தமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்!

ஈழத்தின் மீது நடத்தப்பட்ட இனவழிப்புப் போர்களில், கொடூரமாகவும் மூர்க்கமாகவும் நடந்தேறியது முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தப்பட்ட 2009 போர்! இலங்கைத் தீவின் சிங்கள ’அரசு’தான் முன்னின்று நடத்தியது எனினும், 2002 தொடக்கம் பல்வேறு நாடுகளின் தொடர் சதிகளிலும் வலைப்பின்னல்களும் இல்லாமல் நடந்தேறவில்லை.

ஈழம் குறித்தான உணர்ச்சிகள், கதறல்களுக்கு அப்பாற்பட்டு, 2002 முதல் 2018 வரை நடந்த, நடக்கும் அரசியல்களின் தொகுப்பை ஆராயாமல் விடுவோமேயானால், கடைசிவரை தமிழர்களுக்காக அழுதுக்கொண்டு மட்டுமே நிற்க முடியும்! தீர்வை நோக்கி நகர்வது கடினமே!

இன்னும் குறிப்பாக, 2009ற்கு பின்னரான ஈழத்தின் அரசியலை சிதைத்த அரசியல் சதிகள் இனவழிப்பை விட வீரியமானவை எனலாம். ஏற்கனவே 2009 முதல் 2015 வரை நிகழ்ந்த அரசியல் சதிவலைகள் குறித்து சென்னையில் 2015 செப்டம்பரில் நடந்த கூட்டம் ஒன்றில் விரிவாக விளக்கப்படுத்தியுள்ளேன். அதன் காணொளி இங்கே: https://www.youtube.com/watch?v=_BvWvehWmiw. இக்காணொளியும் இக்கட்டுரையும் தமிழர்களை அழித்த பன்னாட்டுச் சதியினைத் தொகுத்து வழங்குகிறது. அதோடு, 1) இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்! 2) சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!ஆகிய கட்டுரைகள் இந்தியப் பெருங்கடலின் பொருளாதார மற்றும் இராணுவ முக்கியத்துவத்தை விளக்குகிறது. இவை அனைத்தும் தமிழீழ அரசியலின் பன்னாட்டுப் பரிணாமத்தை விளக்க எழுதப்பட்டது.

‘ஈழத்தின் இனவழிப்பில் பன்னாட்டு அரசியல் சதிகள்’ என்னும் இக்கட்டுரையில், ஈழ அரசியலை 2002-2009 மற்றும் 2009 முதல் 2018 என இரு பிரிவாக வகைப்படுத்தி விரிவாகவும் எழுதியுள்ளேன்.

1) புலிகளின் தடை மற்றும் வலுச் சமநிலை சிதைத்தல்

2) இராணுவ பயிற்சியும் ஆயுதங்கள் வழங்கலும் -பன்னாட்டுச் சதிகள்

3) நோர்வே மற்றும் ஐ.நாவின் செயல்பாடுகள்

4) அமெரிக்கத் தீர்மான நாடகம்

5) சிங்கப்பூர், லண்டன் மாநாடுகளும் ஆட்சிமாற்ற அரசியலும்

இங்கே 1-3 வரையிலான பிரிவு 2002-2009 வரை நடந்த பன்னாட்டு சதி வலைகள் குறித்தும், 4-5 பிரிவு 2009 முதல் 2018 வரை நடந்த அரசியல் சதிகளின் தொகுப்பு ஆகும். இவை ஒவ்வொன்றைப்பத்தியும் தனித்தனியாக மிக விரிவான ஆதரங்களை பதிய முடியும் எனினும், தமிழர்கள் தரப்பிற்கு முதலில் ஈழம் குறித்தான ஒரு பரந்துப்பட்டப் பார்வையை புகுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1) புலிகளின் தடை மற்றும் வலுச்சமநிலை சிதைத்தல்

இந்திய அரசு unlawful activites act (prevention) 1967 சட்டத்தின் படி விடுதலைப் புலிகளை தடை செய்தது. அமெரிக்க ஐக்கிய அரசுகள் (USA) 1997 ஆண்டிலும் ஐக்கிய அரசாட்சி- பிரித்தானியா (United Kingdom) 2001 ஆண்டிலும் தடை செய்தன.

இலங்கையின் அன்றைய (2001) வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இந்திய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜஷ்வந்த் சிங்க் வழியாகத்தான் பிரித்தானியாவின் புலிகள் தடைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் செய்திகள் உண்டு. (https://www.wsws.org/en/articles/2001/03/sri-m15.html)

மேலே குறிப்பிட்ட இந்திய மற்றும் அமெரிக்க ஒன்றியங்களின் தடையை விட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை பிரித்தானியாவின் தடை. 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் புலிகள் ஆணையிரவை கைப்பற்றி படை வலு சமநிலையை எட்டியிருந்தனர். ஆணையிரவு போரின் மூலம் புலிகள் இராணுவத் தாக்குதல்கள் உத்திகளில் புதியொதொரு பரிணாமத்தையும் எட்டியிருந்தனர் என்றும் சொல்லலாம். இலங்கை அரசப் பிரதிநிதிகள் பதறி அடித்துக்கொண்டு உலகம் முழுக்க தங்களுக்கான ஆதரவை நாடிச் சென்றுக்கொண்டிருந்த காலம் அது.

இந்திய ஒன்றிய அரசும் (அன்றைய பாஜக தலைமையிலான அரசாங்கம்) நேரடியான ஆயுத உதவியை வழங்க முடியாத தமிழகக் கூட்டணி நெருக்கடியில் இருந்தபொழுதும் ராஜதந்திர உதவிகளை எல்லாவகையிலும் மறைமுகமாக செய்யவேச் செய்தது.

புலிகள் தங்கள் பலத்தில் உயர்ந்து நின்ற வேளையில்தான் இன்னொரு மாயமலையும் விரிக்கப்பட்டது. நோர்வே அரசின் மேற்பார்வையில் சமாதானப் பேச்சுவார்த்தை. இதற்கான தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலத்தில் 2001 ஆம் பிப்ரவரி மாதம் பிரித்தானியா அரசு புலிகளை தடைச் செய்தது, மார்சு மாதம் அமெரிக்க ஒன்றிய அரசுகள் 1997இல் விதித்தத் தடையை நீடித்தது.

ஒருபுறம் இந்த தடை, சிங்கள பேரினவாதிகளால் கொண்டாடப் பட்டாலும் நோர்வேயின் சமாதான முயற்சியையும் அவர்கள் எதிர்த்திருந்தனர். ஆனாலும், சமாதானப் பேச்சுவார்த்தைத் தொடங்கும் முன் பிரித்தானிய அரசு விதித்தத் தடை மற்றும் அமெரிக்காவின் தடை நீட்டிப்பு மூலம் புலிகளை வலுச்சமநிலையில் இருந்து இறக்கிவிடும் சூழ்ச்சியும் இருந்தது என்பது சிங்களத் தரப்பு உட்பட அனைவருக்குமே தெரியும்.

அதேபோன்று, 2004இல் ஆழிப்பேரலையின் தாக்கத்தால், தமிழர் தாயகமும் கடும் பாதிப்பிற்கு உள்ளானது. விடுதலைப் புலிகள் திறன்பட தங்கள் கட்டுப்பாட்டு நிலத்தில் மக்களை மீட்டெடுத்தார்கள். எனினும், பன்னாட்டு நிதி வழங்குதலில் கடும் துரோகமும் நிகழ்ந்தது.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நோர்வே உள்ளிட்டவைகள் இணைந்து இணைத் தலைமை நாடுகளாக (Co-Chairs) இருந்து அமைதிப் பேச்சுவார்த்தையின் பொழுது டோக்கியோ கொடையாளி நாடுகள் குழு உருவாக்கப்பட்டது. சுனாமி நிதி உதவிக்கான கூட்டத்தை புலிகள் மீது தடை இருக்கும் அமெரிக்காவில் வைத்ததன் மூலம், புலிகளை பங்குபெறச் செய்யாமல் தவிர்த்தனர். அடுத்தடுத்து நடந்த பல்வேறு கூட்டங்களையும் வாசிங்க்டனில் நடத்தினர்.

பேச்சுவார்த்தைக் காலங்களில் நிறைவேற்ற வேண்டிய எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது இலங்கை அரசு தட்டிக்கழித்த வேளையிலும் புலிகளை குற்றவாளியாக்கும் ஆவணங்களை மட்டுமே இந்த நாடுகள் தயாரித்தன. ’இருத்தரப்பும் தவறுகள் செய்கிறது’, ’இருத்தரப்பும் குற்றங்களில் ஈடுபடுகிறது’ என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் பொழுதெல்லாம் உச்சரித்த இந்த நாடுகள், இலங்கை மீது மென் கண்டனமும் புலிகள் மீது கடும் கண்டனமும் தெரிவித்தனர்.060125vpsolheim

இதன் மூலம், புலிகளின் அரசியல் பலத்தை வலுவில்லாமல் செய்து, அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காமல்தான் பன்னாட்டளவில் இலங்கைக்கு சார்பான பல நடவடிக்கைகளை இணைத்தலைமை நாடுகள் இணைந்து செய்தன.

அடுத்து மிக முக்கியமானது ஐரோப்பிய ஒன்றியங்களின் புலிகள் மீதான தடை (மே 2006).

பன்னாட்டு அரசியல் தளங்களில் நின்று பார்த்தால், அவர்கள் இட்டது புலிகள் என்னும் அமைப்பின் மீதான தடை இல்லை. சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பன்னாட்டு நகரங்களில் (டோக்கியோ, ஓஸ்லோ, ஜெனிவா) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த, அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தரப்பை தடை செய்ததின் மூலம், தமிழர்களின் அரசியலை சிதைத்தனர். தமிழர் தேசத்தின் இறைமையை சிதைத்தனர் என்றுதான் கொள்ள முடியும். பன்னாட்டு விதிமுறைகளின் படி, இதனை சமாதானக் கொலை, அல்லது அமைதிக்கு எதிரானக் குற்றம் என வரையறுக்கலாம். (Crimes against Peace). geneva_talks_01_51167_435

// A crime against peace, in international law, refers to “planning, preparation, initiation, or waging of wars of aggression, or a war in violation of international treaties, agree ments or assurances, or participation in a common plan or conspiracy for the accomplishment of any of the foregoing” [1]. This definition of crimes against peace was first incorporated into the Nuremberg Principles and later included in the United Nations Charter. This definition would play a part in defining aggression as a crime against peace.

////

ஐரோப்பிய ஒன்றியங்கள் விதித்த புலிகள் மீதான தடையை, வரலாற்றுத் தவறு என தமிழ்நெட் இணையச்செய்திக்கு அளித்த பேட்டியில் (பிப் 2014), இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ப்ஃ என்றிக்சன் (சுவீடன்) தெரிவித்து இருந்தார். “இத்தடை விடுதலைப்புலிகளை பலம் இழக்கவும் செய்து, இலங்கை அரசை பலப்படுத்தி, போருக்கு இட்டுச் செல்லவும் கொடூரமான போருக்கு வழிவகுத்தது. புலிகளின் மீதான தடை மிக அவசர அவசரமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது எனவும் இத்தடைக்கான முடிவு நாடாளுமன்றத்தில் எடுக்காமல், பெல்ஜியம் தலைநகர் ஃபுருஷல்ஸ் தேநீர் கடையில் எடுக்கப்பட்டது” என்றும் கூறியிருந்தார். (பார்க்க: EU made big mistake in banning LTTE: Henricsson, former head of SLMM) Anton_Balasingham1.jpg

புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரும் அரசியல் ஆலோசகராகவும் இருந்த ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், “இத்தடையால் தமிழர்கள் தரப்பு படை பலம் இழந்து, மிகப்பெரிய அவலத்தை சந்திக்க வழிவகுக்கும்” என தனது கண்டனத்தை 2006லேயே பதிவு செய்திருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தொடரும் முன், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருப்பவைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதனை புலிகள் வலியுறுத்தியே அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு வர சம்மதிக்கவில்லை.

ஒருபுறம் நிதி வழங்கலை சிங்களத் தரப்பிற்கு மட்டுமே கொடுத்து, திருகோணமலையில் அமெரிக்க இராணுவம் நேரடியான ஆலோசனைகளை வழங்கிய நிலையில், இந்திய ஒன்றியத்தில் பல ஊர்களில் சிங்கள இராணுவத்திற்கு தனிப்பயிற்சி வழங்கிக்கொண்டிருந்த நிலையில், சிங்களத் தரப்பு தமிழர் பகுதிகளில் இராணுவத் தாக்குதல்கல், ஆள் ஊடுறுவும் படையணி மற்றும் வெள்ளை வேன் கடத்தல் மற்றும் கொலைகளையும், வான்வழித் தாக்குதல்கள், புலிகள் எல்லைகளில் வைத்திருந்த காப்பரண்களை தகர்க்கும் திடீர் தாக்குதல் எனவும் தொடர்ந்து வந்தனர்.

தமிழர்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என பலரையும் சிங்களத் தரப்பு கொலை செய்தது.

இவைகளையெல்லாம் குறித்தும் மென் கண்டனமும் பாராமுகமும் காட்டிய மேற்குலம் புலிகளை தொடர்ந்தும் குற்றம்சாட்டுவதும் மிரட்டுவதுமாக இருந்தது.

லக்ஷ்மண் கதிர்காமர் உட்பட்ட கொலைகளை எவ்வித சாட்சியங்களும் தெரிவிக்கும் முன்னரே புலிகள்தான் செய்தனர் என்று கண்டித்த மேற்குலம், தமிழர் தரப்பில் நடந்த எந்த கொலைகளையும் இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்றுதான் அறிக்கைகள் தந்தன.

இன்னும் குறிப்பாக, அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த சுப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் மூலம் படுகொலைச் செய்த சிங்கள அரசை தப்பித் தவறியும் ‘மிரட்ட’வும் இல்லை கடும்போக்கில் அணுகவும் இல்லை. 2002 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு நகரங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் கிளிநொச்சி வந்தபொழுதெல்லாம் புலிகளின் சார்பில் நடந்த அரசியல் சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளிலும் பொறுப்பு வகித்தவர் சுப. தமிழ்ச்செல்வன். இதன்மூலம் பேச்சுவார்த்தையே இல்லை, இராணுவத் தாக்குதல்களே என தெரிவித்த சிங்கள அரசுக்கு பன்னாட்டு அரசுகள் எவ்வித அழுத்தமும் கொடுக்காது ‘பாதுகாத்தன’.

2) இராணுவ பயிற்சியும் ஆயுதங்கள் வழங்கலும் – பன்னாட்டுச் சதிகள்

புலிகள் தரப்பை தடை செய்துக்கொண்டே, ஆயுதங்கள் கொள்வனவு, போக்குவரத்து வழித்தடங்களை மறித்து அழித்துக்கொண்டே, ஈழத்தமிழர்கள் நிதி நிறுவனங்களை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் முழுவதிலும் கைப்பற்றி, பணத்தை முடக்கிக்கொண்டே, தமிழர்களை உலகெங்கும் கைது செய்துக்கொண்டே, ’பன்னாட்டு சட்டங்களை பேணிக்காத்த’ மனித உரிமை வேடம் பூண்ட நாடுகள், இலங்கைக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதிலும், இராணுவத்திற்கான ஆயுதங்களை பெருமளவு வழங்கியதிலும் முன்னின்றன.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், 2003 ஆம் ஆண்டிற்குள் சிங்கள அரசு தனது கப்பல் மற்றும் வான்படை தளத்தை இருமடங்காக மாற்றியது. ஆயுத கொள்முதலை மூன்று மடங்காக்கியது. (https://thecarthaginiansolution.files.wordpress.com/2012/08/sri-lankas-military-the-search-for-a-mission-2004-blodgett.pdf)

இதைத்தொடர்ந்தும், சீனா வழங்கிய multi barrel launching tank முதலான பல்வேறு நவீன ஆயுதங்கள், அமெரிக்க, இந்திய, இங்கிலாந்து நாடுகள் வழங்கிய உளவு உதவி, இராணுவப் பயிற்சி, அதி நவீன ஆயுதங்கள், இராணுவ வீரர்கள் மற்றும் தளபதிகளே நேரடியாக புலிகளுடனான யுத்தத்தில் நின்றது முதல் தமிழின அழிப்பில் பன்னாட்டு நாடுகளின் பங்களிப்பு மிகப்பெரியது.

இந்திய ஒன்றிய அரசின் இராணுவ ஆலோசனை, உளவு உதவி, ஆயுத உதவிகளை வரிசைப்படுத்தி, 2014 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணையத்தின் இலங்கைக்கான விசாரணைக் குழுவிடம் என் பெயரிலேயே தனியே ஒரு ஆவணத்தைச் சமர்பித்திருந்தேன். அதில் பல்வேறு அறிக்கைகள், ஆவணங்களை சான்றாக குறிப்பிட்டு இருந்தேன். (பார்க்க: Vijayshankar Asokan testifies on Indian complicit in genocide)

இவையில்லாமல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து செய்த இராணுவ உதவிகள் குறித்து, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent people’s tribunal) 2013 ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டு பிரேமன் நகரத்தில் நடத்திய விசாரணை அறிக்கையில் மிக விரிவாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கும் அப்பாற்பட்டு, பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வு எழுத்தாளர் Phil Miller, ’Britain’s Dirty War’ என்னும் புத்தகத்தில் இங்கிலாந்தின் பங்கை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்துள்ளார். அதேபோன்று, Paul Moorcraft எழுதிய ’Total Destruction of Tamil Tigers’ என்னும் புத்தகத்தில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் இராணுவ உதவி குறித்த விரிவான ஆதாரப்பூர்வத் தகவல்கள் அடங்கியிருக்கும். இவைகளையெல்லாம் குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள இணைய முகவரிகளில் காணலாம்.

இந்த ஆவணங்கள், தரவுகள், தீர்ப்புகள் என அனைத்தையும் பகுத்தாயும்பொழுது, ஈழத்தின் இனவழிப்புப் போரிலும் தமிழர்களின் அரசியலை சிதைப்பதிலும் அமெரிக்க ஒன்றிய, பிரித்தானிய மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளின் தொடர் ஒத்துழைப்பும் பங்கும் இருந்துள்ளதைக் காணலாம். சீனா உள்ளிட்ட நாடுகள், இலங்கைத்தீவின் சிங்கள அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியது எனினும் மேற்கூறிய மூன்று நாடுகளுக்கு இருந்த தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலில் இருந்த பங்கை ஒப்பிடும்பொழுது குறைவு எனலாம். தமிழர்களுக்கு இனவழிப்பு நடந்தேற வேண்டும் என்பதிலும், தமிழர் இறையாண்மை தேசம் சிதைக்கப்பட வேண்டும் என்பதிலும் மேற்கூறிய மூன்று நாடுகளுக்கு இருந்த தொடர் ஓட்டமே இங்கு முக்கியத்துவமாக நான் கருதுகிறேன்.

3) நோர்வேயும் ஐநாவும்

நோர்வே அரசைப் பொறுத்தவரை, சமாதானம் முகமும் மென் முகமும் உலகெங்கும் பதிந்தவை. ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களத் தரப்பிற்கும் நடந்த பேச்சுவார்த்தைகளில் நடுவராக (mediator) இல்லாமல் தரகராகவே (broker) இருந்தனர்.

நடுவராக இருந்து இருத்தரப்பிற்கும் பேசவேண்டியவர்கள், முதலில் இருந்தே, வலியவர்களின் குரலாய் நின்றே பேசினார்கள்.

ஓஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பொழுதும் அதன்பின்பும் கூட, புலிகள் மீது தங்களுக்கு எது சரியோ அதனை திணிக்கவே நோர்வே முற்பட்டது. தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக் காலங்களில் புலிகளை பலவீனப்படுத்துவதற்காக உருவான பன்னாட்டுச் சூழலை அறிந்தே, பேச்சுவார்த்தை சிதைக்கப்படும், கொடூரமான போர் நடந்தே தீரும் என்பதையும் யாவரையும் விட நோர்வே அரசுக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கள அரசு தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பொழுதும், சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்களை கொலை செய்தபொழுதும், தமிழர்களுக்கு தீர்வினை தராமல் இழுத்தடித்தபொழுதும் சிங்களத் தரப்பின் குரலாகவே நின்றார்கள். போரின் உச்சக்கட்டத்திலும் தமிழர்கள் மீது இனவழிப்புத் தாக்குதல் தொடர்ந்தபொழுதும் புலிகளை சரணடையச் சொன்னார்களே தவிர தப்பித் தவறியும் போரை நிறுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

2008-2009 காலக்கட்டங்களில் நோர்வேயில் பல்வேறு அமைதி வழி தொடர் போராட்டங்களில் தமிழர்கள் ஈடுபட்டபொழுதெல்லாம், எங்களிடம் பேசி அரசுத்தரப்பினர், ”உங்கள் உறவினர்களையும், மக்களையும் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரச்சொல்லுங்கள், புலிகளுடனான போரில் நீங்கள் பலியாகாதீர்கள்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ’புலிக்கொடி ஏந்தாதீர்கள், தமிழீழம் என சொல்லாதீர்கள், விடுதலைப் புலிகளை ஆதரிக்காதீர்கள்’ இப்படி நிறைய நிறைய தமிழர் தரப்பிற்கு போதித்துக்கொண்டே இருந்தனர். நோர்வே வந்த புதிதில் 24 வயது இளைஞராக இதெல்லாம் கடும் ஆச்சர்யத்தை விளைவித்தது. ஆனால், தொடர்ச்சியாக, எரிக் சொல்ஹைம் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் கலந்துகொண்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகளின் பொழுதும் சந்திப்புகளின் பொழுதும் நோர்வேயின் முகத்தினை புரிந்துகொள்ள முடிந்தது.

ஏனைய நாடுகளும் இதனையே அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்குச் சொன்னாலும், சமாதானத் தூதுவராய் நின்ற நோர்வே நாடு போர் உச்சக்கட்டம் அடைந்ததும் புலிகளுக்கு ஆதரவாக எதுவும் திரும்பிவிடாமல் பார்த்துக்கொண்டது துரோகத்தின் உச்சம் எனலாம்.

நோர்வேயின் சமாதான முயற்சி குறித்து விரிவாக அலசப்பட்டு விவரண அறிக்கையாகவும் 2011இல் நோர்வே அரசு வெளியிட்டது (பார்க்க: Pawn of Peace – Norwegian Report).

இந்தியா மற்றும் மேற்குலகின் பங்கை தொட்டுக்காட்டியபொழுதும், தங்கள் தரப்பில் எவ்வித தவறும் நிகழாதது போன்ற பூசிமெழுகிய அறிக்கையாகவே இதனை நோர்வே அரசு தயாரித்து இருந்தது. சமாதானத் தூதுவராய் இருந்தும் தமிழர்கள் தரப்பிற்கு மட்டும் ஏன் ’போதனை’ செய்தார்கள் என்பதற்கு எவ்வித சுய விளக்கமும் அவ்வறிக்கையில் விளக்கம் இல்லை.

அதேபோல, 2011இல் ஐநாவின் பொதுச்செயலாளர் நியமித்த மூவர் குழுவின் அறிக்கையில், ”பன்னாட்டு நாடுகள் மற்றும் அமைப்புகளின் தோல்வியை” ஏற்றுக்கொண்டாலும், (https://www.tamilnet.com/art.html?catid=79&artid=33808) 2012இல் வெளியான Charles Petrie அறிக்கையில், ”ஐநாவின் தவறை” ஏற்றுக்கொண்டது.  (http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/The_Internal_Review_Panel_report_on_Sri_Lanka.pdf)

ஐ.நாவின் நேரடி செயல்பாட்டில் மிகப்பெரிய குற்றமாக நாம் சுட்டிக்காட்டுவது வெள்ளைக்கொடி விவகாரத்தை. (https://www.channel4.com/news/sri-lanka-war-crimes-soldiers-ordered-to-finish-the-job)

புலிகளை சரணடையச் சொன்ன நோர்வே உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ஐநா, இந்தியப் பிரதிநிதிகள் என இவர்கள் யாருமே, ’வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலிகளின் அரசியல் பிரிவித் தலைவர்கள் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்டவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை பொருட்படுத்தவே இல்லை.

மக்களை இராணுவப் பகுதிக்கு வர்ச்சொல்லி அழைத்த நோர்வே உள்ளிட்ட நாடுகள், ’முள்வேலி முகாம்களிலும் வதைமுகாம்களிலும் நடந்த சித்திரவதை, பாலியல் வன்புணர்வுகள், கொலைகள்’ குறித்து எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இவர்களை நம்பித்தான் புலிகளைவிட்டு வெளியேற தமிழ் மக்களை கட்டாயப்படுத்தினார்கள்.

நோர்வே வெளியிட்ட விவர அறிக்கையும் ஐநாவின் விவர அறிக்கையும் சிங்களத் தரப்பு ஈடுப்பட்ட குற்றங்களை வரிசைப்படுத்தியும் தமிழர்களுக்கு உரிய நீதிக்கான குரலின் அவசியத்தை சொன்னாலும், இனவழிப்பு நடந்ததென்பதை ’வார்த்தைகளில்’ மட்டும் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டனர். அதேபோல, சிங்களத் தரப்பை குற்றம்சாட்டும் அனைத்து வரிகளிலும் ’இருத்தரப்பு’ என்ற வார்த்தையையும் இணைத்துக்கொள்வர். இதன்மூலம் சிங்களத் தரப்பின் இனவழிப்புக் குற்றச்சாட்டுகளில் இருந்து காத்துவந்தனர்.

4) அமெரிக்கத் தீர்மான நாடகம்

ஐநாவின் மனித உரிமை மன்றத்தில் அமெரிக்க ஒன்றிய அரசுகள் முன்னெடுத்த மனித உரிமைத் தீர்மானங்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இருந்தது. தொடக்கம் முதலே எதிர்க்கருத்தும், இது திசைத் திருப்பும் நடவடிக்கைதான் என்பதிலும் ஒருசாரார் தீர்க்கமுடன் எடுத்துரைத்தும் வந்தனர்.

2012இல் முதல் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருவதற்கு முன்னரான தமிழர் அரசியலின் காலச்சூழலும் 2015ற்கு பின்னரான காலச்சூழலும் தமிழீழ அரசியலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனை நாம் முழுமையாக உணரும்பொழுதே, ஐநாவின் மனித உரிமை அவையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தினை நாம் உணர முடியும்!

2009 போர் முடிந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தை மெளனிப்பதாக அறிவிக்கப்பட்டச் சூழலின் பின்னர், அரசியல் வழி நின்றே அடுத்ததாக தொடர்ந்தும் போராட முடியும் என்ற நிலை உருவானது.

2009 மே மாதம் போர் முடியும் 8 நாட்களுக்கு முன்பே, மே 10 ஆம் நாள் நோர்வேயில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பு தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. பல்வேறு நெருக்கடிகள், போரின் உச்சக்கட்டம், விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு நிலத்தை முழுமையும் இழந்து மிக குறுகிய நிலப்பகுதியில் சுறுங்கி நின்ற வேளையிலும்கூட, நோர்வே வாழ் தமிழர்கள் பெரும்பாலுமானவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் தமிழீழ விடுதலையை ஆதரித்தும் வாக்களித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தில் நிற்கும் வேளையிலேயே நடத்தி முடிப்பதன் அரசியல் பலத்தை உணர்ந்தே போரின் முடிவுக்கு முன்னரே இந்த உலகம் தமிழர்களுக்கு போதித்த ’ஜனநாயக’ குரலை தமிழர்கள் உயர்த்திக்காட்டினர். (பார்க்க: Model Referendum – Norway – May 2009)

இதன் தாக்கத்தில் போர் முடிந்த நிலையில், நோர்வேயில் தமிழர்களின் அரசியலை முன்னெடுக்கும் ஜனநாயக அமைப்பை உலகில் முதன் முறை உருவாக்கினோம். முறையான தேர்தல் நடத்தி அரசியல் பிரதிநிதிகளை மக்களில் இருந்து நோர்வேயின் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் நானும் ஒருவன். அதன் பிறகும் பல நாடுகளில் நடந்த இம்முறையிலான தமிழீழ மக்களவைகளையும் சேர்த்துப் பார்த்தால், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்நாட்டுத் தமிழன் நான் தான்! (பார்க்க: Norwegian Council of Eelam Tamils election results)

அதேபோல 2010 மே மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. தமிழீழ மக்களவைகள் தனித்தனியே பல்வேறு நாடுகளிலும், பின்னர் ஒருங்கிணைந்த அனைத்துலக மக்களவைகளாகவும் செயல்பட, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பன்னாட்டு அமைப்பாக செயல்பட்டது(பார்க்க: TGTE formation).

இப்படியாக, 2009-2010 காலக்கட்டத்திலேயே தமிழர்கள் தங்கள் அரசியல் பலத்தை உலகெங்கும் நிலைநிறுத்தி, தமிழீழ மக்களுக்கான நீதியையும் அரசியல் தீர்வு நோக்கிய போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். அடுத்தடுத்து உலகெங்கும் சில சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். இன்னும் குறிப்பாக, பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People´s tribunal) ஐர்லாந்து நாட்டின் தலைநகர டப்ளினுல் நடத்திய நீதி விசாரணையில் இனவழிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் போர்க்குற்றம், மாந்தநேயக் குற்றம் தொடர்பாக விரிவான தீர்ப்பை வழங்கியிருந்தது (பார்க்க:PPT Verdict 2010).

அதேபோல, பிரித்தானியாவின் சானல்4 போர்க்குற்றம் குறித்த சாட்சியங்களை வரிசையாக ஆவணப்படுத்தி வெளியிட்டது.

2011-2013 காலக்கட்டங்களில், இந்தியாவின் Headlines Today, NDTV மற்றும் Tehalkaவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் தனித்தனியே சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிகள், முள்வேலி முகாம்கள், போர் நடந்த தமிழர் பகுதிகளில் இரகசியமாக பயணித்து ஆவணங்களை வெளியிட்டனர். இம்மூன்று நடவடிக்கைகளில் நானும் மருத்துவர் எழிலன் மற்றும் ரத்ன செந்தில்குமார் மற்றும் சிலரும் பின்னின்று உழைத்தோம். முதல்முறையாக ’Inside Srilanka’s Killing field – I witnessed Genocide’ என்று இனவழிப்பு என்ற வார்த்தையோடே தமிழர் குறித்த ஆவணம் வெளியானது இந்திய ஊடகங்களில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகையச் சூழ்நிலையில்தான், தமிழர்கள் தன்னிச்சையாக அரசியல் மற்றும் நீதிப் போராட்டங்களை திசைத் திருப்பும் விதமாக அமெரிக்கப் போர்வையில் மனித உரிமை அவைத் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பு, போர்க்குற்றம் என பன்னாட்டு விதிமுறைகளின் கீழ் சட்டவடிவிலேயே நிறுவ முடியும் என்ற நிலையில், மனித உரிமைகள் அமைப்பில் கொண்டுவரப்பட்ட 2012, 2013, 2014 தீர்மானங்களில் போர்க்குற்றம், இனவழிப்பு என எவ்விதமான சொல்லாடல்களும் இல்லாமல், மனித உரிமை மீறல், இருத்தரப்புக் குற்றங்கள், குடிமைக்குற்றம் (civil crimes), மத ரீதியிலான சிறுபான்மையினர் என்ற சொல்லாடல்கள் மூலம் நிரப்பப்பட்டன.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் நடந்த நோர்வேஜிய வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடனான நோர்வே தமிழர்கள் கலந்துக்கொண்ட சந்திப்புகளில் எல்லாம் எங்களுக்கு, ”முதலில் இப்படி வலுவில்லாத வரிகள் கொண்டு தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால்தான், அடுத்தடுத்து வீரியமாக்க முடியும். இல்லையேல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும் என” நாடகமாடப்பட்டது.

இதேவரிகளைத்தான், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, Global Tamil Forum மற்றும் தமிழகத்தின் சில அமைப்புகள் அச்சுப்பிசராமல் பேசினர்.

2009இல் தமிழ்நாட்டுத் தமிழர்கள், அரசியல்வாதிகள் சாதிக்க முடியாத, பேரெழிச்சி அரசியல் போராட்டத்தை 2013இல் மாணவர்கள் இணைந்து நடத்தினர். அன்றையக் காலக்கட்டத்தில் அது மாபெரும் வெற்றிதான்.

ஆனால், 2014இல் இப்படியான எழுச்சி மீண்டும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக பன்னாட்டுத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் தமிழகம் வந்து, அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான அலை உருவாகாமல் பார்த்துக்கொண்டனர். இதனையும் மீறி, இலங்கைத் தீவின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை தமிழகம் வரவைத்து நானும் கூட தனிப்பட்ட முறையில் அமெரிக்கத் தீர்மானம் குறித்த ’நச்சுப் பார்வையை’ புரிய வைக்க முயன்றேன்.

அதேபோல, மே17 இயக்கத் தோழர்கள் உமர், திருமுருகன் காந்தியோடு இணைந்து, தமிழீழப் பிரதிநிதிகள், தமிழ்நாடு மற்றும் பன்னாட்டுத் தமிழர்கள் அமைப்புகளைச் சார்ந்தோரை இணைத்து தமிழர்களுக்கென்று ’தனியாக’ தீர்மானத்தை முன்மொழிந்தோம். தீர்மானம் என்பது தமிழர்களின் பார்வையில் எப்படி இருக்கவேண்டும் என்று புரியவைக்க எடுத்த முயற்சி அது.

2014இல் அமெரிக்காவைச் சார்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் பாய்ல், அமெரிக்கா கொண்டுவரும் இந்த தீர்மானத்தின் மூலம் தமிழர் நிலத்தில் நடந்து வரும் இனவழிப்பையும் தடுக்க முடியாது, இனவழிப்புப் புரிந்தோருக்குத் தண்டனையும் வழங்க முடியாது என்று எடுத்துரைத்திருந்தார்  (https://tamilnet.com/art.html?catid=13&artid=37136).

அதேப்போல, யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன், தமிழ்க் குடிமைச் சமூகப் பேரவை (Tamil Civil Society Forum) மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும் அமெரிக்கத் தீர்மானத்தின் எதிர்விளைவுகளை எச்சரித்தே வந்தனர், 1) (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=37131), 2) (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=37140)

2012, 2013, 2014 காலக்கட்டங்களில் படிப்படியாக வீரியம் குறைக்கப்பட்டத் தீர்மானத்தின் மூலம் 2009-2012இல் வீரியம் பெற்றிருந்த தமிழர் குரல்கள் சிதைக்கப்பட்டது. திசைமாற்றப்பட்டது.

2015 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, மனித உரிமை நடவடிக்கைகளும் தீர்மான நாடகங்களும் அம்பலப்படத் தொடங்கியும், தமிழர்கள் தரப்பில் தீர்மானத்தை ஆதரித்தவர்கள், தங்கள் தவறை உணரவில்லை என்பது வருத்தமே! செய்யவேண்டியப் பணிகள் எத்தனையோ இருக்க, பழையதை கிளறுவதில் அர்த்தம் இல்லையெனினும் தமிழர்கள் தரப்பும் சிலவற்ற உணர்ந்து அடுத்தடுத்து நகரவேண்டியதை ஆரோக்கியமாக சிந்திக்கவே இதனை சுட்டிக்காட்ட வேண்டியத் தேவை உருவாகியது.

அதேபோன்று, 2012 முதல் 2015 வரை மடைமாற்றும் அரசியல் நடந்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், சிங்கள அரசின் தலைமையில் இருந்த ராஜபக்சேவை இல்லாது செய்து, போர்க்காலங்களில் அவரது அமைச்சரவையில் இராணுவத்தைக் கவனித்து வந்த மைத்திரிபால சிறிசேனாவை அதிபராக உருவாக்கவும் நோர்வே மற்றும் அமெரிக்கா இணைந்து செய்தது. இதன் சதிவலைகள் குறித்து, கீழே அடுத்தத் தலைப்பில் விரிவாக எழுதியுள்ளேன்.

5) சிங்கப்பூர், லண்டன் மாநாடுகள் மற்றும் ஆட்சி மாற்ற ’அரசியல்’

2009இல் நடந்த இனவழிப்புக்கு எதிரான நீதியை நிலைநாட்டவும் தமிழர் இறையாண்மையையும் தேசத்தையும் பாதுகாக்கும் அரசியல் அதிகாரத்தை உருவாக்கவும் தமிழர்கள் தரப்பு அரசியல் வழிகளிலும் சட்டவழிகளிலும் போராடி வந்த வேளையில் அதனை திசைத்திருப்ப மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கத் தீர்மான நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த தருவாயில், 2013 சிங்கப்பூரில் ஒரு கூட்டம் நடந்தது.

அதில் தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி சுமந்திரன், கொழும்பு சட்டத்துறைப் பேராசிரியர் தமிழ்மாறன், உலகத் தமிழர் பேரவைச் சார்ந்தோர் பங்குபெற, சிங்களத் தரப்பில் 2015இல் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த மங்கள சமரவீர, சிங்கள மனித உரிமை, சட்டத்துறையைச் சார்ந்தோர், இலங்கை இஸ்லாமியத் தரப்பினர் உள்ளிட்டோர்கள் கலந்துக்கொண்டனர். 2013லேயே ஆட்சிமாற்றம் குறித்தும் ராஜபக்சேவை வீழ்த்துவது குறித்தும் நடந்த சதிவலையில் தமிழர்களின் எவ்வித குரலும் மதிப்பளிக்கப்படவில்லை (பார்க்க: Singapore meeting 2013).

2009முதல் ராஜபக்சே என்ற தனிமனிதரை எதிரியாகக் காட்டி ஒட்டுமொத்த இனவழிப்பு முகத்தையும் ஒரு முகமூடியின் கீழ் திணித்துவிட்டு, அவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டால் தமிழர் தரப்புகள் யாரை அடையாளப்படுத்தி போராடும்? பிம்ப அரசியலிலும் உணர்ச்சி அரசியலிலும் பெரும்புகழ் பெற்ற தமிழர்களை தொடர்ந்து தனிநபர் நோக்கித் திருப்பியவர்களுக்குத் தெரியும், அந்த தனிமனிதரி ஆட்சியில் இருந்து வீழ்த்திவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதில் தமிழர்கள் குழம்பி நிற்பார்கள் என்று. இப்படித்தான் ராஜபக்சேவின் ஆட்சியின் வீழ்ச்சியே தமிழர்களின் வெற்றியென தமிழர்கள் ஆழ்மனதில் நம்பிக்கொண்டிருந்த வேளையில், சிங்கப்பூரில் 2013இல் அதற்கான திட்டமிடல் பன்னாட்டு அரசுகளின் துணையுடன் அரங்கேறியது.

2013இல் நடந்த சிங்கப்பூர் கூட்டத்திற்கு தென் ஆப்பிரிக்காவும் இரண்டு ஐரோப்பிய நாடுகளும் நிதி வழங்கியது. 2002இல் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பின் மீது திணிக்க முற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் தமிழர்கள் சார்பாக கலந்துகொண்டோர் ஏற்றுக்கொண்டனர்( பார்க்க: South Africa to Singapore: 2013-2015).

2015இல் ஆட்சிமாற்றம் நடந்து மைத்திரி-ரணில் கூட்டணி ஆட்சி உருவானதும் தமிழர்கள் தரப்பிற்கு, இராணுவ மையங்கள் அகற்றம், சிங்கள குடியேற்றம் இல்லாது செய்தல் போன்ற மாய வார்த்தைகள் மட்டும் காட்டப்பட்டு அதனையெல்லாம் நிறுவவும் கால அவகாசம் கேட்கப்பட்டது. 2015இல் மீண்டும் சிங்கப்பூரிலும் லண்டனிலும் கூடிய அதே கூட்டம், தமிழர்களும் சிங்களவர்களும் கைக்கோர்ப்பது, இலங்கையை வளர்த்தெடுத்தல் என்ற கோணத்தில் மட்டும் விவாதத்தை முன்னகர்த்தியது.

இனவழிப்பு, போர்க்குற்றம் எல்லாவற்றையும் மறக்கச்சொல்லி தமிழர்கள் தரப்பிற்கு ’உடுக்கை’ அடிக்கப்பட்டது.

2015 மே மாதம் கொழும்பு நகரில் தாஜ் கோரமண்டலில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அமெரிக்க ஒன்றிய அரசுகளின் செயலாளர் ஜான் கெர்ரி, ”இதுவரை அமெரிக்க அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இருந்த முறுகல் நிலை தகர்க்கப்படுவதாகவும், புதிதான உருவான அரசுடன் இணைந்து வலுவான ஒற்றை இலங்கையை உருவாக்கவும், நிலையான மனித உரிமைகளை பேணிக்காக்கவும் தயாராக இருப்பதாகவும்” எடுத்துரைத்தார். மேற்குலகம் தமிழர்களின் இனவழிப்பையும் அரசியலையும் தங்கள் நலனுக்கான பேரம் பேசும் பொருளாகாவே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு நேரடிச்சான்று இதுப்போன்ற நிகழ்வுகள் ( பார்க்க: John Keery’s speech at Colombo, May 2015).

இதேகாலக்கட்டத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த எரிக்சொல்ஹைம்-தமிழர்கள் இடையிலான கூட்டமொன்றில், ஜான் கெர்ரி பேசியப் பேச்சை தமிழர்களிடம் பேசினார் எரிக். குறிப்பாக, ’புதிதாக அமைந்துள்ள ஆட்சிக்கோ இலங்கையின் சிங்கள அரசுக்கோ எவ்வித அழுத்தங்களும் தமிழர்கள் மத்தியில் எழுந்துவிடக்கூடாது என ’அன்போடு’ பேசினார். அக்கூட்டத்தில் நானும் கலந்துக்கொண்டதோடு, கடுமையான வாக்குவாதத்தில் நான் ஈடுபட்டிருந்தேன். அவருடனான நீண்ட உரையாடலுக்கோ என்னுடைய முழுமையான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கோ அக்கூட்டத்தில் அனுமதியளிக்கப்படவில்லை.

——————————————————————————————————————————–

தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கைத் தீவின் தமிழர் தாயக தேசத்தையும் இறையாண்மையையும் சிதைப்பதில் தொடங்கி, முழுமையான இனவழிப்புக்கு ஆட்படுத்தி, தமிழர்களின் அரசியலை சிதைப்பதிலும் இப்பாடியான பன்னாட்டு நகர்வுகள் பலகாலமாக நடந்து வந்துள்ளது என்பதனையும் நாம் மறந்துவிட்டு நம் வருங்கால அரசியலை கொண்டு செல்ல முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரழிப்பு நடந்து 10 வருடங்கள் முடியப்போகிற நிலையில், தமிழர்கள் முதலில் இத்தகைய பலபரினாமங்களில் பன்னாட்டு சதிகளையும் புரிந்துக்கொள்ளவே இக்கட்டுரை எழுதப்பட்டது.

தமிழர்களை பொறுத்தவரை, 1948களில் இருந்து அறவழி அரசியல், 1970களில் இருந்து ஆயுத வழி அரசியல், 2009ற்கு பின்னர் அரசியல், சட்ட வடிவிலான போராட்டங்கள், 2015ற்கு பிறகு சிங்கள அரசுடனான சமரச அரசியல், கைக்கோர்ப்பு அரசியல், இணக்க அரசியல் என அனைத்தையும் செய்தாகிவிட்டது.

இனி தமிழர்கள் தங்கள் அரசியலை வடிவமைக்க என்ன செய்யலாம், சாத்தியங்கள் என்ன என்பது பற்றி நீண்ட திறந்த மனதுடனான உரையாடல் அவசியம் என்பதையும் இக்கட்டுரையின் வழியே வலியுறுத்த விரும்புகிறேன்.

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: