தமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்!

அயல்நாடுகளில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சில நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இணையத்தில் கிடைக்கும் ஒரு வரிச் செய்தியினை ஆதாரமாக எடுத்து பேசி வருகிறார்கள். நோர்வே நாட்டில் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர்கள் என்ற முறையில் எனது (எங்களது) அனுபவத்தோடு சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

7th-Month-Pregnancy-healthy-foods

பெண் வயிற்றில் கரு உண்டானது முதல் நாம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் முதல் நிலை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது இரண்டு நாட்கள், கரு வளர்ச்சி தொடர்பாக குழந்தைகள் நல சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர் பரிசோதனை செய்வார். ஆலோசனைகளை வழங்குவார். பெண்ணின் உடல் வலிமை, ஹீமோகுளோபின் நிலை, இரும்புத் சத்து, சக்கரை உட்பட அனைத்தும் அவ்வ்ப்பொழுது தொடர்ந்து கண்காணிக்கப்படும். மூன்று மாதங்களில் ஒருமுறை, கட்டாயமாக குழந்தை நல மருத்துவர் பெண்ணின் உடலை பரிசோதிப்பார். அதே போன்று மாதம் ஒரு முறை குடும்ப மருத்துவரும் தனியே பரிசோதித்திருக்க வேண்டும்.

கரு வளர்ந்த ஐந்து மாதம் கழித்து, தந்தையுடன் குழந்தை நல செவிலியரை சந்திக்க வேண்டும். பெண்ணின் உடல்நிலை மாற்றம்,மனநிலை மாற்றம், ஆண் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

இதற்கு இடையில், தலைமை மருத்துவமனையில், ஊடொலி அலகிடல் (ultrasound scanning) கொண்டு, குழந்தை வளர்ச்சிக் குறித்து பரிசோதிக்கப்படும். இந்த எல்லா முடிவுகளும், முதன் நிலை சுகாதார நிலைய குழந்தை நல செவிலியர், மருத்துவர், குடும்ப மருத்துவர் என அனைவரும் இணைய வழி மென்பொருள் வழியே தெரிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆலோசனை, பரிசோதனை நேரங்களிலும் இவையனைத்தையும் இவர்கள் முன்கூட்டியே பார்த்துவிடுவார்கள். அதனை வைத்துத்தான் ஆண், பெண்ணிடம் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவார்கள்.

இப்படியாக, ஒவ்வொரு கரு நிலையும் பெண்ணின் உடல் நிலையும் என அனைத்தும் பரிசோதிக்கப்படும். பெரும்பாலும் இயல்பான பிரசவத்தை நோக்கித்தான் அனைத்தும் திட்டமிடுவார்கள்.இங்கிலாந்தில் வீட்டுப் பிரசவத்தை ஒரு பெண் தேர்ந்தெடுக்கலாம் என்றாலும் அதற்கு முன் இப்படியான முழுமையான பரிசோதனை செய்யப்பட்டிருக்கும். அரசின் மருத்துவமனை ஆவணத்தில் மருத்துவர் இவையனைத்திற்கும் ஒப்புதல் அளித்திருப்பார். குடும்ப மருத்துவர் இதனை ஏற்றிருப்பார். வீட்டுப் பிரசவமே எனினும் அரசு மருத்துவமனை செவிலியர் வீட்டிற்கு கட்டாயமாக வந்திருக்க வேண்டும் எனவும் நினைக்கிறேன்(இங்கிலாந்தைப் பொறுத்தவரை).

நோர்வேயில் எங்கள் இரு குழந்தைகள் பிறந்த பொழுது, மருத்துவ அறையில், என் மனைவியோடு இள வயது செவிலியரும் நானும் மட்டுமே இருந்தோம். எவ்வித மருத்துவக் கருவிகளும் இல்லாமல் மிக இயல்பாக இயற்கையான முறையிலேயே இரு குழந்தைகளும் பிறந்தனர்.

நம் ஊரிலும், கிராமப் புறங்களில் வீட்டிலேயே காலங்காலமாக பிரசவம் செய்யப்பட்டு வந்தனதான். பிறகு, கிராமந்தோறும் மருத்துவமனை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடத்தப்பட்டு, மருத்துவமனை அருகிலேயே செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கும் வீடுகளும் கொடுக்கப்பட்டது. வீட்டுத் திட்டம் இல்லாத காலங்களிலும் கூட அரசு மருத்துவமனை செவிலியர் அதே ஊரில் கட்டாயமாக தங்கியிருக்க வேண்டும். பிரசவ காலம் முதலான அவசர காலங்களில் அரசு மருத்துவமனை செவிலியர் அவரவர் இல்லங்களுக்கு சென்று பிரசவம் பார்த்து வருவார்.

என் தாய், தர்மபுரி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தில் அரசு மருத்துவமனை செவிலியராக இருந்தவர். அக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாருக்கு பிரசவ காலம் என அத்தனையும் அத்துபடியாக வைத்திரிந்தார். அக்காலங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து கிராமத்திலேயே தங்கியிருப்பார். இரவு பகலென பாராமல் அவரவர் இல்லம் தேடி பிரசவம் பார்த்து வருவார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு முறையான பரிசோதனைக்கு வந்தவர்கள். அதனால் அவரவர் உடல் நிலையின் அப்போதையச் சூழல் அவருக்கு தெரியும். மேலும், மருத்துவக் குறிப்புகள் எழுத்து வடிவில் முறையாக பதிவு செய்து அரசு மருத்துவமனைகளில் இருக்கும்.

தனியார் மருத்துவமனைகள் பெருகிய பிறகே, அதுவும் நகர்ப்புறங்களிலேயே எல்லோரும் தனியார் மருத்துவமனை நோக்கி ஓடத் தொடங்கி அவர்களிம் பணத்தை பறிகொடுக்கத் தொடங்கினர். எல்லாப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனை இருக்க தனியாரை தேடிச் சென்று பழகிவிட்டு, இன்று அரசு மருத்துமனை நோக்கி வர இவர்களால் முடியவில்லை.

அரசு மருத்துவமனையும் அரசு பள்ளிக்கூடமும் பொருளாதாரத்திலும் சாதியிலும் பின் தங்கியவர்களுக்கானது என்ற மேட்டிமைத்தனமே இவர்களை அரசு மருத்துவமனைக்கு வரத் தடுக்கிறது.

அதனால், உயிரைக்கூட துச்சமாக எண்ணி வீட்டிலேயே பிரசவம் பார்க்கத் துணிகின்றனர். அதுவும் மருத்துவர் அல்லாதவர்களின் ஆலோசனையும் பயிற்சியும் கொண்டு. இதில்தான் முரண்படுகிறோம்.

காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளுக்கு நாம் இன்றும் வீட்டு வைத்தியமே பார்த்து வருகிறோம். சித்த மருத்துவர்களின் வளர்ச்சியால் பல நோய்களுக்கு வீட்டிலேயே நம் பழைய வைத்திய முறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம். ஆனாலும் தொடர் நோய் தொடர் சுகமின்மைக்கு நேரடியாக மருத்துவரையோ மருத்துவமனையோ நாடி வருகிறோம்.

சித்த மருத்துவர்கள் அரசினது கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, அரசின் அங்கீகாரத்தோடு இயங்கி வருகிறார்கள். இயற்கைக்கு திரும்பும் மனமாற்றம் நிகழும் சூழலில் சித்த மருத்துவம் ஹோமியோபதி, தொடு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவமுறைகள் வளர்ந்து வருகிறது.

மேற்கூறியவைகளும் குழந்தை பிறப்பும் ஒன்றல்ல. குழந்தை என்பது தனி உயிர். அது கருவில் உருவாகத் தொடங்கியது முதல் அதற்கென்று சில மனித உரிமைச் சட்டங்கள் பொருந்துகிறது. பல நாடுகளைப் பொறுத்தவரை, அக்குழந்தை அரசின் சொத்து, அதனாலேயே குழந்தைகளை அடிப்பது, முறையாக பராமரிக்காமல் வளர்ப்பது போன்றவை கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நவீன மருத்துவனைகளில் சிகிச்சையின் பொழுது மரணங்கள் ஏற்படுகிறது. தவறான அணுகுமுறைகள் உண்டு. அதீதி செலவுகளும் தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளும் நிகழ்வதுண்டு. பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதாரப் பசிக்கு பலர் இறையாவது உண்டு. அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளும் தனியார் மருத்துவமனைக்கு எதிரான கடும் கட்டுப்பாடுகளும் அவசியம் தேவை. அதற்கு மாற்று என பரிந்துரைப்பதும் வளர்த்தெடுப்பதும் அரசின் கடமை. நாம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் நாமே அனைத்தையும் தனியே செய்யப் பழகுவது பேராபத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: