அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!

(முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் புத்தகத்தை முன்னிறுத்திய பார்வை)

சமூகம், அரசியல், நிர்வாகம், மேலாண்மை, குடும்பம் என எவ்வித அமைப்புகளுக்கும் அவை வெற்றிகரமாகவும் கட்டுக்கோப்பாகவும் இயங்க அதற்கென சில பொதுவான சூத்திரங்களை ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் வழியே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அதேவேளை, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தை தமிழ்த்தேசியக் கருத்தியலின் பார்வையில் புரிந்துக்கொள்ளவும் முடியும்.

தமிழ்த்தேசியம்:

தமிழர் தேசத்தின் குடிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வியல் மேம்பாடு, மொழியின் வளர்ச்சி, நிலத்தின் பாதுகாப்பு, தேசத்தினுள் இருக்கும் குடிகளின் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ வாழ்வு, இவைகள் குறித்த அரசியலே தமிழ்த்தேசிய அரசியல் எனப் புரிந்துக்கொள்ளலாம்.  இதனை வலிமைப்படுத்தவும், செழுமைப்படுத்தவும், முறைப்படுத்தவும், செயல்படுத்தவுமே ’அமைப்பு’ தேவைப்படுகிறது. தமிழ்த்தேசியம் என்பது ஒரு பரந்துப்பட்ட குடை. பூமியைத் தாங்கும் பேரண்டம் போல, தமிழினத்தை, தமிழ் நிலத்தை தாங்கும் பேரியக்கச் சூத்திரம்.  இன விடுதலை கூறுகள், தனி நாட்டுக்கான போராட்டங்கள், தேசத்தின் அதிகார மையம், மக்கள் திரளின் அதிகாரம், சமூகநீதி, சமத்துவப் போராட்டங்கள் என வரலாற்றின் தேவையின் பொருட்டோ, காலத்தின் தேவையின் நிமித்தமோ, ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வடிவத்தினுள் ‘தமிழ்த்தேசியம்’ உள்ளடங்கும்.

OVIN0610ஏற்றத் தாழ்வுகள் நிரம்பிய இந்தியத் துணைக்கண்ட நிலத்தில், தென்னிந்திய முனையில், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி இவற்றை முன்னிறுத்தி அமைப்பாய்த் திரண்ட தமிழ்ச்சமூகம், அதிகாரத்தை நோக்கி முன்னகர்ந்து, ஓரிடத்தில் தேங்கி, சமத்துவமற்ற உள்கட்டமைப்பை உருவாக்கிக் கொண்ட பொழுதே அண்ணன் திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கிளர்ந்தெழுந்து வந்தது என்ற புரிதலில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் பேசும் வடிவம் தமிழ்த்தேசியத்தின் புதுவடிவமாகிறது.  1920களில் நீதிக்கட்சியும், அதனைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களும் தமிழ்நாட்டின் நிலம், மக்கள் ஆகிய தேச வரையரையினை பாதுகாத்து, வளர்த்தெடுத்தல் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் சமூகநீதி, சமத்துவம் என தொடங்கிய இடம் தமிழ்த்தேசியத்தின் ஒருவகையான கூறு என்றால்,   1990களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் தொடங்கிய இடம் முதல் நகர்ந்து வரும் மைய நீரோட்ட அரசியல், அதிகாரப் பகிர்வு, கூட்டமைப்பாகுதல், தமிழர் இறையாண்மை, சாதிகளற்ற தமிழர் நிலம் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் இன்னொரு பரிணாம்.

இத்தகைய பார்வையில் இருந்துதான் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் பேசும் மக்கள் திரளின் வழியே ‘அமைப்பு’ கட்டுதலை தமிழ்த்தேசியத்திற்கான வழிகாட்டும் நூலாக பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலைச்சிறுதைகளின் பாதை தமிழ்த்தேசியமே:

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தி இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் களம் கண்டோரெல்லாம் அம்மக்களுக்கான அமைப்பாக மட்டுமே உருவாகி செயலாற்றி வந்துக்கொண்டிருந்த வேளையில், அண்ணன் திருமா தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழீழ விடுதலைக்கான ஆதரவு என முன்னின்றதோடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் இப்பாதையிலேயே கட்டியமைத்தார் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

001விடுதலைப்புலிகளின் ’மானுடத்தின் ஒன்றுகூடலில்’ பங்காற்றிய ஒரே தமிழ்நாட்டின் அரசியல் தலைவர், தொடர்ந்தும் தமிழ் பாதுகாப்பு இயக்கம், கருத்துரிமை மாநாடு, மாநில சுயாட்சி மாநாடு, தமிழர் இறையாண்மை மாநாடு, வெல்லும் தமிழ் ஈழம் மாநாடு, தேசம் காப்போம் மாநாடு என அனைத்தின் ஒன்றுதிரண்ட கூர்மையான பாதை தமிழ்த்தேசியமே என்பதனை உணர்வதின் மூலமே, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தின் மையக் கருத்துக்கள் எந்த அமைப்பை பேசுகிறது, யாருக்கான அங்கீகாரத்தை முன்மொழிகிறது, எதன் அதிகாரத்தைப் பேசுகிறது என்பதனையும் புரிந்துக்கொள்ளலாம்.

தமிழ்த்தேசிய கைகேடு:

ஈழத்தின் நவரத்தினம் ஐயா அவர்களின் ”Fall and Rise of Tamil Nation” புத்தகத்தில் உள்ள சனநாயக விழிமியங்களுக்குள் நின்று நாம் பேசும் எவ்வித தேச அரசியலிலும் உள்ள குறைபாடுகள், இடர்பாடுகள் போன்றவைகளை தெளிவுற விளங்கிக்கொள்ளுதல் மூலம், ’அமைப்பாய்த் திரள்வோம்’ பேசும் ’நாடாளுமன்ற சனநாயகமும் புரட்சிகர சனநாயகம்’ கட்டுரையினை ஆழமாக புரிந்துக்கொள்ள முடியும் என கருதுகிறேன்.17568255

நவரத்தினம் ஐயாவின் புத்தகமும் முனைவர் தொல். திருமாவின் புத்தகத்தின் இக்கட்டுரையும் பேசும் மையக்கருத்தை ஒப்பிடும்பொழுது, ”தேர்தல் சனநாயகமும் புரட்சிகர சனநாயகமும் வெவ்வேறான அமைப்பு முறைகளை கொண்டது. அமைப்பைத் திரட்டுவதிலும் அதிகாரம் நோக்கி மக்களை அணித்திரட்டுவதிலும் வெவ்வேறு  செயற்பாட்டு வடிவங்களையும் கொண்டது” என்பதனை உணரலாம்.

தேர்தல் பாதையும் புரட்சிகர பாதையும்:

’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தில், ”நாடாளுமன்ற சனநாயகமோ, புரட்சிகர சனநாயகமோ, அவற்றின் மீதான உடன்பாட்டினடிப்படையில் அரசியல் அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. தேர்தல் கட்சிகளாகவோ அல்லது விடுதலை இயக்கங்களாகவோ அரசியல் அமைப்புகள் உருவாகின்றன. ஆனால், அவ்விரண்டு அமைப்புகளின் குறி அல்லது இலக்கு அரசியலதிகாரமேயாகும். வழிமுறைகள் வேறு! இலக்கு ஒன்றே ஆகும்!” என்று தொல் திருமா எடுத்துக் கூறுகிறார்.

இவைகளை படிக்கும்பொழுது, ”தேர்தல் ஜனநாயக அமைப்போ, புரட்சிகர அமைப்போ, இவ்விருப்பாதையிலும் உள்ளோர் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவும் முடியும் என்பதையும் உணர முடிகிறது. அதேவேளை, தடையாக இருக்கும் பொழுது இரு அமைப்புகளுமே சிதைவுக்குள்ளாகும் ஆபத்து உள்ளது என்பதனை நாம் தமிழ்த்தேசிய அரசியல் நோக்கில் ஈழம், தமிழ்நாடு இரண்டு தேசங்களிலும் கண்டிருக்கிறோம்” என்ற புரிதலே ஏற்படுகிறது.

அமைப்பும் அதிகாரமும்:

தேர்தல் ஜனநாயக அமைப்பு மற்றும் புரட்சிகர அமைப்பு ஆகியவை குறித்து மேலதிகமாக எடுத்துக்கூறும்பொழுது, ”தேர்தல் சனநாயக அமைப்பு பெரும்பாலுமான நேரங்களில் வல்லரசியக் கூட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, புரட்சிகர சனநாயக அமைப்பினை இல்லாதொழிக்க செயற்படும் நிலையும் உலக நாடெங்கும் காணப்படுவதையும்” ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. தமிழீழ அரசியல் களத்தினைப் பொறுத்தவரை 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தோள் கொடுக்கும் அமைப்பாகவும் 2009ற்கு பின் சர்வதேச வல்லரசுகள் ஏதோ ஒன்றிற்கு சாமரம் வீசும் கைப்பாவையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாறி நிற்பதையும் இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

தேர்தல் சனநாயக அமைப்புகளும் புரட்சிகர அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நிற்கும் களங்களில், புரட்சிகர அமைப்புகள் பலவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதுப் பற்றியும் அதற்குரிய தலைமைகள் அல்லது தலைமையின் கீழ் அணித்திரள வேண்டியதன் அவசியத்தையும் ’போலித்தலைமை, உண்மைத்தலைமை எதுவென பிரித்துணர்ந்து மக்களிடம் எடுத்தியமும் கடமையும் நாடாளுமன்ற சனநாயக அமைப்புகளுக்கு உரியவை என்னும் கருத்தை ”அமைப்பும் அதிகாரமும்” என்னும் கட்டுரையில் ”அமைப்பாய்த் திரள்வோம்” புத்தகம் பேசுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டின் தேர்தல் சனநாயக அரசியல் இயக்கங்கள் பெரும்பாலுமானோர் எங்ஙனம் ஒன்றாக முன்மொழிந்தார்கள் என்பதனை வரலாற்றுப் பின்னணியிலும் சித்தாந்தப் பின்னணியில் இருந்தும் நாம் உணர மேலே உள்ள கட்டுரை வழிக்காட்டுகிறது எனலாம்.

கூட்டுத்தலைமையின் கோட்பாடுகள்:

தனிநபர் தலைமைக்கான களமும் சூழலும் அமையாது பல்வேறு அமைப்புகள் ஒரு நேரத்தில் முளைத்து மக்கள் திரளில் விரவிக்கிடக்கும் பொழுது, கூட்டுத்தலைமையின் தேவை உருவாகிறது. அத்தகையச் சூழலில், ”’கூட்டுத் தலைமைத்துவம்’ என்பது, கூட்டுக்கருத்தியல் தலைமை மற்றும் கூட்டு நபர் தலைமை ஆகியவற்றின் கலவையாகவே அமைய வேண்டும்” என கூட்டுநபர் தலைமையும் கூட்டுக் கருத்தியல் தலைமையும் என்னும் கட்டுரையில் முனைவர் திருமா வலியுறுத்திகிறார்.

அத்தகையச் சூழலில், இயக்கங்களின் கூட்டுக் கருத்தியல் தலைமையை முன்னிறுத்தி கூட்டுத்தலைமைத்துவ அமைப்புகளாக பணியாற்ற வேண்டும் எனவும், அப்படி இயங்கும்பொழுது பரந்துப்பட்ட வெகுமக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் விதமாக இயங்க வேண்டும் எனவும் ’அமைப்பாய்த் திரள்வோம் முன்மொழிகின்றது.

நிறுவனமயமாதலும் சனநாயகமாதலும்:

தமிழ்த்தேசியம் என்பது இனத்தின் விடுதலை என்ற பொருளில் நாம் கையாளும்பொழுது, இன விடுதலை அரசியல் ஒரு தலைமுறையின் பங்களிப்பால் நிறைவடைந்து விடுமா? அப்படி சில தலைமுறைகள் தொடர வேண்டுமெனில் அமைப்பு, அல்லது அமைப்புகளின் போக்கு எத்தகையதாக இருக்க வேண்டும் என ”நிறுவனமயமாதலும் சனநாயகமாதலும்” என்னும் கட்டுரையில் முனைவர் திருமா விளக்கியுள்ளார்.

அதில், ”ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறையிடனரிடம் ஓர் அமைப்பினை ஒப்படைத்தல் என்பது, அவ்வமைப்பின் பெயரையும், கொடியையும், இலச்சினை எங்கிற சின்னத்தையும், கொள்கை அறிக்கை மற்றும் செயல் திட்டங்களையும், அசையும்-அசையாச் சொத்துக்களையும் ஒருவர் இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்று மட்டுமே பொருளாகாது. வெகுமக்கள் அணிதிரண்டு ஓர் அமைப்பாக வடிவம் பெற்று ஒரு பொதுநோக்கத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கிற அதே வேளையில், அடுத்த தலைமுறையினரும் அதே நோக்கத்திற்காக, அந்த அமைப்பின் வழியாக உள்வாங்கப்பட்டு முந்தைய தலைமுறையோடு இயைந்து இயங்குவது என்றே பொருளாகும். அதாவது, முந்தைய தலைமுறைக்கும் பிந்தையத் தலைமுறைக்கும் இடைவெளி ஏற்படாமல், கொள்கைப் பிணைப்பும் செயல் இணைப்பும் ஒன்றுக்குள் ஒன்றாய் உள்வாங்கி, இயங்கிடும் தொடர்ச்சியான போக்கேயாகும்” என விரிவாக எடுத்தியம்பியுள்ளார்.

இதனை படிக்கும்பொழுது 2009ற்கு பின்னர் தமிழீழ அரசியல் கோட்பாட்டு வடிவத்தினை இளந்தலைமுறையினரிடம் கையளிக்கவும், அதேவேளை முந்தைய தலைமுறைக்கும் பிந்தையத் தலைமுறைக்கும் இடைவெளி இல்லாத பிணைப்புடன் தொடர்ந்துச் செல்லவே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை விரும்பியதை 2008 மாவீரர் நாள் உரையில் மேதகு தலைவர் பிரபாகரன் எடுத்துக்கூறியதையும் நாம் பொறுத்திப் பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் நடந்ததா? நடக்கவில்லையா? என்னும் வாதத்திற்குள் இப்பொழுது செல்ல விரும்பவில்லை.

இதே ஒரு சூழல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் முன்மொழிந்து அமைப்புகளின் தொடர்ச்சியைப் பேண விரும்பினார்கள். அவர்கள் முன்மொழிந்து எடுத்துச்செல்ல விரும்பியதை அடுத்தடுத்தத் தலைமுறையினர் அதே விரீயத்தோடும் கூர்மையோடும் எடுத்துச் செல்லவில்லை என்பதனை அவர்களின் பார்வைக்கும் இன்றைய காலத்தில் அவர்களின் இயக்க நடைமுறைக்குமான இடைவெளியில் இருந்து ஒப்பிட முடியும். ஒரு தலைமை, தலைவரின் சிந்தனையும் மைய நோக்கும் அடுத்தத்தடுத்தத் தலைமுறையினருக்கு அதே அமைப்பினர் அதே கூர்மையில் எடுத்துச் செல்லவிருக்கும் தடைகளும் விவாதத்திற்குரியவை.

thirumavalavan.jpgஅதேவேளை, சமூக சனநாயக, தேர்தல் சனநாயகப் பாதையிலான அமைப்பினை கடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டாலும் தடை ஏற்பட்டாலும் அது சில தலைமுறை கடந்தேனும் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது எளிதென்பதையும், இன விடுதலை அரசியல் அமைப்பினை அடுத்தடுத்தத் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளில் கடத்தித் தொடரச் செய்யாது போனால், இனவழிப்பின் பல்வேறு வடிவங்கள் அவ்வினத்தினை தாக்கிக் கொண்டே இருக்கும் என்பதனையும் நாம் புரிந்துக்கொள்ளல் வேண்டும்.

கட்டமைப்பும் செயற்திட்டமும்:

இனவிடுதலை அரசியல் அமைப்பு, தேர்தல் சனநாயக அரசியல் அமைப்பு, நாடாளுமன்ற அமைப்பிற்குள் ஒடுக்கப்பட்ட மக்களிற்கான அதிகாரத்தைக் கைப்பற்றும் புரட்சிகர அமைப்புகள், அதிகாரத்தை முற்றிலுமாக புதியதாய் உருமாற்றம் செய்யும் புரட்சிகர அமைப்புகள் என எந்த அமைப்பாய் ஆகினும், இவையாவிற்குமான கட்டமைப்புப் பலத்திற்கான அடிப்படை முன்மொழிதலை ”அமைப்பாய்த் திரள்வோம்” புத்தகம் வலியுறுத்துகிறது.

அதில், ”செயற்திட்டமும் செயல் தந்திரமும் எப்படி முக்கியமோ அதனினும் முக்கியம் சிலவற்றில் வெளிப்படைத் தன்மையும் சிலவற்றில் கமுக்கமும்” என சுட்டிக்காட்டப்படுகிறது. அதேவேளை, ”தன்னைமட்டும் முன்னிறுத்தி தனிமையாதலை தவிர்த்து, இவ்வமைப்புகளில் எவர் ஒருவரும் தன்னையும் ஒன்றிணைத்து உரிமையோடு முன்னின்று உரிமைகளை காப்போம்” என வலியுறுத்தப்படுகிறது.

எந்தவொரு அமைப்பும் வெல்ல வேண்டுமாயின் மக்கள் திரள் அவசியம் என்பதனை வலியுறுத்தும் ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம், ’தகவல் தொடர்பின்றி மக்கள் தொடர்பில்லை! -கொள்கைசார் மக்கள் திரளின்றி அமைப்புக்கு வலுவில்லை” எனவும் சுட்டிக்காட்டுகிறது.

கற்றலும் கற்பித்தலும் – மக்கள்திரளுடன் உறவாடுதல்:

அமைப்பாகுதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியக் கோணம் ஒன்று இருப்பதாக முனைவர் திருமா, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார். அதாவது மக்களிடம் ஆதிக்கவாதிகளால் உருவாக்கப்படும் ’பாதுகாப்பில்லாத உணர்வி’னை கலைந்து மக்கள் திரளோடு நெருக்கமாக உறவாடுதலிலும் மக்கள் சிந்தனையோடு இணக்கமாததிலும் அமைப்பினர் முறையாக இயங்க வேண்டும்.

WhatsApp-Image-2019-04-01-at-12.59.22-PM-1இத்தகைய மக்கள் திரளோடு இணக்கமாகும் அரசியல் செயற்பாட்டில், ’மிகைமதிப்பீடும் மேலாதிக்கமும்’ அற்ற சிந்தனையோடு செயல்படுவதோடு, மக்கள் திரளில் அவரவர் வாழ்வியல் சூழல், சமூக, குடும்பம், கல்வியில் பால் கட்டப்பட்டிருக்கும் பன்மைத்துவத்தினை முறையான அகமதிப்பீட்டுடன் கணித்து ’பொறுமையும் சகிப்புத்தன்மையும்’ கொண்டு மக்கள் திரளினை முறையாக உட்கவரும் ஆற்றலினை பெற்றவர்களை மக்கள் பணியாற்ற முன்னிறுத்துவதும் அவசியம் என முனைவர் திருமா முன்மொழிகிறார்.

1அப்படி மக்கள் பணியாற்ற முன்செல்வோர், தன்னை முன்னிறுத்தாது அமைப்பை முன்னிறுத்தி, அதேவேளை தனி ஒழுங்கும் பொது ஒழுங்கும் முறையாக பேணி, எவர் மனதும் கெடதா உரையாடல் வழியே உறவாடுதலை மேற்கொள்பவராக திகழ வேண்டும் எனவும் முனைவர் திருமா வழிகாட்டுகிறார்.

இத்தகைய அமைப்பியலை உருவாக்க தெளிவுற அரசியலை கற்பதும் தான் கற்றதை பிறருக்கு முறையாக கற்பிக்கும் திறன் பெற்றவாரலேயே ’அமைப்பாக்குதல்’ சாத்தியப்படும். அரசியல்படுத்துதல் என்பதும் அமைப்பியல், கருத்தியல் ஆகியவற்றைப்பற்றி மட்டுமின்றி, அமைப்பாக்கப்படும் மக்களின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைகள், போராட்டங்கள் மற்றும் அவர்களின் பொது உளவியல் போன்றவற்றை மக்களிடம் இருந்தே கற்று, தேவையொட்டி அவற்றை அமைப்பாக்கட்ட வேண்டிய மக்களுக்கும் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் கற்பித்தல் என்பவனவற்றையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய ’கற்றலும் கற்பித்தலும்’ சமகாலத்தில் நிகழும் ஒரு தொடர்ச்சியான பயிற்சிமுறையே அரசியல்படுத்தல் ஆகும்.

‘அமைப்பாய்த் திரள்வோம்’ பேசுவது யாது?:

எந்தவொரு சமூக, புரட்சிகர அரசியல் இயக்கங்களும், இன விடுதலை அமைப்புகளும் தனது நீண்டகால செயல்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்னும் தீராவேட்கையினின்று பீறிட்டெழுந்த உணர்வுகள், எண்ணங்கள், போராட்டக்களத்தினின்று கற்றுணர்ந்த படிப்பினைகள் ஆகியவைகள் எவ்வாறு முறைப்படுத்தப்பட்டு, மக்கள் திரளை திரட்டி மக்களுக்கான அரசியல் அமைப்பை கட்டுவதென்பதின் பல்வேறு பார்வைகளின் தொகுப்பே ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம்!

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s