தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்

மொழி என்பதில் சிறியது, பெரியது என்று ஒன்றுமே இல்லை! வீட்டின் மொழியையும் கற்பிக்கப்படும் மொழியையும் இணைப்பதால், தாய் மொழிக்கல்வியே சிறந்தது. தாய் மொழியினை குழந்தை முழுமையாக பகுத்துணரும் வரையில் கல்வி மொழி தாய் மொழியிலேயே இருத்தல் வேண்டும். அந் நிலத்தில் பெரும்பான்மையினர் பேசும் மொழியினை தாய் மொழியென கொள்ளல் ஆகாது – UNESCO 1953.

தாய் மொழி குறித்தான விளக்கம் பலவகையில் மாறுபட்டாலும், ஒரு குழந்தை எந்த மொழியின் மூலமாக இவ்வுலகை அறியத் தொடங்குகிறதோ அதுவே தாய் மொழியெனக் கொள்ளலாம்.

உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி எனத் தலைப்பில் வெளியான முதல் கட்டுரையையும் வாசிக்கவும்.

Mother Tongue is the Key to Education, Knowledge, Science and English Learning

குழந்தையின் பிறப்பும் வளர்ப்பும் தாய் மொழியின் தாக்கமும்:

குழந்தை பிறப்பதற்கு 10 வாரங்கள் முன்பிருந்தே, ஒலியினை கேட்கத்துவங்குகிறது. பிறந்தது முதலே, தாயின் மொழியின் ஓசையால், தன்னை பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதுகிறது. இத்தகைய தருணங்களில் இருந்தே, குழந்தையின் தாய் மொழியும் மூளையின் செயல்பாடும் ஒன்றாகிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒலியின் அடிப்படையில் அனைத்தையும் பகுத்துணரத் தொடங்குகிறது. இவ்வுலகில் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கினால், மொத்தமாக 800 விதமான ஒலிகள் உள்ளது. குழந்தை இயற்கை வரம், இத்தகைய 800 ஒலிகளையும் பிரித்து உணரும் ஆற்றல் கொண்டது.

பிறந்தது முதல் இத்தகைய ஆற்றல் உண்டு என்றபொழுதிலும், குழந்தை பிற மொழியினை கற்க, பகுத்துணர, தொடர்ச்சியான மூளையின் செயல்பாடுகளில் வாய்ப்பு உள்ளதெனினும், முதல் ஆறு மாதத்தில் தன்னை சுற்றி ஒலிக்கப்படும் மொழியில் இருந்துதான் மூளையின் தொடக்கக்கால செயலோட்டங்கள் உருவாகிறது. அதனாலேயே, பிற மொழியினை கல்வி மொழியாக ஏற்கும் முன்னர், குழந்தையின் அடிப்படை மூளையில் பதிந்துள்ள மொழியின் வழியே தொடக்கக் கால கல்வியின் மூலம் அறிவூட்டுவது நீண்ட கால ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உகந்ததாகிறது.

இதில் மிக குறிப்பாக, குழந்தை பிறந்தது முதலான மூளையின் செயல்பாட்டின்படி, அக்குழந்தையுடன் நேரடியாக உரையாடும் சொற்கள், ஒலி, மொழியில் இருந்துதான் அக்குழந்தை தன் சிந்தனைக்கும், தன் உச்சரிப்பிற்கும், செயல்பாட்டிற்கும் எடுக்கிறது. தன்னுடன் நேரடியாக பேசப்படாத எந்த ஒலியினையும் அது தாய் மொழியின் ஒலியே எனினும் அக்குழந்தையின் மூளையின் செயலோட்டத்தில் இடம்பெறாது.

குழந்தை தனது இரண்டாம் வயதில் இருந்து, தான் பார்க்கும் பொருட்களின் பெயரை, தன் சுற்றத்தார் சுட்டிக்காட்டி தன்னுடன் உச்சரிக்கும் வார்த்தையையும் பொருத்திப்பார்த்து, தனக்குத் தெரிந்த தாய் மொழியோடு தன் வாழ்வின் அனைத்து நொடிகளையும் இணைத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட, இத்தருணத்தில் இருந்து, குழந்தை தாய் மொழி வழியே தனது கற்றலைத் தொடங்குகிறது எனலாம்.

இத்தகைய நிலையில் இருந்தே, அக்குழந்தை பள்ளிக்கு வரும் முன் 3000 சொற்களை மூளையில் பதிந்து வளர்ந்து வருகிறது.

குழந்தையின் ஐந்து அல்லது ஆறு வயதிற்கு பின்னரான பள்ளிக்கல்விக்கு நுழையும் முன்னர், அக்குழந்தைக்கு குறைந்தது மூவாயிரம் சொற்கள் தெரிந்திருக்கும். தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமும் ஆகிறது. அப்படி அறியப்பட்ட சொற்களின் மொழி வழியே அடிப்படையான பள்ளிக் கல்வி அமையும் பொழுது தொடர்ந்து சிந்திக்கும் திறனை அக்குழந்தை அடைகிறது.

மூளை புதுப்புது சொற்களை உள்வாங்கவும் பகுத்துணர்ந்து கற்கவும் மனிதனின் வாழ்நாள் முழுவதும் வாய்ப்பு உள்ளதெனினும், முதல் ஆறு மாதத்தில் உள் வாங்கும் மொழியின் அடிப்படையிலேயே குழந்தை தன்னை அடுத்தடுத்த 5-6 வயது வரை தகவமைத்துக்கொள்கிறது. 5-6 வயதிற்குப் பின்னர், பள்ளிக்கல்வியின் தொடக்க வயதில், வாக்கியங்கள் அமைக்கவும், இலக்கணம் உணர்ந்து பேச, பகுத்துணர, செயல்படத் தொடங்குகிறது.

சுருக்கமாக, குழந்தை பிறந்தது முதல், சுற்றுவட்டத்தில் பேசப்படும் மொழியின் ஒலியினை உள்வாங்கி, தன்னுடன் பேசப்படும் மொழியின் ஒலி வடிவில் தன்னை வளர்த்துக்கொண்டு, 5-6 வயதிற்கு மேல்தான் தான் கற்ற, உணர்ந்த மொழியின் வாக்கியம் அமைக்கவும் இலக்கணத்தோடு பேசவும் தொடங்குகிறது.

(இணையச்சுட்டிகள்:1)https://www.sciencedaily.com/releases/2017/11/171102091111.htm 2) https://www.idra.org/resource-center/brain-development-and-mastery-of-language-in-the-early-childhood-years/)

இங்குதான் தாய் மொழி, அல்லது முதன்மை மொழிக்கல்வி மிக முக்கியம் ஆகிறது. தாய் மொழியினை முறையாக மூளையின் செயல்பாட்டுச் செல்களில் பதிக்கப்பட்டப்பின் எத்தனை மொழியினை வேண்டுமானாலும் குழந்தையால்/மனிதரால் கற்று சிறந்துவிளங்க முடியும். அதிலும், குறிப்பாக, கிராமப்புற, சிறு நகரப்பகுதியில் குழந்தைகள் பிறந்தது முதல், பள்ளிப்பருவம் வரையில் தன்னைச் சுற்றி தமிழ் மொழியினை மட்டுமே கேட்டும், உணர்ந்தும் வாழ்வதால் தமிழ் வழிக்கல்வி மிக அவசியமாகிறது.

உதாரணமாக, எங்கள் இரு குழந்தைகளும் நோர்வே நாட்டில் பிறந்தனர். அவ்விரு குழந்தைகளுடனும் நானும் என் மனைவியும் பிற மொழி கலக்காத தமிழில் பேசினோம், விளையாடினோம், கொஞ்சினோம். வீட்டிற்கு வெளியே, நோர்வே மொழி எங்கெங்கும் ஒலிக்கப்பட்டாலும், பிற தமிழ்நாட்டவர்களுடன் பழகும் பொழுது, ஆங்கிலம் கலந்த தமிழ் ஒலிகளும், ஈழத்தமிழர்களுடன் பழகும் பொழுது நோர்வே மொழி கலந்த தமிழில், எங்கள் குழந்தைகள் சுற்றத்தில் ஒலிக்கப்பட்டாலும், வீட்டிலும் வெளியிலும் எங்கள் குழந்தைகளுடனான உரையாடல் தமிழில் மட்டும் இருந்ததால், தமிழகம் வந்து அரசு நிதி உதவி பள்ளிக்கூடத்தில் தமிழ் வழிக் கல்வி கற்கத் தொடங்கிய பொழுது, எவ்வித இடையூறோ, தடையோ இல்லாமல் கல்வியினை பெற்றார்கள். அதன் வழி ஆங்கில மொழிப் பாடத்திலும் சிறந்து விளங்கினார்கள். இதனை நாங்கள், சொந்தமாக பரீட்சித்துப் பார்த்து வெற்றி பெற்றுள்ளோம்.

இதனைப்பற்றி விரிவாக முந்தைய கட்டுரையில் எழுதியுள்ளேன்:

தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!

குழந்தை வளர்ச்சிப்பருவத்தில் பல மொழிச் சூழலும் கல்வியின் தாக்கமும்:

குழந்தையின் பெற்றோர்கள், இரு மொழியினராக இருக்கும்பட்சத்தில், தாயும் தந்தையும் தன்னுடன் பேசும் மொழியினை சரியாக பிரித்துப்பார்த்து, தானாகவே முயன்று உணர்ந்துகொள்ளும். இங்குதான் ஒரு செய்தியினை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு மொழிகளையும் கலப்பில்லாமல் பேசும் சூழல் மிக முக்கியம். வெவ்வேறு மொழி பேசும் பெற்றோர்கள் அமையும்பொழுது, குழந்தையுடன் நேரடியாக உரையாடும் சூழலில் இரு மொழிகளையும் குழந்தையின் மூளை உள் வாங்கிக்கொள்ளும். மொழிக்கலப்புதான் பேராபத்து.

ஆங்கிலம் கலந்த தமிழும் தமிழ் கலந்த ஆங்கிலமும் போல் அல்ல! ஒருவேளை ஆங்கிலம் பேசினால் ஆங்கிலம் மட்டுமே, தமிழ் பேசினால் தமிழ் மட்டுமே!

ஆங்கிலம் மட்டுமே வீட்டில் கூட பேசும் பெரு நகர மேட்டுக்குடிகள், அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் அந்நாட்டு மொழியையே தங்கள் வீட்டு மொழியாகவும் குழந்தையுடனான உரையாடல் மொழியாகவும் பேசும்பொழுது, முதன்மை மொழியிலேயே அக்குழந்தை சிந்தித்து செயல்படுவதால், பிரச்சனை இல்லை.

மொழிக்கலப்பில்லாத, குழந்தையுடன் நேரடியாக உரையாடப்படும் மொழியில் இருந்து பள்ளிக்கல்வி தொடங்கும் முன் குழந்தை 3000 சொற்களை நன்குணர்ந்து, பகுத்துணர்ந்து கற்றிருக்குமாயின் அம்மொழியிலேயே குழந்தையின் தொடக்கக் கல்வி அமைவதில் பிரச்சனை இல்லை. தாய் மொழியோ, தந்தை மொழியோ, அல்லது வீட்டு மொழிகளில் ஒன்றாகவோ இருக்கலாம். ஆனால், குழந்தையுடன் நேரடியாக உரையாடப்பட்ட மொழியாக இருக்க வேண்டும்.

இத்தகையச் சூழல்களில் தான் கல்வி மொழியின் தாக்கத்தை நாம் தமிழகத்தில் பெரு நகர, நகர, கிராமப்புற மாணவ, மாணவியர்களின் வாழ்வோடும் சிந்தனையோடும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றம் காணும் சூழல் ஆபத்தானது என்பதனை மேலே கூறிய கூற்றுகளின் வழியே உணர்வது நலம்.

இரு மொழிகளை குழந்தை ஒரு சேர கற்பதும் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உகந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், வளர்ந்த மனிதனே கூட, தன்னுடைய ஒவ்வொரு காலப்பகுதியிலும் வெவ்வேறு மொழிகளை கற்பது மிக அவசியம்தான். மொழியினை பகுத்துணர ஒதுக்கி வைத்திருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரே மொழியின் ஒலியை கேட்கும் பொழுது செயல்பாட்டுத் தேக்கம் அடைகிறது. அதேவே, பல மொழிகளை கேட்கும் பொழுது மொழிக்கான நரம்பு மண்டலம் விரிவடைந்து தளராமல் வேலை செய்வதால், மூளையின் ஆரோக்கியமான செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்னும் சொல்லப்போனால், வயதாக வயதாக, மூளையின் செயல்பாட்டில் தேக்கம் ஏற்படும், சிந்தனையில் தளர்ச்சி ஏற்படும். பிற மொழிகளை தொடர்ச்சியாக கற்கும்பொழுது மூளையின் நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்பட்டு, தசையினை கட்டுப்படுத்துதல் முதல், உணரும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். வயதான காலத்தில் உருவாகக்கூடிய அல்ஜெமீர் (Alzheimer disease) நோய் வராமல் தடுக்குவும் பல மொழிகளை கற்பது அவசியம் (இணையச்சுட்டிகள்: 1) https://www.sciencealert.com/bilingual-brains-have-higher-volume-of-grey-matter-study-suggests 2) Bialystok E (2011). “Reshaping the Mind: The benefits of Bilingualism”. Canadian Journal of Experimental Psychology. 4 (60): 229–235.).

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் தாய் மொழிதான் கல்வி மொழியென்பது அனைவருக்கும் தெரியும். அதேவேளை, அவர்கள் தங்கள் நாட்டின் மொழி தவிர்த்து ஐரோப்பிய மொழிகளில் ஒன்றை, நோர்வே தமிழ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் ஒன்றை, கட்டாயமாக பள்ளிகளில் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியவைகளாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். ஆங்கிலம் என்பது துணைப்பாடமாக இந்நாடுகளில் வருகிறது. மேலே கூறிய மூளை வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல மொழிகள் கற்பது அவசியம் என அறிவியல் ஆய்வுகள் உணர்த்துவதை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதனை உணர்க!

மொழிகளை தொடர்ந்து கற்பது ஆரோக்கியம்தான், எல்லாவற்றுக்கும் அடிப்படை தாய் மொழியே என்பதனையும் நாம் மறத்தல் ஆகாது!

தமிழ்நாட்டுச் சூழலைப் பொருத்தமட்டில், நாம் சிந்திக்க வேண்டிய மாற்றம் நிறைய உள்ளபொழுதிலும், கல்வி மொழி குறித்து நாம் முன் மொழிய வேண்டியவை:

  • தொடக்கக் கல்வி தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
  • 6 ஆம் வகுப்பு முதல் ஆங்கில மொழியினை துணைப்பாடமாக வைத்தல் வேண்டும். சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர், ஆசிரியைகள் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • கல்லூரிகளில், ஆங்கில வழி பாடத்திட்டத்தில் தமிழ் துணை மொழியோடு (தமிழ் வழி பாடத்திட்டத்தில் ஆங்கில மொழி துணைப்பாட மொழியோடு) ஐரோப்பிய, ஜப்பானிய, சீன மொழிகளில் ஒன்று கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். ஏன், இந்தியாக கூட இருக்கலாம். ஆனால், திணிக்கப்படாத, மாணவர்கள் சில மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையுடையதாக இருத்தல் வேண்டும்.

 

அடிப்படையில் தாய் மொழிக்கல்வியும், அடுத்தடுத்த வளர் நிலையில் வெவ்வேறு மொழிகளையும் கற்க வைப்பதன் மூலம் மாணவ, மாணவியர்களின் சிந்தனைத்திறன் வளர்ச்சியடையும் என்பதனை உணர்ந்து கல்வித்துறையில் மாற்றத்தை தொடங்குவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! நிலைநாட்டுவோம்!

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s