வு போல, இதுவும் ஒரே நாடு ஒரே பொருளாதாரத்தில் முடியும்.

இதுமட்டுமா? பாஜகவின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுமே அண்ணல் உருவாக்கிய அரசியல் சாசனத்திற்கு எதிரானவையே! ஒவ்வ்வொன்றாக பார்ப்போம்!.

பாஜக ஆட்சி 2014ஆம் ஆண்டு மத்தியில் அமைந்தது முதல், மாநில ஆளுநர்களை தங்கள் கருவியாக பயன்படுத்தி மாநிலத்தின் எல்லா அதிகாரங்களிலும் தலையிட்டு வருகிறது. கோவா, மணிப்பூர், மேகாலையா, கருநாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆட்சியை சீர்குலைக்கவும், ஆட்சியைக் கைப்பற்றவும் கூட மாநில ஆளுநர்களை பயன்படுத்தியது. இதில் கருநாடாகவில் மட்டுமே பாஜகவிற்கு தர்ம அடி கிடைத்தது எனலாம். இவை அனைத்துமே அரசியல் சாசனம் வழங்கிய மாநில அதிகாரத்திற்கு எதிராக நகர்த்தப்படும் அரசியல் வேலைகளே!

டெல்லியின் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் அரசாங்கம், அதிகரித்து வந்த டெல்லி ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், “மக்களாட்சியில் மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிட முடியாது என்றும் இந்திய நாட்டை உடன்பாட்டுடன் கூடிய கூட்டாட்சி (Collaborative Federalism) நாடு எனவும்” உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

1948இல், சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் மெஹபூப் அலி நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது, “அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்ட ஒரு பதவி மோகக் கட்சி சுலபத்தில் நமது கூட்டாட்சி (federal system) முறையிலான இந்திய ஒன்றிய அரசை, ஒரு `ஓர் உறுப்பு அரசு – Unitary Government’ என்று சொல்லக்கூடும். அது வருங்காலத்தில் நமது அரசை பாசிச-சர்வாதிகார அரசாகவும் மாற்றிவிடும் ஆபத்து இருக்கிறது” என எச்சரித்திருந்தார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு மாநிலமாக அவர்களின் கட்சியின் அரசியல்/ஆட்சியின் செல்வாக்கை தேர்தல் மூலமாகவோ ஜனநாயகமற்ற ஏனைய வழிகளிலோ (உதாரணம் தமிழ்நாடு) விரிவுப்படுத்தி வருகின்றனர். அவர்களின் தொலைநோக்காக, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற கொள்கையை அடிப்படையாக வைத்தே இம்மாதிரியான அரசியலை மேற்கொள்கின்றனர். இதனைத்தான் மெஹ்பூப் அலி எச்சரிந்தார்.

இந்திய நிலப்பரப்பை ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே மதம், என அரசியல் பார்வையினைக் கொண்டிருப்பதால்தான், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே ஆட்சி என தொடர்ந்து தனது கடும்போக்கு பாசிசக் குணத்தை செயல்படுத்தி வருகிறது பாஜக அரசாங்கம்.

நாம் இவை அனைத்தையும் எதிர்கொள்ள, ஒரே குரலாய் ஒலிப்போம்: “1970களில் அவசரகால நிலைக்கு முன் இருந்த இந்திய அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து உரிமைகளையும் அப்படியே மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்”. இதுவே அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செய்யும் மரியாதை!

இந்திய ஒருமைப்பாட்டையும், இந்திய நில அமைப்பையும் சமூக நீதியையும் அண்ணல் அம்பேத்காரின் பார்வையில் இருந்து பார்ப்போம்!

5 thoughts on “அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!

Add yours

  1. அவசியமான கட்டுரை . ஒற்றை அதிகாரத்தை ஒரு சில மாநிலக் கட்சிகள் மட்டுமே எதிர்க்கின்றன. திமுக மத்தியில் கூட்டணி
    ஆட் சிக்கும் அமைச்சர் பதவிக்கும் காட்டிய அக்கறையை கூட்டாட்சி உரிமைக்கு (மாநில உரிமைக்கு) காட்டவில்லை. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்பது மத்தியில் கூட்டுக் கொள்ளை, மாநிலத்தில் தனிக் கொள்ளை என்றாகிவிட்டது. காங்கிரஸ், பா.ஜ.க போன்ற அகில இந்தியக் கட்சிகளே பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்ததும் இருப்பதும் மாநில உரிமைகள் மங்கிப்போகக் காரணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: