தாய்மொழிக் கல்வி – தமிழ் மொழியின் பல்லாயிரக் கால வரலாற்றுப் பார்வை

(இக்கட்டுரை, மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் 2004இல் எழுதிய ”தமிழ் வழிக் கல்வி கானல் நீரா? ” என்னும் நூலைத் தழுவி, அதில் உள்ளத் தகவல்களை உள்ளடக்கி நிகழ்கால அரசியல், கல்வி நிலை ஒப்பீடுகளோடு எழுதப்பட்டது)

உள்ளடக்கம்:

 • நிகழ்கால ஆங்கில மோகம்
 • களப்பிரர் முதல் பல்லவர் கால கல்வி மொழி
 • பிற்காலச் சோழர்களின் எழுச்சியும் கல்வி மொழிச் சிக்கலும்
 • விஜயநகர, மராத்திய, முகலாயர்களின் அரசுகளும் மொழிக்கலவையும் பண்பாட்டுக் கலவையும்
 • கிருத்துவ சபைகளின் பள்ளிகளில் தமிழ்
 • தாமஸ் மன்றோ பரிந்துரைத்த தமிழ்வழிக் கல்வி
 • மெக்காலே கல்விமுறையின் ஆங்கிலவழிக் கல்வி ஆதிக்கம்
 • சார்ல்ஸ் வுட் வருகையால் தமிழ் மீண்டும் கல்வி மொழியானது
 • தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த விடுதலை உணர்வு
 • நீதிகட்சியும் தனித்தமிழ் இயக்கங்களும்
 • காங்கிரஸ் ஆட்சிகளில் ஆங்கிலமும் தமிழும் தெளிவில்லாத கல்விக்கொள்கை
 • தாய்மொழிக் கல்விக்கு ஆதரவான பல்வேறு கல்விக்குழு பரிந்துரைகள்
 • பெருந்தலைவர் காமராஜரும் காங்கிரஸும்:
 • அண்ணாவின் மொழிக்கொள்கையும் காங்கிரஸின் தமிழ் எதிர்ப்பும்
 • கல்வியில் மாநிலத்தின் உரிமை பறிப்பும் இந்தி, ஆங்கிலப் பள்ளிகளின் தோற்றமும்
 • 1975-2000 வரை பயிற்று மொழிச் சிக்கல்கள்
 • இன்றைய நிலையும் அரசியலும்
 • ஏன் வேண்டும் தமிழ்வழிக் கல்வி     
 • 1568383601ஆதிக்கவாதிகளின் முதல்குறியே மொழியும் கல்வியுமே! பூர்வக்குடி மக்களின் மண்ணின் மைந்தர்களும் அந்நிய மொழியினை பேச்சு வழக்கிலும் பின்பு கல்வி மொழியாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அந்த நிலமும் மக்களும் அந்நியர்களின் அடிமையாக இருக்கிறது எனலாம். கல்வி மொழியில் தமிழின் நிலை கீழ் இறங்குவதும், பிற மொழிகள் உள்நுழைவதும், தமிழ் மீண்டும் சமூகத்திலும் கல்வியிலும் தழைத்து வருவதும் வரலாற்றின் ஓட்டத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளது. தமிழ் மொழியும் நிலமும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து தன்னை தக்க வைக்க போராடியதன் விளைவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல் வரிகளின் பெரும்பாலுமானவற்றை இன்றும் சராசரியாக தமிழ்த் தெரிந்தோரும் புரிந்துகொள்ள முடிகிறது.ஒரு மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் இருக்கிறது. இத்தனை வருடங்கள் இம்மொழி தொடர்ந்து வந்ததாலேயே நாம் இன்றும் தமிழன் என்னும் பெருமையை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க முடிகிறது. அத்தகைய, பல்லாயிர வருட மொழியினை சமூகத்திலும் கல்வியிலும் நாம் வைத்திருக்கிறோமா? கல்வி மொழி தாய் மொழியாக இருப்பதற்கும் ஆதிக்க அரசியலுக்கு எதிரான போராட்டத்திற்கும் தொடர்பு உண்டா? அதற்கு அடுத்த நிலையில், தாய்மொழிக் கல்வி என்பது வெறும் மொழியுணர்வு உணர்ச்சி அடிப்படையிலா, அல்லது சமூக நிலைநிறுத்தல்களின் அடிப்படையிலா? இரண்டாயிரம் ஆண்டுகால கல்வி மொழியில் தமிழின் போராட்டங்கள் என்ன என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.நிகழ்கால ஆங்கில மோகம்:

  பல நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் அடிமைச் சங்கிலியை சுமந்ததின் விளைவிலும் அந்நிய ஆதிக்கவாதிகளின் நிழலில் குளிர்காய்ந்தவர்களின் வாழ்க்கை மொழியாக ஆங்கிலம் ஒட்டிக்கொண்டதுடன், பின்பு உயர் வர்க்கமும் உயர்சாதியாக கருதப்பட்டவர்களும் எளிதில் ஆங்கிலத்தின் இரையாக மாறினார்கள். தமிழ் பேசுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக கருதும் சமூக இழிநிலை படிப்படியாக உள்நுழைந்ததன் விளைவை இருபதாம் நூற்றாண்டு கதைகள், திரைப்படங்கள், நாவல்கள் வழியே அறிய முடிகிறது.

  punjabi-a-second-rate-mother-tongueஇத்தகைய போக்கே கடந்த நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து, தங்களை மேம்பட்டவர்களாக காட்டிக்கொள்ள ஆங்கில உச்சரிப்பைப் பேணியதையும், கல்வி மொழியாக படிப்படியாக ஆங்கிலம் உள் நுழைந்ததையும் காண்கிறோம். இச்சூழல் சரியா, தவறா என்னும் விவாதம் சமூக, அரசியல் அரங்கில் ஓங்கி வளரும் முன்னே, உலகமயமாக்கல் என்னும் புதிய அரசியல் உலகின் போக்கு ஆங்கிலத்தை பெரும்வீச்சில் நம் நிலத்திலும் கல்வியிலும் தக்க வைக்க உதவிற்று.

  அதன் வீச்சு 30 ஆண்டுகள் தொடர்ந்துவிட்ட இத்தகைய நிலையில்தான் தாய்மொழிக் கல்விக் குறித்த பெரும்குரல்கள் ஆங்காங்கே மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சரியா, தவறா என்னும் வாதத்தை புரிந்துகொள்வதற்கு முன் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத்தில் நம் நிலத்தின் கல்வியில் தமிழ் மொழியின் போராட்டங்கள் குறித்து அறிந்தால் புதுநம்பிக்கை பிறக்கும் என நம்புகிறேன்.

  களப்பிரர் முதல் பல்லவர் கால கல்வி மொழி:

  சரிவர காலகணிப்போ மொழி, இனம் குறித்தத் தெளிவான தகவல்கள் பதியப்படாமல் இருந்தாலும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களும் 4ஆம் நூற்றாண்டில் இருந்து பல்லவர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் மேலோங்கி இருந்த காலத்தில் தான் வடமொழிக் கல்லூரி தோன்றி வேதாந்தம், தர்மசாஸ்திரம், புராணம் ஆகியவை கற்றல் திட்டத்தில் நுழையும்பொழுது முதலில் வடமொழியும் தமிழும் என்றிருந்து பல்லவ பெருநிறுவனங்களில் வடமொழி மட்டும் என்றாகி, படிப்படியாக தமிழக பெருநிலப்பரப்பெங்கும் தமிழி இல்லாது வடமொழிப்பாடங்கள் மட்டும் என்றானதாக வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

  இந்தி ஆதிக்கம் முதல் சமஸ்கிருதம் ஈராக பகவத் கீதை வரை தமிழகம் எதிர்க்கும் மனநிலை வரலாற்றுத் தொடர்ச்சியின் விளைவே என்பதையும் சேர்த்தே உணர்க!

