உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

(இக்கட்டுரை பூவுலகு மாத இதழுக்காக எழுதபட்டது. ஆகஸ்து மாத அச்சு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

உலகம் ஒரே ஆண்டில் கடும் குளிரையும் கடும் வெப்பத்தையும் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ், சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவையும் தொடர்ச்சியான கடும் குளிரையும் கொடுத்தது. அடுத்த மூன்று மாதங்களில் இதே நாடுகள் கடுமையான வெப்ப அலையை சந்தித்து வருகிறது.

காலநிலையியல் அளவுகோலின் படி, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், தொடர்ச்சியான மூன்று அதி உயர் வெப்ப நாட்கள் `வெப்ப அலை` எனப்படுகிறது.

இவையனைத்திற்குமான அடிப்படை காரணமாக, தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன், கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் மீத்தேன் வெளியேற்றங்களே என வரையறுக்கப்பட்டுள்ளது.

குளிர் காலமும் ஆர்டிக் பகுதியும்:

வெப்ப அலையின் தாக்கத்திற்கு எப்படி ஆர்டிக் பகுதியின் வெப்ப மண்டலம் காரணமோ, அதேபோலதான் ஐரோப்பிய நாடுகளின் கடும் குளிருக்கும் ஆர்டிக் பகுதியின் சூழலியல் மாற்றமே காரணம்.

காலநிலை சுழற்சியின் காரணமாக, ஆர்டிக் பகுதி தெற்கே அனுப்பும் வெப்ப காற்றும், பூமத்திய ரேகை பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் குளிர் காற்றும் மோதி, நிலையற்ற வகமாக காற்றடையை  (Jet stream) உருவாக்குகிறது. குளிர் காலங்களில் உருவாகும் மூச்சோட்ட (Air stream) மோதுகை இடைவெளி அதீத குளிர் காற்றை உருவாக்கும். பூமியின் சுழற்சியால் அது கிழக்கு ஐரோப்பியப் பகுதிக்கு நகர்ந்துவிடும். சைபீரியா, ஜார்ஜீயா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இவ்வாண்டு கடும் குளிர் உருவானதற்கு இதுவே காரணம்.

478628B900000578-5206333-Climate_scientists_say_killer_heat_waves_will_become_increasingl-a-29_1513957247623

நோர்டிக் வெப்ப அலை உருவானது ஏன்?:

ஆர்டிக் பெருங்கடலில் உருவான அதீத வெப்ப மண்டலமே நோர்டிக் நாடுகளில் உருவான வெப்பத்திற்கு முழு காரணம் என அறியப்படுகிறது. ஐரோப்பிய வடப்பகுதிகளில், காற்றை நகர்த்தும் வகமான காற்றாடை (Jet stream), ஆர்டிக் பெருங்கடல் வெப்ப மண்டலத்தால், மே மாத்ததிற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் ஜீலை மாதம் கடந்து சில வாரங்களுக்கு தொடர்ந்தது.

ஆர்டிக் பகுதிகளுக்கு தெற்கே உருவாகும் குளிர் காற்றும் பூமத்திய பகுதிகளில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் வெப்ப காற்றும் மோதும் பொழுதே, நகர்த்தும் வகமான காற்றாடை (Jet stream) உருவாகும். இவ்விரண்டு மூச்சோட்டங்களில் (Air stream) பொதுவாக இருக்க வேண்டிய அதிக அளவிலான வெப்ப இடைவெளி, வகமான காற்றாடையை வலிமை உள்ளதாக மாற்றும். ஆனால், ஆர்டிக் பகுதி வெப்ப மண்டலத்தால், மூச்சோட்டங்களில் இருக்க வேண்டிய அதீத வெப்ப இடைவெளி குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே, மேகமில்லாத, காற்றில்லாத, அதீத வெப்பமுள்ள சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளில் உருவான வெப்ப நிலை மாற்றமே இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. பூமத்திய ரேகை பகுதிகளில் இருந்து உருவாகும் மூச்சோட்டத்தின் வெப்ப, குளிர் நிலை பொறுத்து, வெப்ப அலைகளும் கடும் பனிப்பொழிவும் மாறுபடுகிறது.

வெப்ப அலையின் தாக்கம்:

ஆர்டிக் பகுதிகளை உள்ளடக்கிய நோர்டிக் நாடுகளில் (சுவீடன், நோர்வே, ஃபிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க்) கடுமையான வெப்ப அலையினால், காட்டுத் தீ உருவாகி ஜீன், ஜீலை மாதங்களில் கட்டுபாடற்று பரவி வந்தது. பொதுவாக, நோர்டிக் நாடுகளில் கடுமையான குளிர் காலங்களைத் தொடர்ந்து ஜீன், ஜீலை மாதங்களில் மிதமான குளிரோ, மிதமான வெப்பமோ மட்டும் இருந்து வந்த சூழலில், ஜீன், ஜீலை மாதங்களில் வெப்பப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வர். இனிவரும் காலங்களில் அப்படி பயணிக்கவே தேவையில்லை எனும் அளவிற்கு சூழல் மாறி வருகிறது.

இந்த ஆண்டு, சுவீடன் நாட்டினைத் தொடும் ஆர்க்டிக் பகுதிகளில் 86 டிகிரி ஃபாரஹீட் வெப்பம் பதிவாகியது. இதனால், ஆர்டிக் பெருங்கடலில் உருவான வெப்ப அலை சுவீடன் நாட்டில் உள்ள பெரும்பாலான காடுகளில் தீ பற்றியது. மொத்தமாக 50 இடங்களில் காட்டுத் தீ உருவாகி உள்ளதாக சுவீடன் செய்திகள் தெரிவித்தது. நோர்வே, ஃபின்லாந்து நாடுகளில் பரவிய காட்டுத் தீ, கடந்த நூற்றாண்டுகளில் ஏற்படுத்திய பாதிப்பை விட, அதிக அளவு இழப்பை உருவாக்கி வருகிறது. சுவீடன் நாடு, ஐரோப்பிய அவசர நிலையைக் கோரும் முடிவினை எடுத்தது. நோர்வே, ஜெர்மன், ஃபிரான்ஸ், போர்த்துக்கல் நாடுகள் சுவீடன் நாட்டின் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்களையும் தண்ணீர் குண்டு விமானங்களையும் வழங்கி உதவி செய்தது.

பொதுவாக, ஆகஸ்து மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழையும் குளிரும் தொடங்கிவிடும் நோர்டிக் பகுதிகளில் இவ்வாண்டு அக்டோபர் வரை வெப்பம் நிலைக்கும் எனவும் அவ்வப்பொழுது சிறு ஆறுதலாக குளிரும் மழையும் பெய்யலாம் எனவும் சூழலியல் அறிவியலாளர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும், கணக்கிட்ட அளவிற்கான தாக்கத்தை அவை ஏற்படுத்தவில்லை.

hqdefault

வெப்ப அலைக்கு இது வரை பலியானோர்:

2003 ஆம் ஆண்டு உருவான வெப்ப அலையின் சீற்றத்தால், அந்த ஆண்டு, ஐரோப்ப முழுவதுமாக, 70000 பேர் இறந்தனர் என்கிறது ஒரு புள்ளி விவரம், அதில் ஃபிரான்ஸ் நாட்டில் மட்டுமே 20000 பேர் (“Solongo”. Comptes Rendus Biologies. 331 (2): 171–178). 2010 ஆம் ஆண்டில், ருசியா நாட்டில் 10000 பேரும் 2015இல் இந்தியாவில் 2500 பேரும் பலியாகியுள்ளனர். அமெரிக்கா நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் 600ற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.

மனித உடலுக்கு அதீத வெப்பத்தினால் ஏன் கடுமையான பாதிப்பு உண்டாகிறது?

இக்கட்டுரையில் ஆர்டிக் பகுதி வெப்ப அலை பற்றி விரிவாக எடுத்தியம்ப காரணம், கடும் குளிர் நாடுகளில் கூட இனி வரும் காலங்களில் வெயில் காலம் கொடுமையானதாக மாறியுள்ளது என்பதனை புரிந்துகொள்வதற்கே!. உலக வெப்ப மாற்றங்கள் குறித்து, அதனால் மனிதர்களின் சராசரி வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் கவலைப்படாமல் கடந்துவிட முடியாது. நம் ஊரிலும் நம் மக்களிலும் கூட, வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வந்து பலரை பலியெடுத்து வருகிறது. முதலில், இந்த அதிக வெப்பங்களினால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது குறித்தும் பார்ப்போம்.

சராசரியான மனித உடலில் நடக்கும் வேதியியல் மற்றும் உயிரியியல் நிகழ்வுகளுக்கு, 36-39 டிகிரி செல்சியஸ் (96.6-98.6 டிகிரி ஃபாரஹீட்) வெப்பம் தேவை. இயல்பான தருணங்களில், உடலில் வெப்பம் உருவாகும்பொழுது, இரத்த நாளங்கள் விரிவடையும், இதய ஓட்டம் அதிகரிக்கும். மனித உடலின் நரம்பு மண்டலம், இரத்தங்களை தோல் நோக்கி அனுப்பும்பொழுது, இரத்தம் வெப்பத்தைக் கடத்தி தோல் நோக்கிக்கொண்டுவரும், அப்பொழுது வியர்வைச்சுரப்பி (Sweat Gland) அதிக அளவு நீரை அனுப்பும், சூடும் நீரும் இணையும்பொழுது குளிர்வித்தல் நிகழும். அது மனித உடலில் இருக்கும் தோலின் மூலம் வேர்வையாய் வெளியேறி உடலை குளிர்விக்கும்.

இதுவே, வெளியே உள்ள வெப்பம் மனித உடலின் வெப்பத்தை விட அதிகமாக இருக்கும் பொழுது, உதாரணாமாக 40-45 டிகிரி செல்சியஸ், உடல் வெளிப்படுத்தும் வேர்வையால் உடலில் உள்ள சூட்டை முற்றிலுமாக தணிக்க முடியாது.  அதேவேளை, அதிகளவிலான இரத்தத்தை இதயம் உடலின் உட்பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். உடலினுள் பெரும்பகுதி வீக்கம் (inflammations) அடைவதோடு, அகநச்சு (endotoxins) ஊடுருவும். குருதியோட்டத்தில் (Bloodstream) உருவாகும் வீக்கம் மற்றும் அகநச்சுத் தன்மையால், உடலை குளிர்விக்கும் வல்லமையை நரம்பு மண்டலம் இழந்துவிடும். இதனாலேயே, மனிதர்கள் இறக்க நேரிடுகிறது.

அதுவும், வெப்பமும் ஈரப்பதமும் இணைந்த பகுதிகளில் மனித உடல் கடுமையாகவே பாதிப்படையும். வானிலை மையங்களில், தட்ப வெட்ப நிலைக் குறித்த அறிவிப்பில், வெப்பம் மற்றும் உணரும் வெப்பம் என குறிப்பிட்டு இருப்பார்கள். சூரியன் நம் பகுதியில் செலுத்தும் வெப்பத்தைவிட, ஈரப்பதம் அதிகமுள்ள பகுதியெனின், நாம் உணரும் வெப்பம் 3-5 டிகிரி செல்சியம் அதிகமாக காணப்படும். ஒவ்வொரு பகுதிகளிலும் பதிவாகும் வெப்பநிலையும் அங்கு இருக்கும் ஈரப்பதமும் இணைந்த மனித உடலை வதைக்கிறது எனலாம்.

எதிர்கொள்ள வழி என்ன?:

கடுமையான வெயில் காலம் வந்தால் நாமெல்லாம் குளிர்சாதனப் பெட்டிகளில் தஞ்சம் புகுவோம். ஆனால், கடுமையான வெப்ப அலை உருவாகியிருக்கும் ஐரோப்பியாவில், சூழலியியல் அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

  • அவ்வப்பொழுது வீட்டுக் கதவு, சாளரங்கள் திறந்து வைத்திருக்க வேண்டும். அச்சமயம், கட்டாயமாக மின் விசிறிகளை இயக்க வேண்டும். வீட்டினுள் இருக்கும் வெப்பக் காற்றை வெளியேற்றி, மாலை வேளைகளில் குளிர் காற்றை உள்ளிழுக்கும். காலை எழுந்ததும் வீட்டுக் கதவு, சாளரங்கள் அனைத்தையும் மூடிவிடுவது நல்லது. வெளியே இருக்கும் வெப்பக் காற்று உள்ளே நுழையாமல் இருக்க உதவும்.
  • தண்ணீர் நிரப்பப்பட்ட சிறு தொட்டியில் கால்களை சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வேளை, மிதமாக குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
  • வீட்டின் மேல் தளத்தை விட கீழ்த்தளம் வெப்பம் குறைந்ததாக காணப்படும். அதேபோன்று, தரையில் படுத்துக்கொள்வதும் நல்லது.
  • தண்ணீர் நிறைய குடிப்பதோடு, மது அருந்துதலை வெப்பக் காலங்களில் நிறுத்தி வைப்பது நல்லது. மதுவகைகள் உடலில் நீரோட்டத்தைக் குறைத்துவிடும்.
  • சிறியத் தொட்டியில் பனிக்கட்டிகளை நிரப்பி வைத்து, அதன் மீது மின்விசிறி காற்று படும்படி இயக்கி அதன் அருகில் அவ்வப்பொழுது அமரலாம்.
  • வீட்டில் குளிர்சாதனப் பெட்டிகளை தவிர்க்கலாம். ஆனால், பொது மக்கள் கூடும் இடங்களான நூலகம், அலுவலகம், வணிக வளாகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை பெரிதளவில் பயன்படுத்தலாம். இது நமக்கும் நம் சூழலுக்கும் உகந்தவைகள்.
  • வயிறு நிரம்பிய உணவுகளை, குறிப்பாக புரதச் சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உடலில் உருவாகும் வெப்பத்தைத் தடுக்க உதவும்.
  • சுட வைக்கத் தேவையில்லாத உணவை உட்கொள்வது நல்லது. பெரும்பாலும் காய்களும் கனிகளும் அல்லது வெதும்பி (Bread) போன்றவைகள்.

இந்த கட்டுரையை அச்சுறத்தலாக பார்க்கத் தேவையில்லை, எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உலகில் நடந்து வரும் அனைத்து சூழலியல் மாற்றத்திற்கும் உலக குடிகளான நாம் எல்லைகள் கடந்து பொறுப்பாகிறோம். ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு தனி அமைப்புகளும், ஒவ்வொரு தனி அரசாங்கம்/அரசுகளும் பொறுப்போடு செயல்பட்டு நம் அடுத்த சந்ததியினருக்கான பொன்னான பூவுலகை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: