குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்!

லெமூரி என்ற குரங்கு இனம் வாழ்ந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை லெமூரியா என்ற பெயரோடும், தமிழகத்திற்கு தெற்கே நீண்ட நெடிய நிலப்பகுதி இருந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை குமரிக்கண்டம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அழைத்து வருகிறார்கள்.

இன்றைய மதகாஸ்கர் என்னும் நாட்டின் அருகாமையில் கிடைக்கப்பெற்ற தடயங்களைக் கொண்டே, லெமூரி வாழ்ந்ததற்கான வரலாற்று சாட்சியாக அறுதியிட்டு, லெமூரியா என்னும் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டிய கடற்பரப்பில் மறைந்து இருக்கலாம் என்பது மேலை நாட்டு வரலாற்று அறிஞர்களின் வாதம். தமிழகத்தின் தெற்கே, பல நூறு மைல்களுக்கு அப்பால் பரந்து விரிந்த கடலுக்கடியில் புதைந்த பகுதியை குமரிக்கண்டம் என்று தமிழர்கள் அழைத்து வருகிறோம்.

லெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றோடு ஒன்று இணைந்த பகுதிகளாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒட்டித்தான் இருந்தது என்ற வாதத்தை புவி-இயற்பியல்/நிலவியல் ஆய்வுகளின் உறுதியான தகவலோடு ஏற்றுக்கொள்வோமாயின், மனித இனம் தோன்றிய பகுதி நம் தமிழகத்து தெற்கிலோ அல்லது தென்-மேற்கிலோதான் இருக்க முடியும்.

இதனை நிறுவ, புவியியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் ஆய்வுகளையும் இணைத்துப்பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. இதனை அறிவியல் ஆய்வுகளின் வழி நிறுவ ஆங்காங்கே சிதறி இருக்கும் ஆய்வு முடிவுகளை முடிச்சுப்போட்டு பார்க்க வேண்டும். அதற்கான தொடக்கத் தேடலே இக்கட்டுரை எனக் கொள்ளலாம்.

குமரிக்கண்டம் குறித்தக் கற்பனை வரைபடம்!

நவீன அறிவியலும் ஆதாரங்களும்:

இன்றையக் காலக்கட்டத்தில் குமரிக்கண்டம் அல்லது அதனை ஒட்டியப் பகுதிகளில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை தேடும் பொழுது, நோர்வே நாட்டில் நடந்த ஆராய்ச்சிகள் மற்றும் புவிகாந்தவியல் துறையின் பேராசிரியரான கார்ஸ்டன் ஸ்டூரட்வெட் (Karsten M. Storetvedt) அவர்களின் கோட்பாட்டு விளக்கம் பேருதவியாக இருந்தது. இரண்டையும் தனித்தனியே பார்ப்போம்.

பேராசிரியர் கார்ஸ்டன் உலகம் ஏற்றுக்கொண்ட, கண்ட இடப்பெயர்வு மற்றும் புவியோட்டிற்குரிய தகடு கோட்பாட்டுக்கு இணையான உலக முறுக்கல் கோட்பாட்டை (Global Wrench Theory) உருவாக்கியவர். அவரது கோட்பாட்டின் அடிப்படையில், நிலநடுக்கோடு மற்றும் அதனை அண்டியப் பகுதிக்கும் பூமியின் இருமுனைப் பகுதிகளுக்கும் பூமி சுத்தும் சுழற்சியின் வேகத்தில் வித்தியாசம் இருக்கும். அதனால், நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் இறுக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஆழிப்பேரலை (சுனாமி) – கடற்கோள்கள், நிலநடுக்கம் உள்ளிட்டவைகளால் தாக்கப்பட்டு, நிலப்பகுதிகள் கடலுக்குள் செல்வதும் புவியியல் மாற்றங்கள் உருவாகி கண்டங்கள் உருமாறுவதும் நடக்கும்.

பேராசிரியர் கர்ஸ்டனைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கடற்கோள்கள் குறித்தச் செய்திகளில் அறிவியல் உண்மைகள் பொதிந்துள்ளது (https://tamilnet.com/art.html?catid=79&artid=13862). ஆனால், இதனையெல்லாம் நவீன அறிவியலின் துணையோடு நிறுவும் ஆய்வு முழுமையடையவில்லை என்பதும் அவரது கருத்து. 2005 ஆம் ஆண்டு இதனை அவர் தெரிவித்திருந்தார்.

2013இல், நோர்வே நாட்டில் இருக்கும் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆதி நிலம் குறித்துத் தேடிய ஆய்வின் ஒரு பகுதி முடிவுகள் வெளியானது (https://www.nature.com/articles/ngeo1736).

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் நாட்டிற்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மதகாஸ்கர் தீவுக்கும் இடையிலான தொடர்பை இக்கட்டுரை வழியே நோர்வே ஆய்வுக்குழுவினர் நவீன அறிவியல் ஆய்வின் துணையோடு நிறுவியிருக்கிறார்கள்.

மெரீசியஸ் பகுதிகளுக்கு கீழே உள்ள புவியோட்டிற்குரிய தகடு (Tectonic plates) உள்ள பிணைப்புகள், அது நகர்ந்துள்ளதற்கான சாத்தியக்கூறுகள், அதனால், மதகாஸ்கருக்கும் மொரீசியஸிற்கும் இடையில் நடைந்தேறிய பிளவுகளுக்கான வாய்ப்புகளை அக்கட்டுரை பட்டியலிட்டிருக்கும்.

அதோடு, மொரீசியஸ் பகுதிகளுக்கும் இந்தியப் பெருங்கடலில் கீழே உள்ள தகடுகளுக்கும் உள்ள தொடர்புகளை மேற்கோள் காட்டி, புவியோட்டிற்குரிய தகடு (Tectonic plates) நகர்வால் ஆப்பிரிக்கா முதல் இந்தியத் தென்முனை வரை பலநூறுத் தீவுகள் சிதறி உருவாகியிருக்கவும் வாய்ப்புள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்த ஆய்வுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த நோர்வே ஆய்வுக் குழுவினர்,

“மதகாஸ்கர், மொரீஸியஸ் பகுதிகளுக்கு அண்டிய கடலில் மட்டுமே இதுவரை ஆய்வு செய்திருக்கிறோம். இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி, எங்கள் ஆய்வு தென் இந்தியக் கடலை நோக்கி சென்றால் மட்டுமே உறுதியான முடிவை எட்ட முடியும். மதகாஸ்கரில் இருந்து நகர்ந்து வந்த எங்கள் கடல் ஆய்வு இந்தியப் பெருங்கடலை ஒட்டி நகர நகர புது முடிவுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதிகப்படியான ஆழம் நிறைந்த இந்தியப் பெருங்கடல் பகுதியை ஆய்வு செய்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல, ஆனால், மனித இன தோன்றல் குறித்த கேள்விக்கான தேடலை நிறைவு செய்ய, இந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் நிலப்பகுதிகளை ஆய்வு செய்யாமல் எம்முடிவையும் எட்ட முடியாது” என்று கூறியிருந்தனர்.

நோர்வேயின் ஓஸ்லோ ஆய்வுக்குழுவினர் புவியோட்டிற்குரிய தகடு (Tectonic plates) கோட்பாட்டின் அடிப்படையில் தங்கள் ஆய்வுத் தரவுகளை ஒப்பிட்டு மேற்கூறிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள்.

பேராசிரியர் கர்ஸ்டனைப் பொறுத்தவரை, தனது சிந்தனைக்கு ஏற்ற உலக முறுக்கல் கோட்பாட்ட்டின் (Global Wrench Theory) அடிப்படையில் இந்தியத் தென்முனை ஆப்பிரிக்கக் கண்டத் தொடர்பை வரையறுத்தார்.

எனினும், இருவேறு கோட்பாடுகளும் சரி, கண்ட இடப்பெயர்வு (Continental drift) கோட்பாடும் சரி புவியியல் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டம் மற்றும் தமிழகத்தின் நிலப்பரப்புத் தொடர்பினை மறுக்கவில்லை.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்பகுதியாகவும், பிறகு சிறு சிறுத் தீவுகள், பெருந்தீவுகளாகவும் மாறியிருக்கின்றன. ஆப்பிரிக்காவின் தென்முனை மதகாஸ்கரும், இந்தியத் துணைக் கண்டத்தின் தென்முனை இலங்கைத் தீவும் இந்த சிறு, பெரு தீவுகளோடும், அதனோடு தொடர்புடைய தகடுகளோடும் (plates) பிண்ணிப் பிணைந்த இணைப்புகளே!