  மேலே சொன்ன வடமொழிக் கல்வி காலகட்டத்தில்தான் கல்வி நிலையங்கள் முழுக்க பிராமணர்கள் வீட்டின் முற்றங்களுக்கும் குருகுல கல்வியில் பிராமணர்களின் தலைமையிலும் உருவாகியது.

  வடமொழி மட்டுமல்ல, வடமொழியின் பெருந்திரள் மக்களும் அடுத்தடுத்து உள்நுழையத் தொடங்கியதும் இக்காலக்கட்டதில் எனலாம். கோயில்கள் மற்றும் அதன் வழிபாடும், சமய இலக்கியங்கள் என அனைத்தும் வடமொழி மயமானதும் அடுத்துடுத்து நடந்தது. இதற்கு எதிராக உருவானதுதான் சைவ வழிபாடு தமிழ் இலக்கியப் படைப்புகள் வழி வடமொழி வழிபாட்டிற்கு எதிராக உருவாகத் தொடங்கியது என்பதையும் அறிக!

  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னனுக்கு எதிராக, ”நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்படோம், ஏமாப்போம், பிணி அறியோம்” என அறச்சீற்றம் கொண்ட அப்பர் அடிகளின் முழக்கம் ஆதிக்க சக்திக்கு எதிராக கொதித்த தமிழர் உள்ளத்தின் பிரதிபலிப்பு என்பதை உணர்க! பக்தி இலக்கியம் தமிழ்மயமானதன் விளைவு தமிழ்க்கல்வியும் வரத்தொடங்கியது.

  பிற்காலச் சோழர்களின் எழுச்சியும் கல்வி மொழிச் சிக்கலும்:

  கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு பின், மீண்டும் சோழர்கள் புத்தியிர் பெற்று தமிழர் நிலங்களின் தலைவர்களாக மாறியிருந்தாலும் ஏற்கனவே நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக பதிந்துவிட்ட பிராமணரின் உயர்வுக்கோ வடமொழி ஊடுருவலுக்கோ பெருந்தீங்கு ஏற்படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்குப் பின் தமிழர் தலைவர்களும் தமிழர் ஆட்சியும் நிலைத்தோங்கிய தருணம் தமிழும் மறுமலர்ச்சி பெற்றதால் வடமொழிக் கல்வி உயர்வர்க்க கல்வி மொழியாகவும் எளிய மக்கள் கல்வி மொழியாக தமிழும் இருந்தது எனலாம்.

  சோழர் காலத்தில் உருவான தமிழர் இலக்கியங்களான நிகண்டுகளும் சைவ இலக்கியங்களிலும் கூட வடமொழி இலக்கிய இலக்கணங்கள் இருந்ததெனவும் அறிய முடிகிறது. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒட்டக்கூத்தரின் மூவர் உலாவும் புகழேந்தியின் நளவெண்பா உருவான காலத்தில் தமிழில் படைக்கப்பட்ட கம்பனின் இராமாயணம் வடமொழியும் வட இந்திய இதிகாசம் மட்டும் கட்டுகதைகளை தாங்கிய வந்தது. இதில் இருந்து இலக்கிய, இலக்கணங்கள் என தொடர்ந்து வடமொழி நம்மோடு நிலைக்கக் காரணம் கல்வி மொழியில் அதன் பெரும்தாக்கம் கொண்ட அரச உதவியுடனான ஊடுருவலே!

  கி.பி. 13ஆம் நூற்றாண்டில் மீண்டும் தலைத்தூக்கிய பாண்டியர் காலத்தில் தமிழ் இன்னும் உயர்ந்து விளங்கியது என்றாலும் தமிழும் வடமொழியும் இருகண்கள் என்றே அரசியல், அரச நடைமுறை இருந்துவந்துள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில், ”நால் வகை வேதமும் நவின்றுடன் வளர” என்றும், இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனின் மெய்க்கீர்த்தியில், ”சுருதியும் தமிழும் தொல் வளங்குல” என்றும், மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தியில், ”அருந்தமிழும் ஆரியமும் மறுசமயத்தற நெறியும் திருத்துகின்ற மனு நெறியுள் தீறம் பாது தழைத்தோங்க முத்தமிழும் மனுநூலும் நான்மறை முழுவதும் எத்தவச் சமயமும் இனிதுடன் விளங்கவும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதன்வழி தமிழும் வடமொழியும் இரண்டையும் விடாது பிற்காலச் சோழர்களும் பாண்டியர்கள் இணைத்தே கொண்டுச் சென்றுள்ளனர் எனினும் தனிமனித புலவர்களும் இலக்கியவாதிகளுமே தமிழை தொடர்ந்து மக்கள் மையத்தில் தக்க வைக்க செய்துள்ளனர். அதற்கு, தமிழ்க் கல்வி மீண்டும் உயர்வு பெற்றதையும் களப்பிரர்கள், பல்லவர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழ் மீண்டு வந்ததற்கு சோழர்கள், பல்லவர்களை பாராட்டுவதா, இல்லை வடமொழியையும் இணைத்தே கல்வியில் புகுத்தி வைத்திருந்ததற்கு கோவமுறுவதா என்பதில் எனக்கு குழப்பம் கூட உண்டு.

  விஜயநகர, மராத்திய, முகலாயர்களின் அரசுகளும் மொழிக்கலவையும் பண்பாட்டுக் கலவையும்:

  முகலாயர் அரசும்பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு பின்னரான விஜயநகர அரசர்கள், சமயக் கல்வியை மட்டுமே முன்னிறுத்தினர். பொதுமக்கள் கல்வியைப் பற்றி கவலைப்படாமலும் இருந்தனர். தர்ம சாஸ்திர விதிகளை காத்து இராம இராச்சியம் அமைக்கப்படவே முனைந்திருந்தனர். தமிழிசையும் தமிழிலக்கியங்களும் இல்லாத வடமொழி, தெலுங்கு இசைகள், இலக்கியங்கள் வளர்ச்சிப் பெற்றன.

  களப்பிரர் காலம் முதல் பிற்கால சோழர்கள் பாண்டியர்களின் பின்வந்த விஜயநகர அரசர்கள் வரலாற்றை அறியும்பொழுது, எப்பொழுதெல்லாம் வட இந்திய ஆதிக்கமும் வடமொழி ஆதிக்கமும் இருந்ததோ, அப்பொழுதெல்லாம் கல்வியில் தமிழ் இல்லாது போவதும் வட இந்திய ஆதிக்க இறை வழிபாடு முதல் பண்பாடு வரை அனைத்தும் துளிர்ப்பதுமாக இருந்துள்ளது.

  நிகழ்கால பாஜகவின் வளர்ச்சியில் இராம இராஜ்ஜியம், வடமொழி திணிப்பு, இந்தி மொழித் தேவை, பகவத் கீதை, இராமாயணம் என பேச்சுக்கள் தொடர்வதும், தமிழ்பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன், ”தமிழும் சமஸ்கிருதமும் இருக்கண்கள்” என்றுரைப்பதும் நம் அதிகாரங்கள் மீண்டும் படிப்படியாக கைவிட்டு போவதும் இச்சண்டை பல ஆயிரங்கள் தொடரும் சண்டை என்பதோடு நம் மொழியும் நிலமும் தொடர்ந்து எதிர்ப்புணர்விலேயே சுழல்கிறது என்பதையும் காணமுடிகிறது.

  சாதியம் உருவாகவும் உயர்வுத் தாழ்வு நிலை பல்கி பெருகவும் களப்பிரர், பல்லவ, விஜய நகர ஆட்சியாளர்கள் தொடங்கி, அவர்கள் கொண்டு வந்த வழிபாடு, கல்வி என அனைத்துமே பயன்பட்டுள்ளது.

  விஜய நகர நாயக்கர்கள் ஆட்சிக்கு பின் கி.பி 17, 18இல் வந்த தொண்டைமான்கள் ஆட்சியில் தெலுங்கு செழித்து வந்தாலும் தமிழர்களின் கல்விக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதும் பின்னர் வந்த வாரிசுகளின் ஆட்சியில் கொடிகளிலும் பட்டயங்களிலும் தெலுங்கு, ஆங்கிலம் என சொற்கள் தென்பட்டுள்ளது.

  மராத்தியர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, விஜய் நகர ஆட்சி, தொண்டைமான்களின் பிற்கால ஆட்சிகளில் வடமொழி, தெலுங்கு முன்னிலையிலும் ஆளுகைக்கு உட்பட்ட மொழியினர் என்பதால் கல்வியில் அவ்வப்பொழுது தமிழும் இருந்து வந்ததன் விளைவே, இன்னும் சொல்லப்போனால் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து தங்களை நிலைநிறுத்தப் போராடிவந்துள்ளனர் எனலாம். இல்லையேல், இந்நிலத்தில் தமிழ் பல மொழிகளின் கலவையில் வேற்று மொழியாக மாறியிருக்கும் இந்நேரம்.

  தமிழில் வடமொழி கலவையும் பல ஆட்சிகளின் வழியிலும், கி.பி 13ஆம் நூற்றாண்டுக்கு பின் திட்டுத்திட்டாக முகலாயர்களின் ஆட்சியின் வடிவில் பாரசீக, அரேபிய மொழிக்கலவை தமிழில் நிலைக்கக் காரணமே, கல்வி மொழி தமிழ் இல்லாது சென்று சமூக பேச்சுவழக்கு மொழியாக மட்டும் தொடர்ந்ததே ஆகும். கல்வியில் தமிழை வைக்கப் போராடுவதற்கு மேலே சொன்ன வரலாற்றுத் தகவல்களே காரணம்.

  ஆட்சி மொழியாக இன்னொரு மொழி உருவானப்பின் கல்வி மொழியில் வேறு மொழி உட்புகுத்தப்படும், இல்லையேல் பூர்வக்குடிகள் கல்வி மொழியை இழக்கும்பொழுது ஆட்சி அதிகாரத்தில் வேற்று மொழியினர் தலைமை தாங்குவர். நாம் இன்று வரை தமிழை கல்வி மொழியில் வைத்திருக்க போராடுவதற்கும் அரசியலும் காரணம், நம் வரலாறு தொடர வேண்டுமென்றாலும் கல்வியில் தமிழ் நிலைக்க வேண்டும்.

  கிருத்துவ சபைகளின் பள்ளிகளில் தமிழ்:

  ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, ஆங்கிலம் ஆட்சி மொழியாக மாறியதால், ஆட்சி அதிகாரத்தினர் தமிழை எல்லா நிலையிலும் புறக்கணித்தனர். அலுவக ஆவணங்கள் ஆங்கிலத்தில் மட்டும் தேவைப்பட்டதால் ஆங்கில வழிக் கல்வி, அதுவும் வழக்கம் போல உயர்சாதியினர் மற்றும் உயர்வகுப்பினருக்கே கிடைக்கப்பெற்றன.

  ஆனாலும் சில நன்மைகளும் நடந்தன. குறிப்பாக, அச்சு மொழியில் தமிழும், கல்வி மொழியி தாய்மொழியும் புகுத்தப்பட்டது.

  1713இல் தரங்கம்பாடியில், சீகன் பால்கு பாதிரியாரினால் முதன் முதலாகத் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களுடன் அச்சகம் ஒன்று தொடங்கப்பட்டது. 1717இல் சென்னையில் டேனீஷ் கிரண்டரினால் இரண்டு இலவசப் பாடசாலைகள் துவங்கபட்டு, சமூக மொழியே கல்வியின் மொழியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழே கல்வி மொழியாக முன்னிறுத்தப்பட்டது. பல நூறு வருடங்களுக்குப் பிறகு, தமிழ் மட்டுமே கல்வி என்னும் நிலை இங்குதான் உருவானது.

  1790இல் தஞ்சை, இராமநாதபுரம் அரசர்கள் நிதி உதவியில், சான் சலீவன் என்பவர் சென்னையிலும், சுவாட்ஸ் பாதிரியார் முயற்சியில் தஞ்சை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், ஏசு சபையினர் நாகப்பட்டிணம் மற்றும் திருச்சி அதனைத் தொடர்ந்து பிற ஊர்களிலும், 1834இல் அமெரிக்க மதுரை சபை மதுரை, திண்டுக்கலிலும், லண்டன் சமயப்பணி சங்கத்தினர் நாகர்கோவில், நெய்யூர், பாளையங்கோட்டையிலும் சமயப் பணி வளர்ச்சியை முன்னிறுத்தி கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டாலும் தாய்மொழிக் கல்விக்கான முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலமும் தமிழும் என சில இடங்களில் இருந்தாலும் தமிழே கல்வி மொழியென பல இடங்களில் நிலைநிறுத்தப்பட்டது.

  இதுவரை சமய நிலையங்கள் வழி பொதுமக்களுக்கான தமிழ்வழிகல்வியும், ஆங்கிலேயக் குடிகளுக்காக மட்டுமே ஆங்கிலேயர்கள் அரச கட்டமைப்பின் கீழ் ஆங்கில வழிக் கல்வியை யும் வைத்திருந்தனர். பெருகி வரும் நிர்வாகத்தின் தேவைக்காக, அரச கட்டமைப்பின் கீழ் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. 1) இந்திய பெருநிலப்பரப்பு மக்களை ஆங்கில நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வைப்பது, 2) உயர்குடினருக்குக் கல்வி அளித்து உயர் பணிகளில் அமர்த்தினால் தங்களுக்கு எதிராக கிளர்ந்து எழ மாட்டார்கள் என நம்பினார்கள்.

  கிருத்துவ சமய மையங்கள் நடத்திய கல்வி முறை எல்லோருக்குமானதாகவும் ஆங்கில அரச நிர்வாகம் உயர்பிரிவினருக்காகவும் இருந்ததாலேயே முன்னவர் கல்வி நிறுவனங்கள் தமிழையும் பின்னவர் நிறுவனங்கள் ஆங்கிலத்தையும் முன்னிறுத்தியது.

  1822இல் நெல்லை வண்ணார்பேட்டையில் இரேனியஸ் பாதிரியார் முதல் பள்ளியையும் 1823இல் செமினிரிப் பள்ளி பெண்களுக்குமெனத் தொடங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்துத் தரப்பு மக்கள் கல்வி நிலையங்களிலும் இணைந்ததோடு, கிருத்துவ மதம் தழுவவும் செய்தனர்.

  தாமஸ் மன்றோ பரிந்துரைத்த தமிழ்வழிக் கல்வி:

  1820இல் சென்னை ஆளுநராக வந்த தாமஸ் மன்றோ, பொதுக்கல்வி வாரியத்தையும் (Board of Public Instructions) மேல்நாட்டுப் புத்தகங்களை மொழிப்பெயர்த்து உதவ, பள்ளிப் புத்தகச் சங்கத்தையும் (School Book Society) நிறுவினார். ஆயிரம் மக்கள் வாழும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளி என கல்வித்திட்டம் வகுக்கப்பட்டு, மாவட்டத் தலைநகர் பள்ளிகளில் ஆங்கில வழியும் வட்டாரங்களில் தமிழ் வழிக் கல்வியும் நடைமுறைக்கு வந்தது.

  1832இல் ஆங்கில வழிக் கல்வி பெருந்திரள் மக்களை அந்நியப்படுத்துவதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியும், அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்க்கும் நிறுவனங்களும் தொடங்கப்பட்டன.

  மெக்காலே கல்விமுறையின் ஆங்கிலவழிக் கல்வி ஆதிக்கம்:

  downloadகல்வித்துறை அரசாங்க நிர்வாகத்தின் செலவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதால், செலவைக் குறைக்க மாற்றுத்திட்டங்கள் தீட்டினர். அதன்படி, நிர்வாகத்தை லண்டனுக்கு மாற்றியக் கையோடு, சாமானியர்களின் கல்வியை பறிக்க வடிகட்டும் கல்வி முறை (Filtration Theory) கொண்டுவந்தனர். மீண்டும் உயர்பிரிவினர், உயர்சாதியினர் மட்டும் கல்வி கற்றால் போதும், அரசாங்க நிர்வாக வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற மக்கள் எண்ணிக்கை இருந்தால் போதும் என நினைத்தனர். ஆரம்பக் கல்வியே ஆங்கிலமயமானது. (நவீன நிகழ்கால உலகில் பாஜக அரசாங்கம் புகுத்த நினைக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தினையும் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த வடிகட்டும் கல்வி முறையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்).

  மெக்காலே கல்விமுறை 1835ற்கு பிறகு ஆங்கில வழிக் கல்வியை நிலைக்கச் செய்கிறது. இவ்வடிகட்டும் முறை தோல்வியடைவதாக கருதியவர்கள் கலந்தூடும் கல்விமுறையை கொண்டுவந்தனர். மீண்டும் அனைத்துத் தரப்பினரும் பயிலும் முறை. இருப்பினும், கல்வி மொழியில் தெளிவின்மை தொடர்ந்தது எனலாம்.

   சார்ல்ஸ் வுட் வருகையால் தமிழ் மீண்டும் கல்வி மொழியானது:

  1954இல் சார்லஸ் வுட் (Charles Wood) என்பவர் புதியக் கல்விக் கொள்கை திட்டம் அறிவிக்கிறார்.  அதன்படி, அனைத்து இந்திய மொழிகளுக்குமான கல்வி அவரவர் தாய்மொழியில் அமைய ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதோடு, கல்வி மதச்சார்பற்றதாக இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 1882இல் ரிப்பன் (Ripon) உருவாக்கிய ஹண்டர் கல்விக்கொள்கை ஆணையம் (Hunter Commission) கல்வியை மேலும் பரவலாக்கி, அனைத்துப் பள்ளிகளும்மான நிதியை அரச நிர்வாகம் ஏற்க பரிந்துரைத்தது.

  இருப்பினும் உயர்கல்வி வரை இருந்த கல்வி நிறுவனங்கள் வழி கற்றோர் தங்களை அரச நிர்வாகத்தில் உயர்ந்த நிலைக்கு வரக் காரணம் ஆங்கிலம் என்பதில் தொடங்கி, ஆங்கிலம் கல்லாதோரை தாழ்வாக எண்ணும் மனப்போகும் உடையவராக மாறினர். 1914இல் சென்னை மாகாணம் முழுமைக்கும் எல்லா கல்வி நிலையங்களிலும் எல்லாம் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக் கல்வி கொண்டு வர இருந்த முயற்சியை சென்னை ஆட்சிமன்றக்குழு (Madras Legislative Council) நிராகரித்தது. அக்காலக்கட்டத்தில், சென்னை ஆட்சிமன்றக் குழு பொறுப்புப் யாரிடம் இருந்ததென சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  1915இல் உயர்மட்ட ஆட்சிக்குழு தலையிட்டு, மீண்டும் தாய்மொழிக் கல்விக்கு பரிந்துரைத்து சட்டம் இயற்றிய வேளையில், தாய்மொழிக் கல்வியால் ’தரம்’ குறைந்துவிடும் என பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், பொதுமக்கள் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, கொள்கை வடிவில் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  1919இல் கல்கத்தா கல்விக்குழுவும் உயர்நிலைப் பள்ளி வரை கட்டாயம் தாய்மொழிக் கல்வியை பரிந்துரை செய்தது. அதேகாலக்கட்டத்தில், சென்னை பொதுமக்கள் இயக்கம் (Directorate of Madras Public Instruction) உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை தாய்மொழிக் கல்வி பரிந்துரைத்தாலும், பள்ளி நிர்வாகம் கல்வி மொழியை முடிவு செய்யலாம் என கூறியதால், தங்களுக்கு ஏற்ற ’நல்வாய்ப்பாக’ கருதிய பல பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்களை சாட்டி ஆங்கில வழித் தேர்வுக்கு மாறியது.

   தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த விடுதலை உணர்வு:

  1885இல் ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் மகா சபையும் பிராமணர்களால் தொடங்கப்பட்ட இந்தியத் தேசிய விடுதலை இயக்கங்களும் இந்தியா முழுமைக்கும் மக்களை இணைக்கும் பாலமாக ஆங்கிலவழிக் கல்வியை முன்னிறுத்தினர். அது எல்லா மக்களிடம் ஒருமித்த உணர்வை ஏற்படுத்தும் என நம்பினர். இருப்பினும், உயர்தர வர்க்கமும் உயர்சாதி மட்டுமே நிலைத்த விடுதலை இயக்கங்கள் பலனளிக்காது என்ற கால ஓட்ட சிந்தனை மாற்றத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலை இயக்கங்களில் இணைக்கப்பட்ட பொழுது, அவரவர் தாய் மொழிக்கு மீண்டும் முக்கியத்துவம் வருகிறது.

  ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்களின் அணித்திரட்டல் வேண்டுமெனில் அவரவர் மொழியில் பேசுவதும் எழுதுவதும் அவசியம், அதனை படித்து உணர தாய்மொழியில் கற்றிருத்தல் அவசியம் என்பதே இயற்கையின் போக்கு. இதனால்தான் ஆதிக்க சக்திகள் முதலில் தாய்மொழிக் கல்வியில் கை வைப்பார்கள் என்பதையும் பகுத்துணர்க.

  நீதிகட்சியும் தனித்தமிழ் இயக்கங்களும்:

  ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை உணர்ச்சியில் இந்தியாவெங்கும் ’தேசியவாதிகளால்’ வட்டார மொழிக் கல்வி நிலையங்கள், பள்ளி முதல் கல்லூரி வரை தொடங்கப்பட்டாலும், தமிழகத்தில் மாறாக இந்தி வித்யாபீடம் தொடங்கப்பட்டது. இங்கே உருவான தேசியவாதிகள் இந்தியவாதிகளாக இருந்ததன் விளைவும் ஒன்று சேர்ந்து தமிழ் கல்விக்கு எதிரான மனநிலையும் உருவானது.

  அதன் பின் உருவான நீதிக்கட்சி அரசியலும் ஒருங்கே உருவான தனித்தமிழ் இயக்கங்களினாலும், கல்வி நிலையங்களுக்கு தமிழ் மொழி அவசியம் என்னும் நிலை உருவானது. 1922இல் மற்றும் 1930இல் நீதிக்கட்சி ஆட்சியின் ஆட்சியில் பணியாளர் தேர்வுக் குழு, கல்லூரி சேர்க்கைக் குழு உருவாக்கப்பட்டது. கட்டணச் சலுகை, நிதி உதவி இக்காலக்கட்டங்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்த 300 பள்ளிகளில் 55 தமிழ்வழிக் கல்வி தொடங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

  திருவையாறு அரசர் கல்லூரியில் வடமொழி மட்டுமே கல்வி மொழியாக இருந்த நிலையை பன்னீர்செல்வம் மாற்றி தமிழ் வகுப்புகள் தொடங்கச் செய்தார். வடமொழிக் கல்லூரி பெயர் அரசர் கல்லூரி என பெயர் மாறியதும் இதனால்தான்.

  சமூக நீதி தளத்தின் அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களும் வேலைவாய்ப்பினை பெற வேண்டுமாயின் தமிழ்வழிக் கல்வி அவசியம் என்றும் ஒரே பிரிவினர் அரசு அலுவலகம் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வருவது குறைந்தது. இந்த சுகவாழ்வை தவற விடக்கூடாது என நினைத்தவர்கள் மட்டுமே கல்வியை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வைக்கவும் தமிழ் இருக்கக்கூடாது என்றும் அன்று முதல் இன்று வரை கதறி வருகின்றனர்.

  1932இல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பெரும்பாலுமான இடங்களில் தோற்றுவிக்கப்பட்டதால், கலைச்சொல் குழு அமைக்கப்பட்டு 7400 புதிய கலைச்சொற்கள் பட்டியலை சென்னை மாகாண நீதிக்கட்சி அரசாங்கம் வெளியிட்டது.

   காங்கிரஸ் ஆட்சிகளில் ஆங்கிலமும் தமிழும் தெளிவில்லாத கல்விக்கொள்கை

  1937இல் காங்கிரஸ் ஆட்சியில், ”இதுவரை தாய்மொழி வைக் கல்வியை மேற்கொள்ளாத பள்ளிகள் கட்டாயமாகப்பட வேண்டும், முதலில் நான்காம் பருவம் வரையிலும் பிறகு படிப்படியாக உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தது. 1942இல் சென்னை ஆட்சியின் அறிக்கைப்படி முன்னூற்றுத் தொண்ணூற்று நான்கு பள்ளிகள் தமிழ் மொழி வழிக் கல்வியினை கற்பித்தன. 1946 இல் அரசாணைப்படி மீண்டும் ஆங்கிலம் இரண்டாம் மொழியானது. தமிழ் முதல் மொழியாகவும் 6ஆம் வகுப்பிற்கு பின்னரே ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் மாறியது.

  1956 இல் தமிழ் வழிக்கல்வி பற்றின ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிவியல் தொழிற்நுட்ப நூல்கள் அனைத்தும் முழுமையாக தமிழ்ப்படுத்திவிட்டு தமிழ் வழிக்கல்வியினை பின்பற்றலாம் என்று எடுத்த முடிவு ஆங்கிலவழிக் கல்வியினை உயர்நிலைக் கல்வியில் நிலைக்க வைத்துவிட்டது.

  1959இல் கல்லூரிகளில் பயிற்று மொழியாக தமிழ் இருக்கலாம் என்ற அரசாணை வெளியானபொழுதும், பயிற்று மொழியில் ஆங்கிலமும் வைத்திருக்கலாம் என்றிருந்ததால், பலரும் ஆங்கிலத்தையே தொடர்ந்தனர்.  மேலும், பள்ளிக் கல்விக்கே பயிற்று மொழிக்குறித்த பல்வேறுக்கட்ட எதிர்ப்பு தோன்றியதால், மூன்றாம் வகுப்பு முதலே மீண்டும் ஆங்கில வழிக் கல்விக்கு வித்திட்டது.

  அதேவேளை, 1959இல் கோவையைச் சேர்ந்த ஜி.ஆர் தாமோதரன் கலைக்கல்லூரி தமிழ்க்குழு அமைத்து கோவை அரசினர் கல்லூரியில் தமிழ் பயிற்று மொழியை நிறுவ, 1963இல் மாநில கல்விக் குழு அறிவுரைக் குழு ஆதரவு அளித்தது. 1959இல் கல்லூரித் தமிழ் கல்விக்குழு தோற்றுவிக்கப்பட்டு பின் 1962 இல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (Tamil Nadu Text Book Society) தொடங்கப்பட்டது. இதனால், இளங்கலை, முதுகலைப்பட்டப் படிப்பு வரை 416 கலைப்பாட நூல்களும் 418 அறிவியல் பாட நூல்களும் வெளியாகின.

  இன்னொருபுறம், 1962இல் புதிதாக 65 ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 1962-1965 வரை பல்கிப் பெருகியது.

  இதனால், கல்லூரிகளில் தமிழ் தேவையில்லை, ஆங்கிலமே போதும் என்ற நிலை உருவானது. ’பொதுமக்களின் ஆசைக்கிணங்க’ நிறைய பள்ளிகள் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றியது அன்றைய பக்தவச்சலத்தின் காங்கிரஸ் அரசாங்கம். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வட்டத் தலைநகரங்களிலும் ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்க அரசானம் பரிந்துரைத்தது.

  தாய்மொழிக் கல்விக்கு ஆதரவான பல்வேறு கல்விக்குழு பரிந்துரைகள்:

  1939இல் மார்ச்சில் பம்பாயில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத்தின் நான்காம் மாநாட்டில், ”பல்கலைக்கழகப் பட்டப்படிப்பும் அதற்குட்பட்ட மற்ற வகுப்புகளும் மாணவரின் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  1948இல் இந்தியத் துணை வேந்தர்கள் குழு, ”1948 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தாய் மொழிக் கல்விக்கு பல்கலைக்கழக மட்டங்கள் தயாராக வேண்டும் என்றும் அதற்குபிறகு ஆங்கிலம் பயிற்சி மொழியாகவோ தேர்வு மொழியாகவோ இருக்கக் கூடாது” என்றும் பரிந்துரைத்தது.

  1948இல் டாக்டர் இராதாகிருஷ்ணன், ”வட்டார மொழியின் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதே ஜனநாயக சமுதாய நலத்தின் பொதுவான அடிப்படையிலும் கல்வியின் அடிப்படையிலும் அவசியமான ஒன்றாகும். வட்டார மொழியில் கல்வி கற்பதன் மூலம் கல்வியின் உயர்ந்த தரத்தையும், சிந்தனையையும் அவர்கள் பெறுவதோடு கல்வியின் விரிந்த எல்லைவரை சென்று ஆய்வு முறையில் ஈடுபாடு காட்டவும் தூண்டுகோல் உண்டாகிறது” என்றார்.

  1964இல் இந்திய ஒன்றிய அரசாங்கம் நியமித்த கோத்தாரி குழுவும், ”கல்லூரி மட்டத்திலும் பள்ளிகளிலும் மாணவரின் தாய்மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கபட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

  பெருந்தலைவர் காமராஜரும் காங்கிரஸும்:

  1950இல் காங்கிரஸ் அரசாங்கத்தின் தமிழ்நாடு மாநில கல்வியமைச்சர் பிறப்பித்த ஆணையில், 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும், மூன்றாம் மொழி இந்தி கட்டாயம் என்றும், முதல் மொழியாக இந்தி உட்பட இந்தியாவின் எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றிருந்தது. இந்தி முதல் பாட மொழியாக இருப்பதில் தடை இல்லை என்ற நிலையை இவ்வாணை உருவாக்கியது.

  Kamarajகாமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆங்கிலத்தை 5ஆம் வகுப்பு முதல் கட்டாயம் எனவும் கூடவே எல்லா பள்ளிகளிலும் இந்தி கட்டாயம் என்றும் ஆணை பிறபித்தார். ஆனால், அதேவேளை, தமிழ் மொழி கட்டாயம் பயிற்று மொழியாக இருப்பதன் அவசியம் குறித்த ஆய்வுக்கூட்டங்களும் காமராஜர் தலைமையில் நடந்தது. எப்பொழுதும் போல, மக்களின் ஆதரவு இல்லை, பள்ளிகளில் தமிழ் இல்லாமல், கல்லூரிகளில் தமிழ் இருக்க முடியாது என்ற வாதமே அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சுழன்றது.

  1960களில் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகளில் தமிழ் பயிற்று மொழியாக இருக்கலாம் என்னும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. கோவை அரசினர் கல்லூரி முதலில் இதனை நிறுவியது.

  காமராஜர் பேசிய சில கல்விக்கூட்டங்களில் தமிழ் மொழியை பயிற்சி மொழியாக்க வேண்டியதன் அவசியத்தை கூறினாலும், அவரது அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் கட்சியினரும் இந்திய தேசியவாதிகளும் இந்தி நிலைக்க தடையாக தமிழ் இருக்குமென கருதியதால், ஆங்கிலத்தை முன்மொழிந்து தமிழ் இல்லாமல் செய்யப் போராடினர். 1950களில் இருந்து காங்கிரஸினரில் காமராஜரும் தோழர் ஜீவா அவர்களும் மட்டுமே தமிழ் பயிற்று மொழியில் நாட்டம் கொண்டிருந்தனர். ஆனால், காமராஜருக்கு பின் ஆட்சிக்கு வந்த பக்தவச்சலம், ”தமிழ் பேச்சுக்கு உதவும் ஆட்சிக்கோ கல்விக்கோ உதவாது” என்றார்.

  1963ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதலமைச்சரான பின்னர், 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கட்டாயம் வகுப்புகளைத் தொடங்க ஆணை பிறப்பித்தார். தமிழ்க்குழு பிறப்பித்த, கல்லூரிகளில் கட்டாயம் தமிழ் பயிற்றுமொழி உத்தரவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, ”நாவல் நெடுஞ்செழியன் தலைமையில் எதிர்க்கட்சி திமுக வெளிநடப்பு செய்தது. ஆனால், ”பயிற்று மொழி பிரச்சனை” என்னும் புத்தகத்தை பக்தவச்சலம் வெளியிட்டு ஆங்கிலவழிக் கல்வி மோகத்தை அதிகரித்தார்.

  அண்ணாவின் மொழிக்கொள்கையும் காங்கிரஸின் தமிழ் எதிர்ப்பும்:

  1963இல் நடைப்பெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய திமுகவின் மதியழகன், ”பயிற்சி மொழியாக தமிழை காங்கிரஸ் அரசாங்கம் அறிவிக்கத் தவறினால், ’தமிழ்த்துரோகி’ என்ற பட்டப்பெயர் சூட்டப்படும் என்று ஆளும் கட்சியினரை பார்த்து கூறினார்.

  anna1968-1969 இல் மாற்றுப் பயிற்று மொழியாக அறிவியல் பாடங்களுக்கு தமிழ் அறிமுகமாகியது. முதலில் மனித இயல் பாடங்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1969 ஜீன் தமிழ்ப் பயிற்று மொழியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுக் கல்லூரிகளில் மேலும் சில பாடங்களைத் (கணிதம், அறிவியல் உள்ளிட்ட) தமிழ் வழிப் பிரிவுகளாக மாற்றப்பட்டன. ஏற்கனவே இருந்த ஆங்கிலவழிப் பிரிவுகளும் தமிழுக்கு மாறின. இதனை தமிழ்த்திணிப்பு என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஆங்கில ஆதரவு இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றின.

  1968இல் ஆட்சி மொழிச் சட்டத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆற்றிய உரையில், அண்ணா அவர்கள், ”நான் ஆங்கிலத்தை புறக்கணிக்கிறவன் அல்ல. ஆனால், இந்தியாவில் உள்ள எந்தெந்த காரியங்களுக்கு ஆங்கிலம் பயன்படுகிறதோ, அந்த காரியங்களுக்கு தகுதி வாய்ந்த இந்திய மொழிகளில் தமிழே இடம்பெறும். அப்படியிருக்கையில், கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழிக்கு ஏற்ற புத்தகங்கள் தயாரிப்பதில் இருக்கும் மனத்தடை எல்லா மட்டங்களிலும் இருக்கிறது. அது கலையப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் நிலை கல்விக்கும் பொருந்தும் எனவும் பேசியிருக்கிறார்.

  அண்ணாவின் மறைவிற்கு பின்னர் 1970களில் கலைஞர் அரசாங்கம் கொண்டு வந்த தமிழ் பயிற்றுமொழித் திட்ட விரிவாக்க ஆணையை சிண்டிகேட் காங்கிரஸ்காரர்களும் டாக்டர் லெட்சுமணசாமி போன்றோர்களும் எதிர்த்தனர். மதுரையில் இவ்வாணையை எதிர்த்து மாநாடும் நடந்தது. அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு இவ்வாணையால் பறிபோகும் என்றும், ஏற்கனவே இந்தியை அகற்றிவிட்டார்கள், இனி ஆங்கிலமும் இல்லையென்றால், தமிழர்கள் வேலையற்றவர்களாகி விடுவார்கள் என்ற பிரச்சாரத்தின் பயனால், தமிழகமெங்கும் மாணவர் அமைப்புகள் காங்கிரசினர் பின் திரண்டனர்.

  நாட்டின் பொதுவான வேலையில்லாத் திண்டாட்டத்தை தமிழ்ப் பயிற்று மொழியுடன் முடிச்சுப் போடாதீர்கள் என்ற முதல்வரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டன.

  18THKARUNANIDHIமாணவர் போராடங்களைத் தொடர்ந்து, கல்விக்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்த ஜி.ஆர். தாமோதர்ன், நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோரின் அறிக்கை, ”பயிற்று மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கே உண்டு” என்றும் கூறியது.

  1971இல் கலைஞர் அரசாங்கம், ”இளங்கலை, இளமறிவியல் பாடங்களை முழுக்க தமிழிலேயே படிப்போருக்கு 180ரூபாய் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை பெறும்” வாய்ப்பை வழங்கி தமிழில் படிக்க ஊக்குவித்தது. அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி என அனைத்திற்குமென 1972இல் உத்தரவு பிறப்பித்தது.

  1970களில் தமிழகத்துக் கல்லூரிகள் 41 இதில் புதுமுக வகுப்பு அளவில் தமிழ் வழியில் 13 கல்லூரிகளும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி வழியில் 28 கல்லூரிகளும் கற்பித்தன. தனியார் கல்லூரிகளைப் பொறுத்த வரியில் 117 கல்லூரிகளில் 82 கல்லூரிகள் தமிழ் வழியில் புதுமுக வகுப்புக் கல்வியை அளித்தன.

  இளமறிவியல் பட்ட வகுப்பில் அரசுக் கல்லூரியில் 30இல் 22 கல்லூறிகள் தமிழிலும் 8 கல்லூரிகள் இரு மொழியிலும் கற்பித்தன.

  அதேவேளை, 1979இல் மழலையர் வகுப்பு தமிழில் மட்டும் இருக்கவேண்டும் என்ற அன்றைய கல்வியமைச்சரின் உத்தரவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

  1975-2000 வரை பயிற்று மொழிச் சிக்கல்கள்:

  மாநில உரிமையில் இருந்த கல்வி மையப்பட்டியலுக்கு சென்றதும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளும், பெரும் வீச்சில் தனியார் ஆங்கிலப் பள்ளிகளும் தோன்றின.

  எம்.ஜி.ஆர் ஆட்சியினைப் பொறுத்தவரை, 1978இலேயே 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க ஆணை பிறபித்தார். ஆங்கில வழி தனியார் பள்ளிகளும் மைய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளும் பல்கி பெருகவும் காரணம் எம்.ஜி.ஆர் ஆட்சியின் பயிற்று மொழி புரிதலின்மைதான், அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளிலும் உயர்நிலை வகுப்பின் எல்லாப் பாடப்பிரிவும் ஆங்கிலம் வரவும் காரணம் இவர்தான்.

  இவை, மீண்டும் ஆங்கில வழிக் கல்விக்கு கல்லூரி மட்டங்களுக்கும் உரம் சேர்த்து 1983இல் 188 கலைக்கல்லூரிகளில் தமிழ் வழியில் 12 விழுக்காடு மாணவர்களே பயின்றனர்.

  1980-81 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இளங்கலை வணிகவியல் வகுப்பில் 121 மாணவர்களைக் கொண்டு நடந்து வந்தது 1983இல் நிறுத்தப்பட்டது. இப்படி, அடுத்தது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் ஆங்கில வழிக்கு மாறியதன் விளைவு, கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழி அவசியமற்றதாகி நிற்கிறது.

  1990களில் கலைஞர் ஆட்சியில் பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேவையான பல வகுப்புகளில் ஆங்கில பாடங்களை நடத்த அனுமதி அளித்து ஆணை பிறபிக்கப்பட்டது.

  1996பிறகு வந்த கலைஞர் அரசாங்கம், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் தமிழ் பயிற்று மொழி கட்டாயம் என்னும் ஆணைக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, ஆணை செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

  1974 வரை திமுகவின் பயிற்று மொழிக் குறித்தப் பார்வை வேறாகவும், 1990களில் இருந்து வேறாகவும் இருந்து வந்துள்ளது.  திமுகவின் கொள்கைபடி, கட்டாயமாக இந்தி இருக்கக்கூடாது, கட்டாயம் ஆங்கிலம் வேண்டும், ஆனால், கட்டாயம் தமிழ் வேண்டும் என்ற தெளிவும் கொள்கை உறுதியும் இல்லை.

  இன்றைய நிலையும் அரசியலும்:

  2000 ஆண்டு, பள்ளிகளின் மழலையர் வகுப்பின் பயிற்று மொழி தமிழ் கட்டாயம் என்னும் திமுக அரசாங்கத்தின் ஆணைக்கு எதிராக வென்ற வழக்க எதிர்த்து பெற்ற வெற்றியை அதிமுகவின் ஜெயலலிதா அம்மையார் வரவேற்று அறிக்கை விடுத்தார். 2011இல் இருந்து பலகட்டமாக அரசுப் பள்ளிகளை முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றும் வேலையையும் ஜெயலலிதா அம்மையார் ஆட்சியே செய்தது. அவரின் விசுவாசிகளின் ஆட்சியும் இன்றளவும் செய்துவருகிறது.

  இவற்றுக்கு எல்லாம் தொடக்கமாக, 2006-2001 திமுக ஆட்சியில்தான் சென்னை மாநகரப் பள்ளிகள் ஆங்கில வழிக்கு மாற்றியதே எனலாம். 1996-2001 ஆட்சியின் திமுக அரசாங்கம் பிறப்பித்த அனைத்து மழலையர் பள்ளி கட்டாய தமிழ் வகுப்பு, அதன் பின்பு, கட்டாயம் ஒரு பாடமாவது தமிழ் வகுப்புகள் என மாறி, பிறகு மழலையர் கல்வியே முழுக்க ஆங்கிலமயமாகும் நிலைக்குத்தான் ஆட்சியாளர்களின் கற்றல் தொடர்பான செயல்பாடு திசை மாறியுள்ளது.

  2000ற்கு பிறகு, தாய்மொழிக் கல்விக் குறித்து விவாதிக்கவும், அரசின் கொள்கை முடிவாக மாற்றவும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தாலும் 1975ற்கு பிறகு பயிற்று மொழிக் குறித்த பார்வையில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து தெளிவின்றி வந்ததன் விளைவும், உலகமயமாக்கல் சூழலில் ஆங்கில மொழித் தேவையின் அளவு, நீட்சி குறித்த புரிதலின்றி சமூக ஓட்டம் நிகழ்ந்துவிட்டதன் விளைவினாலும் ’தமிழர்’ குரல் தாய்மொழிக் கல்வி கொள்கையில் எடுபடவில்லை.

  ஆனால், இதேகாலக்கட்டத்தில்தான் தமிழகமெங்கும் தாய்த்தமிழ் பள்ளிகள், தனி நபர்கள், தனி அமைப்புகளின் முயற்சியின் பேரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பலக் கட்டப் போராட்டங்களை மேற்கொண்டு, தமிழை பயிற்று மொழியில் தக்க வைக்க தாய்த்தமிழ் பள்ளிகள் சார்ந்தோரும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்நாடு கல்வி இயக்கங்களும் போராடிவருகின்றனர். ஆனால், 1975கள் வரையில் இருந்த அரசியல் குரல்கள் அதன் பின் மெல்ல மெல்ல மங்கி தேய்ந்துவவிட்டது பலவீனமாக உள்ளது.

  அதேபோல, இன்றளவும் கூட தனியார் பள்ளிகள் கிராமப்புற, அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஈர்க்க தமிழ வழி வகுப்புகளை நடத்தியே வருகின்றனர். 1990களுக்கு பிறகு மெல்ல மெல்ல தமிழ்வழி கற்றல் வகுப்புகள் உருவாகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  வரை அதிக அளவில், சில பள்ளிகளில் ஆங்கில வகுப்பிற்கு இணையாக தமிழ் வகுப்பு மாணவ, மாணவியர் எண்ணிக்கைகள் கொண்டு வெற்றிகரமாகவே நடந்தது.

  இன்று வரையிலேயே கூட அரசுப் பள்ளிக்கூட மாணவ, மாணவியர்கள் தமிழ் வழியில் படித்து, மருத்துவம், பொறியியல், கலை, இலக்கியம், அறிவியல் கல்லூரிகளுக்குச் சென்று பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட, உலக நாடுகளின் பெருஞ்சிறப்பு பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றே வருகின்றனர்.

  ஏன் வேண்டும் தமிழ்வழிக் கல்வி

  • punjabi-a-second-rate-mother-tongueஇன்றைய நவீன தொழிற்நுட்ப உலகில், நவீன வளர்ச்சியை சுவைத்து வரும் வளர்ந்த நாடுகளின் மொழியினரும், தங்கள் தாய் மொழியில் அனைத்தையும் படித்தே வருகின்றனர். நாம் ஏன் இயலாது என ஒதுங்குகிறோம்?
  • பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கூறிய நாடுகளுக்குச் செல்லும்பொழுது, நேர்முகத் தேர்வை அவரவர் தாய்மொழியிலேயே நடந்துபொழுது, நம்மூருக்கு வந்து ஆங்கிலத்தில்தான் நடத்த வேண்டும் என்ற அவசியம் என்ன?
  • உலகத்தினரை இணைக்கும் மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றால், மழலையர் கல்வியில் இருந்து படித்தால்தான் அம்மொழியில் திறமை வளருமா? இது அடிப்படை மனித இயங்கியல் மற்றும் மூளை செயற்பாடுகளின் அறிவியலுக்கே எதிரானதாக இருக்கிறதே?
  • இந்த கட்டுரையை முழுமையாக படிக்கும்பொழுது உங்கள் எண்ணம் என்ன? எந்த நிலமும் மக்களும் பிறருக்கு அடிமையாய் இருக்கும்பொழுது மட்டுமே கல்வி மொழி மாற்றுமொழியாக இருக்கும் என்ற தோன்றவில்லையா?
  • இத்தனை படையெடுப்புகள், ஆதிக்கங்கள், பிற மொழியினரின் அரசியல் அதிகாரங்கள் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தும் இன்றளவும் நம் மொழி பயிற்று மொழியில், நவீன தொழிற்நுட்ப உலகில், இணைய மொழியில், உலகின் பல்வேறு நாட்டுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் என எல்லா இடங்களிலும் தமிழ் நிலைத்திருக்க, இம்மொழி எத்தகைய வீரியம் கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய மொழி பேசும் நமக்கு அதில் கற்பதில் தடை என்ன?
  • தாய்மொழி வழி பிற மொழிக் கல்வி, தாய்மொழி வழியே அறிவியல் கல்வி என வளர்ந்த நாடுகள் தொடர்ந்து இயங்க, இதனை தவறவிட்டு, கல்வித்தரம் இழந்த, வாழ்வை இழந்ட ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் பழங்குடிகள் வாழ்விடங்களில் தாய் மொழிக் கல்வி மீட்டெடுக்கும் ஐ.நா துணை அமைப்புகள் உள்ளடக்கிய தனியார் தொண்டு நிறுவனங்கள் 2008 முதல் இயங்கி வருவது ஒருபுறம் இருக்க, உலக திசைக்கு நேர்மாறாக நாம் திசைவழி உருவாக்குவது எதனால்?
  • மேற்கூறிய எல்லாவற்றுக்கும் நம்மை அதிகாரம் செலுத்தும் அரசியல் அமைப்பு வடிவங்களுக்கும் தொடர்பு உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறதா? இருக்கும் இந்திய அரசியல் அமைப்பிற்குள்ளாகவே கல்வி மாநில உரிமையில் இல்லாத நிலையில் மாநில கல்வி உரிமையை தேர்ந்தெடுக்கும், நிலைநாட்டும் உரிமைக்குக் கூட டெல்லியில் இந்தியில் பேசித்தான் பெற வேண்டும் என்பது அவமானமாக இல்லையா?
  • தமிழ் வழியில் பயின்று வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் பலர் எந்த உளவியல் அடிப்படையில் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தமிழால் கெடும் என அஞ்சுகின்றனர்.
  • தமிழ்வழியில் படித்து, ஆங்கிலம் துணை மொழியாகவும், பள்ளி உயர்வகுப்புகள், கல்லூரி வகுப்புகளில் இன்னொரு பன்னாட்டு மொழி மூன்றாம் மொழியாகவும் படித்தால் நாம் எதனை இழந்துவிடுவோம்.
  • நவீன உலகில் மொழி யாருக்கும் எதற்கும் தடை இல்லை என்னும் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் குறித்து நாம் தெளிவுறுவது எப்போது?
  • சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமத்துவக் கல்வியும், சமச்சீர் கல்வியும் தாய்மொழியில் மட்டுமே வழங்க முடியும் என்ற நிலையில், சமச்சீற்ற வணிக உலகிற்கான கல்விமுறையின் ஆபத்து விளங்குகிறதா?
  • ஆங்கில வழிக் கல்விக்கு நகர்ப்புற மாணவ, மாணவியர்கள் தயார் ஆகுவது போல, கிராமப்புற, மலைவாழ் பகுதி மக்கள் தயார் ஆவது சமமாக இருக்குமா?
  • இவை அனைத்தும் கல்வி புறக்கணிப்பிற்கு தூண்டாதா?
  • முதல் நாள் வரை தமிழில் படித்தவர்கள் அடுத்த நாள் முதல் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்பது போல அரசுப்பள்ளிகள் ஒவ்வொன்றாக நம் கண் முன்னே மாற்றி வரும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளின் ஆபத்து சமூக அக்கறை கொண்டவர்களாக ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
  • தமிழ் வழியில் பாடம் நடத்தியோர், அடுத்த நாள் முதல் ஆங்கில வழிப் பாடப்புத்தகங்களை தமிழில் பேசி, தமிழில் புரிய வைத்து நடத்தி, தேர்வு எழுதுவது ஆங்கிலத்தில் என்பது மாணவர்களையும் கல்வியை கேலியாக்குவது போல இல்லையா?

  விவாதிப்போம்! விடை தேடுவோம்!

   

  தொடர்புடையக் கட்டுரைகள்:

  1) உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி

  2) தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்

  3) அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!

  4) `நீட்’ – தகுதித்தேர்வா? தரப்படுத்துதலா? சர்வதேச நாடுகளில் நுழைவுத் தேர்வு உண்டா?

One thought on “தாய்மொழிக் கல்வி – தமிழ் மொழியின் பல்லாயிரக் கால வரலாற்றுப் பார்வை

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: