கலைஞரும் நானும்! வெறுப்பு முதல் நேசம் வரை!

(என் முகநூல் பக்கத்தில், கலைஞர் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு எழுதியது)

எனக்கு அரசியல் விவரம் தெரிந்த வயதில் இருந்து நான் வைகோவின் ஆதரவாளன். அது என் தந்தையால் நிகழ்ந்த அரசியல் பார்வை.

2001இல் மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்டபொழுதும், 2006இல் மதிமுக வெளியேறிய பொழுதும் கூட திமுகவின் எதிரி நான். கலைஞர் கருணாநிதியின் எதிரி நான்.

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வேலூர் சிறையில், அவர் வைகோவைச் சென்று பார்த்தது முதல், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வரை அனைத்தும் அவரின் தேவைக்காக நடந்த நாடகம் என நம்பினேன்.

வெறுப்பின் ஊடே அவரது அரசியலையும் அவரையும் பார்த்து வந்த பொழுதும் 2006இல் அதிமுக-மதிமுக கூட்டணி தோற்று திமுக கூட்டணி வென்றதை மகிழ்வோடே பார்த்தேன். அதிமுக ஆட்சிக்கு வருவதைவிட திமுக ஆட்சிக்கு வருவது தமிழகத்துக்கு நன்மை என்று நம்பியிருந்தேன். அதனைவிட, கலைஞரா? ஜெயலலிதா அம்மையாரா? என்றால் கலைஞர் மேல் என்ற புரிதல். காரணம், திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்தவன் என்பதால்.  ஆனாலும் கருணாநிதி என்ற மனிதரை நான் அப்பொழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது வேறு கதை.

images

2007இல் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அவர் இரங்கல் கவிதை வாசித்தப் பொழுதும் நடிப்பென்றே சொல்லித் திரிந்தேன்.

2007இல் அன்றைய மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.க. தலைவர் வீரமணியின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு மலரில், என் தந்தை சேலம் அசோகனும் ஆ.ராசா அவர்களும் இணைந்தே தொடக்கக் காலத்தில் தி.க. தலைவரின் கூட்டங்களுக்கு சென்றனர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, என் தந்தை பற்றி கேள்விப்பட்டதோடு, அன்றைய காலத்தில், மதிமுகவில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவராகவும் இருந்ததால், திமுகவில் இணைய தூது வந்தது.

கலைஞர் வெறுப்பில் இருந்த நான், என் தந்தையின் முடிவைத் தடுத்தேன். மதிமுகவில் இருப்பது மட்டுமே திராவிட இயக்கத்தைக் காக்கவும் மக்களுக்காக பணியாற்றவும் முடியும் என்று நம்பியதால் எடுத்த முடிவது.

2008-2009 ஈழப்போரின் உச்சத்தில் அவர் தமிழக முதல்வராய் இருந்த பொழுது, தமிழகத்தில் அவர் நடத்திய `இந்தியாவிற்கான` நாடகம் இன்னும் கோபம் ஏற்றியது எனலாம். அன்றைய காலக்கட்டத்தில் அவர் பெயரைக் கேட்டாலே வார்த்தைகளால் சபித்துத் தெறிப்பேன். இன்றளவும் அவர் எங்களோடு நிற்காமல், `இந்திய`சொல்லுக்கு கட்டுண்டு நின்றார் என்ற விமர்சனம் என்னில் உண்டுதான்.

திமுகவின் எதிரியாய் நின்ற பொழுதும் 2012 டெசோ மாநாட்டிற்கான சில பணிகளின் பங்கெடுக்க கே.எஸ்.இராதகிருஸ்ணன் ஐயா என்னிடம் கேட்டபொழுது, எதனைப்பற்றியும் கவலைப்படாமல் உதவுவது என முடிவெடுத்தேன். இதை எழுதும் நொடி வரை நான் அக்குழுவில் பணியாற்றியது ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. என் நோக்கம் என் தனிமனித வாழ்விற்கானது இல்லை என்பதால் அதில் நான் விளம்பரம் தேடவில்லை.

ஐயா கே.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களோடு இணைந்து மாநாட்டிற்கு அயல்நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட வேண்டிய தமிழர்கள், தமிழர்கள் அல்லாத சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியலை நோர்வேயில் இருந்தபடியே தயாரிக்க உதவியதோடு, அதற்கான ஏற்பாடுகளையும் அலைப்பேசி வாயிலாகவே கவனித்தேன். அம்மாநாட்டிற்கு நானும் அழைக்கப்பட்டேன். ஆனால், கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும், ஐயா கே.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூலம் என்னிடம் கலைஞர் பேசினார். என் வேலைகளுக்கு நன்றியும் சொன்னார். அக மகிழ்ந்த தருணம். என் வாழ்வில் பொன்னான நொடிகளில் அதுவும் ஒன்று. பார்க்கத்தான் முடியவில்லை, ஆனால், அவருடன் பேசியிருக்கிறேன். ஒரு சிறியவனின் சிறிய உழைப்பிற்கும் அங்கீகாரம் கொடுத்து நன்றி சொல்லும் அந்த உள்ளம் உண்மையில் வியக்கத்தக்கதாய் உணர்ந்தேன்.

ஆனாலும், தனிப்பட்ட வியப்புதானே தவிர, டெசோவிற்கு வேலை செய்வதிலும் எனக்கு ஒரு தனிப்பட்ட அரசியல் இருந்தது. அவரை தொடர்ந்தும் வெறுப்பதிலும் என் தனிப்பட்ட அரசியல் பார்வை இருந்தது.

வெறுப்பதற்கு, எல்லா காரணங்களும் மறைந்து ஈழம் என்ற காரணம் முதன்மையாய் இருந்த தருணங்கள் அவை.

2009இல் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அரசியலில் ஒரு பங்களனாய் இருந்த தருணங்களில், 2009இல் போரில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டாலும், அரசியல் வெளி, அதுவும் சர்வதேச அரசியல் வெளியில் பலம் வாய்ந்த நிலையிலேயே ஈழ அரசியல் இருந்தது என்பதை உறுதியாகவே சொல்வேன். அமெரிக்கா, நோர்வே, ஜெர்மன், ஐக்கிய அரசாட்சி (UK) என பல சர்வதேச நாடுகளின் சதி, ஈழத்தமிழ் அமைப்பு பிரதிநிதிகளின் அனுபவமின்மை, துரோகம், சதி, ஐரோப்பிய மண்ணில் 2009ற்கு பிறகு புலிகள் என்ற பெயரில் வந்திறங்கிய துரோகிகள், இந்திய-சிங்கள கைக்கூலிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் துரோகங்கள் என பலவற்றையும் பலரின் துரோகங்களையும் எல்லாம் பார்த்தப் பின் கலைஞரின் மீதான கோபம் பெரிதாக மனதளவில் இல்லாது போனது.

தமிழகப் பார்வையில் பார்த்தாலும், 2009ற்கு பிறகு தமிழகத் தலைவர்கள், கட்சியினர் ஈழத்துக்கு செய்த துரோகங்களை ஒப்பிடும்பொழுது 2009இல் கலைஞரின் மீதான கோபத்தை விட பன்மடங்கு ஏனையவர்கள் மீது 2018இல் இருக்கிறது. விரிவாகவே பேச முடியும்!

சரி, ஆனாலும் திராவிட இயக்கப் பார்வையிலும் மதிமுகவின் ஆதரவாளன் என்ற பார்வையிலும் கலைஞரை 2016 வரை ஏற்றுக்கொள்ளவில்லைதான்.

2015இல் திராவிட இயக்க வீழ்ச்சியில் கலைஞரின் பங்கு எது என அறிய, தமிழகத்தில் பலரை சந்தித்தேன், வரலாறுகளை தேடி பின்னோக்கி படிக்கத் தொடங்கினேன், 2016இல் ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், அறிவுசார் வட்டம், வழக்கறிஞர்கள் என பலரது கலைஞர் விசுவாசத்தின் காரணம் அறிய முற்பட்டபொழுதும், Whatsapp- பகிரியில் தோழமை என்னும் குழுவில் நடந்த தொடர் விவாதங்கள், தொடர் சண்டைகளுக்கு பிறகு, குறிப்பாக அண்ணன் ரத்ன.செந்தில்குமார் என்னுடன் தனிப்பட்ட முறையில் நிகழ்த்திய உரையாடல் மற்றும் விவாதங்களிற்கு பிறகு திமுகவின் அனுதாபியாக மாறினேன் என்பதுதான் உண்மை.

தெற்கில் இருந்து சூரியன் புத்தகத்தைப் படித்த பிறகு இன்னும் இன்னும் கோவம் குறைந்தத் எனலாம். .

2017 திருவாரூரில் நடந்த ஆசிரியர்களுக்கான விழா ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டபொழுதுதான், முதன் முதலாக ‘கலைஞர்’ என்ற வார்த்தையை மேடையில் உச்சரித்தேன். இல்லையில்லை, என் வாழ்நாளில் முதன்முதல் உச்சரித்தேன்.

அதிலிருந்து உச்சரிக்கத் தொடங்கினேன். இன்னும் கூட உச்சரிப்பேன்.

கலைஞரை முரண்படாமல் ஏற்றுக்கொண்டேனா என்றால், நிச்சயமாக இல்லை. அவரிடம் முரண்பட இன்றும் ஏராளம் உண்டு. அவரை விமர்சிக்க இன்றும் நிறைய காரணங்கள் உண்டு. அவரை கேள்விக் கேட்க இன்றும் நிறைய கேள்விகள் உண்டு. அவரை குற்றம் சொல்ல இன்றும் வரலாற்று சுவடுகளில் தடம் அப்படியே உள்ளது. ஆனாலும், அவரைப் புறக்கணிக்க முடியாது. அவரிடம் இருந்து விலக முடியாது.

உரக்கச் சொல்வதில் எவ்வித தயக்கமும் இல்லை. நான் அடிப்படையில் திராவிட இயக்கத்துக்காரன் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: