சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!

இலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்து வருவதாக தமிழ்நெட் இணையச் செய்தி வழியே அறிய முடிந்தது (https://tamilnet.com/art.html?catid=79&artid=39261).

சர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என தனிப்பட்ட பொருளாதார எல்லை (Exclusive economic zone) என்ற அளவீட்டின் படி உரிமையுண்டு. இப்பொழுது, அத்தேசம் தன் தீவின் நிலப்பரப்பை விட 25 மடங்கு அதிகமான கடற்பகுதியினை தன் கட்டுப்பாட்டில் எடுக்க உரிமை கோருகிறது.

இதன் பெரும்பகுதி இந்தியப் பெருங்கடலின் கடல் கட்டுப்பாட்டையும் உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்குபவை, அதோடு உலகப்பொருளாதாரத்திலும் அரசியல் பிராந்திய முக்கியத்துவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது இதன் ஆபத்து.

கடற்சார் அரசு, அங்கீகரிக்கப்பட்ட 200 நாட்டிகல் மைல் கடல் தொலைவை விட அதிகமான தொலைவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமானால், உரிமைக் கோரும் தேசத்தின் நிலப்பகுதியினை ஒட்டிய கடலில் 1) குறிப்பிட்ட தடிமன் படிகப்பாறை மற்றும் 2) உருவத்துக்குரிய அமைப்புகளோ, அக்கடற் பகுதிகளில் இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குமரிக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பு குறித்த முழுமையான அறிவியல் ஆய்வுகள் இல்லையெனினும் குமரிக்கடலுக்கு தெற்கேயும் மாலத்தீவு, மதகாஸ்கர் நோக்கியப் பகுதிகளிலும் சிறுசிறுத் தீவுகளும் நிலப்பகுதிகளும் கடலுள் புதைந்துள்ளன என்பதனை நிறுவும் அறிவியல் முடிவுகள் ஏராளம் இருக்கிறது குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்! .

The deep Indian Ocean floor January 2003, Chapter 7, https://www.researchgate.net/publication/253047410_The_deep_Indian_Ocean_floor

இந்தியப் பெருங்கடலினுள் புதைந்திருக்கும் நிலப்பகுதியினை ஆய்வு செய்யாமல் இந்தியத் துணைக்கண்டம் அலட்சியப்படுத்தி வரும் இதேக் காலக்கட்டத்தில், இலங்கைக்கு தெற்கே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தடிமனானப் படிகப்பாறை மற்றும் உருவத்துகுரிய அமைப்புகள் புதைந்துள்ளன என்பதனை அறிவியல் அடிப்படையிலான தரவுகளினால் மேற்கோள் காட்டி, அப்பகுதியினை தனக்கு சொந்தம் என சிங்களத் தேசம் சர்வதேச சட்டங்கள் வழியும் இந்தியா, மேற்குலக சூழ்ச்சியின் பின்னணியிலும் திட்டம் தீட்டி வரும் வேளையில், தமிழக மக்களோ தமிழக அரசோ மெளனமாக இருப்பது தமிழின நெடு வரலாற்றில் நாம் செய்யப் போகும் துரோகமாகவே கருத முடியும்.

Genocidal_Sri_Lanka_claims_larger_continental_shelf-02

2003-2018 வரை நடந்தவை – ஒரு பார்வை:

2003 ஆம் சிங்கள வல்லுநர்கள் குழுவை நியமித்த சிங்கள அரசு, மே மாதம் 2009 ஆம் ஆண்டு 13 ஆம் நாள் ஐநாவின் கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையத்திடம் (UN commission on the limits of continental shelf – CLCS) தனது வேண்டுகோள் ஆவணத்தைச் சமர்பித்தது. (https://tamilnet.com/img/publish/2018/11/SL_Continental_Shelf_Application_Executive_Summary_2009.pdf).

ஆம், தமிழர்களை இனவழிப்பு மூலம் நசுக்கிக்கொண்டே தமிழர் கடலை சர்வதேச சட்டத்தின்படியே ஆக்கிரமிக்கும் வேலையையும் சிங்கள அரசு செய்து வந்திருக்கிறது.

2009இல் ஒப்புதல் வேண்டி ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பினும், 2009இல் மாலத்தீவும் 2010இல் பங்களாதேசமும் சமர்பித்த ஆவணங்களில் சிலவற்றிற்கு எதிர்க்கருத்தைத் தெரிவித்திருந்தன. தங்கள் தேசத்திற்கு சொந்தமான கடலை ஒட்டிய கண்டப்படுகையையும் இலங்கையின் சிங்களத் தேசம் உரிமை கோருவதாகவே அந்த எதிர்ப்புகள் அமைந்திருந்தன.

2009இல் ஐநா துணை அமைப்பிடம் சமர்பித்த ஆவணத்தில், இந்தியாவுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து மேலும் தனியாக இருநாட்டுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேவையில்லை என இருநாடுகளும் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010இல் இந்திய நடுவண் அரசு வெளியிட்டக் கடிதத்தில், இருநாட்டிற்கும் பொதுவான கடற்பரப்பு என்பதால், இருவருக்குமான தார்மீகப் புரிந்துணர்வு அடிப்படையிலேயே இதனை அடுத்தக் கட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று மட்டும் தெரிவித்தது. இந்திய நடுவண் அரசு கடும் எதிர்ப்பினை எங்குமே பதிவு செய்யவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

2018 ஜூலையில், ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான, கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையம், சிங்கள அரசின் வரைவு குறித்து முடிவெடுக்கக் கூடியது. விரிவாக விவாதித்து முடித்திருக்கிற போதிலும் அடுத்த அமர்வில் முடிவினை அறிவிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

DFT-16-021

கச்சத்தீவு போன்ற சிறுத் தீவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கை சிங்களத் தேசத்தினால் தமிழகம் ஏற்கனவே இழந்து வரும் உரிமை அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தமிழர் கடலின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படும் சூழலில் தமிழக அரசோ தமிழக அரசியல் கட்சிகளோ இதுவரை எவ்வித கருத்தையோ எதிர்வினையையோ ஆற்றவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

 

ஆவணத் தயாரிப்பில் மேற்குலக நாடுகளின் பங்கு:

2003 முதல் வரைவு தயாரிப்பிலும் அதன் பின்னர் இன்று வரை என எல்லா மட்டங்களிலும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பெரிதும் உதவிகள் புரிந்து வந்திருக்கின்றன.

இன்னும் அதிர்ச்சியாக, 2002 ஆம் ஆண்டிலிருந்து சமாதானத் தூதுவர் வேடமிட்டு நாடகமாடிய நோர்வே அரசுதான் சிங்கள அரசு தயாரித்த இந்த வரைவிற்கான பெரும்பகுதி பொருளாதாரத்தை வழங்கியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ருசியா, நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து, இலங்கையின் சிங்கள அரசு சமர்பித்த வரைவினை தயாரிக்க உதவியன. எனினும், நோர்வே அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அமைப்பான நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையகம் (Norwegian agency for development cooperation – NORAD), 2012 ஆம் கணக்கீட்டின் படி, இத்திட்டத்திற்கென 43.6 மில்லியன் குரோணர், அதாவது, 35 கோடியே 75 லட்சம் இந்திய ரூபாய் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. (https://tamilnet.com/img/publish/2018/11/Project_on_Delimitation_of_the_Outer_Edge_of_the_Continental_Margin_of_Sri_Lanka_DEOCOM_E.pdf).

ஒருபுறம் இந்த மேற்குலக நாடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளை தடை செய்து, பலமிழக்கச் செய்து, சிங்கள தேசத்தினை ஆயுத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுப்பெறச்செய்து, தமிழர் தேசத்தினை சிங்களத் தேசம் இனவழிப்போரின் மூலம் கைப்பற்றச் செய்துக்கொண்டே, பெரும் கடற்பரப்பை சிங்களத் தேசத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உதவிகள் புரிந்துவந்துள்ளன.

தன் நலன் இல்லாமல் இத்தனை நாடுகள் உதவிகளை புரிந்திருக்குமா?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் – வேட்டையாத் துடிக்கும் மேற்குலக நாடுகள்:

இந்தியப் பெருங்கடலின் கண்டப்படுகையில் புதைந்திருக்கும் எண்ணெய் மற்றும் வாயுக்கள், மீன் வளம் உள்ளிட்டப் பொருளாதாரம் உட்பட, இந்தியப்பெருங்கடலின் பூகோள அரசியலின் முக்கியத்துவம், சர்வதேச நாடுகளின் கடற்போக்குவரத்துப் பொருளாதாரம் என எண்ணற்ற நலன்களை இந்த நாடுகள் கைப்பற்றத் துடிக்கின்றன.

சமாதானப் பேச்சுவார்த்தைக் காலங்களில், மன்னார் வளைகுடாப் பகுதிகளில் எண்ணெய் வளம் சுரண்டுவதற்கான ஆய்வினை நோர்வே நிறுவனம் மேற்கொண்டது நினைவிருக்கலாம். பின்னர், வேதாந்தா நிறுவனத்தின் கேய்ர்ன் இந்தியா பல ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தது.

இலங்கையின் பெட்ரோலியத் துறையின் அளவீட்டின் படி, தமிழகக் கடற்கரைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையிலான மன்னார் படுகைப் பகுதியில் மட்டுமே இலங்கைக்கு அடுத்த 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கள் புதைந்துள்ளதாக தகவல் கிடைக்கிறது.

இது இல்லாமல், சற்று மேலே யாழ் குடா பகுதிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான காவிரிப்படுகையிலும் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயுச் சுரண்டும் ஒப்பந்தங்கள் இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் வரிசையில் நிற்கின்றன.

2018இல் தமிழர் கடலின் யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான கடற்பகுதிகளில் எண்ணெய் வளம் சுரண்டும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் கைப்பற்றியது (https://www.reuters.com/article/us-sri-lanka-oil-exploration/sri-lanka-to-sign-deals-with-total-schlumberger-for-seismic-study-idUSKBN1I512V).

இப்படித் தொடர்ந்தும் மேற்குலக நாடுகள் பலவும் இலங்கைத் தீவை தன் வேட்டைக்காடாக மாற்றவே முனைந்திருக்கின்றனர் என்பது புலனாகிறது.

இதனோடு, மன்னார் வளைகுடா மற்றும் யாழ் குடாப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய கடல் பகுதிகளில், மீன் வளங்களின் பொருளாதாரப் பலனை பங்கிட பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய, சிங்கள முதலாளிகளும் பல்வேறு முனைகளில் நம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவையனைத்தையும் மேலே சொன்ன, இலங்கையின் கடல் ஆக்கிரமிப்புத் திட்டத்தோடு முடிச்சிப் போட்டால், இலங்கையின் சிங்களத் தேசத்தின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே அனைத்தையும் அடங்க வைப்பது பல நாட்டு நிறுவனங்களுக்கு பலவகைகளில் நல்லது.

அதேபோன்று, ஒருபுறம் ராஜபக்சேவை சீனாவின் ஆள் எனக் காட்டிக்கொண்டே, 2003 முதல் 2009 வரை மேற்கூறிய ஆவணத் தயாரிப்புகளிலும், அதேகாலக்கட்டத்தில் புலிகளை பலமிழக்கச் செய்து தமிழர்களை இனவழிப்பிற்கு உள்ளாக்கியதிலும் மேற்குலக நாடுகள் சிங்களத் தேசத்தின் பக்கமே நின்றனர்!

அதனைத் தொடர்ந்து சிங்களத் தேசத்தின் மீதான இனவழிப்பு குற்றச்சாட்டில் இருந்து சட்டரீதியாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் காப்பாற்றி, ஆட்சி மாற்றம் என மாயவலையில் ராஜபக்சேவை காப்பாற்றி, சிங்களத் தேசத்தினை இலங்கைக்கான ஒற்றையாட்சி கோட்பாட்டை வலிமை பெறச்செய்ததிலும் இதே நாடுகள்தான் முன்னின்றன என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

சமீபத்திய ஆட்சிமாற்றக் குழப்பம் குறித்த நக்கீரன் வெளியிட்ட (https://nakkheeran.in/nakkheeran/2018-11-02/nakkheeran-02-11-2018) செய்திக்கட்டுரையிலும், ராஜபக்சே சீனாவிற்கு மட்டுமான ஆள் என திசைத் திருப்பாமல், மேற்குல நாடுகளின் கூட்டில் இருபுறமும் அடைந்த பலன், தொலைநோக்குத் திட்டங்கள், இனவழிப்புக் குற்றச்சாட்டில் அவர் காப்பாற்றப்பட்ட விதம் என அனைத்தையும் இணைத்து உணர வேண்டும் என்றக் கருத்தை முன்மொழிந்திருந்தேன்.

சீனாவின் ஹம்பாந்தோட்டத் திட்டமும் விமான நிலைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் மேற்குலக நாடுகளின் அசுர வேட்டைக்கும் பூகோள முக்கியத்துவ அரசியலுக்கும் தமிழர்களின் இனவழிப்பிற்கும் தொடர்புகள் நிறையவே உண்டு.

இராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மைத்திரி மூலமோ இரணில் மூலமோ சீனாவின் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு தடை இருக்க வாய்ப்பில்லை. கால தாமதம் இருக்கலாம், ஆனால், நிறைவேறும்.

இந்தியா-ஜப்பான்-அமெரிக்காவின் கூட்டு இராணுவ ஆக்கிரமிப்பு:

எண்ணெய் வளச் சுரண்டலுக்கும் அப்பாற்பட்டு, 2018 ஆம் ஆண்டு இந்திய-அமெரிக்க-ஜப்பான் நாடுகள் இணைந்த கடற்பயிற்சி, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் உள்ளடக்கியப் பகுதிகளில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என பலவற்றை இந்த மூன்று நாடுகளும் வரையறுத்து வருகின்றன (https://tamilnet.com/art.html?catid=79&artid=39272).

டிசம்பர் 2018இல் அர்ஜெண்டினாவில் நடந்த G20 மாநாட்டில் இந்திய-அமெரிக்கா-ஜப்பான் நாடுகள் இணைந்த JAI-Japan, America, India புரிந்துணர்வு, மிக முக்கியமாக இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இந்தியா-ருசியா-சீனா நாடுகள் இணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய சர்வதேச நகர்வுகளில் இலங்கைத் தீவை மையப்படுத்தி அமெரிக்க-இந்தியா-ஜப்பான் மட்டுமே வருங்கால இராணுவ மையங்களை உருவாக்க முனைந்து வருவதும், மேற்குலக நாடுகளே எண்ணெய் வளம் உள்ளிட்ட பெரும் பொருளாதார முன்னெடுப்புகளில் கோலோச்சி வருவதும் உன்னிப்பாக தமிழர்கள் தரப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தமிழகம் விழித்தெழ வேண்டிய நேரமிது:

இத்தகையச் சூழலில், தமிழர் கடலின் பெரும்பகுதி என்பதோடு தமிழர் வரலாற்றின் எச்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் குமரிக்கடலினை சிங்களத் தேச அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, பல நாடுகளின் வேட்டைக்காடாய் தமிழர் கடல் மாறவிருக்கின்றச் சூழலில் தமிழ்நாடு அரசும் மக்களும் ஓங்கி குரல் எழுப்பி எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

கச்சத்தீவு என்னும் சிறுப்பகுதியை இழந்து நாம் படும் பெருந்துயரத்திற்கே முடிவில்லாத பொழுது தமிழர் கடலின் பெரும்பகுதி இல்லாது போகுமாயின் நம் தமிழர்களின் வருங்காலம் என்னவாவது?

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: