தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை

(அந்திமழை மாத இதழுக்கு எழுதியக் கட்டுரை – மே 2019)

இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 10-20 ஆண்டுகளிலேயே இணைய வசிதிகள் பெருகியதன் விளைவில், சமூக ஊடகங்கள் அவரவர் கைகளில் எந்நேரமும் தவழத் தொடங்கியப் பிறகு, தேர்தலுக்கு முன்பே நம் மக்கள் மீது பல்வேறு சிந்தனை ஊடுறுவல்களும் சிந்தனை மடைமாற்றங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இது போதாதென்று, தனியார் பெருமுதலாளிகளின் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், தேர்தல் விளம்பரங்கள், பிரச்சாரங்களுக்கு என தனித்தனியே நிறுவனமையப்பட்டக் காலத்தில், அரசியல் கட்சிகளுடன் இணைந்த செய்தித் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக் காலத்தில், தேர்தல் கால கருத்து கணிப்புகள் எவ்வளவு உண்மையானவை எனபதில் கேள்விக்குறி உண்டு! கருத்துக் கணிப்புகளை விட கருத்துத் திணிப்புகளே அதிகம்!

நம்மூர் செய்தி நாம் அறிந்ததே! ஏனைய நாடுகளிலும் இணைய, சமூக, தொழிற்நுட்ப வளர்ச்சியில் தேர்தல் கால கருத்துக் கணிப்புகள் எப்படி நடக்கிறது? எந்த அளவிற்கு உண்மைகளை தாங்கி உள்ளது என்பதை பருந்துப் பார்வையில் பார்க்கத் தூண்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேற்கத்திய நாடுகளில் கருத்துக் கணிப்புகள்:

மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதில் எக்கட்சிகளும் சாராத தனியார் நிறுவனங்களின் கைகளே ஓங்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையும் இவர்களின் செயல்பாடுகளில் மட்டுமே தங்கி உள்ளது. பெரும்பாலுமான அரசியல் கட்சிகளே கூட, இத்தகைய தனி நிறுவனங்களிடம் இருந்தே தகவல்களை விலைக்கொடுத்தும் வாங்கியே தங்கள் பிரச்சாரப் பயணத்தை மாற்றிக்கொள்வர். நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் பெரும்பாலும் கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பாரிய இடைவெளி இருப்பதில்லை என்ற பொழுதிலும், இங்கே எல்லாம் இந்திய ஒன்றியத்தைப் போன்று அரசியல் கட்சிகள் சார்ந்த செய்தித் தொலைக்காட்சிகள் கருத்தைத் திணிப்பதில்லை என்றும் பார்க்கவேண்டியுள்ளது.

அதேவேளை மேற்கத்திய நாடுகளிலும் கூட, வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் பொது மக்களின் பார்வையும் கருத்தும் மாற்றம் கொண்டவையே! ஆதலால், கருத்துக் கணிப்புகள் தொடர்ச்சியாக பல மாதங்கள், வாரா வாரம் நடத்தப்படுவதும் உண்டு. இறுதி நேரக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலுமான ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முடிவுகளோடு பொருந்தி வந்தாலும், சில வேளைகளில் மாற்றங்களும் சூழலைப் பொருத்தும் சர்வதேச அரசியல் மாற்றங்களை பொருத்தும் மாற்றம் காண்பதுண்டு.

இவை தேர்தல்காலத்திற்கு மட்டுமல்ல, தேர்தல்களுக்கும் அப்பாற்பட்டு, பல்வேறு பொதுவாக்கெடுப்புகளின் பொழுதும் கருத்துக் கணிப்புகளுக்கும் வாக்கெடுப்பு காலத்திற்குமான  முடிவுகள் மாற்றம் கொண்டவையே! உதாரணத்திற்கு, அணுசக்தி கொள்கை குறித்த பொதுவாக்கெடுப்பு காலங்களில், ஜப்பான் அணு உலை விபத்து நடந்த காலத்திற்கும் ஒரு வாரம் முன்பு ஒருவேளை கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பு அணு உலை விபத்து காலத்திற்கு பின்பு நடத்தப்பட்டால் முடிவு மாறியிருக்கும்!

பிரித்தானியாவின் பொதுவாக்கெடுப்பும் கருத்துக் கணிப்புகளும்:

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாக 2012இல் இருந்தே தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 2015 தேர்தலின் பொழுதுகூட, தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமாயின் கட்டாயமாக பிரித்தானிய வெளியேற்றம் குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அன்றையப் பிரதமர் டேவிட் காம்ரூண் வழங்கினார், வெற்றியும் பெற்று மீண்டும் பிரதமரானார். தன் நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகக்கூடாது என்பதாகவே இருக்கும் எனவும், பொதுமக்களின் கருத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுப்பதாகவும் கூறினார்.

டிசம்பர் 2015இல் நடந்த கருத்துக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை பொதுமக்கள் பெரும்பாலுமானோர் விரும்பவில்லை என்றத் தகவல்களே உறுதியானது. ஆனால், 6 மாதத்தில் நடந்த பொதுவாக்கெடுப்பில் பிரித்தானியாவின் வெளியேற்றத்திற்கு ஆதரவாகவே 51% மக்கள் வாக்களித்தனர். இருப்பினும், தன் நோக்கமும் தன் மக்களின் நோக்கமும் வேறாக இருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பதும் கூடுதல் செய்தி.

David-Cameron-MPs-Brexit-825225
Brexit பொதுவாக்கெடுப்பிற்கு பின் பிரதமரான தெரெசா மே அம்மையாரும் பிரதமர் பதவியில் இருந்து விலகிய டேவிட் காமரூன் அவர்களும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் குறித்தான சட்டவடிவிலான ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்படாமல் பல்வேறு காரணிகளால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இன்றைய நிகழ்காலச் சூழலில், பிரதமர் தெரசா மே அவர்களின் செயல்பாட்டில் நம்பிக்கை இழந்த பெரும்பாலுமானோர், தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் கருத்துக் கணிப்பில் பிரித்தானியாவின் வெளியேற்றத்தை விரும்பாமல் திசை திரும்பி வருகின்றனர் எனவும் அறிய முடிகிறது.

ஒரே காரணம், ஒரே நிலம், ஒரே கோரிக்கை, ஒரே சூழல், ஆனால், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களால் மக்கள் எப்படி நிலைப்பாடுகளில் மாற்றம் கண்டு வருகின்றனர் என்பதற்கான உதாரணமாகவே இதனை கணக்கிடலாம்.

பிரித்தானியாவின் வெளியேற்ற குறித்து மனமாற்றத்தை கருத்துக் கணிப்புகள் எப்படி தெளிவுப்படுத்துகிறதோ, அதே போக்கு, வரவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பிரித்தானிய மக்களின் எண்ணவோட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து இருக்கிறது. இந்த வருடம் ஜனவரியில் 40% ஆதரவு வாக்கினைப் பெற்ற தெரசாவின் கட்சி தற்பொழுது ஏப்ரல் இறுதியில் 26% ஆதரவு வாக்குகளிலேயே பெற்று இருக்கிறது. மாதம் மாதம், அதுவும் வாரத்திற்கு வாரம் பொதுமக்களின் எண்ணவோட்டங்கள் எப்படி தேர்தல் குறித்து சிந்தனையில் மனமாற்றத்தை பெற்று இருக்கிறது என்பதனை இந்த உதாரணங்களில் இருந்து அறியலாம்.

இப்படி, வார வாரம் தொடர்ந்து பல மாதங்களாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் நிகழ்கால அரசியல்வெளியினை பிரதிபலிக்கும் விதத்தில் நடத்தப்படுவதால், எந்தச் சூழலில் எந்த நடவடிக்கைகளால் மக்கள் மனமாற்றம் பெறுகின்றனர் என்பதனை அரசியல் கட்சிகளும் அறிந்துக்கொள்கின்றன.

ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பும் கருத்துக் கணிப்புகளும்:

ஸ்காட்லாந்து தனிநாட்டிற்கான பொதுவாக்கெடுப்பு 2014 செப்டம்பரில் நடக்கும் முன், ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு கருத்துக் கணிப்புகளை பல தனியார் நிறுவனங்கள் நடத்தின. குறைந்தது 1000த்தில் இருந்து 2000 வரையிலுமான மக்களிடம் கணிப்புகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 9 மாதங்களில் மாதம் 4-5 கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு வாக்குகள் முதலில் 28% எனத் தொடங்கி செப்டம்பர் மாத வாக்கில் 42-45% வரையென உறுதியானது.  இடைப்பட்ட காலத்தில் இருவேறு தருணங்களில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு வாக்கு 47% வந்ததோடு எதிர்ப்பு வாக்குக்களைவிட அதிகமாகின.

பொதுவாக்கெடுப்பில் இறுதியாக தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக 55% வாக்குகளும் தனிநாட்டிற்கு ஆதரவாக 44.7% வாக்குகளும் கிடைத்தன. கருத்துக் கணிப்பைப் பொறுத்தவரை ஆதரவு வாக்குகள் என நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் அப்படியே கிடைத்தன. முடிவு இறுதியாகவில்லை என கூறிய 5% வாக்குகள் அப்படியே தனினாட்டுக் கோரிக்கைக்கு எதிராக விழுந்தன. ஒருவேளை மாறி ஆதரவு வாக்கில் விழுந்திருந்தால் இந்நேரம் ஸ்காட்லாந்து தனி நாடாகி இருக்கும்.Composite

ஆனாலும் விடாமுயற்சியாக  கடந்த 5 வருடங்களாக ஒருவேளை இரண்டாவது பொதுவாக்கெடுப்பு நடக்குமாயின் அதில் ஸ்காட்லாந்து மக்களின் நிலை என்னவாக இருக்கும் என தொடர் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் முன்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பு செய்தியினை குறிப்பிடக் காரணமில்லாமல் இல்லை. ஒருவேளை, விரைவில் பிரித்தானியா வெளியேற்றம் குறித்த முறைப்படியான சட்டவடிவிலான அறிவிப்பு வந்துவிட்டால், ஸ்காட்லாந்து மக்களின் தங்கள் நாட்டு விடுதலைக் குறித்தான எண்ணவோட்டத்திலும் மாற்றம் வரும் எனவும், தொடர்ந்து நடந்து வரும் கருத்துக் கணிப்புகள் பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புகளை ஒட்டி பாரிய அளவிலான மனமாற்றத்தையே காட்டி வருவதாகவுமே பல்வேறு செய்திகள் வழியே அறியமுடிகிறது.மார்ச் 2019இல் நடந்த கருத்துக் கணிப்பில் 60% ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் நாட்டு விடுதலையை விரும்புவதாக தெரிகிறது.

ஒபாமா தேர்வும் கருத்துக்கணிப்புகளும்

அமெரிக்கா ஐக்கிய குடியரசுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பினத்தவரை தேர்ந்தெடுப்பீர்களா என அமெரிக்கர்களிடம் 1958 முதலே கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 1958இல் 53% மக்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பினத்தவரை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்றவர்கள் 2007இல் 3%மாக குறைந்திருந்தனர். 1983இல் கலிஃபோர்னியா மாகாண கவர்னருக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில், கறுப்பினத்தவரான டோம் பிராட்லி 9-22% முன்னிலை வாக்குப் பெறுவார் என்ற முடிவுகளுக்கு மாறாக தேர்தலின்பொழுது தோற்றும் இருக்கிறார். இத்தகைய போக்கு பல மாகாணத் தேர்தல்களிலும் கருத்துக்கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.

2007இல் இருந்தே ஒபாமா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கருத்துக்கணிப்புகள் தொடங்கின, பெரும்பாலுமான முடிவுகள் ஒபாமாவிற்கே சாதகமாக அமைந்திருந்தாலும் 2-3% முன்னிலையே பெற்றுவந்தார். பெரும்பாலும் 42-47% வாக்குகளும் 5-10% மக்கள் முடிவு செய்யவில்லை எனவுமே கருத்துக்கணிப்பின் பொழுது தெரிவித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகளில் 52.9% ஒபாமா பெற்று வெற்றி பெற்றார்.

அதேப்போல, 2012 தேர்தலைப் பொறுத்தவரை, செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பலக்கட்டக் கருத்துக்கணிப்பில் ஒபாமாவே முன்னிலை பெற்று வந்தாலும் அவ்வப்பொழுது ரோம்னிக்கும் முன்னிலை கிடைத்து வந்தது. கருத்துக்கணிப்புகளின் பொழுது 45% முதல் 48% வரையிலான வாக்கினையே இருத்தரப்பும் பெற்றுவந்தது, வாக்கு வித்தியாசம் பெரும்பாலுமான நேரங்களில் 3-5% எனவே கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. 2012இல் நடந்த தேர்தலில் ஒபாமா 51.1% வாக்குகளும் ரோம்னி 47.2% வாக்குகளையும் பெற்றிருந்தார். 2010 முதலே நடந்த கருத்துக்கணிப்புகளில் ஒபாமா 50%த்தை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2008 தேர்தலுக்கும் 2012தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பில் சிறு வேறுபாட்டை உணரலாம். 2008 தேர்தலில் கருத்துக்கணிப்பின் படி ஒபாமாவே வெல்வார் என்ற முடிவுகள் கிடைத்தாலும் இறுதியான சதவீதம் கருத்துக்கணிப்பை விட மாறியிருந்தது. 2012 பெரும்பாலுமான கருத்துக் கணிப்பு முடிவுகள் இறுதி முடிவுக்கு சதவீத அடிப்படையில் கூட பொருந்தியிருந்தது.

தேர்தல் கால மனமாற்றங்களும் இறுதி கருத்துக் கணிப்புகளும்

கடந்த 4 மாதத்திற்குள் பிரித்தானிய மக்களின் மனமாற்றம் குறித்து கருத்துக் கணிப்புகள் வழியே அறிந்தோம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நவீன தேர்தல் கால நடைமுறைகளால் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் புதியச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது எனலாம். அதாவது, தேர்தல் அன்றுதான் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும் என்றில்லை என்றச் சூழல் உண்டு. தேர்தல் நாளுக்கு 20-30 நாட்கள் முன்பே நகரத்தின் மையப் பகுதிகளிலோ, மாநாகராட்சி கட்டங்களிலோ வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. குறைவான வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே இருப்பினும் 20 நாட்களில் அவரவர் வசதிக்கு ஏற்ப வாக்கு செலுத்தி வருகின்றனர். அது இல்லாமல், தேர்தல் காலத்தில் பணி நிமித்தமாகவோ, சொந்தப்பயணமாகவோ செல்வோரின் தபால் ஓட்டுக்கள் என முன்பே பதிவாகத் தொடங்கிவிடுகின்றன.

இத்தகைய தேர்தல் நாளுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வருடங்களில் 6%இல் இருந்து 10% வரை பதிவாகின்றன என்றும், அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகமாகுமெனவும் தெரிகிறது. நவீன சமூக ஊடக உலகில் உடனுடக்குடன் செய்திகள் வேகமெடுத்துப் பரவிவரும் சூழலில், பல்வேறு சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ளச் சூழலில் தேர்தல் வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடக்கும் 20-30 நாட்களில் 10%வரையிலான வாக்குகள் மற்றும் தேர்தல் அன்று பதிவாகும் வாக்குகளில் வேறுபாடுகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பொழுது கூட, தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகளுக்கும் மாகாண அளவிலான கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசம் காணப்பட்டதாக விவாதங்கள் நடந்தன. குறிப்பாக, டொனால்ட் ட்ரம்ஃபிற்கு ஆதரவான இறுதி நேர ஆதரவு அலை தேர்தல் காலத்திற்கு முந்தைய கணிப்புகளில் முழுமையாக காணப்படவில்லை என்றும், மாகாண அளவிலான மாற்றங்கள் தேர்தல் கால வாக்குப்பதிவு காலத்தில் முழுமையாக பகுத்தாய்வுச் செய்யப்படவில்லை என்றும் கூட விவாதங்கள் நடந்தன.

US presidents
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவும் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ஃப் அவர்களும்

இந்திய ஒன்றியத் தேர்தல்கள் நடந்துவரும் இந்தச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால், 5 கட்டங்களாக 2 மாதங்களுக்கு மேலான பிராச்சாரம், வாரக்கணக்கிலான வாக்குப்பதிவு, வாரக்கணக்கிலான வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பு, சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிச் செய்திகள் வழியே எவர் மீதும் எக்கட்சி மீதும் எவ்வித அறமுமின்றி பரப்பப்படும் பொய்த் தகவல்கள்,  சாதி, மதங்கள் மற்றும் உணர்ச்சிகரமான எக்காரணங்களையும் உடனுக்குடன் பரப்பும் முழு நேரப் பணியாளர்கள், அதனை அப்படியே நம்பும் பெருந்திரள் மக்கள் வாழும் நம் மண்ணில் தேர்தல் காலக் கருத்துக் கணிப்புகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாற்றங்களை கொண்டவையே.

புல்வாமா தாக்குதல் வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய பாஜக, இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களை கொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது என்பதனையும் இவ்வேளையில் நாம் பகுத்துப் பார்த்து உணரலாம். முன்பே சொன்னது போல வாக்குப்பதிவு கால இடைவெளிகள் மற்றும் பல்வேறு கட்டமாக நடக்கும் தேர்தல்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களின் இறுதி நேர மனமாற்றத்திற்கு வழிவகுத்து ஜனநாயகத் தன்மை வலுவிழந்து வருவதாக அமெரிக்கத் தேர்தல்களை முன்வைத்தேக் கூட விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில், இந்திய ஒன்றியத்தின் பல மாதத் தேர்தல் கூத்துகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அலசவில்லை என்றே கருதுகிறேன்.

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s