Oslo research
A Precambrian microcontinent in the Indian Ocean என்ற ஆய்வுக்கட்டுரையில் நோர்வே ஆராய்ச்சியாளர்கள் வெளிட்ட படம். தென்முனைத் தமிழகத்திற்கும் மொரீசியஸ்த் தீவு மற்றும் மதகாஸ்கார் தீவுகளுக்கு இடையில் சிறுத் தீவுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கும் படம்.

எளிதாக புரிந்துக்கொள்ள வேண்டுமாயின், இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்போடு இனைந்து இருந்த இலங்கைத் தீவின் நிலம் பிரிந்தது போல, பல நூறுத் தீவுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருந்து பிரிந்து, சிதைந்து, கடலில் புதைந்தும் போயுள்ளன.

தென்முனை முதல் தமிழகத்தின் தென் முனை வரையே உறுதி செய்கிறார்கள். மொழித் தொடர்பையும் யாருமே இதுவரை மறுக்கவில்லை என்பதனையும் நினைவில் கொள்ளுதல் அவசியம். அதேவேளை, நமது வரலாற்றை நிறுவும் முழுமையான ஆய்வை நாம் இன்னும் தொடங்கவேயில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

குமரிக்கண்டம் குறித்தத் தகவல்களை மேலும் காணும்முன் 2018இல் நடக்கும் அரசியல் சதுரங்க சர்வதேச நிகழ்வுகளைக் குறித்து பார்த்துவிட்டு தொடர்வோம்.

இந்தியப் பெருங்கடலினுள் புதைந்திருக்கும் நிலப்பகுதியினை ஆய்வு செய்யாமல் இந்தியத் துணைக்கண்டம் அலட்சியப்படுத்தி வரும் இதேக் காலக்கட்டத்தில்தான், இலங்கைக்கு தெற்கே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தடிமனானப் படிகப்பாறை மற்றும் உருவத்துக்குரிய அமைப்புகள் புதைந்துள்ளன என்பதனை அறிவியல் அடிப்படையிலான தரவுகளினால் மேற்கோள் காட்டி, அப்பகுதியினை தனக்கு சொந்தம் என சிங்களத் தேசம் சர்வதேச சட்டங்கள் வழியும் இந்தியா, மேற்குலக சூழ்ச்சியின் பின்னணியிலும் திட்டம் தீட்டி வருகிறது.

கடல்சார் நிலங்கள் தனித்த பொருளாதார மண்டலங்களாக கடலின் 200 நாட்டிக்கள் மைல் தொலைவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என சர்வதேச சட்டங்கள் சொல்கிறது. அதற்கும் மேற்பட்ட கடல் பகுதியினை கட்டுப்பாட்டில் எடுக்க, அந்நிலத்தோடு தொடர்புடைய கடலினுள் 1) குறிப்பிட்ட தடிமன் படிகப்பாறை மற்றும் 2) உருவத்துக்குரிய அமைப்புகளோ இருக்க வேண்டும் சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!.

இதனை அறிவியல் குழு அமைத்து உறுதி செய்து, தன் சிங்களத் தேச அரசின் உரிமைசார் சொத்தாக இதே குமரிக்கண்டப் பகுதியினை உரிமை கோரவிருக்கிறது சிறிலங்கா.

வரலாற்றுத் தேடல்:

நவீன அறிவியல் கோட்பாடுகள், ஆய்வுகளின் பார்வையில் குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக் கூறுகளை பார்த்தோம்.

குமரிக்கண்டம் குறித்தோ, லெமூரியா குறித்தோ எங்கெல்லாம் பதிவாகியுள்ளது, எப்பொழுது இருந்து பதிவாகியுள்ளது என்பதனையும் பார்ப்போம்.

1840 ஆம் ஆண்டு பிரஞ்சு நாட்டு புவியியல் ஆராய்ச்சியாளரான எட்டினே ஜெஃபிரி (Etienne Geoffrey Saint-Hilaire) அவர்கள் தான் முதன் முதலில் மதகாஸ்கர் தீவுக்கும் இன்றைய இந்திய நிலப்பரப்பின் தென்பகுதிக்குமான நிலத்தொடர்பை வரையறுத்தார்.

அதுவரை லெமூரியா என்னும் பகுதி, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு அருகாமை பகுதியாக மட்டுமே அறியப்பட்டு வந்த நிலையில், லெமூரியாவின் நீளத்தை இந்தியாவின் தென்பகுதி வரையில் தொடர்புப்படுத்தி விவரித்தப்பின், ஆங்கில புவியியலாரான சீயர்ல்ஸ் வுட் (Searles V. Wood (1830-1884)) தமிழகத்துக்கு கீழே தென்முனை கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 1859 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் வேலாஸ் (Alfred Russell Wallace (1823-1913)) என்பவரின் ஆய்வு முடிவுகள், அவ்விருவரின் ஆய்வு முடிவுகளுக்கு வலுவூட்டியது எனலாம். இவரே, 1876 இல் “Geographical Distributions” என்ற கட்டுரைகளையும் தீட்டினார்.

அதில், உயிரனங்களின் தோற்றமும் புலப்பெயர்வுகளும் என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டிருந்தார். மனித இனத் தோற்றத்திற்கு முன்னரான உயிரின தோற்றங்களையும் வரையறுத்த அவ்வாய்வில், தென் தமிழகம் முதல் மதகாஸ்கர் தீவு வரையிலான பகுதிகளில் உயிரனங்கள் உருவாகி வளர்வதற்கான புவியியல் சூழலை விவரித்திருந்தார்.

1864 ஆம் ஆண்டு, ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclater) என்னும் விலங்கியல் ஆராய்ச்சியாளர், “Mammals of Madagascar” என்னும் அறிவியல் ஆய்வுக்கட்டுரையை, “The Quarterly Journal of Science” என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டு இருந்தார்.

மதகாஸ்கார் ஒட்டியப்பகுதிகளிலேயே 30ற்கும் மேற்பட்ட உயரினப்பிரிவு உயிரினங்கள் கிடைக்கப்பெற்றமையால், அதுவும் லெமூர் என்னும் இனப்பிரிவு, ஆதலால், அதனை ‘லெமூரியா’ என அழைக்கலாம்” என்றும் எழுதியிருந்தார்.

மேலும் அதில், “கிடைக்கப்பெற்றிருக்கிற பாலூட்டிகளின் தொல் எச்சங்களின் ஆய்வுப்படி, மதகாஸ்கர் பகுதிகளில் 30ற்கும் மேற்பட்ட, இந்தியத் துணைக்கண்டக் கடலை ஒட்டியப் பகுதிகளில் 3 வகை, ஆப்பிரிக்கப் பகுதிகளில் 12 வகையான லெமூர் வகை உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்களும், இம்மூன்று நிலப்பகுதிகளும் இணைக்கப்பட்டே இருந்திருக்க வேண்டும், ஒவ்வொன்று தொடர்புடைய புவியியல், சூழலியல் கொண்டதாலேயே, ஒரே வகையான இனப்பிரிவு உயரினங்கள் இப்பகுதிகளில் வாழ்ந்திருக்கும். பிற்காலத்திலேயே, இந்த மிகப்பெரிய நிலப்பகுதிகள் நிலத்தட்டு நகர்வில் நிலப்பிரிவிற்கு உள்ளாகி, தென்கிழக்கு ஆசியாவின் ஒரு பகுதியாகவும் தென் ஆப்பிரிக்கக் கண்டங்களாகவும் நிலைப்பெற்றிருக்க வாய்ப்புள்ளது” என்று வரையறுத்தார்.

1876 இல், “History of Creation” என்ற நூலில் உலக அளவில் பிரபலமான ஹெகலே (Haeckel) என்னும் புவியியல் ஆய்வாளர், மனித இனத்தின் தொட்டில் என்று தமிழகத்தின் தென்கோடியைக் குறிப்பதோடு, தென்தமிழகம் முதல் தென் ஆப்பிரிக்க முனை வரை நீண்ட ஆய்வுத் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

Ernst Haeckel Map Lemuria Human Origins
மனித இனம் தோன்றியதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கும் ஹெகலே அவர்களின் வரைபடம்! Ernst Haeckel Map Lemuria Human Origins

இதனைத் தொடர்ந்து, 1904 ஆம் ஆண்டில், ஸ்காட் எலியாட் (W. Scott-Elliot) என்பவரின் “The Lost Lemuria” என்ற நூல் வெளியானது. அப்புத்தகத்தில், “ஆப்பிரிக்கா முதல் தென் முனை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (நிலம் மற்றும் கடலுக்கருகாமையில்) கிடைக்கபெற்ற தொல்பொருள் ஆய்வு முடிவுகளை இணைத்து, லெமூரியாவின் எல்லை என மதகாஸ்கர் முதல் தென் தமிழக கடல் வரை உறுதி செய்கிறது.

இவை கிட்டத்தட்ட, ஃபிலிப் ஸ்க்லேடர் எழுதிய “Mammals of Madagascar” ஆய்வுக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தகவல்களை இன்னும் வலிமையானதாகவும் உயிரின உருவாக்கம், வளர்ச்சி கோட்பாடுகளை கிடைக்கப்பெற்றிருந்த தொல்லியல் எச்சங்களின் ஆய்வுகளோடு பொருத்திப் பார்த்து விளக்கம் அளித்தது எனலாம்.

 

மரபணு அறிவியல் சொல்லும் செய்தி என்ன?

அதேபோன்று, உயிரணு சோதனைகள் வழியாகவும் ஆப்பிரிக்கா கண்டத்தில் ஆதி மனிதனுக்குரிய மரபணுக்களை கண்டறிந்த ஆய்வுகள் மதுரைக்கு அருகேவும் அதே போன்றதொரு மரபணுக்களைக் கொண்ட ஒரு சில மனிதர்களை கண்டறிந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

1987இல் இலங்கையின் தென்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின் பொழுது கிடைக்கப்பெற்ற எலும்புத்துண்டுகளின் மரபணுக்கள் இன்றைய நவீன மனிதனான Homosapiensக்கு முந்தைய பரிணாம உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை நிறுவியது. அதேபோன்றதொரு மரபணுக்கள் கொண்ட எலும்புத்துண்டுகளின் படிமங்கள் ஆப்பிரிக்காவின் தென் முனையிலும் கிடைக்கப்பெற்றதையும் நாம் ஒன்றோடு ஒன்று முடிச்சிப்போட்டு பார்த்துக்கொள்ளவேண்டும். கடலால் பிரிக்கப்படும் முன் நிலம் ஒன்றாக இருந்ததற்கான சாட்சியங்களாக இவைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். (https://www.researchgate.net/publication/20045556_Upper_Pleistocene_fossil_hominids_from_Sri_Lanka).

தமிழிலக்கியச் சான்றுகள்:

தமிழின் சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம் குறித்த மேற்கோள்கள் எராளம். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

  • சிலப்பதிகாரம்

வாழ்க எம்கோ மன்னவர் பெருந்தகை

ஊழிதோறு ஊழிதொறு உலகம் காக்க

அடியில்தன் அளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து

குமரிக்கோடும் கடுங்கடல் கொள்ள

வடதிசை இமயமும் கங்கையும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி…..

பொருள்: மன்னரில் பெருமை உடைய மன்னர் பெருந்தகை வாழ்க! காலம் காலமாக  இவ்வுலகைக் காத்து வருபவரே!. தன் நிலத்தின் தெற்கே தன் திறமையையும், வீரத்தையும் பகையரசர்கள் தெரியக் காட்டியவர் என்பதனால் வெற்றி வேலின் முன்னே நிற்க பயந்து பகையரசர்கள் ஓடி ஒளிந்தனர்.

தென்திசையில் நெடுந்தூரம் பரவியிருந்த, பஃறுளி ஆறும், பலமலை அடுக்குத் தொடர்களும், குமரிமலையும் கடல் கொண்டு போனதால், தெற்கே படையெடுக்க நிலம் இல்லாமல் போக, வடதிசை சென்று கங்கை ஆற்றையும், இமயமலையையும் வென்று அரசாண்ட தென்னவன் பாண்டியன் வாழ்க! என்று இந்தப் பாடல் பேசுகிறது.

 

  • மணிமேகலை

 

தீங்கனி நாவல் ஓங்கித் தீவிடை

இன்றேழ்நாளில் இருநிலமாக்கள்

நின்று நடுக்கு எய்த நீணில வேந்தே

பூமி நடுக்குறூ உம்போழ்த்த்து இந்நகர்

நாகநல்நாட்டு நானூறு யோசனை

வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்

பொருள்: நெடிய நிலத்தை ஆளுகின்ற அரசே! ஈதொன்று கேட்பாயாக! இனிய கனிதரும் நாவல் மரம் நிலை பெற்று ஓங்கி நிற்கும் இந்நாவலந்தீவினிடத்தே  இற்றைக்கு ஏழா நாளிலே; பெரிய நிலத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் செயலற்று நின்று அச்சத்தால் நடுக்கமுறும்படி; -நிலநடுக்கம் உண்டாகும் அப் பொழுது நினது தலைநகரமாகிய இந்த நகரமும் கிழக்குத் திசையிலமைந்த நாகருடைய நல்ல நாட்டின்கண் நானூறு யோசனை நிலப்பரப்பும் அகன்ற பாதலத்திலே அழுந்தி அழிந்தொழியும் காண்!

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் செனீகல் நாட்டின் அன்றைய அதிபர் செங்கோர், 1974 ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓர் நிகழ்ச்சியில், “ஹெச்.ஜி.வெல்ஸ் மற்றும் ஹெகேலே அவர்கள் கூறியது போல மனித இனத்தின் தொட்டிலான குமரிக்கண்டத்தை சுமக்கும் தமிழகத்தில் பேசுகிறேன்” என்பதை குறிப்பிட்டு, எகிப்தும் மெசபடோமியாவும் நாகரீக வளர்ச்சி அடைய இங்கிருந்து வந்த மனித கூட்டமே காரணம் என்று எடுத்துரைத்தார்.

அதோடு அம்மாநாட்டில், தமிழகக் கடலில் கடலியியல் அகழ்வராய்ச்சி தொடங்க வேண்டிய அவசியத்தையும் அதிபர் செங்கோர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் பேசப்படும் மொழிகளில் தமிழ் சொற்களே ஏராளம் என்பதால் முதன் மொழி தமிழாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்றும் பேசியிருந்தார்.

அடுத்து, ஸ்பெயின் நாட்டில் இருந்து 1920இல் மும்பை புனித சேவியர் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக வந்த ஹென்றி ஹீராஸ் என்னும் பாதிரியார், 1955 இல் எழுதிய “Studies in Proto-Indo-Mediterranean Culture” என்னும் புத்தகம் நிறைய புதிர்களுக்கு விடையளிக்கும் விதமாக இருக்கிறது எனலாம்.

ஹீராஸ் அவர்கள்தான், முதன்முதலில் சிந்துசமவெளி நாகரீகத்தை ஆய்வு செய்து, அங்கு கிடைக்கபெறும் எழுத்துருக்கள் பண்பாட்டு அடையாளங்களை ஆய்வு செய்து, மெசபடோமிய நாகரீகம் மற்றும் சுமேரிய நாகரீகத்தையும் ஒப்பிட்டு இம்மூன்று பகுதிகளிலும் கிடைக்கப்பெற்ற அனைத்து அடையாளங்கள் மற்றும் மொழித் தடயங்கள் தமிழ் மொழியின் வடிவங்களை கொண்டுள்ளது என்று நிறுவியவர்.

இவ்விரண்டு செய்திகளும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக, பண்டைய நாகரீகங்கள் வளர்ந்ததாக கூறப்படும் அனைத்து இடங்களிலும் தமிழர்களின்/தமிழின் தொடர்பே உள்ளது என்பதை கவனித்தில் கொள்ளலாம்.

முடிவுரை:

இக்கட்டுரையின் வழியே தமிழிலக்கியத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளச் செய்திகளையும் நவீன அறிவியல் மற்றும் நிலவியல் கோட்பாட்டின் அடிப்படையிலும் தமிழத்தின் தென்முனை குமரிக்கண்டம் முதல் ஆப்பிரிக்கக் கண்டம் வரையிலான பகுதிகளுக்கு இருந்தத் தொடர்பை என்னாலான அளவுகளில் பலத் தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளேன்.

ஆதிக்குடிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர் என்பது இன்று வரை உலகம் ஏற்றுக்கொண்டக் கோட்பாடுதான் எனினும் நிலவியல் கோட்பாட்டையும் மரபணு அறிவியல் கோட்பாட்டையும் இணைத்தும் வருங்கால அறிவியல் இன்னும் புதியச் செய்திகளையும் உறுதியான செய்திகளையும் கூட வழங்கலாம்!.

மேலும் தகவல்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் படிக்கவும்:

  • The riddles of three ocean – Alexander Kondratov
  • Supercontinent – Ted Nield
  • The lost land of Lemuria – Sumathi Ramasamy
  • In the search of Lemuria – Mark Williams

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: