போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

(பூவுலகு ஏப்ரல் 2019 மாத இதழுக்காக எழுதப்பட்டது)

உலக நாடுகளுக்கு நோர்வே முன்மாதிரியாக திகழ்கிறது எனச் சொன்னால் மிகையில்லை! போக்குவரத்தினால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க நோர்வே எடுத்துவரும் முயற்சியை அனைவரும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இவைகள் குறித்த பார்வையே இக்கட்டுரை! இக்கட்டுரையைப் பொறுத்தவரை தொழிற்நுட்ப விளக்கங்கள் குறைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மாசில்லா போக்குவரத்துக்கள் பற்றின செய்திகளை உள்ளடக்கியே எழுதப்பட்டிருக்கிறது.

மார்ச் 2019ன் கணக்கின் படி, நோர்வே நாட்டில் விற்பனையான மகிழுந்துகளில் 58% மின்சக்தியில் இயங்குபவை! 2018இல் விற்பனையான மகிழுந்துகளில் 3 இல் 1 மின்சக்தி மகிழுந்து.  குறிப்பாக, மாசில்லா வாகனம் – Zero emission vehicles. மின்சக்தி மற்றும் கல்நெய் (gasoline-petrol) கலவை வாகனங்களை கணக்கிட்டால் விற்பனையான விகிதத்தில் 50% வருகிறது.  2017ஐ ஒப்பிடும்பொழுது 2018இல் 40% மின்சக்தி மகிழுந்து விற்பனை அதிகரித்து இருந்தது. இவ்வாண்டு இன்னும் கூட அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Electric car Norway

நோர்வே மக்களின் பெரும் ஒத்துழைப்பால், 2017ற்குள் 50000 மின்சக்தி மகிழ்ந்துக்கள் என்னும் இலக்கினை இரண்டரை ஆண்டுகள் முன்பாகவே 2015 ஏப்ரலிலேயே அடைந்துவிட்டது. 2025ற்குள் படிம எரிசக்தி மகிழுந்து இல்லா நோர்வே என்னும் கொள்கையினை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது நோர்வே அரசு!

இலக்கை அடைய மக்களுக்கான சலுகைகள்

மின்சக்தி மகிழுந்து பெருக்கத்தினை அரசின் செயற்திட்டமாக, நோர்வே வாழ் மக்களும் பெருமளவில் இக்கொள்கை முடிவில் பங்குக்கொள்ள வைக்க அவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட்டன.

  • சுங்கக் கட்டணம் இல்லை
  • பொதுப்போக்குவரத்து சாலைகளில் மின்சக்தி மகிழுந்துகள் செல்லலாம். (வாகன நெரிசல்கள் நிறைந்த சாலைகளில் பொதுப்போக்குவரத்திற்கும் தனிப்போக்குவரத்துகளுக்கும் தனித்தனிச் சாலைகள் உண்டு)
  • வாகன நிறுத்துமிடங்களில் இலவசம்
  • வாகன நிறுத்துமிடங்களில் இலவச மின்செருகி (plug-in)
  • இறக்குமதி வரி, விற்பனை வரி மற்றும் பதிவுக்கட்டணம் உள்ளிட்டவைகளில் சலுகைகள்
  • குறிப்பிட்ட இடங்களில் கப்பல்கள் மூலமே நீர்வழிச்சாலைகளை கடக்க முடியும். அதில், மகிழுந்துகளுடன் நாமும் பயணிக்கலாம். அத்தகைய கப்பல்களில், சிற்சில ஊர்களில், இடங்களில் மகிழ்ந்து கட்டணம் இல்லை

நோர்வே போக்குவரத்து மாசும் தீர்வும்

நோர்வேயின் போக்குவரத்தினால் உண்டாகும் கார்பன் மாசு ஒட்டுமொத்த நோர்வே நாட்டில் உமிழப்படும் மாசு அளவுகோலில் 3 இல் 1 மடங்காக இருக்கிறது. 2016 கணக்கின் படி, 16.5 மில்லியன் டன் கார்பன் -டை-ஆக்ஸ்டை மாசு போக்குவரத்துத் துறையினால் மட்டுமே உமிழப்படுவதாகவும், தனியார் மகிழுந்து மற்றும் கனரக வாகனங்களில் மட்டுமே 10 மில்லியன் டன் மாசு உமிழப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து திட்டம் 2016-2029 என்னும் கொள்கையினை பின்பற்றி, 2030ற்குள் மகிழுந்துக்கள், கப்பல்கள், கனரக சுமை உந்து (lorry), கட்டிடப் பணி உபகரணங்கள் வழியே உருவாகும் மாசின் அளவினை 3இல் 1 பங்காக குறைக்க செயலாற்றி வருகிறது நோர்வே.

இதில் வேடிக்கை என்னவென்றால், பசுமை இல்ல வாயுக்களை உமிழ்வதில் உலக அளவில் சீனா 27.51% கொண்டு முதலிடத்திலும் அமெரிக்க ஐக்கிய அரசுகள் 14.75% கொண்டு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்திய ஒன்றியம் 6.43% உமிழ்கிறது. நோர்வே 0.10%தான் உமிழ்கிறது.  இவை 2014ன் கணக்கு. இருப்பினும் தன் நாட்டில் தன் மக்களுக்கு விளையும் தீமைகளைக் கணக்கிட்டு தன் நாட்டு மக்களுக்கான தீர்வினை வழங்குவதோடு உலகிற்கும் வழிகாட்டியாய் இருக்கிறது. ஒட்டுமொத்த உலக வெப்ப சீர்கேடுகளையும் தன்னாலான வகையில் குறைக்கவும் முயல்கிறது.

பசுமை இல்ல வாயுக்களை உமிழும் நாடுகளின் பட்டியலில் கிட்டத்தட்ட 50ஆம் இடத்திற்கு கீழே இருக்கும் நோர்வே மின்சக்தி மகிழுந்து பயன்பாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தப்படியாக 4ஆம் இடத்தில் இருக்கிறது.

சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஐக்கிய அரசுகள் போன்ற நாடுகளில் உள்ள பெருநகரங்களில் இருக்கும் மகிழுந்துகளால் உமிழப்படும் கார்பன் டை-ஆக்ஸைட் வாயுக்களினால் ஒட்டுமொத்த உலக வெப்பமும் கூடுகிறது என்னும்பொழுது, நோர்வே போன்ற நாடுகள் பிறநாடுகளுக்கும் வழிகாட்டியாய் நிற்கிறது.

மின்சக்தி மகிழ்ந்துகளின் தயாரிப்பின்பொழுது உமிழப்படும் மாசு அளவினைக் கணக்கிட்டாலும் கூட படிம எரிசக்தி மகிழுந்துக்களால் உமிழப்படும் மாசு அளவினை விட 50% குறைவெனவே பலதரப்பட்ட ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. மகிழுந்துக்களால் உமிழப்படும் மாசுக்கள் அளவு குறைகின்றன என்றபொழுதிலும், மகிழுந்துக்களுக்குத் தேவையான மின் சக்தியினை மரபுசார்ந்த படிம எரிசக்தியினைக் கொண்டே உற்பத்தி செய்வதால் என்ன பலன் என்னும் கேள்விகளும் அறிவியல் தொழிற்நுட்ப உலகில் சுற்றிச்சுழலாமல் இல்லை!

மரபுசாரா மின் உற்பத்தியும் நோர்வே நாடும்

தங்கள் நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில், மரபுசாரா மின் உற்பத்தியினை பொறுத்தவரை, ஐஸ்லாந்து 100%, கென்யா, எத்தியோப்பியா, ஜாம்பியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் 90%ற்கும் மேல், கோஸ்டாரிகா 97.7%, நோர்வே 97.2%, உருகுவே 96.5%, ஜாம்பியா 95%, நியூசிலாந்து 83.2%, பிரேசில் 80% என இன்னும் பல நாடுகள் கோலோச்சி வருகின்றன.

நோர்வே நாட்டினைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டு 144 TWh மின் சக்தியினை நீராற்றல் கொண்டு உற்பத்தி செய்தது. மொத்த நாட்டின் உற்பத்தியில் இவை 97.9% ஆகும். 2019இல் இதுவரை, நீராற்றல் மின் உற்பத்தி 93.6%, காற்றாலை 4.2% மற்றும்  அனல் மின் உற்பத்தி 2.3% ஆகும்.

https://www.iea.org/publications/freepublications/publication/EnergyPoliciesofIEACountriesNorway2017.pdf .

ஐரோப்பிய அளவில் நீராற்றல் மின் உற்பத்தியில் நோர்வேயின் உற்பத்தி தொடமுடியாத உயரத்தில் நிற்பவை. 2008ஆம் ஆண்டிலேயே, நீராற்றல் கொண்டு மின் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 6ஆம் இடத்தினை நோர்வே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய அரசுகள் மற்றும் உருசியா ஆகியவை முதல் 5 நாடுகள்.

அதேபோல, காற்றாலை உற்பத்தியில், 2015இல் 883MW தயாரித்ததோடு, 2020ற்குள் 1000MW என்னும் இலக்குடன் பயணிக்கிறது.

 உயிரிவளிமத்தில் (Biogas) இயக்கப்படும் பேருந்துகள்

நோர்வே தலைநகர் ஓஸ்லோ நகரத்தில் ஓடும் பேருந்துகளை உயிரிவளிமம் கொண்டே இயக்குகிறார்கள். பேர்கன் நகரத்தில் மின்சக்தி மற்றும் உயிரிவளிமம் கலவை கொண்டு இயங்கும் பேருந்துகள் புதிதாக ஓடத்தொடங்கி உள்ளன. நீர்ம இயற்கை வாயு (liquified natural gas) அழுத்தப்பட்ட இயற்கை வாயு (compressed natural gas) கொண்டு இயங்கும் வாகனங்களை ஒப்பிடும்பொழுது முழுமையான பசுமைப் போக்குவரத்துக்கு உகந்தவை உயிரிவளிமப் போக்குவரத்து.

வளியெண்ணெய் (diesel) கல்லெண்ணெய் (petrol) கொண்டு இயங்கும் வாகனங்களை விட இயற்கை எரிவாயு வாகனங்கள் 65-80% குறைவாகவே கார்பன்-டை-ஆக்ஸைட் மாசு வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009-2014 காலக்கட்டத்திற்கென உருவாக்கப்பட்ட பால்டிக் உயிரிவளிமப் பேருந்துக் கொள்கை (Baltic Biogas Bus) நோர்வேயின் ஓஸ்லோ, பேர்கன், சுவீடனின் ஸ்டாக்ஹோம், எஸ்டோனியாவின் டால்லின்,லித்துனியாவின் கவுனோஸ், மற்றும் போலாந்தின் ரெஸ்ஜோவ், டோரூன் நகரங்கள் இணைந்திருந்தன. பெருநகரங்களின் போக்குவரத்துக்களில் உமிழப்படும் பசுமை இல்ல வாயு, காற்று மாசு மற்றும் ஒலி மாசு அளவுகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவையே பால்டிக் உயிரிவளிமப் பேருந்து திட்டமாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில், ஓஸ்லோ நகரத்தில் மட்டுமே வருடத்திற்கு 10000 டன் கார்பன்-டை-ஆக்ஸ்டை வாயு உமிழ்வது குறைக்கப்படுகிறது.

ரோமெரிக்கே என்னும் ஊரில் இயங்கும் தொழிற்சாலையில் மட்டுமே வருடத்திற்கு 50000 டன் உணவுக்குப்பைகளில் இருந்து பெறப்படும் உயிரிவளிமத்தினால் 135 நகரப்பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்திய பெருநகரகங்களில் நாள்தோறும், கொல்கத்தாவில் 12060டன் குப்பைகளும், மும்பையில் 11645 டன் குப்பைகளும், சென்னையில் 6404 டன் குப்பைகளும் உருவாகக்கப்படுகிறது. இவற்றில் குறைந்தது, 60% கரிமக் குப்பைகளே (organic wastes).

https://timesofindia.indiatimes.com/city/chennai/Chennais-per-capita-waste-at-0-7kg-highest-in-country/articleshow/28256852.cms

நம் பெருநகரங்களிலும், உணவுக்குப்பைகளை தனியாகப் பிரித்து ஐரோப்பிய நாடுகள் போல செய்ற்திட்டங்கள் வடிவமைத்தால் எத்தனை நன்மைகள் காத்து இருக்கின்றன. செய்யத்தான் ஆளிலை. நம் குரல்களை இதனை நோக்கியும் தொடர்ந்து ஒலிப்போம். நம் மண்ணைக் காக்க இந்த போராட்டக்குரலையும் ஓங்கி எழுப்புவதும் நம் கடமையே!

hybrid-electric-biogas-vanhool-bergen1
நோர்வேயின் பேர்கன் நகரத்தில் மின்சக்தி மற்றும் உயிரிவளிமம் (electric and biogas hybrid) கலவை கொண்டு இயங்கும் பேருந்துகள்

நீர்ம இயற்கை வாயு (Liquified natural gas) இயக்கப்படும் கப்பல்கள்

அதேபோன்று, நோர்வே தயாரிக்கும் கப்பல்களில் நீர்ம இயற்கை வாயுக்களை (liquified natural gas) மட்டுமே பயன்படுத்தும் முறைக்கொண்ட நவீன கப்பல்கள் ஏற்கனவே போக்குவரத்திற்கு வந்துவிட்டன. பயணியர் போக்குவரத்துக் கப்பல்களில் நோர்வேயில் இயங்கும் நிறுவனத்தின் மூலமாக உலகின் முதல் இரண்டு போக்குவரத்து கப்பல்கள் உருவாக்கப்பட்டு நோர்வே கடல்களில் சில ஆயிரம் மக்களை ஒவ்வொரு நாளும் பலநூறு கிலோமீட்டர்கள் சுமந்து பயணித்துக்கொண்டிருகிறது.

நோர்வேயில் இயங்கும் Fjordline நிறுவனத்தின் பயணிகள் கப்பல்
நோர்வேயில் பேர்கன் நகரத்தில் இருந்து  டென்மார்க் வட முனை ஹிர்தால்ஸ் நகரம் வழியே ஒஸ்லோ நகரத்திற்கு பயணிக்கும் fjordline நிறுவனத்தின் நீர்ம இயற்கை (liquified natural gas) எரிவாயுவால் இயக்கப்படும் கப்பல்.

ஒட்டுமொத்தமாக பழைய முறைப்படி (Diesel-வளியெண்ணெய்) இயங்கும் கப்பல்களை விட 20-25% கார்பன்-டை-ஆக்ஸ்டை வாயு குறைவாகவும், நைட்ரஜன்-ஆக்ஸ்டை வாயு 92% குறைவாகவும், நச்சுமிக்க கந்தகம் 0% ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளன.

https://brage.bibsys.no/xmlui/bitstream/handle/11250/2358040/17-2015-sla-Deliverable_Emission_Factors_LNGships_v2.pdf?sequence=3

இத்தகைய கப்பல்களில் இருந்து வெளியேறும் வாயுக்களில் இருக்கும் வெப்பத்தினை நீராவியாகவும் அது மின்ஆற்றலாகவும் மாற்றப்பட்டு கப்பல் போக்குவரத்தின் பொழுது, வாடிக்கையாளர் தங்கும் அறைகள், உணவகம், கேளிக்கை விளையாட்டு அறைகளுக்கான தேவையை நிறைவு செய்துக்கொள்வதால், போக்குவரத்தின் பொழுது தேவைப்படும் மின்ஆற்றல் அளவு குறைக்கப்படுகிறது.

LNG Shipsஅதேப்போன்று உலகளவில், ஏற்கனவே சிறிய ரக போக்குவரத்துக் கப்பல்கள், படகுகள், மீன்ப்பிடி கப்பல்கள் நீர்ம இயற்கை வாயுக்கள் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றன.

நீர்ம இயற்கை எரிவாயுக்கள் கப்பல்களுக்கு அடுத்தப்படியாக, ஹைட்ரஜன் கொண்டு, அல்லது, ஹைட்ரஜன், கடல் அலை, காற்றாலை கலவை எரிவாயுக்கள் (hybrid fuel) வழி பயணிக்க வல்ல கப்பல்கள் உருவாக்கம் குறித்தும் ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன. இத்தகைய ஆய்வுகள், நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் அந்தந்த நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கப்பல்கள் கட்டுமான நிறுவனங்கள் இணைந்து நடத்தி வருகின்றன.

இப்படியாக, உலக நாடுகள் பலவும் போக்குவரத்துகளினால் உண்டாகும் காற்று மாசினைக் குறைக்க பலவழிகளில், பல்வேறு தொழிற்நுட்பங்களைக் கொண்டு, மக்களையும் இணைத்து செயலாற்றி வருகின்றன. நாம் நமது ஊர்களில், மாநிலங்களில், நாட்டினுள் கடக்க வேண்டியப் பாதை தொலை தூரம் இருக்கிறது. நம் மண்ணையும், மக்களையும், நாட்டினையும் நேசிப்பது என்பது சுற்றுச்சூழலால் கூட ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து, தெளிந்து, தீர்வினை நோக்கிப் பயண்படுவதிலும் தங்கி நிற்கிறது.

 

6 thoughts on “போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s